!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Tuesday, April 23, 2013

அகமதாபாத் ஆஸ்பிட்டல் காமெடி

சில மாதங்களுக்கு முன் ஒரு உறவினருக்கு உடல்நிலை சரியில்லை. டூ வீலரில் போகும்போது சிறிய விபத்து. இடது கையை தோளில் இணைக்கும் இடத்தில் ஏதோ கிழிந்துவிட்டதாம். அவரால் கையை தூக்க முடியவில்லை. ஆபரேஷன் செய்தாக வேண்டும். ஆஸ்பிட்டலில் இருக்கும் அந்த சில நாட்களுக்கு உதவிக்கு அழைக்க, நானும் போனேன். 

அவர் நேரடியாகவே தன் மகனுடன் போய் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகிவிட்டார். மறுநாள் போனேன். நான் இப்போது ரொம்ப சிக்கனம் என்பதால், பஸ்ஸில் போகும் வழியை விசாரித்தேன். `வேண்டாம். ஆட்டோவிலேயே வாங்க` என்றார் அவர். காரணம், இரண்டும் ஒரே கட்டணம்தான். 10௦ ரூபாய். நாங்கள் இருந்த இடத்திலிருந்து அந்த ஆஸ்பிட்டல் பத்து கிலோமீட்டர் இருக்கலாம்.

ஷேர் ஆட்டோதான் பத்து ரூபாய். ஆட்டோக்களில் சர்வசாதாரணமாக 7 பேர் போவார்கள். திரும்பிய பக்கமெல்லாம் ஆட்டோ. CNG கேஸில் ஓடுகிறது. கொஞ்சம் பெரிய சைஸ் ஆட்டோவோ அல்லது ஷேர் வேனோ கிடையாது. சாதாரண ஆட்டோதான். கடுமையான போட்டி. யாரும் எங்கேயும் ஏற்றுவார்கள். தமிழ்நாட்டைப் போல் சங்கம் வைத்துக் கொண்டு மக்களை கொள்ளை அடிப்பதில்லை. 

நியாயமாக பார்த்தால், ஆட்டோவைவிட பஸ்ஸில் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும்? அதேசமயம் பஸ்ஸில் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், அரசும் லாபம் பார்பதுபோல் தெரியவில்லை. பொதுத் துறைகள் என்றாலே எங்கேயும் முட்டாள்த்தனமான நிர்வாகம்தான். அது மோடியின் நிர்வாகமாக இருந்தாலும் சரி. இதை பற்றி எழுத ஆரம்பித்தால் அது வேறு ரூட்டில் போய் முடியும். எனவே ஆஸ்பிட்டலை மட்டும் பார்ப்போம். 

வாடிலால் சாராபாய் ஆஸ்பிட்டல் 

இது அரசு மற்றும் தனியாரின் கூட்டணியில். ஏழைகளுக்கு குறைவான கட்டணங்கள். மருந்துக்கள் நாம் வெளியே வாங்கிக் கொள்ள வேண்டும். செலவு குறையும் என்பதால் பல பணக்கார ஏழைகளும் வருவார்கள்.

உறவினரை பரிசோதித்த தனியார் டாக்டர், அதிகம் செலவாகும் என்று சொல்லி இந்த அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி இருக்கிறார். இங்கே அரசு டாக்டர்கள், `இவ்வளவு செலவாகும். உங்களால் எவ்வளவு முடியும்?` என கேட்டிருக்கிறார்கள்.

`அவ்வளவு வசதி இல்லை, நாங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கிறோம்` என்று இன்றைய இந்தியனின் ஸ்டாண்டர்ட் வசனத்தை இவர் சொல்லி இருக்கிறார். உங்களால் எவ்வளவுதான் முடியும்? என்று அவர்கள் பேரம் பேசி கடைசியில் ஒரு தொகைக்கு வந்திருக்கிறார்கள். இதை கேள்விப்பட்டபோது ஆச்சர்யப்பட்டேன். அரசு ஆஸ்பத்திரில ஏன் இப்படி பேரம் பேசனும்? புரியவில்லை. 

அதற்கும் ஒரு பதில் வந்தது. ஏழைகளுக்கு முடிந்தவரை இலவசமாக செய்தாலும், எல்லோருக்கும் அதுபோல் செய்தால் நிஜமான ஏழைகளுக்கு உதவ முடியாதே. அங்கே வரும் எல்லா பேஷன்ட்களும் பஞ்சப் பாட்டு பாடுகிறார்கள். எனவே, முடிந்த வரை பேசி கட்டணம் வாங்குவார்களாம். இந்த பதில் நியாயமாக இருந்ததால் நானும் திருப்தி அடைந்தேன். அதாவது அப்போதைக்கு.. 

மறுநாள் நான் போனபோது அங்கே காட்சிகள் அதிர்ச்சியாக இருந்தது. பொது மருத்துவமனை என்பதால் மறைப்புகள் இல்லை. பல பேருக்கு கை கால்கள் எடுக்கப்பட்டு, சிலருக்கு கால்களில் ஸ்டீல் கம்பிகளால் துளைக்கப்பட்டு, முட்டு கொடுக்கப்பட்டு இருந்தது. எந்த பக்கம் திரும்பினாலும் இந்த விகாரமான காட்சிகள்தான். வலியைவிட எதிர்காலம் குறித்த கவலைகளை அவர்களின் முகத்தில் பார்க்கும் போது,விபத்துக்களில் இறப்பவன்தான் அதிர்ஷ்டசாலியோ என நினைக்க வைத்தது. 

