!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, May 13, 2012

இந்தியாவின் வறுமையும், MLM தியரியும்

2005 ல் நான் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். ASIA TIMES என்ற இணைய இதழில் சூடாக கருத்து மோதல் நடந்து கொண்டிருந்தது. ஆர்வமாக கவனித்தேன். அதில் ஒரு சீனன் இந்தியாவை மேலை நாடுகளோடு ஒப்பிட்டும், நம் நாட்டின் ஜாதி அமைப்பை பற்றியும் விமர்சிக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கோவம் வந்தது. அதுவரை எதுவும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. இந்த அர்த்தமற்ற விமர்சனம் என்னை தூண்டியதால் பதில் எழுதினேன்.

என்னுடைய ஆங்கிலமோ சுயம்பு. ஆங்கில நாவல்கள் படித்தும், டிவி கேட்டல் மூலமாகவும் கற்றது. எழுத வரவில்லை. நானும் அந்த முயற்சில் கொஞ்சம் எம்பி எம்பி பார்த்து, ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று விட்டுவிட்டேன். இருந்தாலும் இது கோபத்தை தூண்டி விட, வார்த்தைகளும் வேகமாக வந்து விழ, இலக்கணத்தை பற்றி கவலைப்படாமல் எழுதி அனுப்பினேன். அது அதிக திருத்தங்கள் இல்லாமல் பிரசுரமாகி, பரவாயில்லை பாஸாயிட்டோம் என திருப்தியையும் கொடுக்க, அது தொடர்கதையானது.

கடந்த பதிவில் இந்தியாவை மேலை நாடுகளுடன் ஓப்பிட்டு நண்பர் வவ்வால் பின்னோட்டம் இட்டிருந்தார். அது அந்த முதல் கடிதத்தை நினைவுபடுத்தியது. அந்த கடிதத்தில் நான் இப்படி முடித்தேன்.

...Half a century may be enough for small countries to make progress, but for a big country like India, it is Herculean task. India [has been] unable to spend more on education because, at the time of its birth, it inherited (90%) uneducated people, weak infrastructure, [and] culturally divided neighbors, due to which it had to spend a large portion of money for defense. The Western democracies, luckily, are not in that position.

அதன்பிறகு பாலத்துக்கு கீழே நிறையவே தண்ணீர் ஓடிவிட்டதால் இப்போது இன்னும் கொஞ்சம் விளக்கலாம்.

அந்த விவாதம் இந்தியாவின் நிலையை இரண்டு விதமாக பார்க்க தூண்டியது. ஓன்று, இந்தியாவை மேலை நாடுகளோடு ஒப்பிடுவது. இரண்டாவது, இன்றைய ஊழல் நிறைந்த அரசியல்.

இந்த பதிவில் ஒப்பிடலை மட்டும் பாப்போம். 

ஒப்பிடுவது நல்லதுதான். ஆனால் அதிலும் ஒரு நியாயம் வேண்டும். பக்கத்து வீட்டுப் பையன் நன்றாக படிக்கிறான் என்று உங்கள் பிள்ளையிடம் சொல்லும் போது, பக்கத்து வீட்டுக்காரார் உங்களுடைய பொருளாதார நிலையில் இருந்தால் அது நியாயம். ஆனால் அவர் வசதியானவாராக, படித்தவராக இருந்து , அந்த மாணவன் நல்ல தரமான பள்ளியில் படித்து மார்க் வாங்கினால், அவனுக்கு சூழ்நிலை சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட நிலையில் இந்த ஒப்பிடல் அநியாயம்தான்.

அதேபோல் தான் இந்தியாவின் நிலையும். எல்லோருக்கும் கல்வியும் வேலையும் கிடைக்க வேண்டும். இந்தியா விரைவில் வல்லரசாக அல்லது நல்லரசாகவாவது ஆக வேண்டும் என்பது நம்முடைய நியாயமான ஆசைதான். ஆனால் இயற்கை சில விஷயங்களில் நமக்கு சாதகமாக இல்லை. அதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

MLM தியரி

இது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். நாம் (5000 அல்லது... ) கொடுத்து ஒரு திட்டத்தில் சேரவேண்டும். அந்த பணத்துக்கு இணையாக(?) அவர்கள் ஏதாவது கொடுப்பார்கள். இனி நீங்கள் நான்கு பேரை இதேபோல் சேர்த்து, அவர்கள் இதேபோல் 4 பேர் சேர்க்க, அந்த அவர்களும் 4 பேர் சேர்க்க, இது இப்படியே போகும். கீழே உறுப்பினர் சேர சேர உங்களுக்கு பணம் வரும். இது ஒரு மொள்ளமாரி திட்டம்.

