!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, May 2, 2011

சிறை அனுபவம்: திரும்பி பார்க்கிறேன்.



நான் சிறையிலிருந்து விடுதலை ஆகி ஆறு மாதம் ஆகிவிட்டது. சிறைகள் குற்றவாளிகளை தண்டிக்காமல்/திருத்தாமல், அவர்களை வளர்த்து விட்டுகொண்டிருந்ததை பார்த்த போது இதைப்பற்றி நிச்சயம் எழுத வேண்டும் என்ற வெறி இருந்தது. இந்தியாவில் தப்பு செய்பவர்கள் தண்டிக்கப்படுவதே அபூர்வம். அப்படியே தண்டனை கிடைத்தாலும் அவர்கள் தண்டனை அனுபவிக்கும் விதம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே சிறையைப்பற்றி நாம் தெரிந்து கொண்டதை எழுதுவோம் என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

ஆனால் சிறையைப்பற்றியே எழுதிக் கொண்டிருந்தது எனக்கும் போரடித்தது. அத்துடன் தேர்தலும் வந்துவிட, எனது கவனம் அரசியல் பக்கம் திரும்பியது. எனவே அரசியல் குறித்தும் எனது பார்வைகளை பகிர்ந்துகொண்டேன். தற்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் எனது சிறை வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன். சிறை வாழ்கையில் எழுதுவதற்கு பல அனுபவங்கள் இருக்கிறது. அதில் ஓன்று இங்கே.


அதிர்ஷ்டத்தின் மீது வெளியே இருக்கும்போதே எனக்கு ஓரளவு நம்பிக்கை உண்டு. சில விடுமுறை நாட்களில் பஸ்ஸில் கால்கடுக்க நின்றுகொண்டு பயணம் செய்யவேண்டி இருக்கும். யாரவது இறங்கமாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருப்போம். ஆனால் சிலர் ஏற, அந்த நேரம் பார்த்து சிலர் இறங்க, உடனடியாக அவர்களுக்கு உட்கார இடம் கிடைக்கும். இதை என்னவென்று சொல்வது? சிறையிலும் அப்படித்தான். சிலர் பழைய கைதிகளிடம் மாட்டிக் கொண்டு பணத்தை இழக்க, வேறு சிலர் இதில் பத்தில் ஒரு பகுதியை கூட செலவு செய்யாமல் நல்ல பிளாக்குக்கு போய் செட்டிலாகிவிடுவார்கள். அதிர்ஷ்டம் காரணமாகவோ அல்லது பணம் பேசியதன் காரணமாகவோ அமைதியான பிளாக்குகளில் இடம் பிடித்துவிடும் இந்த புதுக்கைதிகள், வந்த சில நாட்களிலேயே சிரிக்க ஆரம்பிப்பார்கள். `இதுதான் சிறையா!` என்று.  

வசதி இல்லாத கைதிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஓன்று, குற்றச்செயல்களில் ஆர்வத்தோடு ஈடுபடுபவர்கள். இவர்கள் இனத்தோடு இனமாக விரைவில் கலந்து விடுவார்கள். எனவே இவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு குற்றம் செய்பவர்கள் அல்லது வறுமையில் தவறு செய்பவர்களின் பாடுதான் திண்டாட்டம். இவர்கள் நரகத்தை இந்த பூலோகத்திலேயே பார்ப்பவர்கள். (மேலும் படிக்க   அட்மிஷன் எனும் அடிமைகள்) 

முதல் ஆறு மாதம் இந்த அப்பாவிகள் படும் நரக வேதனையை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன் (பின்னர் நான் பிளாக் மாறிவிட்டேன்.) முதலில் நான் போய் சேர்ந்த பிளாக்கை நிர்வகித்ததும், அங்கே பெரும்பானமையாக இருந்ததும் இரண்டாம்தர மற்றும் கல்வி அறிவற்ற குற்றவாளிகள் என்பதால், இவர்களுக்கு மனிதாபிமானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. விபச்சார புரோக்கர்கள் எப்படி வாங்கிய `உருப்படி`யை முடிந்த வரை பிழிந்தெடுப்பார்களோ, அதேபோல் இவர்களும் சிறைக்கு வரும் புதுக்கைதிகளால் எதில் லாபமோ அதில் முடிந்தளவு பிழிந்தெடுப்பார்கள்.