இனி சில அனுபவங்கள்.

இதுவல்லவா தள்ளுபடி 

அங்கே இருந்த நாட்களில் டாக்டர்களை விட மெடிக்கல் ரெப்களை அதிகம் பார்த்தோம். வழக்கமாக இவர்கள் டாக்டர்களிடமும் மருந்துக் கடைகளிலும்தான் மார்கெட்டிங்காக போவார்கள். தமிழகத்தில் அதைத்தான் பார்த்திருக்கிறேன். இங்கே அது வேறுமாதிரி இருக்கிறது.

அந்த ஏரியாவில் இருக்கும் மருந்துக்கடைகளின் ஆட்கள், ஆஸ்பிட்டலுக்குள் அடிக்கடி ரவுண்ட்ஸ் வருகிறார்கள். புதிதாக வந்திருப்பவர்கள் பற்றிய தகவலை பெற்றுக் கொண்டு, அவர்களிடம் சென்று, `எங்களிடம் மருந்து வாங்கினால் உங்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி தருகிறோம்`. என்று மார்கெட்டிங் செய்வார்கள். `எல்லா கடைகளிலும் விசாரித்துவிட்டே வாங்குங்கள்` என எச்சரிப்பார்கள். சொல்லி வைத்தாற் போல் எல்லோரும் இப்படியே சொல்ல, யாரை நம்புவது என்ற குழப்பத்தில் நாங்கள்.

ஆபரேஷனுக்கு முன் இருந்த அந்த இரண்டு நாட்களில் பல மருந்துக் கடைகளின் விசிட்டிங் கார்ட்கள் சேர்ந்துவிட்டது. அக்கம் பக்கம் பெட்களில் இருந்தவர்களும் `விசாரித்து வாங்குங்கள்` என உபதேசம் செய்ய, நாங்கள் உஷாரானோம். ஆபரேஷனுக்கு முதல் நாள் தேவையான மருந்துக்களை டாக்டர்கள் எழுதிக் கொடுத்துவிட, விலை விசாரிக்கும் வேலையில் இறங்கினோம்.

அந்த ஆஸ்பிட்டலில் இருக்கும் ஏரியாவில் எல்லா மருந்துக் கடைகளிலும் `சர்காரி மான்ய தவாகானா` என்று போர்ட். அதாவது அரசு மானியத்தில் இவர்கள் மருந்து விற்கிறார்களாம். இதுவரை நான் எங்கும் காணாத காட்சி. அந்த விசிட்டிங் கார்ட் கடைகள் மட்டுமின்றி வேறு சில கடைகளிலும் விசாரித்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.கடைசியில் ஒரு கடையில் எல்லா மருந்துக்களும் MRP யில் ரூ.7300 என காட்ட, அதை அவர்கள் 3000 கட்டணத்தில் கொடுக்க முன் வந்தார்கள். அதிலும் பேரம்பேசி ரூ. 2 80 0க்கு வாங்கினோம். அதாவது 6 0 சதிவிகித தள்ளுபடி. இது என்ன வகையான தள்ளுபடியோ. எனக்கு ஒரு எழவும் புரியவில்லை.

ஒரு வியாபாரி என்ற வகையில் இந்த MRP என்பதே ஒரு மோசடி என்பது தெரியும். ஆனால் அது இந்த அளவுக்கு, அதுவும் மருந்துக் கடைகளில் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதே மருந்தை வேறு கடையில் ஒருவர் ரூ. 4300 ௦ சொன்னார். ஒரு வேளை இந்த மோசடிகள் தெரியாதவர்கள் போயிருந்தால் அவ்வளவுதான்.

அதேசமயம் இந்த அளவுக்கு தள்ளுபடிகள் கொடுத்தும் அவர்கள் நன்கு லாபம் பார்கிறார்கள் என்பதும் உண்மை. முதல் முறை இந்த அதிரடித் தள்ளுபடியில் மருந்து வாங்கிய பிறகு மறுநாள் மேலும் சில மருந்துக்களை வாங்க வேண்டி இருந்தது. நான் அந்த மருந்து சீட்டை கையில் வைத்துக் கொண்டே ஆஸ்பிட்டலிலிருந்து வெளியே வந்தேன். காம்பவுண்டை தாண்டவில்லை. அதற்குள் ஒருவர் வேகமாக வந்து என் கையிலருந்த மருந்து சீட்டை வாங்கி (பிடுங்கி) பார்த்தார். `எங்ககிட்ட வாங்குங்க, 5 0 பர்சென்ட் டிஸ்கவுன்ட்` என்றார். அவர் கடைக்கு எப்படி போகணும் என்று வாயாலேயே வழியும் சொன்னார்.

நாங்க 6 0  பர்சென்ட் தர்ற கடையை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதால், அவரிடமிருந்து அந்த பில்லை பிடுங்கி கொண்டு பதில் சொல்லாமல் வேகமாக நடந்தேன். நான் பதில் பேசாமல் கிளம்பவே அவருக்கு கோவம் வந்துவிட்டது. `அரே போஹத் பைசா வாலாஹே கியா. ஜாவ், ஜாவ், ஒ துமே லூட்டேகா (உன் கிட்ட நிறைய பணம் இருக்கா. போ போ நிறைய ஏமாறப்போற) என்று கத்தினார்.

