!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, November 29, 2010

சிறை அனுபவம்: குண்டர் (டுபாக்கூர்) சட்டம், சில விளக்கங்கள்

சமீபத்தில் ஆள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் அறிவித்திருக்கின்றனர். அவ்வப்போது சில பரபரப்பான குற்றங்கள் நிகழ்வதும், அந்த நேரம் மக்களின் கோபத்தை தணிக்க, அல்லது உண்மையிலேயே குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக அவர்களின் மீது குண்டர் சட்டத்தை போலீசார் ஏவுவார்கள். ஆனால் எனது இரண்டரை ஆண்டுகால சிறை அனுபவத்தில் சொல்கிறேன், இந்த குண்டர் சட்டம் குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இல்லை, இதனால் குற்றங்கள் குறையப்போவதும் இல்லை.

குண்டர் சட்டம் (சிறையில் இது மிசா ) ஒரு வருட தடுப்பு காவல் என்று சட்டம் சொல்கிறது. மக்களும் இதை நம்பிகொண்டிருக்கிறார்கள். ஆனால் இது செயல்படும் விதமே வேறு. குண்டர் சட்டம் ஒருவர் மீது பாய்ந்த மூன்று மாதத்தில் போர்ட் (Board) வந்துவிடும். இந்த நபர் மீது குண்டர் சட்டம் போட்டது சரிதானா என்று மூன்று நீதிபதிகளை கொண்ட குழு விசாரித்து அதை உறுதி செய்யும் அல்லது தள்ளுபடி செய்யும். இதுதான் போர்ட். பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் இங்கே உடைந்து விடும் அல்லது `உடைக்கப்பட்டு`விடும்.

Sunday, November 21, 2010

சிறை அனுபவம் 2: இரண்டாவது இரவா அல்லது கடைசி இரவா?

இது `சிறை அனுபவம்: முதல் இரவுபதிவின் தொடர்ச்சி...

ஜெயிலில் என் முதல் நாள் இரவில் என்னை போல் புதிதாக வந்த பலர் மனக்கவலையாலும், சாப்பாடு பிடிக்காமலும் பட்டினியாக படுத்திருப்பார்கள். அவர்களுக்கு எப்படியோ, ஆனால் பட்டினி எனக்கு புதுசல்ல. போன ஜென்மத்தில் அநேகமாக நான் யாரையாவது பட்டினி போட்டு கொடுமைபடுத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன். எனவே பணம் இருந்தும் பல காரணங்களால் நான் இரவில் சாப்பிடாமல் படுத்திருக்கிறேன்.

அதனால் அன்றைய பட்டினியை நான் ஒரு பிரச்சினையாகவே கருதாமல் அரைகுறை தூக்கம் தூங்கி கொண்டிருக்க, இரவு ஒரு நேரத்தில், நிசப்தமான அந்த சூழ்நிலையில், ஏதோ ஒரு புரியாத சத்தம் கேட்க, நான் எழுந்து உட்கார்ந்து கொண்டு சுற்றி நோட்டம் விட்டேன். என்னை சுற்றி இருந்த அனைவரும் தூங்குகிறார்களோ இல்லையோ, ஆனால் படுத்து கொண்டிருந்தார்கள். சத்தம் தொடர்ந்து வரவே, அந்த ஹாலை இரண்டாக பிரித்திருந்த தடுப்புச் சுவரை தாண்டி பார்த்தேன். அந்த பக்கமும் எல்லாரும் படுத்திருக்க, ஒரு வேளை ஜன்னலுக்கு வெளியே ஏதாவது நடக்குதோ என்று பார்பதற்காக எழுந்து போனபோது தான் அந்த வித்தியாசமான காட்சியை பார்த்தேன்.

அந்த செல்லுகுள்ளே இருந்த கழிவறை உட்கார்ந்தால் மட்டும் மறைக்கும் அளவுக்கு கட்டை சுவர் கொண்டது. சிறைக்கு வரும் கைதிகள் மன உளைச்சலில் ஏதாவது செய்துகொள்வார்கள் என்பதால் பெரும்பாலும் எல்லாமே வார்டன்களின் கண்ணில் படும்படிதான் இருக்கும். அந்த கழிவறையில் ஒருவர் நம்பர் 2 போகும் பொசிஷனில் அமர்ந்து கொண்டு பிரெட் சாப்பிட்டு கொண்டிருந்தார். அவர் சாப்பிடும் சத்தம் தான் அந்த இரவில் தெளிவாக கேட்டது.

