!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, March 26, 2020

கோரோனோ



நம் நாட்டு நிர்வாகிகளை என்னவென்று சொல்ல, ஒரு பக்கம் பால், மளிகை கடை திறந்திருக்கும் என்று அறிவிப்பு. இன்னொரு பக்கம் `யாரும் வெளியே போககூடாது` என்று மிரட்டல். ஊர் சுத்த நினைப்பவர்கள் இதில் எதாவது ஒரு காரணத்தை சொன்னால் போதும். அல்லது நிஜமாகவே பொருள் வாங்க போகிறவர்கள் போலீசிடம் உதை வாங்க வேண்டும். இப்போது நாம் என்ன செய்வது? 

அதே சமயம் ரேஷன் கடைகளில் பணமாம். அரிசி மற்றும் மற்ற இத்யாதிகளும் இலவசமாகவே கிடைக்குமாம்! கொடுமை. நம்ம ஆட்கள் இலவசம் என்றால் `கோரோனோ ஒரு 5 கிலோ கொடுங்கள்` என்று கேட்டு வாங்குபவர்கள் ஆயிற்றே? இனி அங்கே கூட்டம் கூடும். அங்கே யாருக்காவது கோரோனோ இருந்தால் திண்டாட்டம்தான். 

இதில் தமிழக அரசின் செயல் படுமுட்டாள்தனம். வீடு தேடி போய் டோக்கன் கொடுப்பார்களாம். அப்படியே எந்த தேதியில் உங்களுக்கு ரேஷன் கடையில் பணம் கிடைக்கும் என்று சொல்லிவிடுவார்களாம். அப்போது போய் நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும். என்ன கொடுமை சரவணன் இது? 

வீடு போய் தேடி டோக்கன் கொடுக்கும் நாய்கள் அதற்கு பதில் பணமே கொடுத்துவிடலாமே? எதற்கு இரண்டு வேலை? 

விஜய் மல்லையாவை நம்பி 5000 கோடி கொடுப்பவர்கள் உள்ளூர் செல்லையாவை நம்பி 1000-2000 கொடுக்க கூடாதா! பிராடு நடக்கும் என்று பயமா? சொல்லிவிடுங்கள் ஊழியர்களிடம். பணத்தை கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு, ஒரு மீட்டர் தூரத்தில் அந்த நபருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று. நாளை புகார் வந்தால் மாட்டிக் கொள்வார். 

இப்படி சிலர் வீடு தேடி போவதும், ஒரு ஏரியாவை சேர்ந்த 100 பேர் ரேஷன் கடைகளில் கூடுவதும், இதில் எது சிறந்தது? 

பாண்டிச்சேரி கதை வேறுவிதமாக இருக்கிறது. பணம் வங்கியில் போடப்படுமாம். ஏழை என்றாலே பெரும்பாலும் ஏ டி எமில் பணம் எடுக்க தெரியாதவர்களாக இருப்பார்கள். வண்டி இல்லாதவர்களாக இருப்பார்கள். வங்கிக்கு எப்படி போவது? சிக்கல்தான். 

ரேஷன் பொருட்கள் கதையும் இப்படித்தான். நாம் போகும்போது `இன்று உங்க ஏரியா இன்று இல்லை` என்று பதில் வரும். சக்கரை இருக்கும், அரிசி இருக்காது. இதை கண்டுபிடித்து எல்லாவற்றையும் வாங்குவதற்கு நாம் 10 முறை போக வேண்டும். ஏழைகள் மட்டும் ரேஷன் வாங்கும்போதே அங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். இனி எல்லோரும் வருவார்கள் என்றால்? இதில் பந்த் எங்கே? 

பிரச்சினை என்னவென்றால் இக்கட்டான நேரங்களில் செயல்படும் முறை வித்தியாசமாக, அது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்காமல் இருக்க வேண்டும். அதுதான் நம்மிடம் கிடையாது. 

தனியார்காரன், `உனக்கு என்ன வேண்டும் என்று சொல், நான் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன்` என்று சொல்ல, அரசோ `உனக்கு எது வேண்டுமானாலும் என்னை தேடி வந்து என் காலில் விழு` என்று சொல்கிறது. 