நான் அந்த மருந்துக் கடையிலேயே மீண்டும் மருந்து வாங்கினேன். இந்த முறை கட்டணம் தலைகீழாகிவிட்டது. கட்டணம் 6 0 ஆகவும், தள்ளுபடி 4 0 என இருந்தது. கேட்டதற்கு, `இது வேறு மருந்துக்கள்` என்றார். முதல் முறை ருசி காட்டியவர் இப்போது கொடுக்கவில்லை. இதுவும் ஒரு வியாபார உத்தி. அப்போது உறவினர் ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்தார். மருந்து உடனே போகவேண்டும் என்பதால் நான் எதுவும் சொல்லாமல் கிளம்பினேன்.

இருபது/முப்பது ரூபாய் பொருளை நூறு ரூபாய் என விலை போட்டு அதில் அறுபது, எழுபது சதிவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறார்கள். நீங்கள் விசாரித்து வாங்கினால்தான் இந்த தள்ளுபடி. அவர்களாகவே 50 சதவிகிதம் தள்ளுபடி கொடுத்துவிட்டால், நீங்கள் உண்மையிலேயே திருப்தி ஆகிவிடுவீர்கள். ஆனால் நிஜத்தில் அதுவே அவர்களுக்கு 100 சதிவிகித லாபம்.

பேரம் 

இரண்டாவது முறை டாக்டர்கள் மருந்தை எழுதிக் கொடுத்த விதமே தனி. உறவினர், ஆபரேஷன் தியேட்டரில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தயாராக இருக்க, ஒரு சீட்டில் இன்னும் இந்த மருந்துக்கள் வேண்டும் என்று வந்தது. இந்த மருந்தை வாங்கப் போகும் போதுதான் மேலே சொன்ன சம்பவம் நடந்தது.

அந்த மருந்து சீட்டு மொட்டையாக இருந்தது. பேஷன்ட் பெயர், /டாக்டர் பெயர் என எதுவும் கிடையாது. முதல் முறை அவர்கள் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டிலும் அதே கதைதான். 

இந்த மருந்தை நான் வாங்கிக் கொண்டு போய் கொடுக்கும் போது, அங்கே அந்த உறவினரின் மனைவி அழுது கொண்டிருந்தார். அங்கே பேஷன்ட்டுக்கு ஆபரேஷன் செய்ய கையை கிழித்த பிறகு, `நிலைமை இப்படி இருக்கிறது, இன்னும் கொஞ்சம் செலவு செய்தால் தரமான முறையில் ஆபரேஷன் செய்துவிடலாம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?` என டாக்டர்கள் இவரிடம்  அபிப்ராயம் கேட்டிருக்கிறார்கள். அதற்குதான் இந்த அழுகை.

ஆபரேஷனுக்காக கையை கிழித்துவிட்டு அதன்பிறகா கருத்து கேட்பது? அவர் எதுவும் சொல்ல முடியாமல் முழித்தார். இதுபோன்ற சூழ்நிலையில், `எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, கணவர் குணமானால் போதும் என்றுதான் பெரும்பாலும் சொல்வார்கள். ஆனால் இவரால் அப்படி சொல்ல முடியாது. கணவர் சிக்கனவாதி என்பதால் நாளை அவர் திட்டலாம். எனவே என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தில் இந்த அழுகை.

வேறு ஒரு உறவினருக்கு போன் செய்து அங்கே பேச சொன்னார். அவர், டாகடர்களிடம், `எங்களுக்கு வசதி இல்லை. இவ்வளவுதான் முடியும்ன்னு முதல்லயே சொல்லிட்டோமே. அதற்கு மேல் முடியாது என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார்.

இதுவும் எனக்கு அதிர்ச்சி. டாக்டர்கள் பேஷண்டின் கையை கிழித்துவிட்டு, அதன் பிறகு இவ்வளவு செலவாகும் பரவாயில்லையா என்று ஒபினியன் கேட்பதே ஒரு கொடுமை என்றால், இவர்கள் எங்களால் இவ்வளவுதான் முடியும் என்று சொன்னதும் கொடுமை. உயிருக்கு அவ்வளவுதான் மதிப்பா என நான் அதிர்ந்தேன்.

பின்னர் இதற்கும் விளக்கம் கிடைத்தது. இங்கே மேல் மட்டத்தில் ஊழல் குறைவாக இருந்தாலும், கீழ் மட்டத்தில் அது ஆறாக ஓடுகிறது. அதாவது இங்கே ஆபரேஷனில் எந்த குறையும் இருக்காது. குறை என்றால் அந்த ஆஸ்பிட்டலின் /டாக்டரின் பெயர் கெடும் என்பதால் அதை ஒழுங்காக செய்து விடுவார்களாம். ஆனால் அப்படி இப்படி என ஏதாவது காரணம் சொல்லி பணம் பிடுங்குவார்களாம். இது இங்கே வாடிக்கை என்றார். இதை கேட்டதும் மருத்துவத் துறை இன்னும் எந்த அளவுக்கு தரம் தாழும் எனப் புரியாமல் நான் திகைத்து நின்றேன்.

இந்த சம்பவத்திற்கு பிறகு எனக்கு சந்தேக வியாதி பிடித்தது. அதன்பிறகு எல்லாவற்றையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தேன்.