இந்த திட்டத்தை ஆரம்பிக்கும் மேல்நிலை நபர்கள், உள்ளுரில் போணியாக, ஊள்ளூர் ஆட்களை அவர்களுக்கு கீழே இறக்குவார்கள். அவர்கள்தான் தூண்டில். அறிமுக நிலையில் உள்ளூர் ஆட்களை நம்பி பலர் சேர, அது இவர்களுக்கு லாபத்தை கொடுக்கும்.

இப்படி லாபம் வர வர, அந்த பணம் பெற்ற செக்கை காட்டி இவர்கள் மேலும் மேலும் பலரை இழுப்பார்கள். அந்த வகையில் இந்த நாலு பதினாறாகி, அது 64 ஆகி வேகமாக பெருகும். இது வேகமாக பெருகிய பிறகு ஒரு கட்டத்தில் எல்லோரும் கையில் ஃபாரம் வைத்துக் கொண்டு நாலு பேரை சேர்க்க (விற்க) முடியாமல் அலைவார்கள். அதன் பிறகு இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் அடுத்த ஊரை குறி வைத்து ஓடுவார்கள். இதுதான் MLM.

இந்த மோசடி திட்டத்திற்கு மார்கெட்டிங் செய்பவர்கள் உண்மையைத்தான் சொல்லி இருப்பார்கள். ஆனால் அது அவர்களுக்கு சாதகமான உண்மை மட்டுமே. இது பல்கி பெருகும் போது நம்மால் விற்க முடியாத சூழ்நிலை வரும் என்பதை மட்டும் அவர்கள் சொல்ல மாட்டார்கள். நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

கிட்டத்தட்ட இதே போன்ற தியரி ஓன்று இந்தியாவுக்கு எதிரியாகிவிட்டது. மேலை நாடுகளுக்கு சாதகமாக இருந்த ஒரு சூழ்நிலை, இந்தியா வளரும் போது பாதகமாக இருக்கிறது.

இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாய் இருப்பவை, மக்கள் தொகை பெருக்கம், ராணுவ செலவு, தொழில் வளர்ச்சியில் சுணக்கம் போன்றவைதான். அதுமட்டுமின்றி கடுமையான போட்டி வேறு. இந்த நான்குதான் நம்மை வேகமாக வளரவிடாமல் தடுப்பவை. இதில் ஜனநாயகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதில் தீமையை விட நன்மை அதிகம் என்பதால் அதை விட்டுவிடுவோம்.

மக்கள் தொகை

மேலை நாடுகள் இந்த தலைவலியை சந்திக்கவில்லை. கடந்த காலங்களில் போர்களும், நோய்களும் பிறப்பு விகிதத்துக்கு இணையாக மனிதர்களை கொண்டு சென்றதால் அதன் வளரச்சி அதிகமாக இல்லை. அதையும் மீறி பெருகிய மக்கள், பல காலனி நாடுகளுக்கு குடி பெயர்ந்ததால் மேலை நாடுகளுக்கு இதனால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

ஆனால் இந்ந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் அப்படி பரவவில்லை. அதைவிட முக்கியமாக நாம் சுதந்திரம் வாங்கிய காலக்கட்டத்தில் போர்களும் நின்றது, மருத்துவத் துறையும் அபாரமான வளர்ச்சி கண்டது. எனவே இங்கே வரவுதான். அதற்கு இணையாக மரணம் இல்லை. இந்த ஆபத்தை உணர்ந்த அரசு மக்கள் தொகையை கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுபடுத்தி இருக்க வேண்டும். ஆனால் ஜனநாயக நாடாயிற்றே. அவ்வளவு சீக்கிரம் எதையும் செய்ய முடியாதே. விளைவு அது MLM கணக்காக உள்நாட்டிலேயே பெருகி 120 கோடியில் போய் நிற்கிறது.

