!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Saturday, December 18, 2010

சிறை அனுபவம் 4 : அட்மிஷன் எனும் அடிமைகள்.

இது ஒரு தொடர் முதல் பதிவு: சிறை அனுபவம்: முதல் இரவு  

ஜெயிலை பொறுத்த வரையில் புதிதாக வருபவர்களுக்கு ஒரே பெயர்தான்: அட்மிஷன். ஏழை, பணக்கரான், படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் இவர்களிடம் கிடையாது. யாராயிருந்தாலும் இவர்களை பொறுத்த வரையில் அட்மிஷன்தான். `எத்தனை அட்மிஷன் இன்னைக்கி வந்திருக்கு?` `ஏம்பா. நேத்துதான் நிறைய அட்மிஷன் வந்துதே. இங்க ரெண்டு பேர அனுப்புப்பா.`  `அண்ணே! ரெண்டு அட்மிஷன் குறையுதுன்னே!` என்று ஒரே அட்மிஷன் மயம்தான். அட்மிஷன்களை கிட்டத்தட்ட அடிமை ரேஞ்சுக்குதான் இவர்கள் நடத்துவார்கள்.

ஆக நாங்கள், அதாவது அட்மிஷன்கள்,
ஒரு ஓரமாக உட்கார்ந்திருக்க, எங்களின் கேஸ் விவரங்களை விசாரித்துக் கொண்டு மற்றும் எங்கள் உடமைகளையும் பரிசோதித்தனர். உடமைகளையும், ஆளையும் சோதனை போடுவதன் காரணம், பீடி மற்றும் வேறு  ஏதாவது தேறுமா என்பதுதான். பீடிக்கு சிறையில் நல்ல மரியாதை. குவாரண்டைன் பிளாக்கில் யாரும் எதையும் பிடுங்க மாட்டார்கள் என்பதால், அங்கிருந்து வரும் அட்மிஷன்களிடம் பீடி இருக்கும். அதாவது அவர்களை பார்க்க உறவினர்கள் யாராவது வந்திருந்து அவர்கள் வாங்கி கொடுத்திருந்தால்.

வழக்கு விவரங்களை விசாரிப்பதன் நோக்கம், காய்கறி கடைகளில் நாம் தேறும் தேறாது என்று காய்கறிகளை தரம் பிரிப்பது போல், அட்மிஷன்களை தரம் பிரிக்கத்தான்.

நீங்கள் ஏற்கனவே ஜெயிலுக்கு வந்திருக்கிறீர்கள் என்றால், ` நீ உன் செட்டோட போய் சேர்ந்துடு` என்று சொல்லி மரியாதையாய் அனுப்பி விடுவார்கள். நான் பழைய ஆள். இங்கேயே இருக்கிறேன் என்றும் சொல்லமுடியாது. புது அட்மிஷனுக்கு சிறை நிலவரங்களை சொல்லிக் கொடுத்து உஷாராக்கி விடுவார்கள் அல்லது அவர்கள் தனியாக ரூட் போட்டு வசூல் செய்துவிடுவார்கள் என்பதால் அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுக்கும் தங்கள் எல்லை எதுவரை என்பது தெரியுமாதலால் மரியாதையாய் மறுநாள் இடத்தை காலி செய்துவிடுவார்கள்.

அடுத்து தப்பிப்பது கொலை கேஸில் உள்ளே வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் முன்கோபக்காரர்களாக இருப்பார்கள். ஏற்கனவே ஒரு கொலை கேஸில் இருக்கிறோம். இன்னொரு கொலை செய்தாலும் ஒன்னும் குடிமுழுகி போகாது என்பதால், இவர்கள் துணிந்து எதையும் எதிர்க்க ஆரம்பிப்பார்கள். எனவே காவலர்கள் முதற்கொண்டு எல்லோரும் இவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருப்பார்கள்.

இந்த கொலை கேஸ்களிலும் இரண்டு வகை உண்டு. உணர்ச்சிவசப்பட்டு குடும்ப உறவுகளை கொலை செய்பவர்கள் சாராசரி மனிதர்கள். எனவே இவர்களும் அட்மிஷன்கள்தான். ஆனால், சண்டையில் எதிர்த்தரப்பை போட்டு தள்ளுபவர்கள் உண்மையில் ரவுடிகள். இவர்கள் ஜெயிலுக்கு புதிதாக வந்திருந்தாலும், வந்த ஒரே வாரத்தில் எல்லாம் ஒன்னுக்குள் ஒன்னாக மாறிவிடுவார்கள்.

