!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, October 10, 2011

நான் ஜெயிலுக்கு போன கதை.


முதல் பகுதி:  நான் நடத்திய பத்திரிகையும், `நான் தமிழன்` ஜோக்கும்.

சிறு வயதில், அம்மா இறந்த பிறகு, ஆதரவில்லாமல் இருந்த எங்களை மாமா ஆதரித்தார் என்று சொன்னேனல்லவா. அப்போதிலிருந்தே ஒரு விஷயம் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது.

மாமா வீட்டில் இருந்த போது, சாப்பாடு பிடிக்கவில்லை என்ற கோவத்தில் ஒரு நாள் நான் மருந்து சாப்பிட்டுவிட்டேன். ஆனால் அதனால் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.

இருந்தாலும் அப்போதுதான் என் ஆயா சொன்னார். `உங்களை அழைத்து வந்து ஆதரிப்பதே எங்களுக்கு சிரமம். இதுல உனக்கு கோவம் வேற வருதா? அப்படி கோவப்படறவனா இருந்தா நீ உங்கப்பன் கிட்டயே போய் சேர்` என்றார். அந்த வார்த்தை நாங்கள் அங்கே விருந்தாளி என்பதை எனக்கு புரிய புரியவைத்தது. விருந்தாளியாய் இருக்கும் போது அங்கே சாப்பாட்டை குறை சொல்லக் கூடாது என்பதையும் புரிய வைத்தது. இதையெல்லாம் அப்போது நான் உணரவில்லை. ஆனால் போகப் போக புரிந்துகொண்டேன். அதேசமயம் ஆயாவுக்கு எங்கள் மீது இருந்த அக்கறையில், நான் அனுசரித்து போகவில்லை என்ற கோவத்தில் சொன்ன வார்த்தை அது.

அது எங்களை உறுத்தியதாலோ என்னவோ, பின்னர் அப்பா அழைத்தார் என்று (மாமாவின் எச்சரிக்கையையும் மீறி) திரும்பி (பம்பாய்) அவரிடமே போக... விதி விளையாட ஆரம்பித்தது.

சின்னம்மாவுடன் செட் ஆகாமல் முதலில் அண்ணன் ஓடிப் போனான். அதன் பிறகு நாங்கள் கடலூர் வந்து சேர, அங்கே தங்கை தற்கொலை செய்து கொண்டாள். `நான் ஏதோ திட்டினேன்` என்று சிலர் காரணம் சொன்னார்கள். அதே சமயம் நடிகர் ஆனந்தராஜின் (இவர் சின்னம்மாவுக்கு அத்தை மகன்) திருமணத்துக்கு அழைத்துப் போகவில்லை என்ற கோவத்தில் இந்த முடிவு என்றும் சிலர் சொன்னார்கள். உண்மை எது என்று எனக்கு தெரியாது.

அதன் பிறகு நான் அந்த வீட்டில் இருப்பது நன்றாய் இருக்காது என்பதால், இன்னொரு அத்தை வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். அதாவது மீண்டும் விருந்தாளி வாழ்க்கை. இங்கே சில வருடங்கள். அதன் பின் பேச்சலர் வாழ்க்கை ஆரம்பமானது. இங்கே ஆயா அவருடைய தள்ளாத வயதிலும் எனக்காக சமைத்துப் போட்டு ஒரு வருடம் உதவியாய் இருந்தார். இங்கேதான் நான் பசித்தாலும் உடனே சாப்பிட்டேன், ருசியாகவும் சாப்பிட்டேன். அத்துடன் இது என் வீடு (வாடகைதான்) என்ற உணர்வோடு வாழ்ந்தது அந்த சில வருடங்கள்தான்.