நேரடியாகவும் மறைமுகமாகவும் இவர்கள் நடத்தும் இண்டர்வியுவிலேயே எது தேறும், எது தேறாது என்பதையும், கேஸ் விவரங்களை வைத்தே, எதிரி மிரட்டினால் படிவாரா என்பதையும் கண்டுபிடித்துவிடுவார்கள். ஒருவரிடம் பணம் தேறாது என்று தெரிந்துவிட்டால், அவருடைய பாடு திண்டாட்டம்தான். தினசரி பிளாக்கை பெருக்குவதிலிருந்து உள்ளே இருக்கும் விஐபிகளுக்கு பணிவிடை செய்வது வரை அவர்கள் தினம் தினம் செத்து பிழைப்பார்கள்.

ஒருவர் ரொம்ப கஷ்டப்படுவதை பார்த்து, அந்த பிளாக் ரைட்டரின் ஆளிடம் `ஏன் இவ்வளவு கடுமையாக வேலை வாங்குகிறீர்கள்?` என்று கேட்டேவிட்டேன். அதற்கு அவர், `உங்களை வேலை வாங்கல இல்ல. அதோட நிறுத்திகிங்க` என்றார். இதை கவனித்த என் நலன் விரும்பி ஒருவர், `அண்ணே, இங்க வேலை கடுமை இல்லன்னே. இது வேணும்னு வாங்கற வேலை. இவங்களை இப்படி கஷ்டப்படுத்தனாதான் மனுவுல சொந்தகாரங்ககிட்ட கேட்டு வாங்கி தருவாங்க. `கவனிக்கிறேன்`னு சொன்ன மற்ற கைதிகளும் இதையெல்லாம் பார்த்து பயந்து போய் சொன்னபடி வாங்கி கொடுத்துருவாங்க. அதுக்காகதான் இந்த வேலை. வேலை சுலபமா இருந்தா, `ஜெயில்ல சும்மாதானே இருக்கோம். சரி வேலை செய்வோம்`ன்னு காசு தரமாட்டாங்க .   நீங்க இதையெல்லாம் கேள்வி கேக்காதீங்க. அப்புறம் உங்களை இந்த செல்லுல வச்சிக்கிறது ஆபத்துன்னு வேற செல்லுக்கு மாத்திடுவாங்க ஜாக்கிரதை` என்று எச்சரித்தார்.

அவர் சொன்னது எந்த அளவு உண்மை என்பதை போகப்போக நான் தெரிந்துகொண்டேன். வழக்கமாக சிறையில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பிளாக்குகளுக்கு அதிகாரிகள் வருவார்கள். திங்கள்கிழமை பிளாக்கை சுத்தமாக வைத்திருக்கிறார்களா என்று கண்காணிப்பதற்காக. செவ்வாய் கிழமை கைதிகளின் குறைகேட்பு நாள். இந்த இரண்டு நாளும் வேலை மிகக் கடுமையாக இருக்கும். புதுக்கைதிகளுக்கு நரக வேதனைதான். பல குற்றங்களை செய்தவன் ஜாலியாக உலாவிக்கொண்டிருக்க, முதல்முறையாக தவறு செய்தவர்களும் அல்லது சந்தர்ப்பவசத்தால் குற்றம் செய்த அப்பாவிகளும் மாடாய் உழைத்துக் கொண்டிருப்பார்கள்.

சில சமயம் இவர்களுக்கு புதுக்கைதிகளின் மூலம் வருவாய் குறைந்தால், `ஜட்ஜ் வரார். திடீர்னு நம்ம பிளாக்குக்கு வந்தாலும் வருவார்` என்று சொல்லி மற்ற நாட்களிலும் தேவை இல்லாமல் வேலை வாங்குவார்கள். கடைசியில் அப்படி யாரும் வரமாட்டார்கள்.