இங்கே அகமதாபாத்தில் பல வியாபாரம் மொபைலில் நடக்கிறது. ஆட்டோவை கடையாக மாற்றி மெக்கானிக் ஷாப் /சோடா கடை /பங்க் கடை என பலவிதம். மினி வேன்களில் ஐஸ்கிரீம் கடை கூட. இந்த கடைகளை வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்கு ஒட்டிக்கொண்டு போகலாம். அல்லது அங்கேயே விட்டுவிட்டும் போகலாம். 

இப்போதைக்கு நமக்கு தேவை பால்/மளிகை மற்றும் ATM சேவைதான். இந்த கான்செப்டை இங்கே புகுத்தி இவற்றை மொபைல் கடையாக மாற்றி ஒவ்வொரு ஏரியாவிலும் தினம் 1மணி நேரம் இந்த சேவைகள் கிடைக்கும் என்று சொல்லி கடையை அவர்கள் ஏரியாவிலேயே நிறுத்திவிட வேண்டியதுதான். பிரச்சினை தீர்ந்தது.

மளிகை கடை கூட நிறைய இருக்கும். ஒரு மணி நேரம் அவர்களுக்கு அனுமதி தரலாம். மற்ற இரண்டுக்கும் இது அவசியம். இல்லையென்றால் இந்த பந்தின் அர்த்தமே நிறைவேறாது. 




Thursday, March 5, 2020

LOST AND FOUND



இங்கே A T M ல் பணம் எடுக்கப்போனேன். அங்கே ஏற்கனவ மிஷினில் ஒரு கார்ட் இருந்தது. யாரோ எடுக்க மறந்துவிட்டார்கள். இந்த A T Mக்கு செக்கூரிட்டி யாரும் இல்லை. நான் அக்கறையாக அதை பக்கத்தில் இருந்த மெடிக்கலில் கொடுக்க... அவர் என்னிடம் மேலும் 20 கார்ட்டுகளை எடுத்துக் காட்டினார். `இப்படித்தான் கொடுத்துட்டு போறாங்க, ஆனால் யாரும் வந்து கேட்பதில்லை` என்றார்.

உண்மையில் இதை மறந்தவர், வேறு எங்கோ தேடிக்கொண்டிருப்பார். இந்த கடைக்காரருக்கோ அல்லது எனக்கோ இதை யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை. S B I கார்டு. முகேஷ் அம்பானினு பேர் போட்டிருந்தா நான் லீவு போட்டுட்டு மும்பை போயிருப்பேன். ஆனா நீரவ் குமார்னு பேர்.

அந்த இருபது கார்டுகளை பார்த்ததும், நானே கொடுத்துவிடுகிறேன் என்று கார்டை நானே வைத்துக் கொண்டேன். பல கோடிகளை கொண்ட பெட்டி ஆனால்  சாவி என்னிடம் இல்லை என்றால் எப்படி இருக்கும், அப்படி இருக்கிறது என் நிலைமை. அருகிலுள்ள கிளையில் கொடுத்துவிடலாம் என்று இருக்கிறேன். ஒரு வேளை இந்த நபர் வேறு ஊராக இருந்தால், அவர் அங்கே புகார் செய்வார். கார்ட்  இந்த கிளையில். அவருக்கு கிடைக்குமா? பதில் இல்லை.

பல வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கில நாவல்.படித்தேன்.  60-70 களில் எழுதப்பட்டது. அதில் ஒரு தகவல். lost and found என்று துறை அல்லது சேவை மையம். எந்த நாடு என்பது நினைவில்லை. வழியில் ஏதாவது பொருள் கிடைத்தால் அதை இங்கே வந்து கொடுத்துவிட வேண்டும். தொலைத்தவரும் அவர் தேடியது போக, இங்கே வந்தும் கேட்டுப்பார்க்கலாம். யாரவது கொடுத்திருந்தால் கிடைத்துவிடும். 