கழிவறையில் புத்தகம் படிப்பதை கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அங்கே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதா? அந்த வித்தியாசமான பொசிஷனை நான் அதிர்ச்சியும், அருவெறுப்புமாக பார்க்க, அவரோ என்னை பார்த்ததும் தலையை நட்டுக்கொண்டு காரியத்திலேயே குறியாக இருந்தார். நான் குழப்பத்தோடு வந்து படுத்தேன். புத்தியுள்ள எந்த மனிதனும் அங்கே உட்கார்ந்து கொண்டு சாப்பிடமாட்டான். ஒரு வேளை அந்த நபர் புத்திசுவாதினம் இல்லாதவரோ என்ற கேள்வியோடு தூங்கிபோனேன்.

மறுநாள் காலை அந்த கேள்விக்கு விடை கிடைத்தது. எங்களுடன் புதிதாக ஜெயிலுக்கு வந்த ஒருவர் `என் பையிலிருந்து பிரட்டை யாரோ சுட்டுடானுங்க` என்று புலம்பும்போது தான், இரவு நான் கண்ட காட்சிக்கு விடை கிடைத்தது. பசியை தாங்க முடியாமல் பிரட்டை திருடிய அவர் அதை மறைவாக சாப்பிடுவதற்காக (வேறு இடம் இல்லாததால்) கழிவறையை தேர்ந்தெடுத்திருக்கிறார். மேற்கொண்டு விசாரித்ததில் அவர் ஒரு IMC (சிறை பாஷையில் மெண்டல் ) என்று சொன்னார்கள். ஒரு பொருளை திருடி அதை யாரும் பார்த்துவிடகூடாது என்பதற்காக மறைத்து சாப்பிடும் ஒருவர் எப்படி மெண்டலாக இருக்கமுடியும். ஒன்னும் புரியவில்லை. ஆனால் அதன் பிறகு அவரை போலவே விநோதமாக நடந்து கொள்ளும் பலரை பார்த்திருக்கிறேன். இவர்கள் பொது பிளாக்கிலும் இருப்பார்கள், அதேசமயம் வியாதி முற்றும் போது அவர்களை தனியே அடைத்து விடுவார்கள்.

காலை 6.30 மணிக்கு லாக்கப் திறக்கப்பட்டு உருப்படி (கைதிகள்) எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு எங்களை வெளியே விட்டார்கள் (அதாவது அந்த பிளாக் உள்ளேயே சுற்றி வரலாம் ). 

காலையில் சக்கரை இல்லாத ஜெயில் டீயும், படியும் வந்தது. இந்த படியாவது சாப்பிட்டு பார்ப்போம் என்று டேஸ்ட் பண்ண, அதற்கும் மனம் ஒப்பவில்லை. அதன் பிறகு கடைசி வரை நான் காலை படியை சாப்பிடவில்லை. எனக்கு பிடிக்கவில்லையே தவிர ஜெயிலில் பலர் அந்த படிக்கும் அடித்து கொள்வார்கள். எனவே அதை மோசம் என்று சொல்லமுடியாது.

காலை கடன்களை முடித்த பிறகு, புதிதாக உருவாகியிருந்த நண்பரிடம் (இவர் ஏற்கனேவே ஜெயிலுக்கு வந்தவர்) `சரி இனி நாம் என்ன செய்யவேண்டும்?` என்று அன்றைய நிகழ்ச்சிநிரலை கேட்டேன்.

`இனி மறுபடியும் சாயங்காலம்  6 மணிக்குத்தான் நம்மை லாக்கப்பில் அடைப்பார்கள். அப்புறம் நம்மை வெரிபிகேஷனுக்கு அழைத்து போவார்கள். அது முடிந்த பிறகு தான் அடுத்து என்ன என்பது தெரியவரும் . அப்புறம்... நாம புதுசு இல்லியா, அதனால ஏதாவது வேலை கொடுப்பார்கள்.` என்று அவர் நிகழச்சிநிரலை பட்டியலிட்டார்.