மக்கள் தொகையை கட்டுபடுத்த பிரச்ச்ரங்கள் செய்த போது, `குழந்தைகள் கடவுள் கொடுப்பவை அதை நாம் தடுக்கக் கூடாது` என்று வாதம் செய்தார்கள். ஆனால் இப்படி கடவுளால் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வியும், அவர்கள் வளர்ந்த பிறகு வேலையும் யார் கொடுப்பது? அரசுதானே? இங்கே பழி ஓரிடம் பாவம் வேறிடம் என்றாகிவிட்டது.

அதேசமயம் ஒரு குறிப்பிட்ட நடைமுறையில் வாழ்ந்த மக்களுக்கும், இந்த தீடீர் மாற்றத்தை ஏற்க மனம் வரவில்லை. அவர்களுக்கு புரியவைத்து தற்போது இரண்டே போதும் என்ற முடிவுக்கு மக்களை கொண்டுவந்தாலும், ஏற்கனவே ஒரு தலைமுறை 6, 7 என்று பெற்று போட்ட குழந்தைகள்தான் இப்போது இரண்டே போதும் என்ற முடிவுக்கு வந்திருகிறார்கள். எனவே இது 7x 2 என்று இருக்கிறது.

ஒரு வேளை நமது மக்கள் தொகையும் 60, 70 கோடி என்ற அளவில் கட்டுபடுத்தப்பட்டிருந்தால் இன்று நாம் பல சந்திக்கும் பல தலைவலிகள் இருந்திருக்காது. இங்கே இயற்கையும், மக்கள் தொகையை கடுமையாக கட்டுபடுத்த முடியாத அளவுக்கு ஜனநாயக கொள்கைகளும் நமது வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.

தொழில்துறை

மேலை நாடுகளில் தொழில் புரட்சி வளர்ந்து வந்த போது அது இயற்கையை பாதிக்கும் என்பதை யாரும் உணரவில்லை. எனவே அவர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல், சுற்றுப்புற சூழலை சீரழித்து, லாபத்தை வாரிவிட்டார்கள். ஆனால் இப்போது நாம் அந்த செயலை செய்யும்போதுதான் `இது அப்படி பாதிக்கும் இப்படி பாதிக்கும்` என கடுமையான எதிர்ப்பு.

அதையும் தாண்டி நாம் கொஞ்சம் வளர்ச்சியை காட்டும் போது நமக்கு கடுமையான போட்டி. மேலை நாடுகள் தொழில் வளர்ச்சியை கண்டபோது அவர்களுக்கு அதிகம் போட்டியில்லை என்பதை கவனிக்கவும்.

ராணுவம்

இந்த தலைவலிகள் பத்தாது என்று ராணுவ செலவு வேறு. இந்த மேலை நாடுகள் பல நாடுகளை சுரண்டி, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தடி எடுக்கும் முன்பே தொழில் வளர்ச்சியும் பெற்று, வசதியாகிவிட்டார்கள். அவர்களிடம் பணம் சேர்ந்துவிட்டது. இருந்தாலும் அவர்களுக்கு எதிரிகள் இல்லை. குறைந்த பட்சம் அவர்களுக்கு எல்லையில் எத்ரிகள் இல்லாததால் ராணுவ செலவும் இல்லை. எனவே அவ்வளவும் மக்கள் நலனுக்காக போகிறது. அமெரிக்க அண்ணனுக்கு மட்டுமே ராணுவ செலவு. அதுவும் உலகரட்சகன் என்ற பெயரை காப்பாற்ற.

ஆனால் நமக்கோ நாலாபக்கமும் மத ரீதியாக மாறுபட்ட நாடுகள். எல்லை பிரச்சினை வேறு. எனவே இங்கே ஒன்னும் செய்ய முடியாது. சமீபத்தில் `நீயா நானா` நிகழ்ச்சியை கவனித்தேன். ஈவ் டீசிங்குக்கு காரணம் என்ன என்பதுதான் விவாதம். பெண்கள் அணியும் உடைதான் என ஆண்கள் வாதிக்க, டாக்டர் ஷாலினி ஒரு கருத்தை சொன்னார்.