என்னை எச்சரித்தவர் ஒரு திருட்டு வழக்கில் உள்ளே வந்தவர். ஆனால் உறவினர்களுக்கு தெரியாமல் வெளியே போய்விடவேண்டும் என்று இருந்தார். எனவே `பெயிலுக்கு பணம் இல்லை, கொஞ்சம் (ரூ.2000 )  உதவுங்கள்` என்று என்னிடம் உதவி கேட்டார். ஜெயிலுக்குள் பணம் வரும் பலவிதமான வழி பற்றியெல்லாம் நான் அப்போது அறிந்திருக்கவில்லை. எனவே என்னிடம் இருந்த ரூ. 500 க்கான டோக்கனை மட்டும் கொடுத்து விற்று எடுத்துக்கொள்ள சொன்னேன். அடுத்து வந்தால் பாப்போம் என்றும் சொல்லியிருந்தேன். அதனால்தான் அவருக்கு என் மீது அக்கறை.

அந்த நண்பர் சொன்ன ஆபத்தை உணர்ந்தவுடன் நானும் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தேன். மற்ற செல்களில் இருப்பவர்கள் முழுவதும் ரவுடிகள். சண்டையும், கஞ்சாவும் இவர்களுடைய செல்களில் சர்வசாதாரணம். அங்கே போய் சும்மா இருந்தாலும் அது தண்டனைதான். நான் இருந்த செல் புதுக்கைதிகளுகானது என்பதால் இங்கே அதிகம் தலைவலி இல்லை.  கஷ்டம் அவர்களுக்குத்தானே தவிர எனக்கு இல்லை. இதையெல்லாம் பார்க்கும் மனக்கஷ்டம் மட்டுமே எனக்கு.

`நீங்க எப்படின்னே இந்த பிளாக்குல வந்து மாட்டினீங்க? நல்ல பிளாக்குக்கு போய்டுங்கன்னே` என்று கொஞ்சம் டீசன்டான ரவுடி ஒருவர் என்னிடம் சொன்னார். ஒரு தெரிந்த சிறைக்காவலர் என்னை பார்த்துக் கொள்ளும்படி பிளாக் `தலை`களிடம் சொன்னதாலும், நானும் மனு வரும்போதெல்லாம் அவர்களை `கவனித்ததால்`, அங்கே தலைவலி இல்லாமல் இருந்தேன். வேறு தலைவலிகள் இருந்தது. ஆனால் பழைய கைதிகளால் இல்லை. எனவே இருப்பதை விட்டுவிட்டு  பறப்பதை பிடிப்பானேன் என்று அந்த செல்லிலேயே அமைதியாக இருந்துவிட்டேன். இங்கே பல புதுக்கைதிகளின் கதையை கேட்பதும் அவர்களுக்கு கவுன்சிலிங் செய்வதுமாக நாட்களை ஓட்டினேன். (எனக்கு என் உறவினர்களில் பலர் கவுன்சிலிங் செய்துகொண்டிருந்தார்கள் என்பது வேறு கதை.)

`வெளி` உலகத்தில் நாம் நாளைக்கென்று சேமிப்பதுதான் புத்திசாலித்தனம். ஆனால் சிறையில் கைதிகளுக்கு இந்த ஆலோசனையை நான் வழங்குவதில்லை. `உங்களுக்கு மனுவில் எது வந்தாலும் (டோக்கன் உள்பட)     நாளைக்கு என்று எதையும் எடுத்து வைக்காதீர்கள். இன்றே அதை சாப்பிட்டு விடுங்கள். அல்லது கூட இருக்கும் மற்ற புதுக்கைதிகளுக்கு கொடுத்து விடுங்கள். நாளை அவர்களுக்கு வரும்போது உங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள்`  என்று அவர்களிடம் சொல்லுவேன். ஏனென்றால் மறுநாள் எதுவுமே அங்கு இருக்காது.

ஒரு சமயம் ஒரு புதுக்கைதி வேறு பிளாக்குக்கு சொல்லாமல் ஓடிப்போய்விட, அவரை தேடிபிடித்து அழைத்துவந்து நையப்புடைத்தார்கள். `நாங்க உங்களை எல்லாம் காசு கொடுத்து வாங்கியிருக்கோம். நீ உன் இஷ்டத்துக்கு கிளம்பிபோனா எப்படி? மனுவுல `வாங்கி` கொடுத்துட்டு நீ எங்க வேணும்னாலும் போ` என்று எச்சரிக்கை வேறு.  இந்த செய்தி எனக்கு புதுசு.

