!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, May 14, 2011

ஜனநாயக நாடுகளின் சர்வாதிகாரமும், சர்வாதிகாரிகள் விரும்பும் ஜனநாயகமும்.



தீவிரவாதப்பாதையில் செல்பவர்களால்  தங்கள் நோக்கத்தை அடையவும் முடியாது அதேசமயம் அவர்களுக்கு அழிவும் நிச்சயம் என்பதை ஒசாமாவின் மரணம் உறுதிப்படுத்துகிறது.

ஒசாமா விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்திய பிரதமர் நேர்மையானவராக இருந்தும் அவருடைய ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெறவில்லையா? தேர்தல் செலவினங்கள், கூட்டணி ஆட்சி என்று பல நிர்பந்தங்கள் இந்திய ஆட்சியாளர்களுக்கு இருகிறதே! அதேபோல் பாகிஸ்தான் அரசியலையும் நாம் கொஞ்சம் யதார்த்தமாக புரிந்து கொள்ள முயற்சிப்போம். அவர்களுக்கும் பல நிர்பந்தங்கள் இருக்கலாம்.  

தவறான பாதையில் சென்று விட்ட பிறகு, சினிமாவில் சில வில்லன்கள் திருந்துவது போல் திடீரென்று திருந்திவிட முடியாது. மாற்றங்கள் மெல்ல மெல்லத்தான் வரும். அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது அமெரிக்காவின் கடந்த கால தேவைக்காகவோ இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்துவிட்ட பாகிஸ்தான், திடீரென்று அதை அறுத்துவிட முடியாது. விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே இருதரப்பையும் திருப்தி செய்யும் போக்கை பாகிஸ்தான் கடைப்பிடித்து வந்தது. ஆனால் எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா, கடைசியில் அது வந்தேவிட்டது.

இந்த பதிவு ஒசாமா இறந்ததை பற்றி அல்ல. மேலும் பல ஒசாமாக்கள் உருவாகாமல் தடுப்பதை பற்றி.  


தற்போதைய உலக நாடுகளின் மிக முக்கியமான கவலைகள் மூன்றே மூன்றுதான். நமது எதிரி பலம் பெற்று விட்டால் அது பின்னாளில் நமக்கு தலைவலியாகிவிடுமோ என்ற கவலை. இரண்டாவது, இன்று உலகம் பொருளாதாரரீதியாக சுருங்கிவிட்ட பிறகு போக்குவரத்து தடங்கலில்லாமல் இருக்க வேண்டும் என்ற கவலை. மூன்றாவது, எரிபொருள் இன்றைய பொருளாதாரத்திற்கு அடிப்படை ஆதாராமாகிவிட்ட நிலையில் அது தங்குதடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்ற கவலை.

உள்நாட்டில் அத்தியாவசியமான பொருட்களை சிலர் பதுக்கி அதன் விலை ஏற்றத்திற்கு வழி வகுத்தால், உள்நாட்டு சட்டம் அதை தடுக்கும். ஆனால் சர்வதேச அளவில் இந்த எண்ணெய் வளம் மிக்க நாடுகள் வேண்டுமென்றே இப்படி ஒரு முயற்சில் ஈடுபட்டு விலை ஏற்றினால் என்ன செய்வது? தனக்கு பிடிக்காத நாடுகளுக்கு விற்கமாட்டேன் என்றும் சொன்னால்... இதுதான் அமெரிக்கா மட்டுமின்றி பெரும்பாலான நாடுகளின் கவலை. இந்த மூன்று கவலைகளின் அடிப்படையில்தான் எல்லா நாடுகளும் முடிவெடுக்கின்றன. இதற்காக தங்கள் கொள்கைகள் பலவற்றில் சமரசமும் செய்து கொள்கின்றன.

அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை சுரண்ட அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் அங்கே தலையிடுகின்றன என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம்.  அரபு நாடுகளில் எண்ணெய் வளமும், போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சூயெஸ் கால்வாயும் இருக்கிறது. இங்கே ஒரு சர்வாதிகாரி பலம் பெற்றுவிட்டால் அது உலகத்துக்கே அச்சுறுத்தல். எண்ணெயையும், போக்குவரத்தையும் துருப்புச் சீட்டாக பயன்படுத்தி இவர்கள் உலகை பிளாக்மெயில் செய்வார்கள். அதுவும் அந்த சர்வாதிகாரியிடம் அணுகுண்டும் இருந்துவிட்டால்... அவ்வளவுதான், தொலைந்தோம்.  எனவே அந்த முயற்சியில் ஈடுபடும் எவரையும் நாங்கள் அழிப்போம் என்பது மேலை நாடுகளின் எதிர்வாதம். இரண்டு வாதங்களும் நம்பும்படி இருக்கிறது. 

உலக நாடுகளின் இந்த நியாயமான கவலையை போக்குவதற்கு ஒரு பொதுவான அமைப்பு உருவாகாததால், அமெரிக்கா தலைமையிலான ஜனநாயக நாடுகள், உலகின் முக்கியமான பிரதேசங்களில் ஒரு சர்வாதிகாரி உருவாகும் வாய்ப்பு தெரிந்தால், இவர்களும் அதே சர்வாதிகாரபாணியில் செயல்பட்டு அந்த தலைவனை அழித்துவிடுகின்றன.