அவரிடம் வந்த பேஷன்ட்களிடம் விசாரித்ததில், `எந்த பெண் அப்பாவியாக, பயந்த சுபாவமாக தெரிகிறாரோ, அங்கேதான் தைரியமாக சீண்டுவோம்` என்று சொன்னார்களாம். இதுதான் யதார்த்தம். சாதாரண மனிதன் கூட கோழையை பார்த்தவுடன் வீரனாகிவிடுவான். எனவே நாமும் காந்தி தேசம் என்று பலவீனமாக இருந்தால், நம்மை பிரித்து மேய்ந்துவிடுவார்கள். வறுமை கொடுமை என்றாலும், இயற்கை இங்கேயும் நமக்கு எதிரியாக இருக்கிறது.

மேலே சொன்ன மூன்று விஷயங்களிலும் மேலை நாடுகள் கொடுத்து வைத்தவை. நாம் துரதிருஷ்டசாலிகள். இதை உணராமல் அவர்களோடு இந்தியாவை ஒப்பிடமுடியாது.

அப்படிஎன்றால் இந்தியாவின் இன்றைய நிலைக்கு அரசியல்வாதிகள் காரணமில்லையா என்று யாரும் கேட்கக்கூடாது. அவர்களும் ஒருவகையில் காரணம். அவ்வளவுதான். ஆனால் எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகள்தான் காரணம் என்று அவர்கள் மீது பழி சுமத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.


14 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது கருத்து - நமது மக்கள் சட்ட திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்காததும் ஒரு காரணம். நம்மை பாதிக்காத வரை நமக்கென்ன என்று நினைக்கிறார்கள்.
உங்களது இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

suki said...

a very good article at the same time each birth happens with two hands and two legs it stands on its own. your portion is to make them to stand on their own.so this all happens due to some temporary problem.Even now INDIA is the only country with much human resource.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

அருமையான் அலசல்.அரசு மட்டும் அல்ல அனைத்து மக்களுமே ஒத்துழைத்தல் மடுமே முன்னேற்றம் அடைய முடியும்.

அனைவருமே அதிக பட்சம் மட்டும் இரு குழந்தைகள் பெற்றால் மக்கள் தொகை கட்டுக்குள் வந்துவிடும்,அதோடு அனைவருக்கும் தரமான கல்வி,சுகாதாரம் என்பதை பற்றி ஏதேனும் செய்ய இயலும்.இப்போதைய சூழல் தொடரும் எனில் விவசாய நிலங்கள் பாதுகாப்பு,உணவு பாதுகாப்பு என்பவை இன்னும் 30+ ஆண்டுகளில் பெரிய சிக்கல் ஆகலாம்.

ஒவ்வொருவரும் மற்ற‌வர்களோடு போட்டி போடுவது சகஜம் என்றாலும்,நம் சூழல் வாழ்வா சாவா என்னும் அளவிற்கு போட்டிகளை கொண்டு செல்வது குற்றங்களை பெருக்கும்,வளர்ச்சியை தடுக்கும்.

இந்த மக்கள் தொகையில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நம் நாடு செல்வது நம் மக்களின் சகிப்புத் தன்மைதான்.அதற்கும் எல்லை உண்டு.

எனினும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

நன்றி

Vetirmagal said...

Brilliant writing and thought process.

Sicne we have human resources, we could harness it and make it productive. Why , the Govt, is not asking effective steps ?

Here the politicians come into the picture, they are selfish and want the people to remain where they are, so that they
can corner the resources.

Blaming the Govt, is justified,. If they want , things can be done. Success stories are : Gutka, cigarette , aids awareness, TB awareness, smoking etc

சிவானந்தம் said...

///அருமையான பதிவு.
உங்களது இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.///

வாங்க ரத்னவேல் சார். உங்கள் கருத்துக்கும் முகநூல் பகிர்வுக்கும் நன்றி.

//நமது மக்கள் சட்ட திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்காததும் ஒரு காரணம். நம்மை பாதிக்காத வரை நமக்கென்ன என்று நினைக்கிறார்கள். //

நிஜம்தான். நமது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று நினைக்கும் மக்கள், அரசின் உபதேசங்களுக்கு செவிசாய்ப்பதில்லை.

மாசிலா said...

அதிக மக்கள் தொகை இந்தியாவுக்கு பெரிய பிரச்சினை என்கிற உங்கள் வாதத்திலிருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன்.

இந்தியாவின் ஏழ்மைக்கு முக்கிய காரணம் அதன் வளங்களை அனைத்து மக்களுக்கும் சரிவர பங்கிட்டு கொடுக்காததன் விளைவே. இதற்கு படிப்பின்மையை ஒரு காரணமாக காட்டவும் கூடாது. மாறாக படிப்புத் துறையையும் இதில் சேர்த்தே பார்க்க வேண்டும்.