லஞ்சம் 

ஆபரேஷன் செய்யவேண்டிய நேரத்தில் அவர்கள் கேட்ட மருந்தை வாங்கி வைத்திருந்தாலும், அதை யாரும் வாங்கவில்லை. பல டாக்டர்கள், பல குரூப்கள் இருந்ததால் யாரிடம் கொடுப்பது என்று தெரியவில்லை. சிலரிடம் சொன்னதற்கு, `கேட்பார்கள்` என்று அலட்சியமாக சொன்னார்கள். ஆனால் யாரும் கேட்கவில்லை. ஆபரேஷன் முடிந்து வந்த பிறகும் அந்த 2000 ரூபாய்க்கான மருந்துக்கள் அப்படியே இருந்தது.

மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் ஒரு (துணை) டாக்டர் வந்தார். `ஆபரேஷன் சமயத்தில் நாங்க கேட்ட மருந்து வரலையே` என்றார். `வாங்கி இருக்கிறோம். யாரும் கேட்கவில்லை` என்றோம். `நாங்கள் இங்கே இருந்ததை பயன்படுத்திக் கொண்டோம். இதை அங்கே வைக்க வேண்டும்` என்று சொல்லி சில மருந்துக்களை (உபகரணங்களை) எடுத்துக் கொண்டார்.

நான் சந்தேகத்தின் பிடியில் இருந்ததால், இது ஒரு வகையான லஞ்சமோ என நினைக்க ஆரம்பித்தேன். போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சத்துக்கு பதில் அது இது என எதையாவது வாங்கி வரச்சொல்வார்கள். இதுவும் அப்படித்தான் என்ற எண்ணம் எனக்கு வலுக்க ஆரம்பித்தது. இவர்கள் அரசு செலவிலேயே மருந்தை பயன்படுத்திவிட்டு, இந்த மருந்தை லஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். மருந்து வாங்கும் சீட்டில் டாக்டர்/பேஷன்ட் பெயர் இல்லாததால் அவர்கள் இந்த மோசடியில் மாட்டும் வாய்ப்பு குறைவு.இப்போதுதான் மருந்து சீட்டில் பெயர் இல்லாததன் காரணம் புரிந்தது. இந்த மருந்துக்கள் மீண்டும் மெடிக்கலுக்கு போய் காசாகக் கூடும். 

பில்? 

இதற்கிடையில் எல்லா மருந்தையும் எழுதிக் கொடுத்தவர்கள், அவர்கள் பேரம் பேசிய ஒரு காஸ்ட்லியான பொருளை மட்டும் அவர்களே வாங்கிக் கொண்டார்கள். அது கை (உள்ளே) கிழிந்த இடத்தை தைப்பதற்கான ஏதோ ஓன்று. CORKSCREW FT II என்று பெயர். அதற்கான பில்லை வேறு ஒருவர் எடுத்து வந்தார். அது ரூ. 10,500.

மருந்துக் கடைகளில் அநியாயத்துக்கு பேரத்தை பார்த்துவிட்டதால், `எங்களிடம் சொல்லி இருந்தால் நாங்கள் பேரம் பேசி இன்னும் குறைவாக வாங்கி இருப்போமே` என்று சொன்னதற்கு,  `இது 16,000 . தள்ளுபடி போகத்தான் இந்த விலை` என்றார் அவர்.

கம்யுட்டரில் சும்மா ஒரு கட்டம் போட்டு  சில தகவல்களை போட்டு அது பில்லாக இருந்தது. அதையெல்லாம் பில் என ஒரு நாயும் மதிக்காது. `நாளை ஏதாவது பிரச்சினை என்றால் நாங்கள் கோர்ட்டுக்கு போவோம்` என நம் உறவினர்கள் அவரிடம் சட்டம் பேசினார்கள். அவர்களின் இந்த மோசடி ஒரு அதிர்ச்சி என்றால், இதையெல்லாம் பில் என நினைக்கும் இவர்களின் அறியாமை இன்னொரு கொடுமை.

அந்த பில்லிலும் பேரம் நடந்தது. அதாவது ஆபரேஷன் முடிந்த பிறகு. இனி பேரம் படியவில்லை என்றால் அதை திருப்பிக் கொடுக்கவும் முடியாது, 1500 குறைத்தார்கள்.

அதன்பின் ஆஸ்பிட்டல் கட்டணம் கட்டிய பிறகும் டிஸ்சார்ஜ் செய்யவில்லை. ஒரு துணை டாக்டர், `பில் கட்டியாச்சா` என்று கேட்டார். ஆஸ்பிட்டல் கட்டணத்தை கேட்கிறார் என நினைத்து, கட்டியாகிவிட்டது என்று சொல்ல, அவர் இந்த பில்லை பற்றி கேட்டார். அதுவும் கொடுத்தாயிற்று என்று சொல்லி அந்த டுபாக்கூர் பில்லை காட்டிய பிறகுதான் டிஸ்சார்ஜ் கொடுத்தார்கள்.

அனேகமாக அந்த சந்தேகத்துக்கு இடமான பொருள் (CORKSTRAW) குறைவான மதிப்பில் இருக்கலாம். இவர்கள் யானை விலை வைத்து அதில் டாக்டருக்கும் கமிஷன் தருகிறார்கள். அல்லது இதுவும் அரசு செலவில் செய்துவிட்டு இப்படி வசூலிக்கலாம். எது உண்மையோ?

பேஷன்ட்களிடம் ஓரளவாவது கட்டணம் வாங்குவதன் மூலம் நிஜமான ஏழைகளுக்கு உதவமுடியும் என அரசு நினைக்கிறது. ஆனால் இங்கே நடைமுறைகள் அனைத்தும் டாக்டர்களும் மற்ற வியாபாரிகளும் பணம் பார்பதுபோல்தான் தெரிகிறது.