அமெரிக்காவின் இந்த செயலை எதிர்க்கும் நாடுகள், `எந்த ஒரு தீர்மானமும் ஐ நா வில் விவாதிக்கப்பட்டு ஓட்டெடுப்பில் ஆதரவு கிடைத்த பிறகுதான் அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்` என்று ஜனநாயகம் பேசுகின்றன. நியாயமான கோரிக்கைதான். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் ஐ நா வில் ஜனநாயகத்தை வலியுறுத்தும் பல நாடுகள் உள்நாட்டில் ஜனநாயகத்தை அனுமதிப்பதில்லை.

குறை யார் மீது இருந்தாலும் நமக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொது அமைப்பு தேவை.  அதன் மூலம் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுத்திருந்தால், அமெரிக்கா மீது இந்த குற்றச்சாட்டு வந்திருக்காது. ஆனால் பல காரணங்களால் அப்படி ஒரு அமைப்பு உருவாகவில்லை. இதற்கு அமெரிக்காவும் ஒரு காரணம். ஐ. நா. ஒரு அமைப்பாக இருகிறதே தவிர அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நியாயமான அமைப்பாக இன்னும் அது உருமாறவில்லை. உயிரோடு இருக்கும்போது தண்ணீர் கொடுக்காதவன், செத்த பிறகு பால் ஊற்ற வந்த கதையாய், உலகில் பல அநியாயங்கள் நடக்கும் போது அதை தடுக்காமல், எல்லாம் முடிந்த பிறகு விசாரணை கமிஷன் அமைத்து நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிகொள்ளும் ஒரு பொம்மை அமைப்பாகத்தான் அது இருக்கிறது.     

எனவே தற்போதைய உடனடி தேவை, ஐ நா வை ஜனநாயகப்படுத்தி அதை ஒரு பலமான அமைப்பாக மாற்றுவதுதான். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மீண்டும் போர் ஏற்படாமல் தடுக்க வீட்டோ போன்ற அதிகாரங்கள் பலம் வாய்ந்த நாடுகளுக்கு தேவைபட்டிருக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் சிறிய நாடுகளை விட பெரிய நாடுகளுக்குத்தான் பாதிப்பும் பொறுப்புணர்வும் அதிகம். எனவே இவர்கள் நாட்டாமையாக இருக்க விரும்புவதும், முன்னுரிமையை எதிர்பார்ப்பதும் நியாயமானதே. ஆனால் தற்போது உலகில் ஜனநாயக எண்ணங்கள் மேலும் வலுபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஐ நா வில் ஜனநாயகம் இல்லை என்றால் அது கேலிகூத்தாக இருக்கும். எனவே இந்த நாடுகள் வீட்டோ அதிகாரத்தை கைவிட்டுவிட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு மாற்று வழியை உருவாக்கவேண்டும்.   

அனைத்து நாடுகளையும் கொண்ட ஒரு கீழ் சபையும், பரப்பளவில், பொருளாதாரத்தில் மிகப்பெரிய 50  நாடுகளை கொண்ட மேல் சபையும் உருவாக்கலாம். பணம் படைத்த நாடுகள் சில சிறிய நாடுகளை தங்களுக்கு ஆதரவாக வளைத்து போட்டாலும், மேல்சபையில் இதுபோல் நடக்க வாய்பிருக்காது. எனவே இந்த நடைமுறை கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும்.

ஜனநாயகத்தின் சிறப்பம்சமே ரகசியம்தான். ஐக்கிய நாடுகள் சபையில் அது இருக்கிறதா? ரகசியமான வாக்கெடுப்பு என்றால் பல நாடுகள் அவர்களின் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள். ஆனால் தற்போது இந்த வாக்கெடுப்புகளில் வெளிப்படைத்தன்மை இருப்பதால், எந்த ஒரு நாடும் யாருடைய ஆதரவு நமக்கு தேவை, யாரை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற கணக்கின் அடிப்படையில்தான் வாக்களிக்கும். எனவே இது போன்ற ஓட்டெடுப்பில் நீதி இருக்காது.

நாம் இன்று பாகிஸ்தானை, ஒசாமாவை, விடுதலைபுலிகளை குறை சொல்கிறோம். ஆனால் இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அநீதி இழைக்கப்பட்டிருகிறது என்பது உண்மைதானே? காஷ்மீர் விஷயத்தில் காஷ்மீர் மக்களோ அல்லது ஐ நா சபையோ இதுதான் எங்கள் முடிவு என்று உறுதியாக தெரிவித்திருந்தால் ஒருவேளை பாகிஸ்தான் இந்த பாதையை தேர்ந்தெடுத்திருக்காது. இலங்கையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படாமல், ஒடுக்கப்படாமல் இருந்தால் புலிகள் ஆயுதமேந்தியிருக்கமாட்டார்கள். அதேபோல்,  ஒசாமா ஒரு அப்பட்டமான மத தீவிரவாதியாக தெரிந்தாலும், பல நாடுகளில் அமெரிக்கா தலையிடுவதால் அதன் மீது இருக்கும் வெறுப்பு காரணமாகவே சிலர் ஒசாமாவை ஆதரிக்கிறார்கள் என்பதும் உண்மை.

தற்போதைய அமைப்பு பலம் வாய்ந்த நாடுகளின் நலன் காக்கும் அமைப்பாகத்தான் இருகிறதே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்பாக இல்லை. அப்படி ஒரு அமைப்பு உருவாகும்வரை, ஒரு ஒசாமா அழிக்கப்பட்டாலும், பல ஒசாமாக்கள் உருவாக்கி கொண்டுதான் இருப்பார்கள். இதை இந்த மேலை நாடுகள் உணரவேண்டும்.

0 comments:

Post a Comment