(அதற்காக மற்ற வீடுகளில் என்னை பட்டினி போட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக நீங்கள் எல்லாம் ஒரே டேஸ்டில், அதாவது அம்மா சமையல் சாப்பிட்டு பழகி இருப்பீர்கள். எனவே உங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஆட்சி மாறுவது போல், நான் அடிக்கடி உறவினர்கள் வீட்டில் மாறி மாறி வாழ்ந்ததால், அவர்களுடைய டேஸ்ட் எனக்கு செட்டாகவில்லை. அதேசமயம் ஆயா சொன்ன வார்த்தைகளின் அர்த்தமும் எனக்கு புரிய ஆரம்பித்ததால், அவர்களாக சாப்பிட அழைத்தால் போவது, பிடிக்காவிட்டால் குறைவாக சாப்பிடுவது என்று பழகிக் கொண்டேன். அந்த டென்ஷன்தான் எனக்கு. )

அதன் பிறகு ஆயா போன பிறகு நானே பொறுமை இழந்து ஒரு `முடிவெடுக்க`, மீண்டும் அப்பாவிடமே அடைக்கலமாக வேண்டியே சூழ்நிலை. வேறு வழி இல்லாமல். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு அங்கே போனதால் அந்த வீட்டிலேயே நான் ஒரு விருந்தாளி என்ற உணர்வுதான் எனக்கு.

அடுத்த சில வருடங்களில், தனியாகவே வாழ்ந்து பழகிவிட்ட அண்ணனும் வெற்றிகரமாக வாழ்க்கையை முடித்துக் கொள்ள... எனக்கு தலைவலி ஆரம்பித்தது. எனது நெருங்கிய உறவுகள் மூன்றுமே தற்கொலை என்பதால், மற்ற உறவினர்கள் என்னை நச்சரிக்க ஆரம்பித்தார்கள். அக்கறையாம்! யார் வீட்டிலாவது சுபகாரியங்கள் நடந்தால், என் தலை உருளும். ஒரு கல்யாணத்துக்கு போக முடியாது, உறவினர் வீடுகளுக்கு போக முடியாது. எங்கே போனாலும் அட்வைஸ் மழைதான். நான் இதறகாகவே அரை மணி நேரம் ஒதுக்க வேண்டி இருக்கும். கொடுமை. `நெருங்கிய உறவுகள் இல்லாததால் எனக்கு திருமணம் அவசியம்` என அவர்கள் வலியுறுத்த, நானோ வேறு ஒரு காரணத்துக்காக மறுத்தேன். (அப்படியெல்லாம் பாக்கக் கூடாது. இது வேற சபதம்.)

அதேசமயம் அவர்களின் அக்கறை பாதி உண்மையாக இருந்தாலும், இன்னொரு காரணமும் இருந்தது. அதை நான் சொல்லப் போவதில்லை. ஆனாலும் கோவம் கொண்டு நான் ஒரு சபதம் எடுத்தேன்.

இப்படி இந்த விருந்தாளி வாழ்க்கையிலிருந்து தப்பிக்க முடியாமல் எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற டென்ஷனில் நான் இருக்க...ஜெயிலுக்கு போனால் என்னுடைய பிரச்சினைகள் தீர ஒரு வாய்ப்பு கிடைக்கும் அப்படிங்கிற ஐடியா எப்படியோ எனக்கு வந்தது. ஆனால் அதற்காக என்ன செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்தேன். இப்படி நான் குழப்பத்தில் இருந்த நேரத்தில் என் மாமா வீட்டில் வேறு ஒரு பிரச்சினை. இந்த பதிவை சுருக்க அந்த பிரச்சினையை விட்டுவிடுவோம்.

`இவர் செத்தா எங்களுக்கு நிம்மதி`ன்னு என் மாமாவோட குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி புலம்பியதை நான் கவனித்தேன். பல வீடுகளில் இது போல் சொல்வது சகஜம். எனவே இதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நான் அதை சீரியசாக எடுத்துக் கொண்டேன். காரணம் அது எனக்கு ஒரு வழியை காட்டியதால்.