மன்னிக்கும் நேரம்: மாலை 4-30 முதல்  5- 30 வரை 

எனக்கு இந்தி, குஜராத்தி ஓரளவு படிக்க தெரியும். அங்கே ஒரு இடத்தில், `மாப் கர்வானு சமய்: மாலை  4-30 முதல்  5- 30 வரை` என்று வித்தியாசமாக இருந்தது.

மன்னிப்பதற்கும் நேரம் காலம் இருக்கிறதா என்ன? அதுசரி யாரை மன்னிக்க வேண்டும்? ஒன்றும் புரியவில்லை. எனக்கு தெரிந்த குஜராத்தியில் மாப் (கரோ) என்றால் மன்னியுங்கள் என்று அர்த்தம். எனவே நான் அந்த அர்த்தத்தில் புரிந்து கொண்டேன். பின்னர் விசாரித்ததில், கட்டணக் குறைப்பு என்ற செயலுக்கும் இதே வார்த்ததைதானாம்.

இந்த ஆஸ்பிட்டலில் சில சேவைகளுக்கு கட்டணம் உண்டு. பெட் வாடகை என ஒட்டு மொத்த பில்லும் உண்டு. இதுவே குறைந்த கட்டணம்தான். ஆனால் இதிலும் குறைக்கலாமாம். இதற்கென ஒரு டாக்டர் இருக்கிறார். அவரிடம் போய், `மாப் கரோ` என்றால், அவர் அதிலும் குறைத்து பில் போடுவாராம்.

இது தெரிந்தவுடன், நம் உறவினர் இதிலும் காசு குறையுமே என அங்கே போகச்சொன்னார். ஆண்கள் போனால் கருணை காட்டமாட்டார்கள் என்பதால், அவர் மனைவியையே போக சொன்னேன்.

அந்த டாக்டர் நம்ம கலைஞருக்கு சித்தப்பாவா இருப்பார் போலிருக்கிறது. அரசாங்கப் பணம்தானே என்று மானாவாரியாக தள்ளுபடி கொடுத்தார். அதிலும் ஒரு வரைமுறை இல்லை. அது அவர் மூடை பொறுத்தது போலிருக்கிறது.

எங்களுக்கு பெட் வாடகை மற்றும் இதர கட்டணம் என 900  வந்தது. அதில் 400௦௦ ரூபாய் குறைத்தார். பெரும்பாலும் எல்லோருக்கும் இவரும் 5 0 சதிவிகிதம் தள்ளுபடி கொடுத்தார். தள்ளுபடி என்றால் எதற்கு, எப்படி என்றே புரியாத நிலை. இதற்கு பேசாமல் இலவசமாகவே சேவை செய்து விடலாம்.

27 comments:

rajan said...

இதுபோல சென்னையில் ஒரு பிரபலமான நகைக்கடை நடக்கிறது , salesman ஒரு calculation போடுவார் அதை எடுத்து கொண்டு supervisor இடம் போனால் கொஞ்சம் குறைப்பர் சார் இன்னும் கொஞ்சம் என்று கேட்டால் போய் மேனேஜர் பருஇங்கல் என்று சொல்லுவர் நாமமும் மேனேஜர் இடம் போனால் அவர் கொஞ்சம் குறைப்பர் . ஆனால் அது ஒரு தரமான கடை . salesmanனிடம் எதுவும் கேகவிலை என்றல் அதே விலை தான் .ஏன் இப்படி ஒரு சிஸ்டம் என்று புரியவில்லை

சேக்காளி said...

நல்லதொரு பதிவு.

துளசி கோபால் said...

அட ராமா!!!!!!

வவ்வால் said...

சிவானந்தம்,

நீங்க அமதாபாத் போனதால் எங்களுக்கு இப்படிலாம் ஒரு மருத்துவ அமைப்பு இருகுனு தெரிய வந்திச்சு,இல்லைனா தெரியாமலே போயிருக்கும், நீங்க ஊரு விட்டு ஊரு போனதால் இப்படியும் ஒரு நன்மை :-))

வித்தியாசமான அமைப்புனே சொல்லலாம்.வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

அங்கேயாவது பேரம் பேசி எம்.ஆர்.பி விலையை குறைக்க முடியுது, தமிழ்நாட்டில் அதே அதிக விலையைத்தானே கொடுக்கிறோம்.

இல்லை இங்கே நியாயமான எம்.ஆர்.பி அச்சடிச்சு அனுப்புறாங்களா?

ரெண்டுப்பகுதிக்கும் ஒப்பிட்டு பார்க்கணும்.

# இப்ப நீங்க மாட்டிக்கிட்டிங்க, தனியார் வந்தா எல்லாம் ஒழுங்காகும்னு சொல்வீங்களே மருந்துக்கம்பெனி எல்லாம் தனியார் தான் பின்னர் ஏன் டுபாக்கூரா எம்.ஆர்.பி விலை வைச்சு தள்ளுபடி போல காட்டி விக்குறாங்க. அதே தள்ளுபடி நம்ம ஊரில் இல்லை.

மருந்துனு இல்லை எல்லா பொருளுமே இப்படித்தான் ,ஹார்லிக்ஸ் ஒரிஜினல் விலை 50 ரூபா கம்மி,சூப்பர்ஸ்டாக்கிஸ்ட்டுக்கு அப்படித்தான் வருது.நானே அப்படிக்கம்மி விலையில் வாங்கியிருக்கேன்.

