!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Tuesday, May 17, 2011

தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.

தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. பல பதிவர்கள் தங்கள் கருத்துக்களை வேகமாக பகிர்ந்துகொண்டார்கள். தற்போது எனக்கு `அரசியல் பதிவர்` என்ற பட்டமும் பதிவுலகில் கிடைத்திருப்பதால் லேட்டானாலும் தேர்தல் முடிவுகள் குறித்து எனது கருத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால்  நான் எதிர்பார்த்தது `அரசியல்வாதி` என்ற பட்டத்தைத்தான். டாக்டராக, இன்ஜினீயராக, வக்கீலாக, கலெக்டராக அல்லது பணக்காரனாக வேண்டும் என்பதுதான் பலரின் கனவாக இருக்கும். ஆனால் அரசியல்தான் விவரம் புரியாத வயதிலிருந்து என் சிந்தனையை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.ஜெயிலுக்கு போனால்தான் அதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று நினைத்த போது, அந்த முயற்சியையும் துணிந்து எடுத்தேன். சரி, என் கதையை இன்னொருநாள் பார்ப்போம். இனி அரசியல்..


வழக்கமாக நாம் வெற்றியைத்தான் கொண்டாடுவோம்.  சிலரின் தோல்வியை நாம் விரும்பினாலும், அதை வெளிப்படையாக கொண்டாடாமல், மனதுக்குள் ரசிப்போம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நாம் இந்த முறை திமுக வின் தோல்வியை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருகிறோம். நரகாசுரனின் மறைவுக்காக தீபாவளியை கொண்டாடுவது போல் இருக்கிறது இந்த கொண்டாட்டம். நான் இதற்கு முந்தய பதிவில் குறிப்பிட்டது போல், இனி நாம் நம்முடைய வெற்றியை, நல்லவர்களின் வெற்றியைத்தான் கொண்டாடவேண்டுமே தவிர மற்றவர்களின் தோல்வியை அல்ல. ஆனால் அதேசமயம் அது நம் கையில் இல்லை. அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது.

இந்த தேர்தலில் கலைஞரை எதிர்த்து வாக்குகளை பதிவு செய்துவிட்டாலும், அதன் இன்னொரு அர்த்தம் ஜெயலலிதாவுக்கு ஆதரவு என்பதுதான்.  ஜெயலலிதாவின் அரசியல் எனக்கும் பிடிக்காது என்றாலும், ஜெயலிதாவை விட மோசமானவர் கலைஞர் என்பதுதான் என் கருத்து. ஏனென்றால் கலைஞர் பெரியார், அண்ணா போன்ற தரமான பல்கலைகழகங்களில் அரசியல் படித்தவர். எனவே நாம் கலைஞரிடம் தகுதியை எதிர்பார்க்கிறோம். ஆனால் ஜெயலலிதா அப்படி அல்ல. எனவே அவரிடம் நாம் தகுதியை எதிர்பார்ப்பது சரியல்ல. இவர் ஏதோ ஒரு உந்துதலில் அரசியலுக்கு வந்தவர். முதல் முறை ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ஊழலால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டாலும், வழக்குகளிலிருந்து தப்பிக்க தொடர்ந்து தன்னை ஒரு அரசியல் சக்தியாக காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதுதான் அவருடைய அரசியல். எனவே இங்கு எதிர்பார்ப்பும் இல்லை. ஏமாற்றமும் இல்லை. இவரைப்பற்றி நிறைய விமர்சிக்கலாம். இப்போதுதான் ஜெயித்திருக்கிறார்கள். ஒரு வேளை மாறியிருக்கலாம். எனவே பிறகு பார்ப்போம்.

ஆனால் ஒரே ஒரு தியரியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒருவன் கொடுங்கோலன் என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும்போது அதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் மற்றவர்கள் இப்படி ஒரு கெட்டப்பெயரை நாம் எடுக்க கூடாது என்று நினைப்பார்கள். அதுபோல் தமிழ்நாட்டில் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை பார்த்து இனி வரும் அரசியல்வாதிகள் அப்படி ஆகமாட்டார்கள் என்று நம்புவோம்.

இந்த தேர்தலில் ஒரு நல்ல செய்தியும் கூடவே ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி: பணத்தால் எங்களை விலைக்கு வாங்க முடியாது என்பதை அரசியல்வாதிகளுக்கு மக்கள் உணர்த்தியது. கெட்ட செய்தி என்னவென்றால், இந்த தேர்தலில் அதிமுகவும் பணத்தை இறைத்திருக்கிறது என்ற செய்தி. மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இல்லாமல் ஏது இவர்களுக்கு பணம்? கடந்த காலங்களில் சுருட்டியதின் சேமிப்பா? அல்லது அதிமுகவை ஆதரிக்கும் தொழிலதிபர்கள் கொடுத்ததா? இதில் எது உண்மையாக இருந்தாலும் அது கெட்ட செய்திதான். செலவு யார் செய்திருந்தாலும் அவர்கள் லாபத்தை எதிர்பார்பார்கள். தேர்தல் செலவுக்காக கட்சிகளுக்கு அரசே நிதி ஒதுக்கீடு செய்தால்தான் இந்த பிரச்சினைக்கு முடிவு வரும்.