எனது இந்த முயற்சி நிச்சயம் அவங்களுக்கு உதவனும்ங்கிற எண்ணத்தில் இல்லை. மாமா குடும்பத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அவர் எனக்கு தாய் மாமன். நாங்கள் ஆதரவற்று இருந்த போது எங்களை ஆதரித்தவர். எனவே அவருக்கு எதிராக என்னால எதையும் நினைக்கக் கூட முடியாது. இருந்தாலும் நான் இந்த முடிவுக்கு வந்த காரணம், உடல்நிலை சரி இல்லாமல், அவர் ஏற்கனவே எமனிடம் அப்பாயின்மென்ட் வாங்கி வைத்திருந்ததுதான்.

என்னுடைய டென்ஷனான லைப்லேந்து தப்பிக்கிறதுக்காகவும், நான் ஜெயிலுக்கு போக ஒரு வழியும் வேண்டும் என்பதால் நான் இதை பயன்படுத்திக்கொண்டேன். நான் இந்த காரியத்தை செய்யவில்லை என்றால் சில மாதங்களில் அவர் இயற்கையாய் போயிருப்பார். அவ்வளவுதான். அவர் உடல்நிலை இருந்த சூழ்நிலையில், இதை கருணை கொலைன்னு கூட சொல்லலாம். ஆனால் சட்டப்படி அது குற்றம்.  என்னை ஜெயிலுக்கு அனுப்பும். அதுதான் காரணம்.

இப்படி எல்லாம் திட்டமிட்டாலும், ஜெயில் எப்படி இருக்குமோ என்ற கவலை என்னை முடிவெடுக்க விடாமல் தடுத்தது. ஆனாலும் ஒருகட்டத்தில் நான் பொறுமை இழந்துவிட்டேன். ஒரு நாள், இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்ற உறுதியான முடிவுக்கு நான் வர, எது நடந்தாலும் நடக்கட்டும், மாமாவுக்கு விடுதலை கொடுப்போம், நாம் ஜெயிலுக்கு போவோம் அப்படீங்கிற முடிவோடு சென்னைக்கு கிளம்பினேன்.

மாமா வீட்டுக்குள் நுழைந்த உடனேயே மாமாவை குறை சொல்லி கம்ப்ளைன்ட். நான் இப்படி ஒரு முடிவோடு வந்திருப்பது  தெரியாமல், அவர்களெல்லாம் புலம்ப ஆரம்பிக்க, நான் இதைதான் விதின்னு சொல்றதோன்னு நினைத்துக்கொண்டு, அவர்களுக்கு நிம்மதியையும் எனக்கு ஜெயிலையும் தரக்கூடிய அந்த கொலை முயற்சில இறங்கினேன்.

இனி போலீஸ் ஸ்டேஷன்.

போலீஸ்காரர்களுக்கும் அன்று தலைவலிதான். எல்லோரும் குழம்பிப் போய் பலவிதமான கேள்விகளாக கேட்டும் அவர்களுக்கு இந்த வழக்கின் தன்மை புரியவில்லை. நான் ஜெயிலுக்கு போகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க... என் மாமாவோ எனக்கு எதிராக கம்பிளைன்ட் கொடுக்கமாட்டேன்னு என்று மறுக்க... இது இயற்கைக்கு விரோதமான கேஸா இருக்கேன்னு அவங்களுக்கு குழப்பம்.

அப்புறம் கடலூரில் விசாரணை, சொந்தக்காரர்களிடம் விசாரணை என்று விசாரணையை தொடர்ந்து, என்னுடைய வாக்குமூலத்தையும் கேட்ட பிறகு, என் கதை அவர்களுக்கு புரிய ஆரம்பித்தது. `நான் ஒரு டென்ஷனான மனநிலையில் இருக்கிறேன். மாமாவை கொலை செய்தால் மாமா வீட்டிலும் நிம்மதி, நானும் ஜெயிலுக்கு போக ஒரு வழி கிடைக்கும்` என்கிற ஒன் லைன் ஸ்டோரி அவர்களுக்கு புரிய ஆரம்பித்தது.

அப்போதுதான் ஒரு போலீஸ்காரர் என்னிடம் ரொம்ப சர்வ சாதாரணமாக சொன்னார்: ஏம்பா.. உனக்கு ஜெயிலுக்கு போவணும்னு ஆசை இருந்தா எங்ககிட்ட சொல்ல வேண்டியதுதானே. நாங்க பொய் கேஸ் போட்டு உள்ள அனுப்சிருப்போமே!