அதே போல முட்டைக்கூட கொடவுன்ல வாங்கி இருக்கேன்,எங்க ஏரியாவில தான் ஒரு பெரிய முட்டை கொடவுன் இருக்கு.,அங்க லேச உடைஞ்ச முட்டை, நல்ல முட்டை எல்லாம் விற்பாங்க.

லேசா உடைஞ்சு லீக் ஆனப்போல இருக்க முட்டை எல்லாம் 1 ரூபா ,மக்கள் வாங்கி உடனே ஆம்லேட் போட்டுக்கும், ரொம்ப உடைஞ முட்டைய எல்லாம் வாளியில்/டப்பாவில் உடைச்சு ஊத்தியே எடுத்தும் போவாங்க.அது போல முட்டைக்கு தோராயமா 10 ரூபாக்கொடு என்பது வாங்கிப்பாங்க,ஆனால் நிறைய முட்டை கிடைக்கும்.

P.K.K.BABU said...

PLEASE SEE DPCO (DRUG PRICE CONTROL ORDER) IN GOOGLE.

சிவானந்தம் said...

ராஜன்,

விலையை குறைப்பவர்கள்தான் நல்லவர்கள் என்றும், அப்படி குறைக்க முடிந்தால் நாம் திறமைசாலி என்ற மனப்பான்மை மக்களிடம் இருக்கிறது. எனவே வியாபாரிகள் இப்படி இருக்கிறார்கள். நிஜத்தில் சிலரிடம் நான் பேரம் பேசி பார்பதுண்டு, ஆனால் அவர்கள் பிடிவாதமாக குறைக்க மறுத்தால், நான் அங்கேதான் வாங்குவேன்.

சேக்காளி, துளசி கோபால்,

வாங்க. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

சிவானந்தம் said...

வவ்வால்,

///நீங்க அமதாபாத் போனதால் எங்களுக்கு இப்படிலாம் ஒரு மருத்துவ அமைப்பு இருகுனு தெரிய வந்திச்சு,இல்லைனா தெரியாமலே போயிருக்கும், நீங்க ஊரு விட்டு ஊரு போனதால் இப்படியும் ஒரு நன்மை ///

ம்ஹும்... அனுபவங்களை பதிவு செய்வோம். இதனால் சிலர் ஏமாறாமல் தடுக்கப்படலாம்.அல்லது மாற்றத்தை கொண்டுவரக் கூடியவர்களின் கண்ணில்பட்டு, சில மோசடிகள் முடிவுக்கு வரலாம். ஏதாவது நடக்கட்டும்.

//அங்கேயாவது பேரம் பேசி எம்.ஆர்.பி விலையை குறைக்க முடியுது, தமிழ்நாட்டில் அதே அதிக விலையைத்தானே கொடுக்கிறோம்.

இல்லை இங்கே நியாயமான எம்.ஆர்.பி அச்சடிச்சு அனுப்புறாங்களா?//

இந்த தள்ளுபடி அந்த ஏரியாவில் மட்டும்தான் என நினைக்கிறேன். நான் வசிக்கும் ஏரியாவிலும் அதுபோல் கிடையாது. இருந்தாலும் இந்த MRP யில் பலவித மோசடி எங்கேயும் உண்டு.

//இப்ப நீங்க மாட்டிக்கிட்டிங்க, தனியார் வந்தா எல்லாம் ஒழுங்காகும்னு சொல்வீங்களே மருந்துக்கம்பெனி எல்லாம் தனியார் தான் பின்னர் ஏன் டுபாக்கூரா எம்.ஆர்.பி விலை வைச்சு தள்ளுபடி போல காட்டி விக்குறாங்க. அதே தள்ளுபடி நம்ம ஊரில் இல்லை.

மருந்துனு இல்லை எல்லா பொருளுமே இப்படித்தான் ,ஹார்லிக்ஸ் ஒரிஜினல் விலை 50 ரூபா கம்மி,சூப்பர்ஸ்டாக்கிஸ்ட்டுக்கு அப்படித்தான் வருது.நானே அப்படிக்கம்மி விலையில் வாங்கியிருக்கேன்.///

குதிரைதான் வேகமா ஓடும் என்பது உண்மையானாலும், அதற்கும் கடிவாளம் தேவை. இந்தியாவில் அது கிடையாது. அதனால்தான் இவர்கள் இப்படி..
-------------------
பாபு,

//PLEASE SEE DPCO (DRUG PRICE CONTROL ORDER) IN GOOGLE.///

என்னத்த பார்க்கிறது. சட்டம் என ஏதாவது ஓன்று கொண்டுவருவார்கள். அதில் நிச்சயம் ஏதாவது ஓட்டை இருக்கும். அதையும் சரி செய்யமாட்டார்கள். அந்த சட்டத்தையும் அமல்படுத்தமாட்டார்கள்.

பழனி. கந்தசாமி said...

நல்ல கொள்ளையா இருக்கே, அங்க ஒரு மருந்துக்கடை போட இடம் பாருங்கோ, நான் வந்துடறேன்.அப்படியே மெதுவா ஒரு ஆஸ்பத்திரி கட்டீடலாம்!!!!!!உங்களுக்கும் ஷேர் கொடுத்துடறேன்.?

நாடோடிப் பையன் said...

Very interesting experience. Thanks for sharing.

நம்பள்கி said...

கோயிந்தா! கோயிந்தா.! கோயி..கோயி..கோயிந்தா...! அகமாதாபத் ஹாஸ்பிடலுக்கு போனால்...கோயிந்தா...கோயிந்தா!