உருப்படியான ஐடியா. வழக்கம்போல் இது நம் நாட்டு மக்களுக்கு வராது. வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்.

இப்போது இணையம் வந்து உலகத்தை ரொம்பவே சுருக்கிவிட்டது. இனி தேடல் நம் கையில்தான். இப்போது கற்பனை செய்து பாருங்கள். இதற்கென்று ஒரு இணையம். நான் அதில் ATM CARD FOUND - Ahmadabad/ctm/axisbankatm/name-niravkumar-given nearby medical shop என்று மெசேஜ் போட்டுவிடலாம்.

தொலைத்தவர்கள் இந்த தளத்துக்கு வந்து அவர்கள் தொலைத்த ஏரியா அல்லது பொருள் டைப் செய்து தேடினால் கிடைக்கும் அளவுக்கு செய்யலாம்.

தொலைத்தவர் மறுநாள் கடைக்கு வந்து கேட்க,  அந்த கடைக்காரர் `ஒரு ஜென்டில்மேன் நேத்து இந்த கார்ட் கொடுத்தார், அப்படியே 100 ரூபாய் சர்விஸ் சார்ஜ் கேட்டார் என்று சொல்ல, அதற்கு இவர் `புதுசா கார்ட் வாங்கணும்னா பேங்க்காரன் 300 சார்ஜ் பண்ணுவான். நீங்க அந்த நல்ல மனுஷனுக்கு 150  ரூபாயே கொடுங்கன்னு` சொன்னா எப்படி இருக்கும்.

நானும் நல்லது செஞ்சா பணம் கிடைக்குதப்பான்னு என்னை சுத்தி இருக்கிற எல்லா மனுஷனையும் நல்லவனா மாத்திடுவேன். நாடும் வளம் பெறும்.

சரி உண்மையிலேயே அப்படி ஒரு தளம் இருக்குதான்னு நெட்ல பார்த்தா...இணையத்தில் இதுபோல் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் பதிவு செய்ய சொல்கிறார்கள். ஒரு டேக் வாங்கி நாம அதுல இணைச்சுக்கணுமாம். இணைச்சா அது தொலைந்த இடத்தை காட்டுமாம். அப்படியே எடுத்த மனுஷனுக்கு புத்திமதி சொல்லி அதை திருப்பி கொடுக்க சொல்லுமாம்.😃😃😃

இதுக்கு கட்டணம் 300-1700 (இந்தியாவில்). இந்த காசுக்கு புது A T M வாங்கிடலாம். அது சரி நாம் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ பொருட்களை தொலைக்கிறோம். எல்லாவற்றுக்குமா டேக்?  அவர்கள் வியாபாரிகள் அதற்கு தகுந்தாற்போல் யோசிக்கிறார்கள். சராசரி மனிதர்களுக்கு எளிமையான தீர்வு தேவை.

Sunday, March 1, 2020

கடவுள் இருக்கிறார்

கடவுள் இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை, இங்கே ஒருவர் உறுதியாக சொல்கிறார்.

இனி இந்த வெற்றி பெற்ற மனிதரின் கதைக்குள் போவோம். இங்கே C T M என்ற பகுதியில் ஹைவேயில் ஒரு சின்ன நடைபாதை கோவில். மெலடி மாதா என்று பெயர். இதன் வரலாறு தெரியவில்லை. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் போல் சமகாலத்தில் தீடீர் பிரபலம் ஆகியிருக்கிறார்.

விசாரித்ததில் மூலம் தெரியவில்லை. பூஜாரி எல்லாம் கிடையாது. நிர்வகிக்கிறார் ஒருவர். காலை மாலை இரண்டுவேளை பூஜை மட்டும் போலிருக்கிறது. மற்றநேரங்களில் நீங்கள் மாதாவிடம் நேரிடையாக பேசவேண்டும்.

கோவில் என்றால் இதர பொருட்கள் விற்க வேண்டுமல்லவா, அந்த கடையும் இவருடையதே. நாம் தேங்காய் உடைப்போம், இங்கே தேங்காய் வாங்கி அதை அப்படியே எரிக்கிறார்கள். அதன் மூலம் திருஷ்டி போகுமாம். அந்த விற்பனையும் இவரே.