இந்தியாவில் அனைத்து வளங்களும் நாட்டின் ஒரு சிறு கை பிடி அளவுள்ள சமூகத்தினரிடம் மட்டுமே அகப்பட்டு சிறைபிடிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்தை நாட்டின் மிகச்சிறந்த மனித வளம் என பாவித்து அனைத்து துறையிலும் சமத்துவம் பார்த்து செயல்படுவதே நன்று.

இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் நாட்டின் தலைவலி என பிரச்சாரம் செய்வது வீண் வாதம். குறிப்பாக பெரும்பாலும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் ஏழை மக்களை ஏமாற்றி நாட்டின் பின் தங்கிய பொருளாதார பிரச்சினைகளை அவர்கள் முதுகில் சுமக்க விட்டு சுய பரிகாரம் தேடும் வீண் முயற்சியே.

நாட்டின் அற்புத மனித வளத்தை அவமதிப்பது நாமே நமது கண்களை குத்திக்கொள்வதை போன்றது.

சிவானந்தம் said...

//a very good article at the same time each birth happens with two hands and two legs it stands on its own. your portion is to make them to stand on their own.so this all happens due to some temporary problem.Even now INDIA is the only country with much human resource.//

வாங்க சுகி,

பிறக்கும் குழந்தை இரண்டு கைகளோடும், கால்களோடும் பிறக்கின்றன என்பது நிஜமாக இருந்தாலும், ஒரு மனிதனுக்கு தேவைவான நிலம் மற்றும் நீரை அது கூடவே எடுத்து வருவதில்லை. 1950 நம்மிடம் என்ன நிலம், நீர் ஆதாரம் இருந்ததோ அதேதான் இப்போதும் இருக்கிறது. ஆனால் அதை பகிர்ந்து கொள்ள வேண்டிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அது பற்றாக்குறையும் மற்றும் பல் பிரச்சினைகளையும் உருவாக்கி இருக்கிறது.

இந்தியாவில் மனித சக்தி இருக்கிறது என்றாலும் வெறும் கையால் முழம் போட முடியாது. விவசாயம் நமது எதிர்காலம் என்று நினைத்தால் (அது அபத்தம்) பெருகிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க, விளைநிலமும் அதில் விவசாயம் செய்ய தண்ணீரும் வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தால் இவைகளின் தேவை அதிகரிக்க, அதுவும் கிடைப்பதில்லை.

இப்போது நம்மிடம் இரண்டு வழிதான் இருக்கிறது. இந்த மனித சக்தியை வெளிநாட்டுக்கு அனுப்பி அங்கெ வேலை செய்து சம்பாதிப்பது. ஆனால் அது எவ்வளவு பேருக்கு சாத்தியப்படும். அப்படி வேலை கிடைப்பவர்களுக்கு அது நிரந்தமும் இல்லை. அங்கே சிக்கல் என்றால் மூட்டையை கட்ட வேண்டியதுதான்.

சாத்தியமான ஒரே வழி தொழில் மற்றும் சேவைத்துறையை உள்நாட்டிலேயே ஊக்குவிப்பதுதான். ஆனால் அதற்கும் ஒரு கட்டுமானம் வேண்டும். அந்த கட்டுமானம் என்பது நிலம், நீர், போக்குவரத்து வசதி போன்றவை. அதுமட்டுமின்றி நீண்ட கால லாபத்தை கருத்தில் கொண்டு சில சலுகைகளும் கொடுக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய முடியவில்லையே?

இதற்கு `இந்தியாவை விவசாயம் காப்பற்றுமா` என்ற பதிவை படியுங்கள். http://anindianviews.blogspot.com/2010/12/blog-post_12.html

சிவானந்தம் said...

வாங்க சார்வாகன்,

///அனைவருமே அதிக பட்சம் மட்டும் இரு குழந்தைகள் பெற்றால் மக்கள் தொகை கட்டுக்குள் வந்துவிடும்,அதோடு அனைவருக்கும் தரமான கல்வி,சுகாதாரம் என்பதை பற்றி ஏதேனும் செய்ய இயலும்.இப்போதைய சூழல் தொடரும் எனில் விவசாய நிலங்கள் பாதுகாப்பு,உணவு பாதுகாப்பு என்பவை இன்னும் 30+ ஆண்டுகளில் பெரிய சிக்கல் ஆகலாம்.///

இதை மட்டும் மக்கள உணர்ந்துவிட்டால் பெரும் ஆபத்தில் இருந்து நாம் தப்பிவிடலாம்.