வைகோவின் நிலைதான் பரிதாபம். அவர் எதை நினைத்தாரோ அது நன்றாகவே நடந்துவிட்டது. இருந்தாலும் அந்த வெற்றியை அவரால் கொண்டாட முடியவில்லை. வைகோ கூட்டணியில் இருந்திருந்தால் திமுக கூட்டணி மேலும் பல சீட்டுகளை இழந்திருக்கும். நமது செயலை சந்தர்பவாதம் என்று பலர் விமர்சித்தாலும், சூழ்நிலையின் அவசியம் கருதியும்  சில நேரங்களில் முடிவெடுக்க வேண்டி இருக்கும். அப்படி எடுப்பதால் தான் பல அரசியல்வாதிகள் இன்னும் களத்தில் இருகிறார்கள். பச்சை சந்தர்பவாதம் வேண்டாம். ஆனால் அனுசரித்தல் அவசியமாயிற்றே. இவர் இனி அதை உணர்ந்தாலும் பலனில்லை.

இதில் தேமுதிகவின் வெற்றிதான் ஓரளவு சந்தோஷப்படுத்துகிறது. அவரை பலர் விமர்சித்தாலும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் அதற்கு அரசியல்தான் சரியான தளம் என்றும் ஒருவர் நினைத்தால் அவர் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம் என்பதுதான் என் கருத்து. மற்ற துறைகளுக்கெல்லாம் துறை சார்ந்த அறிவு வேண்டும். ஆனால் அரசியலுக்கு அப்படி இல்லை. பொது அறிவுதான் இந்த துறைக்கு தேவையான ஒரே தகுதி.

குடிகாரர் என்பதும், நாகரீகம் (வேட்பாளரை அடித்தது) தெரியாதவர் என்பது இவர் மீது உள்ள குற்றச்சாட்டு. மற்ற இரண்டு முன்னணி தலைவர்களின் `தகுதி`யோடு ஒப்பீட்டு பார்த்தால் இது மிகச் சாதாரணமான ஒன்றுதான். குடியின் மூலம் அவர் தன் உடலைதான்  கெடுத்துக் கொள்கிறார். ஆனால் மற்ற இருவரும் தங்கள் குறைகள் மூலம் நாட்டை அல்லவா நாசமாக்கியிருக்கிறார்கள். இருந்தாலும் மக்களின் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் வரும்போது இவர் `நிதானமாக` இருக்கவேண்டும் என்றுதானே எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். இதை அவர் உணரவேண்டும்.
 
ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகாது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அடுத்த தேர்தலில் இருவரும் எதிரெதிர் அணியில் இருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். எனவே விஜயகாந்த் ஒரு ஆக்கபூர்வமான எதிர்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு, தேவையற்ற விமர்ச்சனங்களுக்கும் இடம்கொடுக்காமல் செயல்பட்டால், தமிழ்நாட்டின் மாற்றுசக்தியாக வரும் வாய்ப்பு தேமுதிக விற்கு கிடைக்கும்.
              

இந்த வார சந்தேகம்.


தேர்தலில் திமுக தோற்றபின் உடனடியாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கனிமொழியின் கைது மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. காரணம் என்னவாக இருக்கும்? என்னால் கணிக்க முடிந்தது இந்த இரண்டுதான்.

1 ) வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேணாம் என்று காங்கிரஸ் நினைத்திருக்கலாம். திமுகவின் இந்த படுதோல்வியை பார்த்து காங்கிரசே அதிர்ச்சியடைந்து, கலைஞருக்கு அடுத்த ஷாக் கொடுப்பதை கொஞ்சம் ஒத்தி வைத்திருக்கலாம்.(என்ன இருந்தாலும் கூட்டாளி இல்லையா)

2 ) ஒருவேளை கனிமொழி கைது செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்? கலைஞர், ஸ்டாலின், அழகிரி மாதிரி வலுவான தலைவர்ன்னு கனிமொழியை சொல்லமுடியாட்டாலும், ஏற்கனவே படுதோல்வி அடைந்து வெறுப்பில் இருக்கும் திமுகவினர் அல்லது சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது? ஜெயலலிதா இன்னும் பதவியேற்று காவல்துறையை தன் கட்டுபாட்டுக்கு கொண்டுவராத நிலையில், தற்காலிக முதல்வரான கலைஞர் அதை செய்வாரா? சந்தேகம்தான். ஜெயலலிதா பதவி ஏற்று அதிகாரத்தை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரட்டும் என்பதற்காகவும் இந்த கைதை ஒத்தி வைத்து இருக்கலாம். இதுதான் ஓரளவு நம்பும்படி இருக்கிறது.