அவர் சொன்ன விதத்தை வைத்து பார்த்தால் அவர்கள் தினசரி... வேண்டாம்...முடிந்தால் வேறு ஒரு பதிவில் அதை பார்ப்போம். இப்போதைக்கு என் தலைவலிகள் மட்டும்..

இன்ஸ்பெக்டர் என்னிடம், `உன் மாமா உன் மேல கம்ப்ளைன்ட் தர மாட்டேங்கிறார். இப்ப நாங்க என்ன பண்றதுன்னு?` என் கிட்டயே கேள்வி கேட்டார். அந்த நேரம் நான் இருந்த எமோஷனலான நிலையில், `நீங்க என்ன வெளியில விட்டா நான் மறுபடியும் ஏதாவது பண்ண வேண்டி இருக்கும்` என்றேன் நான். என் வார்த்தைகளில் கோவம் இருந்தது. அதன் பின் என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அங்கே நான் ஒரு ஷோ கேஸ் பொம்மையாகிப்போனேன்.

பின்னர் இன்ஸ்பெக்டர் யாரையோ அழைத்து வந்தார். பத்திரிகையாளராக இருப்பார் என்று நினைத்தேன். அவரிடம் என்னை காட்டி,  `இப்படி ஒரு வித்தியாசமான கேஸ கேரளாவுல பாத்திருக்கேன்` என்று சொன்னார். அதன் பிறகு மெல்ல மெல்ல எனக்கு ஜெயிலைப் பற்றிய பயத்தை காட்டும் வேலை நடந்தது.

`உனக்கு ஜெயில் சரிபட்டு வராது. ஜெயிலுக்கு போனா நிம்மதியா இருக்கலாம்னு நீ நினைக்கற. போய் சுத்திப் பாத்துட்டு பெயில்ல போற வழியப் பாரு` -இது இன்ஸ்பெக்டர்.

வேறு ஒருவர், `அங்க உனக்கு சாப்பாடே தராம மத்த கைதிகள் கொடுமை படுத்துவாங்க` என்றார். சினிமாவில் இந்த காட்சியை பார்த்ததால் நானும் நம்பினேன்.

இன்னொருவர் உச்சகட்டமாக, அங்க ரவுடிங்களெல்லாம் `வேற` மாதிரி டார்ச்சர் கொடுப்பாங்க` என்றார்.

நான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அமைதியாய் இருந்தேன். நான் என்னுடைய சொந்த கதையை மட்டும் போலீசாரிடம் சொன்னேன். அது அததனையும் உண்மை என்பதால் அவர்கள் அதற்கு மேல் போகவில்லை. ஆனால் இங்கே நான் கடைசி முறையாக என் அதிர்ஷ்டத்தை பரிசோதிக்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியாது.

என்னுடைய சிந்தனையெல்லாம் இந்த வித்தியாசமான கேஸ் நிச்சயம் பத்திரிக்கையில் செய்தியாகுமே, என்ன தலைப்பு கொடுப்பார்கள் என்பதை பற்றிதான். ஒரு வாரம் பத்திரிக்கைகளில் என் கதை ஓடும். இப்போதே போலீஸ் ஸ்டேஷனில் எனக்கு சாதகமாக அனுதாப அலை அடிக்க ஆரம்பித்து விட்டது. இங்கும் எனக்கு அட்வைஸ் மழை. இதேபோல் இந்த அனுதாப அலை பத்திரிக்கைகளின் உதவியால் தமிழகம் முழுக்க அடிக்க ஆரம்பித்தால்... அந்த அனுதாப அலையை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்? நான் ஏற்கனவே ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதை ஆழமாக கவனிக்க ஆரம்பித்து விட்டேன்.