இந்த குப்பை மோடி அரசாங்கத்திற்கு ஜால்ரா போடும் நம் ஊடங்களின் ஒரே அஜெண்டா...என்ன என்று புரிகிறது...

சிவானந்தம் said...

@பழனி கந்தசாமி

///நல்ல கொள்ளையா இருக்கே, அங்க ஒரு மருந்துக்கடை போட இடம் பாருங்கோ//,

ம்ஹும். அது சரிபட்டு வராது. இப்பவே அவங்க போட்டி போட்டு மார்கெட்டிங் செய்வதால், சில பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கு. நாங்க விலை விசாரித்த ஒரு கடையில ஒருவர் கடமைக்கு விலை போட்டு சொன்னார். நாங்க திரும்பி வருவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.

இன்னொரு கடையில், `ஏன் நீ போடேன், நீ போடேன்` என்று சலித்துக் கொண்டார்கள். பலர் விலை கேட்டுவிட்டு போய்விடுவார்கள் போலிருக்கிறது. இவர்களுக்குள் கடுமையான போட்டி வந்துவிட்டதால், இவர்கள் தானாகவே அழிந்து போவார்கள்.

//நான் வந்துடறேன்.அப்படியே மெதுவா ஒரு ஆஸ்பத்திரி கட்டீடலாம்!!!!!!உங்களுக்கும் ஷேர் கொடுத்துடறேன்.?//

ஆஸ்பிட்டல் இங்கே லாபகரமான தொழிலாக தெரியவில்லை. ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் (ஒரே ரூம்) என ரொம்ப சிம்பிள். நிறையவே இப்படிப்பட்ட கிளினிக் இருக்கிறது. தமிழ்நாட்டைப் போல் ஆஸ்பிட்டல் என்றால் அது பிரம்மாண்டமா இருக்கனும்ன்னு இவங்க நினைக்கல. நான் கவனித்த சில இடங்களில் டாகடர்களே மருந்து கொடுத்துவிடுகிறார்கள். நான் ஒரு முறை போனபோது எனக்கு கலர் கலராக மாத்திரைகள் கொடுத்தார்கள். அந்த கலரை வைத்து நாம் சாப்பிடலாம். இப்படி டாக்டரே மருந்து கொடுப்பதை சிறுவயதில்தான் கவனித்திருக்கிறேன். (தமிழ்நாட்டில் இன்னும் எங்காவது இருக்கிறதா?)

என்னிடம் வாங்கிய கட்டணமே குறைவு. இதற்கே நான் ஆச்சரயப்பட்டேன். ஆனால் 30 ரூபாய்க்கு கன்சல்டிங் பீஸ், மருந்து என எல்லாம் முடிந்துவிடுமாம். ஏழையாய் இருக்கவேண்டும். என்னை பார்த்தால் அவருக்கு ஏழையாய் தெரியவில்லை.

மொத்தத்தில் சந்தை பொருளாதாரம் இங்கே நன்றாக வேலை செய்கிறது. போட்டி கடுமை. விலைவாசி கட்டுப்பாட்டில். பதிவில் சொன்ன சம்பவம் வேறு வகை.

சிவானந்தம் said...

//Very interesting experience. Thanks for sharing.//

வாங்க நாடோடி. கருத்துக்கு நன்றி
---------------------------
நம்பள்கி,

///கோயிந்தா! கோயிந்தா.! கோயி..கோயி..கோயிந்தா...! அகமாதாபத் ஹாஸ்பிடலுக்கு போனால்...கோயிந்தா...கோயிந்தா!

இந்த குப்பை மோடி அரசாங்கத்திற்கு ஜால்ரா போடும் நம் ஊடங்களின் ஒரே அஜெண்டா...என்ன என்று புரிகிறது...///

மற்றவர்களை எச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் காரணமாக, நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களைதான் நாம் அதிகம் சொல்ல/ எழுத நினைப்போம். அந்த வகையில் கெட்ட செய்திகள் வேகமாக பரவும். எனவே சில சம்பவங்களை மட்டும் வைத்து ஒரு அரசை எடை போடமுடியாது. இதையும் தாண்டி அரசை கணிக்க பல கணக்குகள் இருக்கின்றன. என்னை பொறுத்த வரையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை/நிர்வாக முறையை ஒப்பிடும்போது இவர் பரவாயில்லை என்றே சொல்லலாம்.

Arif .A said...

இது போல் காசு மிச்சம் பண்ணுகிரவர்கள் என்ரைக்காவது யொசித்து பார்த்துண்டா அந்த உடைந்த முட்டைகள் எல்லாம் பெரிச்சாலிகள்,சின்ன எலிகள் வாய்வைத்து உண்ட மிச்சம் என்று ,

சாய்ரோஸ் said...

அந்த டாக்டர் நம்ம கலைஞருக்கு சித்தப்பாவா இருப்பார் போலிருக்கிறது. அரசாங்கப் பணம்தானே என்று மானாவாரியாக தள்ளுபடி கொடுத்தார்.//

நல்ல சிந்தனை!!!

எனக்கு வேறு ஒரு வகையில் கோபம். அரசு ஆஸ்பிட்டல் என்றாலும் இங்கேயும் பல வகைகளில் செலவாகி இருக்கிறது. அப்படி இருக்கையில் அரசுக்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் கொடுத்தால் குறைந்தா போய்விடுவோம்? இப்படிப்பட்ட குடிமகன்களை வைத்துக் கொண்டு அரசு என்ன செய்யமுடியும்? டாஸ்மார்க் மூலம்தான் வசூலிக்க முடியும் போலிருக்கிறது.