ஆனால், வேலை ஒரு சம்பிரதாய வேலை. அந்த பிளாக்கில் வளர்ந்திருந்த புல்லை புடுங்குவது. அல்லது செடிகளுக்கு தண்ணி ஊத்துவது. புதியவர்களுக்கு இந்த வேலையைத்தான் கொடுப்பார்கள். என்னுடன் புதிதாக வந்த அந்த பழைய கைதி அதற்குள் என்னைபத்தி ஓரளவு தெரிந்து கொண்டதால் (நான் ஓரளவு சொன்னேன்) `அண்ணே , நீங்க சும்மா நில்லுங்க. நாங்க பார்த்துக்கிறோம்.` என்றார். ஜெயிலில் உங்களுக்கு மனு வரும் என்றால் நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் மனு வராதாவர்கள், மனு வரும் நபர்களுக்கு உதவிகள் செய்து, அவர்கள் கொடுப்பதை வாங்கிகொள்வார்கள். அந்த வகையில் என்னை பார்க்க இன்று உறவினர்கள் வருவார்கள் என்று நான் அவரிடம் சொல்லியிருந்ததால், அவர் என்னை அக்கறையாக கவனிக்க ஆரம்பித்தார். அதனால் அவர் உதவியில் எனக்கு அதிகம் பிரச்சினை உருவாகவில்லை.

பின்னர் வெரிபிகேஷனும் (எங்களின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு, எங்களுக்கு அடையாள எண் வழங்கும் நடைமுறை) அன்றே முடிந்து விட்டது. இதற்கிடையில் உறவினர்களும் என்னை மனு போட்டு பார்க்க வந்துவிட்டதால், பிஸ்கட், பிரட் என என் பட்டினி முடிவுக்கு வந்தது. நானும் என்னை கவனித்து கொண்ட அந்த நபருக்கு முடிந்த உதவிகளை செய்தேன்.

சாயங்காலம் 5 மணியளவில் மீண்டும் எங்களை வெளியே பைலில் உட்காரவைத்து, கூடவே `உங்கள் உடமைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்` என்றும்  சொன்னதால், `நம்மை எங்கே அழைத்து போவார்கள்` என்று நண்பரை கேட்டேன்.

`நாம் இப்போது இருப்பது குவாரண்டைன் பிளாக், இங்கே புது கைதிகள் வெரிபிகேஷன் முடியும் வரை வைத்திருப்பார்கள். அதன் பின் வேறு பிளாக்கிற்கு மாற்றி விடுவார்கள். எனவே நாம் இப்போது புது பிளாக்கிற்கு போகப்போகிறோம்' என்றார்.

அவர், நாம் புது பிளாக்குக்கு போகப்போகிறோம் என்று அலட்சியமாக சொன்னார். ஆனால் புதிய இடம் ஜெயில் என்றால் என்ன என்று எனக்கு உணர்த்தியது. அந்த இடம், இது எனக்கு இரண்டாவது இரவா அல்லது கடைசி இரவா இரவா என்று கவலைப்பட வைத்தது. ஜெயிலுக்கு போயே தீருவேன் என்று வீர வசனம் பேசிய நான் முதல் முறையாக `தப்பான முடிவு எடுத்துவிட்டோமோ` என்று கவலைப்பட ஆரம்பித்தேன். 
                                                                                        
                                                                                       தொடரும்

Friday, November 5, 2010

சிறை அனுபவம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.


சிறைக்கு சென்றவன் என்பதால் பரபரப்பான பல விஷயங்களை பற்றி நான் எழுதுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். நான் இங்கு பட்டும் படாமலும் சில விஷயங்களை குறிப்பிடுவேன். காரணம், சிறையில் நானாக எதையும் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ளவில்லை. அடிப்படையில் நான் ஒரு தனிமை விரும்பி. நானும் ஒரு கைதி என்பதால் பல கைதிகள் தயக்கமின்றி என்னுடன் பேசியதால் தெரிந்து கொண்டவை.  சில சொந்த அனுபவங்களும் உண்டு. நான் எழுதிய கடிதங்கள் தினமலரில் வெளியான பிறகு `அண்ணே, இதைபற்றியும் நீங்க எழுதுங்கண்ணே` என்றும் சொன்னவை.