பொதுவாக பலர் தவறான பாதையில் போகக் காராணம், அவர்களுக்கு சிறுவயதில் கிடைக்கும் அதீத செல்லமும், நாம் என்ன செய்தாலும் நம் பெற்றோர் நம்மை காப்பாற்றிவிடுவார்கள் என்ற தைரியமும்தான். எஸ் பி பி சரண் இதற்கு ஒரு உதாரணம். ஆனால் ஆரம்பித்திலேயே என் ஆயா எனக்கு கீதா உபதேசம், அதாவது எங்களின் வாழ்கை நிலையை சொல்லிவிட்டதால், நான் உண்டு, புத்தகங்கள் உண்டு என்று நான் அமைதியாகவே இருந்துவிட்டேன். எனவே பத்திரிகைகளில் என் கதை செய்தியாக வந்தால், எனக்கு நெகடிவ் பப்ளிசிட்டி கிடைக்க வாய்ப்பில்லை. பாசிடிவாகத்தான் இருக்கும்.

எனவே இந்த அனுதாப அலை அல்லது அந்த பிரபலத்தை வைத்துக் கொண்டு கரை சேருவது என்பதுதான் என் பிளான். சில வருடங்கள் நான் ஜெயிலில் இருக்க வேண்டி வரும். ஆனால் இது என் பிரச்சினைகளை தீர்க்கும் என்றால் நான் அந்த சிறை வாழ்க்கைக்கும் தயாராக இருந்தேன். இது குறுக்கு வழிதான். ஆனால் கடலூரில் அந்த வீட்டில் இருக்கவும் முடியாமல் வெளியேறவும் முடியாமல் நான் பட்ட அவஸ்த்தை என்னை இந்த முடிவுக்கு தள்ளியது. அவஸ்தை என்றால் நீங்களாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். மனம் ஒப்பாத வீட்டில் உங்களால் எதையும் ஜீரணிக்க முடியாது.  இது அந்த வகையை சேர்ந்தது.

ஆனால் இரண்டு விஷயங்களை நான் எதிர்பார்க்கவில்லை...

இன்னொரு பதிவையும் போட்டுவிட்டால் உங்களுக்கு முழுவதும் புரிந்துவிடும். அதுவும் விரைவில் ....


சில விளக்கங்கள்.

என் கதையை நானே சொல்வதில் சில தர்மசங்கடங்கள் இருக்கிறது. என்னிடம் ஏதாவது குறை இருந்தால் அதை நானே சொல்லமுடியாது. மழுப்பிதான் ஆக வேண்டும். அது இயற்கை. அல்லது என்னிடம் குறை இருந்து அதை நான் உணராமலும் இருக்கலாம். ஆனால் நான் எதிர்பார்த்தபடி இந்த வழக்கு பிரபலமாகி இருந்தால், பத்திரிக்கையாளர்கள் என் முழு ஜாதகத்தையும்  உங்களிடம் கொடுத்திருப்பார்கள்.


என் கதையை நான் என் பார்வையில் சொல்லி இருக்கிறேன். இதே கதையை உறவினர்கள் பார்வையில் பார்த்தால் அங்கேயும் சில நியாயங்கள் இருக்கலாம். எனவே யாரையும் குறை சொல்லும் நோக்கம் எனக்கு இல்லை.  இயற்கை எனக்கு சில பிரச்சினைகளை உருவாக்கிவிட்டது. அதிலிருந்து தப்பிக்க நான் எடுத்த முயற்சி என்ற வகையில் இந்த பதிவை படியுங்கள்.

என் கடைசி முயற்சி. 

2 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

இன்று ஓரே மூச்சில் உங்களின் பழைய பல பதிவுகளை தொடர்ச்சியாக படித்துக் கொண்டே வருகின்றேன்.

சிவானந்தம் said...

வாங்க ஜோதிஜி,

அந்தந்த கால சிந்தனையை அப்படியே தெளித்திருக்கிறேன்.

இப்போது மீண்டும் பழைய பதிவுகளை படித்தால் அதை சரியாக செதுக்கவில்லை என்ற எண்ணம் வருகிறது. இருந்தாலும் தொடர்ந்து எழுத முயற்சித்ததில், எழுத்துக்களை கோர்ப்பதில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது. அந்த வகையில் சந்தோஷம்.

Post a Comment