             

8 comments:

ராஜ நடராஜன் said...

//ஜெயலலிதாவின் அரசியல் எனக்கும் பிடிக்காது என்றாலும், ஜெயலிதாவை விட மோசமானவர் கலைஞர் என்பதுதான் என் கருத்து. //

இதை சொன்னாத்தான் நமக்கு அ.தி.மு.க சார்பாளன் என்ற புதிய பதவிகளை பின்னூட்டத்தில் சுமத்துகிறார்கள்:)

ராஜ நடராஜன் said...

//ஏனென்றால் கலைஞர் பெரியார், அண்ணா போன்ற தரமான பல்கலைகழகங்களில் அரசியல் படித்தவர். எனவே நாம் கலைஞரிடம் தகுதியை எதிர்பார்க்கிறோம்.//

இதன் காரணம் கொண்டே கலைஞர் சுயநல அரசியலை மிக அதிகமாக விமர்சிக்க வேண்டியதாகியிருக்கிறது என்பது கழக கண்மணிகளுக்குப் புரிவதில்லை.

ராஜ நடராஜன் said...

//தேர்தல் செலவுக்காக கட்சிகளுக்கு அரசே நிதி ஒதுக்கீடு செய்தால்தான் இந்த பிரச்சினைக்கு முடிவு வரும்.//

இந்த ஆலோசனை நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் அதையும் ஆட்டையப் போட்டு விட்டால்?

தற்போது தொகுதி எம்.பிகளுக்கு ஒதுக்கும் பணத்திற்கு கணக்குகள் ஏதாவது உண்டா?

சிவா said...

///இதை சொன்னாத்தான் நமக்கு அ.தி.மு.க சார்பாளன் என்ற புதிய பதவிகளை பின்னூட்டத்தில் சுமத்துகிறார்கள்///

நமக்கு சரியெனப்படுவதை செய்வோம், சொல்வோம். அவ்வளவுதான். விமர்சனங்களை விட்டுத்தள்ளுங்கள் நடராஜன். இதெற்கெல்லாம் கவலைப்பட்டால் நம்மால் எதுவும் எழுதமுடியாது.

சிவா said...

///இந்த ஆலோசனை நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் அதையும் ஆட்டையப் போட்டு விட்டால்?

தற்போது தொகுதி எம்.பிகளுக்கு ஒதுக்கும் பணத்திற்கு கணக்குகள் ஏதாவது உண்டா? ////

இது குறித்து விளக்கமாக ஒரு பதிவு போடவேண்டும் என்று நினைக்கிறன். எனவே பிறகு பாப்போம். ஆனால் கட்சிகளுக்கு அரசு நிதி ஒதுக்கினால் இந்தியாவில் தற்போதைய ஊழலில் பாதி குறைந்துவிடும் என்பதுதான் என் கணிப்பு.

Anonymous said...

ஜெயலிதாவை விட மோசமானவர் கலைஞர் என்பதுதான் என் கருத்து. ஏனென்றால் கலைஞர் பெரியார், அண்ணா போன்ற தரமான பல்கலைகழகங்களில் அரசியல் படித்தவர். எனவே நாம் கலைஞரிடம் தகுதியை எதிர்பார்க்கிறோம். ஆனால் ஜெயலலிதா அப்படி அல்ல. எனவே அவரிடம் நாம் தகுதியை எதிர்பார்ப்பது சரியல்ல.sariya solli irukkenga super nalla karuthu

இரவு வானம் said...

சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள், ஆனால் சினிமா துறையை தவிர வேறு எந்த துறையிலும் திறைமைசாலிகள் இல்லையா? எனக்கு என்னமோ ஸ்டாலின் வந்தால் ஒரு மாற்றம் இருக்கும் என தோணுகிறது

சிவா said...

///சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள், ஆனால் சினிமா துறையை தவிர வேறு எந்த துறையிலும் திறைமைசாலிகள் இல்லையா? எனக்கு என்னமோ ஸ்டாலின் வந்தால் ஒரு மாற்றம் இருக்கும் என தோணுகிறது///

எந்த துறையிலிருந்தும் வரலாம் என்றுதான் சொல்லியிருக்கிறேன். தற்போது அரசியல் உட்பட எல்லா துறையிலுமே நமக்கென ஒரு பிராண்ட் உருவாக்க வேண்டியிருக்கிறது. நடிகர்களுக்கு அவர்கள் தங்கள் வேலையை செய்யும் போதே அவர்களுடைய பெயரும், முகமும் ஒரு பிராண்டாக மக்கள் மனதில் பதிந்து விடுகிறது. நடிகர்களுக்கும் இது வசதியாக இருப்பதால் சிலர் இந்த பிரபலத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.ஆனால் மக்கள் தற்போது விழிப்புடன் இருப்பதால், திறமை இல்லையென்றால் இவர்களால் ஓர் அளவுக்கு மேல் போகமுடியாது.

Post a Comment