கல்வி சிறுவயதிலேயே தடைபட்டுவிட்டாலும், படிக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டு சதா புத்தகங்களிலும், இணையத்திலும் மூழ்கி கிடப்பவன் நான். இதனால் அக்கம் பக்கம் நடக்கும் விஷயங்களை அதிகம் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன். சிறையிலும் நான் அதேபோல் இருந்தாலும் இந்த வார்த்தை என்னை தூண்டிவிட்டது. சிறையில் கைதிகளை கொத்தடிமைகள் கணக்காக வாங்குவது என்பது எவ்வளவு அதிர்ச்சிகரமான விஷயம். எனவே கொஞ்சம் கொஞ்சமாக நான் இதைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.

சிறையில் தினசரி புதுக்கைதிகள் வந்து கொண்டே இருப்பார்கள். இவர்கள்  க்வாரண்டைன் பிளாக்கில் அடைக்கப்பட்டு, ஓரளவு எண்ணிக்கை அதிகரித்தவுடன், இவர்களின் ஐடெண்டிபிகேஷன் சரி பார்க்கப்பட்டு, மற்ற பிளாக்குக்கு பிரித்து அனுப்புவார்கள். இப்படி அனுப்பும் போது சில பிளாக் ரைட்டர்கள் (கைதிகள்) நன்றாக `கவனித்தால்` அந்த பிளாக்குக்கு அதிக எண்ணிக்கையில் கைதிகள் அனுப்பிவைக்கப்படுவார்கள். நீங்கள் மிக நன்றாக `கவனிப்பவர்` என்றால், கைதிகளில் `தேறும்` வகையாக பார்த்தும் அழைத்துப் போகலாம். சரியாக கவனிக்காத பிளாக்குக்கு காகிதங்களாக ( பணம் தேறாத கேஸ்) போய் சேரும். சில சமயம் அதுவும் வராது. எனவே வேலைக்கு ஆள் கிடைக்காத நிலையில் நீங்கள் `கவனித்தே` ஆக வேண்டும்.

நான் க்வாரண்டைன் பிளாக்கில் இருந்த போது என்னிடம் ஒருவர் என் கேஸ் விவரங்களையும், என் பொருளாதார நிலைமையை விசாரித்ததையும், பின்னர் நாங்கள் பிளாக் மாற்றப்பட்டபோது, `இப்படி போங்க` என்று என்னை வழி காட்டி ஒரு பிளாக்குக்கு அழைத்துப்போனதையும் நினைத்துப் பார்த்தபோது, நான் அந்த பிளாக்குக்கு போகவில்லை, என்னையும் மற்றவர்களையும் அவர்கள் கணக்குப்படி `வாங்கி கொண்டு` போயிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். இருந்தாலும் இந்த `கவனிப்புகள்` எல்லாம் மிகப்பெரிய தொகையாக இல்லை. ஆனால் மற்ற சில `கவனிப்புகளை` எல்லாம் சேர்த்து ஒரு மாதாந்திர பட்ஜெட்டாக போட்டால் இது ஒரு தொகைதான். எனவே அவர்கள் கணக்குப்படி புதுக்கைதிகள் என்பது ஒரு முதலீடுதான். ஆனால் இந்த முதலீட்டுக்கு அவர்களுக்கு பார்க்கும் லாபம் மிக அதிகம். இதை `கைதிகளை விற்கிறார்கள்` என்று சொல்வதா அல்லது `இது ஒரு விதமான ஊழல்` என்று சொல்வதா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

அதே சமயம் கைதிகளை பிளாக்குக்கு உள்ளேயே விற்பதுண்டு. சில விஐபிகளுக்கு அவர்கள் செல்லில் வேலை செய்ய ஆள் வேண்டும். எனவே இவர்கள் தனியாக இன்டர்வியூ நடத்துவார்கள். அடிக்கடி ஆள் மாற்றாமல் இருக்க, வசதி இல்லாத, பெயிலில் போகமுடியாத ஆள் யார் என்று பார்ப்பார்கள். அது போன்ற நபர்களை தனது செல்லுக்கு அனுப்பும்படி பிளாக் ரைட்டரிடம் சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் இதற்கெல்லாம் லேசில் படிவார்களா? வாங்கப்பட்ட கைதிகள் ஓன்று வருமானத்தை தரவேண்டும் அல்லது வேலை செய்ய வேண்டும். எனவே இப்படி அனுப்பப்படும் கைதிகளுக்கு பதிலாக ஏதாவது கிடைத்தால்தான் கைதிகளை அனுப்புவார்கள்.