//ஒவ்வொருவரும் மற்ற‌வர்களோடு போட்டி போடுவது சகஜம் என்றாலும்,நம் சூழல் வாழ்வா சாவா என்னும் அளவிற்கு போட்டிகளை கொண்டு செல்வது குற்றங்களை பெருக்கும்,வளர்ச்சியை தடுக்கும்.//

சத்தியமான வார்த்தை.

//இந்த மக்கள் தொகையில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நம் நாடு செல்வது நம் மக்களின் சகிப்புத் தன்மைதான்.அதற்கும் எல்லை உண்டு.///

அதுதான் ஆச்சர்யம். நம்மிடம் சகிப்புத்தன்மை நிறையவே இருக்கிறது. அதுதான் இந்தியாவை பிளவுபடாமல் காப்பாற்றுகிறது. ஆனால் எல்லையை தொடும் முன் அரசும் மக்களும் விழித்துக் கொள்ளவேண்டும். அதுதான் என் வேண்டுதல்.

tamilan said...

Wow, clear and lucid thinking. You made a lot of things easy to understand. My appreciations.

சிவானந்தம் said...

//Sicne we have human resources, we could harness it and make it productive. Why , the Govt, is not asking effective steps ? ///

வாங்க வெற்றிமகள்,

மக்கள் சக்தி என்பது பலம் பலவீனம் என இரண்டையும் உள்ளடக்கியது. அது எப்படி நமக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை நண்பர் சுகிக்கு சொன்ன பதிலில் சொல்லி இருக்கிறேன்.

Here the politicians come into the picture, they are selfish and want the people to remain where they are, so that they can corner the resources.

அரசியல்வாதிகள் மீது கொலவெறியோட இருக்கீங்க போலிருக்கு. நிச்சயமாக நான் அந்த அளவுக்கு அரசியல்வாதிகளை வெறுக்கவில்லை. ஊழலின் இமயங்களை (கலைஞர், அம்மா ) நாம் இங்கே சந்தித்துவிட்டோம். இதேபோல் பல மாநிலங்களிலும் பல கதைகள் இருக்கிறது. இருந்தாலும் ஊழல் செய்து நிதி சேர்க்காமல் அரசியலே செய்ய முடியாது என்ற அளவுக்கு ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளை குறை சொல்லக் கூடாது.

Blaming the Govt, is justified,. If they want , things can be done. Success stories are : Gutka, cigarette , aids awareness, TB awareness, smoking etc

இவையெல்லாம் அபாயம் என மக்களுக்கு புரிய வைப்பதில் சிரமமில்லை, எனவே இங்கே சாதிக்க முடிந்தது. ஆனால் மற்ற மக்கள் நலத் திட்டங்களை அப்படி புரிய வைக்க முடியவில்லை. எனவே அங்கே மாற்றங்கள் மெதுவாக வருகிறது.

சிவானந்தம் said...

நண்பர் மாசிலாவுக்கு,

மாறுபட்ட கருத்துக்கள் பிரச்சினை இல்லை நண்பரே. பெருகி இருக்கும் மக்கள் தொகை நமக்கு பலம் என்றால், அதை எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் சொல்லிருக்கலாம்.

///இந்தியாவின் ஏழ்மைக்கு முக்கிய காரணம் அதன் வளங்களை அனைத்து மக்களுக்கும் சரிவர பங்கிட்டு கொடுக்காததன் விளைவே. இதற்கு படிப்பின்மையை ஒரு காரணமாக காட்டவும் கூடாது. மாறாக படிப்புத் துறையையும் இதில் சேர்த்தே பார்க்க வேண்டும்.

இந்தியாவில் அனைத்து வளங்களும் நாட்டின் ஒரு சிறு கை பிடி அளவுள்ள சமூகத்தினரிடம் மட்டுமே அகப்பட்டு சிறைபிடிக்கப் பட்டுள்ளது. ///

ஒரு காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். தற்போது இந்திய ஜனநாயகம் கொஞ்சம் பலம் பெற்றிருகிறது. எனவே அந்த பழைய பஞ்சாங்கத்தை பாடுவதில் அர்த்தம் இல்லை.

மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்பை பதிவிலும், பின்னூட்டத்திலும் விளக்கி இருக்கிறேன். சில சமயம் நாம் சொல்ல வருவதை எல்லோருக்கும் புரியவைப்பது சிரமம். எனவே மேலும் தொடர விரும்பவில்லை

வவ்வால் said...

சிவானாந்தம்,

//கடந்த பதிவில் இந்தியாவை மேலை நாடுகளுடன் ஓப்பிட்டு நண்பர் வவ்வால் பின்னோட்டம் இட்டிருந்தார்.//

ஹி..ஹி கடந்தப்பதிவில் நீங்க என்ன எழுதி இருந்தீங்க என்பது உங்களுக்கே மறந்து போச்சா :-))

மேலை நாட்டுடன் ஒப்பிட்டு பதிவு போட்டது நீங்க, அந்த ஒப்பீடு சரி வராது என உதாரணம் காட்டி எழுதினேன் ,கடைசியில் உல்டாவா இப்படி திருப்பிப்போட்டு சொல்றிங்க அவ்வ்வ்!

Main stream citizen போல சிந்திக்கிறீங்க, உங்களுக்கு சில அடிப்படை விஷயங்கள் புரிய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என நினைக்கிறேன்.

அரசு,அரசியல், மக்கள் நலம், குடிமக்கள் உரிமை,ஜன நாயகக்கோட்ப்பாடு இவற்றின் அடிப்படையினை நோக்கினால் நம் நாட்டில் என்ன நிலை என விளங்கும்.

//சில சமயம் நாம் சொல்ல வருவதை எல்லோருக்கும் புரியவைப்பது சிரமம். எனவே மேலும் தொடர விரும்பவில்லை//

நீங்கள் சொன்னதை இப்போது கடைப்பிடிக்கிறேன் :-))

Unknown said...

நல்ல கருத்து , அருமையான பதிவு . நன்றி

சிவானந்தம் said...

@வவ்வால்

///ஹி..ஹி கடந்தப்பதிவில் நீங்க என்ன எழுதி இருந்தீங்க என்பது உங்களுக்கே மறந்து போச்சா :-))

மேலை நாட்டுடன் ஒப்பிட்டு பதிவு போட்டது நீங்க, அந்த ஒப்பீடு சரி வராது என உதாரணம் காட்டி எழுதினேன் ,கடைசியில் உல்டாவா இப்படி திருப்பிப்போட்டு சொல்றிங்க அவ்வ்வ்!///

வாங்க வவ்வால்,

பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இந்த குழப்பம் வராது. ஆனால் நீங்கள் எதயும் தலைக்கீழாக பார்பவராயிற்றே, அதான் குழப்பம்.

ஒப்பிடல் தேவை, ஆனால் அதிலும் நியாயம் வேண்டும். அதைதான் நான் இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன்.

நான் ஒப்பிட்டது, அரசுத்துறைகளுக்கு அரசு செய்யும் செலவுகள் அதிகரித்து பின்னர் அது தலைவலியாகக் கூடும் என்பதால் கிரீஸ் நாட்டின் தலைவலிகளை காட்டி ஒப்பிட்டேன்.

ஆனால் நீங்கள் அங்கே மக்கள் நல அரசுகள் இருகின்றன, இங்கே அரசுகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று மேலை நாடுகளோடு ஒப்பிட, இந்த ஒப்பிடல் அநியாயம் என்பதால் இந்த பதிவு.

//Main stream citizen போல சிந்திக்கிறீங்க, உங்களுக்கு சில அடிப்படை விஷயங்கள் புரிய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என நினைக்கிறேன். ////

பதிவுகளின் தரத்தை அதற்கு வரும் பின்னூட்டங்கள் சொல்லும். நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

//சில சமயம் நாம் சொல்ல வருவதை எல்லோருக்கும் புரியவைப்பது சிரமம். எனவே மேலும் தொடர விரும்பவில்லை//

நீங்கள் சொன்னதை இப்போது கடைப்பிடிக்கிறேன் :-))///

இதுவாவது புரிஞ்சுதே! சந்தோஷம்.

Post a Comment