பக்தர்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்பிக்கை வருகிறது. ஆனால் நமக்கு காங்கிரசையும் பிஜேபியையும் பார்த்தபிறகு கெஜ்ரிவால் கூட அற்புதமான மனிதராக தோன்றுவார். இது அந்த வகையாக இருக்க கூடும்.

ஒரு காலத்தில் சைக்கிளில் வந்த நிர்வாகி, தற்போது புல்லட் வைத்திருக்கிறார். செழுமை நிறையவே தெரிகிறது. இனி சிலர் என் கணவர்/பையன் கோவில் வைத்திருக்கிறார், நல்ல வருமானம் என்று  பெருமைபட்டுக் கொள்ளும் காலமும் வரும்.

பக்தர்களுக்கு கடவுள் இருக்கிறாரரோ இல்லையோ, இவரை பொறுத்த வரையில் கடவுள் இருக்கிறார். அதை இவர் அடித்து சொல்வார். கடவுளே காப்பாத்து என்று நாம் இங்கே புலம்பி கொண்டிருக்க, அவர் கடவுளையே வியாபாரமாக்கி தன்னை காப்பாற்றிக் கொள்கிறார். இவரல்லவா வெற்றி பெற்ற மனிதர்.

இந்த மாதாவை பற்றி ஒரு பதிவு எழுதுவோம் என நினைத்து அந்த வழியாக போனேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் நடக்கும்போதே உள்ளே எட்டி பார்த்தேன். அப்படி பார்த்துக்கொண்டே நடக்கும்போது ஒருவர் என் கையில் ஸ்வீட் (பிரசாதம்)  வைத்துவிட்டார். அட ஆண்டவா.... கோவிலுக்கு உள்ளே போகவேண்டும் என நினைத்ததற்கே ஸ்வீட்டா, உள்ளே போயிருந்தால்... நினைக்கவே சுகமாக இருந்தது.

ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை.

கடலூரில் பிரச்சினைகள் தலைதூக்கி எனக்கு மன அழுத்தம் அதிகமானபோது, கடவுள் நம்பிக்கை வர ஆரம்பித்தது. அப்போது அருகிலிருந்த பாடலீஸ்வரரிடம் சரணடைந்தேன். சில வருடங்கள் அவரையே சுற்றி வர, தீடிரென்று மின்னலடித்தது. ஒரு காஜல் அகர்வால் என்  கடையை தாண்டிப்போனார். 

வேலை இல்லாத நேரத்தில் அந்த தேவதை எங்கே போகிறார் என நோட்டம் விட்டேன். அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி போவதை கண்டேன். அதன்பிறகுதான் எனக்கு ஞானோதயம் வந்தது. கடவுள் ஒருவரே, பாடலீஸ்வரரும் அவரே ஆஞ்சநேயரும் அவரே என்று புரிந்து கொண்டு ரூட்டை இங்கே மாற்றினேன்.

இங்கே பாடலீஸ்வரருக்கு கோவம், `ஒரு பெண்ணுக்காக என்னை மறந்தாயா` என்று. அந்த பக்கம் `நீ என்ன பார்க்க வரலைன்னு தெரியும் என்று ஆஞ்சநேயர். இருவரும் கைகொடுக்கவில்லை. கடைசியில் நான் ஜெயிலுக்கு போக வேண்டியதாயிற்று. அதுவும் தோல்வி.

இங்கே அகமதாபாத் வந்த பிறகு பல வருடங்களாக நாகர்வேல் அனுமானிடம் தஞ்சம். அவரும் கவனிப்பதுபோல் தெரியவில்லை. இருந்தாலும் பல வருடங்களுக்கு பிறகு என ஃ பைலை அவர் எடுக்கும் நேரத்தில் நான் இப்படி மெலடிமாதா பக்கம் திரும்பினால் அவருக்கு கோபம் வருமா?

இது அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாகிவிடும்.

ஒரே குழப்பம், என்ன செய்வது?