சிவா உங்கள் எழுத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நையாண்டித்தனம் மெருகேறுகிறது... Gud luck.

ஜோதிஜி திருப்பூர் said...

பார்மா மாஃபியா என்ற உலகத்தை நீண்ட நாளாக எழுத வேண்டும் மனதில் நினைத்துள்ளேன். நீங்க அல்லது அசின்வவ்வால் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அசின்வவ்வால் என்று புதிதாக நான நாமகரணம் சூட்டியுள்ளேன் நன்றாக உள்ளதா?

திருப்பூரில் உள்ள மருத்துவமனைகள் அதன் பின்னால் உள்ள கொடூரமான வியாபாரங்கள் பார்த்து பார்த்து மனம் வலித்தது தான் மிச்சம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று தெரியாமலா சொல்லியிருக்குறாங்க.

சிவானந்தம் said...

///சிவா உங்கள் எழுத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நையாண்டித்தனம் மெருகேறுகிறது... Gud luck.///

வாங்க சாய்ரோஸ்,

எனது ஆரம்பகால பதிவுகளை இப்போது படித்தால் எனக்கே ஒருமாதிரியாக இருக்கும். தொடர்ந்து எழுதுவதால் வந்த மாற்றம் இது. அதற்காகவே நானும் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

வாழ்த்துக்கு நன்றி.
---------------------------------
வாங்க ஜோதிஜி,

நான் என் அனுபவங்களை மட்டுமே எழுதுகிறேன். நீங்கள் சொல்வது போல் இந்த மாபியா பற்றி எழுத வேண்டுமென்றால் கொஞ்சம் ஆராய்ச்சி மற்றும் உழைப்பும் வேண்டும். அது உங்களால் அல்லது அசின் பிரியரால்தான் தான் முடியும்.

//அசின் வவ்வால்//

இதை படித்தாலே அவர் ஜென்ம சாபல்யம் அடைவார்.

Anonymous said...

magnificent post, very informativе. I'm wondering why the other experts of this sector do not understand this. You should continue your writing. I'm confident, уou
haѵe a great readeгѕ' base already!

My homepage Tattoos of the russian Mafia

rajan said...

sir how r u ? Now what u r doing , doing any job or business.

சிவானந்தம் said...

வாங்க ராஜன்,

கோடிகளை எதிர்பார்த்து கனவு கண்டவனுக்கு ஆயிரங்களில் திருப்தி அடைய முடியவில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

rajan said...

, கண்டிப்பாக கோடிகள் தொடுவிர்கள் வாழ்த்துக்கள்

சமுத்ரா said...

இதுபோன்ற அனுபவங்களை படிக்கும்போது நீங்கள் தலைப்பில் போட்டிருப்பதுபோல ஒருபுறம் காமெடியாகவும், இன்னொருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது.
http://samuthranews.blogspot.in/

anubhaskar said...

Everything goes on demand supply corridor ...but without any sense
Only profit counts ...legally very careful
Not even Modi can set this right
Bhaskaran

arul said...

thanks for sharing your experiences

ஜீவன்சுப்பு said...

இதென்ன மருத்துவமனையா இல்ல மாட்டு சந்தையா ...? துண்டு போட்டு பேசுற மாதிரில இருக்கு ...?

கோவைல ஒரு சில மருத்துவமனைகள்ல சீனியர் சிட்டிசன் கன்சசன் ன்னு ஒன்னு தர்றாங்க , அதே சமயம் இரவு நேரங்கள்ல காஸ்ட்லியான மருந்துகள போட்டுட்டம்னு சொல்லி ஆட்டைய போட்டு மறுபடியும் மெடிக்கல் ஷாப்புக்கே கொண்டு போற கொள்ளையும் நடந்துட்டு தான் இருக்கு .

ஒரு சில மருத்துக்கடைகல்ள பதினெட்டு பெர்சன்ட் வரைக்கும் தள்ளுபடியும் தர்றாங்க ...!ஆனா பேரம் கிடையாது .

ஹாஸ்பிட்டல்ல,மெடிக்கல் கடையில போயி பேரம் பேசுற மாதிரி கொடுமையான விஷயம் வேறெதுவும் இல்ல .

Ramesh Diwakaran S said...

siva sir thodarnthu eluthunga pls

வவ்வால் said...

சிவானந்தம்,

நலமா?

தொழிலதிபராக ஆகிட்டிங்களா? ஆளே காணோம், அம்பானிய ஓவர் டேக் செய்துட்டு தான் பதிவுப்பக்கம் வரதுன்னு லட்சியத்தோட களம் இறங்கிட்டிங்களோ?

எது எப்படியோ ஒரு அப்டேட் போடுங்க, நிலவரம் தெரிஞ்சிக்கிறோம்.

சிவானந்தம் said...

வவ்வால்,

நலமாகத்தான் இருக்கிறேன்.

அம்பானி ஆகும் கனவெல்லாம் காணாமல் போய்விட்டது. தலையை காப்பாற்றிக் கொள்ளத்தான் இப்போது போராட்டம்.

உண்மையில் இந்த வாரம் ஏதாவது எழுதுவோம் என நினைத்து வந்தால்... ஆச்சர்யமாக உங்களின் பின்னூட்டம்.

விரைவில் வருகிறேன்.

Post a Comment