இப்படி வரும் அட்மிஷன்களில் ஒரு பகுதி கழிக்கப்பட மீதி இருப்பவர்கள்தான் உண்மையான அட்மிஷன்கள்  (அடிமைகள்). இவர்களின் பாடுதான் திண்டாட்டம்.

சரி, அட்மிஷனால் இவர்களுக்கு என்ன லாபம்?  முதல் லாபம், வேலை செய்ய ஆள் கிடைப்பது. பிளாக்கை சுத்தமாக பராமரிக்க வேண்டியது பிளாக் ரைட்டர் பொறுப்பு.  ஜெயிலில் பழைய கைதிகள் யாரும் வேலை செய்யமாட்டார்கள். புது அட்மிஷனைத்தான் இதற்கு பயன்படுத்துவார்கள்.

தவறு செய்ய செய்ய தண்டனை கூடும் என்பது வெளிஉலக நியதியாக இருக்கலாம். சிறையில் இது தலைகீழ். நீங்கள் தொடர் குற்றவாளி என்றால், நீங்கள் எந்த வேலையும் செய்யாமல்,  பிளாட்பாரத்தில் கடைவிரித்து வியாபாரம் பார்ப்பதை போல், நீங்களும் தனியாக செல் பிடித்து சில அட்மிஷன்கள் போட்டு கொண்டு  உங்கள் தேவைகளை பார்த்துக் கொள்ளலாம்.

இத்தனைக்கும் வேலை என்பது கடலை கடைந்து அமுதம் எடுப்பது போலெல்லாம் இல்லை. அனைவரும் பகிர்ந்து கொண்டால் ஃபூ என்று ஊதிவிடுகிற வேலைதான். நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க நாம் என்ன செய்கிறோமோ அதையே இங்கேயும் செய்தால் போதும். என்ன, 250 பேர் வசிக்கும் பெரிய வீடாக நினைத்து கொள்ளுங்கள். அதுவும் இந்த வேலைகள் எல்லாம் 5 அல்லது 10 பேர் தலையில் விழுந்தால் எப்படி இருக்கும். அந்த கொடுமைதான் சிறையில் நடக்கிறது. சிலர் வேண்டுமென்றே இல்லாத வேலையை உருவாக்கி கொடுமைபடுத்துவார்கள். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதை நான் பின்னால் சொல்கிறேன்.

அட்மிஷனை இவர்கள் விரும்புவதற்கு இன்னொரு காரணம், புதுகைதிகளுக்கு  அடிக்கடி மனு (உறவினர்கள் உங்களை பார்க்க வருவது) வரும் என்பதுதான். பழைய கைதிகள் பெரும்பாலும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பார்கள் அல்லது இவர்களை பார்க்க மாதகணக்கில் யாரும் வரமாட்டார்கள். வந்தாலும் அவர்கள்  வாங்கித்தரும் உணவு பொருட்கள் சில நாட்கள் கூட வராது. எனவே, சிறையில் வழங்கப்படும் சுவையில்லாத மற்றும் அளவான சாப்பாட்டால் வயிறு காய்ந்திருக்கும் இவர்களுக்கு புதுகைதிகள் தான் எக்ஸ்ட்ரா தீனிக்கு ஆதாரம்.

புதுகைதிகளை பார்க்க வருபவர்கள், நம் உறவினர் ஜெயிலில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நிறைய பிஸ்கட், பழம் என்று வாங்கி வருவார்கள். இப்படி வரும் பொருட்களில் கால்வாசி உங்களுக்கு கிடைத்தாலே நீங்கள் அதிஷ்டசாலிதான். ஒரு தற்பாதுகாப்புக்காக நாமே மற்றவர்களுக்கு கொடுத்து காக்கா பிடிப்போம். ஆனால் பெரும்பாலும் உரிமையாய் அவர்களே எடுத்துகொள்வார்கள் அல்லது நீங்கள் அசந்த நேரம் உங்கள் பையை துடைத்து விடுவார்கள்.

இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, எனது அட்மிஷன் கார்டை வாங்கி பார்த்த ஒரு குட்டி ரவுடி, அதில் இருந்த எனது கேஸ் விவரங்களை பார்த்துவிட்டு `மொக்கை கேஸ்ன்னே. உடனே பெயில் கிடைச்சுரும்` என்று தனது சட்ட அறிவை காட்டினார். நான் கடை வைத்திருக்கிறேன், என்னோட கடையை ஊழியர்கள் பார்த்துகொள்கிறார்கள் என்றவுடன் உடனடியாக எனக்கு பிரமோஷன் கொடுத்து விட்டார்கள். அதாவது நான் தேறும் ரகம். எனவே என்னிடம் டீலிங் பேச கொஞ்சம் டீசன்டான ஆள் வந்தார்.

வந்தவர் ஜெயில் நிலவரத்தை கொஞ்சம் புரியும்படி சொல்ல, நானே இதை எதிர்பார்த்திருந்ததால் அவர்களுடைய கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டு அவர்களுடன் ஒரு `புரிந்துணர்வு` ஒப்பந்தம் போட்டேன். கூடவே எதற்காக மற்ற கைதிகள் அட்மிஷனை வா, வா என்று அழைத்தார்கள் என்பதையும் தெரிந்து  கொண்டேன்.

இதெல்லாம் அட்மிஷன்களால் அவர்களுக்கு கிடைக்கும் சாதகங்களில் சில.  ஆனால் இதில் இவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய லாபம் வருமானம்தான்.

அது எப்படி? எந்த வகையில்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?  அடுத்த பதிவில் பார்ப்போம்.

சில வாசகர்கள் நான் மேலோட்டமாக எழுதுகிறேன் என்று கருதுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. `ஒரு நடிகர், ஒரு நடிகையை `டிஸ்கஷனுக்கு` அழைத்தார்` என்று ஒரு பத்திரிக்கை எழுதினால், அந்த டிஸ்கஷனுக்கு என்ன அர்த்தம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலத்தான் நானும் மேலோட்டமாக புரிந்து கொள்ளும்படி எழுதினேன். வரும் பதிவுகளில் கொஞ்சம் விளக்கமாகவே போட முயற்சிக்கிறேன். 
                                    
          

4 comments:

ELIYAVAN said...

Good. Please carry on telling truth. I may ever not to go to jail. But I want to know what is happening there.

நிகழ்காலத்தில்... said...

அனுபவங்கள் போதுமான விளக்கங்களோடுதான் தருகிறீர்கள்.

இந்த உலகம் மலைக்க வைப்பதாக இருக்கிறது. அப்பாவிகளின் நிலை என்பதை இன்னும் கூறுங்கள்.

498ஏ அப்பாவி said...

பொய்வரதட்சணை வழக்கில் விசாரனை கைதிகளாக சென்ற எனது தாயாரும் தம்பியும் சிறையில் உள்ள சில மனித தெய்வங்கள் தங்கள் சொந்த உறவுகளைப்போல் பார்த்துக்கொண்டனர்... இதுபோல் நிகழ்வுகளும் சிறையில் உண்டு

சிவா said...

```பொய்வரதட்சணை வழக்கில் விசாரனை கைதிகளாக சென்ற எனது தாயாரும் தம்பியும் சிறையில் உள்ள சில மனித தெய்வங்கள் தங்கள் சொந்த உறவுகளைப்போல் பார்த்துக்கொண்டனர்...```

உண்மைதான். சிறைக்கைதிகள் எல்லாம் மோசமானவர்கள் என்று சொல்லமுடியாது. சிறையில் இருப்பவர்களில் பாதிக்கு மேல் திருந்தகூடியவர்களே.

ஒரு பணக்கார இளைஞன் தவறு செய்தால், அவன் குடும்பம் எப்படியாவது அவனை காப்பாற்றிவிடும். ஆனால் ஏழைகள் தவறான பாதையில் போனால், அது ஒரு பெண் விபச்சாரத்தில் விழுந்த கதைதான். மீளவேமுடியாது. சூழ்நிலைகள் அப்படி.

Post a Comment