இங்கேயும் (வெகு) சிலருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். சிலர், `இங்க பரவாயில்லேன்னே. சாப்பிடறத்துக்கு எல்லாமே தராங்க. பீடியும் தராங்க` என்று சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் பலர், `அண்ணே, நான் எல்லா வேலையும் செய்றேன்னே. திரும்பி இங்கியே வந்துடறேன்னே` என்று கதறுவார்கள். சிறையில் இவை எல்லாவற்றையும் நான் மவுன சாமியாராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதும் என்னால் முடிந்தது இதைப்பற்றி ஒரு பதிவாக போடுவதுதான்.

இந்த புதிய கைதிகளை பழைய கைதிகளிடம் ஒப்படைப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதன் பலவிதமான பாதிப்புகளை பற்றி எழுதினால் பதிவு மிகப்பெரியதாகிவிடும்.

சிறை சீர்திருத்தங்களில் மிக முக்கியமாக தேவைப்படுவது, புதிய கைதிகள் மேலும் கெட்டு போகாமல் இருக்க, பழைய கைதிகளால் அவர்கள் கொடுமைபடுத்தப்படாமல், சுரண்டப்படாமல் இருக்க இவர்களை தனி பிளாக்குகளில் அடைப்பதுதான். அதேசமயம் புதுக்கைதிகள் இவர்களுடைய பிளாக்குக்கு வருவது நின்றுவிட்டால், இவர்களுக்கும் வருமானம் குறைந்து , சிறை என்பது உண்மையிலேயே கஷ்டமான ஒன்றாக மாறி, இந்த பழைய கைதிகளும்  திருந்துவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் பழைய கைதிகளிடம் ஒன்னும் தேறாது. வழக்கறிஞர்களுக்கு மட்டுமில்லாமல் சிறைகளிலும் புதுக்கைதிகள்தான் அட்சயப்பாத்திரம். அவர்கள் தனி பிளாக்குகளில் அடைக்கப்பட்டு அவர்கள் கொடுமைபடுத்தப்படுவது நின்று விட்டால், சிறைகளில் பாதிக்குமேல் வருமானம் நின்றுவிடும். இந்த புதுக்கைதிகளிடம் நேரடியாக  டீலிங் செய்யவும் முடியாது. ஆர்டீஒ அலுவலகங்களில் இதற்காக வெளியே புரோக்கர்கள் இருப்பார்களே, அதுபோல் சில இடங்களில் பழைய கைதிகள்தான் வசூலித்து தரும் புரோக்கர்கள். அதுமட்டுமில்லாமல்,  பழைய கைதிகளிடம் மாட்டிகொள்வோம் என்ற பயம் தான் பல பணக்கார புதுகுற்றவாளிகளை பர்சை திறக்க வைக்கிறது.

இந்த புதுக்கைதிகள் ஏதோ ஒரு வகையில் (பழைய கைதிகளால்) தண்டிக்கபடுகிறார்கள், பணத்தை இழக்கிறார்கள், எனவே இந்த தண்டனையாவது இவர்கள் திருந்துவதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்றாவது நினைக்கமுடியுமா? நிச்சயம் கிடையாது. இவர்கள் ஜெயில் நிலவரத்தை தெரிந்து கொள்வதால் மேலும் துணிச்சலாக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் நிஜம்.      

இது நான் சிறையில் இருந்தபோது கவனித்தது. தற்போது சிறைகள் என்ன மாற்றத்தை கண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் குறைகள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டால் அவைகள் திருத்தப்படும் வாய்ப்பு அதிகம். எனவே இந்த பதிவு.                           

1 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வேதனையாக இருக்கிறது.

Post a Comment