நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவிகிதம் கிட்டத்தட்ட எண்பதை தொட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது விழிப்புணர்வால் வந்த சதவிகீதமா, அல்லது பணம் பாதாளம் வரை பாய்ந்ததன் பலனா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் தெரியும்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் நாம் நல்லதையே நினைப்போம். தேர்தல் கமிஷனின் வேலை மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வகை செய்வதும், முறைகேடுகளை தடுப்பதும், பணம் சிலருக்கு சாதகமாகவும் மற்றவர்களுக்கு பாதகமாக இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான். அந்த வகையில் தேர்தல் கமிஷன் தன் கடமையை முடிந்த வரை முறையாகச் செய்துவிட்டது.
ஆனால் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய், போலியான இலவச வாக்குறுதிகளும், ஓட்டுக்கு விலை பேசுவதும் புதிய தலைவலியாக நம் நாட்டை தாக்க ஆரம்பித்திருகிறது. இங்கே இரண்டு விதமான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஓன்று, பணம் செலவு செய்தாலும் நாம் தோற்றுவிடுவோம் என்ற பயம் அரசியல்வாதிகளுக்கு வந்தால் அவர்கள் இந்த முயற்சியை கைவிட்டுவிடுவார்கள். அல்லது பணம் ஒரு தேர்தலில் அவர்களுக்கு வாக்குகளை கொடுத்தாலும், அடுத்து வரும் தேர்தல்களில் வாக்காளான் விழித்துக் கொண்டு, பணமும் வாங்கிக் கொண்டு ஓட்டையும் மாற்றிப்போட்டால், அதுவும் இவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். எனவே இந்த வியாதி சில தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடும் வாய்ப்பு. இரண்டாவது, வரதட்சணை மற்றும் ஆடம்பர திருமணங்களை போல் இதுவும் ஒரு வியாதியாக மற்றவர்களை தொற்றும் வாய்ப்பு. எப்படி இருந்தாலும், தேர்தல் கமிஷனும், இந்திய வாக்காளர்களும் விரைவில் இதற்கும் ஒரு முடிவு கட்டவேண்டும்.
இந்தியா ஒரு முழுமையான ஜனநாயக நாடு என்று சொல்ல விடாமல் தடுப்பது நம் நாட்டின் சில அரசியல் கட்சிகள் சில தனிப்பட்ட நபரின் குடும்ப சொத்தாகிப் போனதுதான். இன்று இந்தியாவில் கட்சிகள் பெருகிவருவதன் காரணமும் இதுதான். ஒரு கட்சியில் தொண்டனாக சேர்ந்து பின்னர் அந்த கட்சியின் தலைமை பொறுப்புக்கு வருவது தற்போது சாத்தியமில்லாத சூழ்நிலையாக உருவாக்கி இருப்பதால், பலர் தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இதை தடுக்க ஒரு வழி காண முடியாதா?
முடியும். நேர்மையான அரசியல்வாதிகளும் சமூக அக்கறை உள்ளவர்களும் முயன்றால் நிச்சயம் முடியும். நாட்டின் தேசிய மற்றும் மாநில கட்சிகளில், அவர்கள் வாங்கும் ஓட்டு சதவிகீதத்தின் அடிப்படையில் முதல் ஐந்து கட்சிகளை தேர்ந்தெடுத்து, அந்த கட்சியின் தேர்தலை தேர்தல் கமிஷனின் மேற்பார்வையிலோ அல்லது வேறு ஒரு பொது அமைப்பின் கீழோ வெளிப்படையாக நடத்த அரசியல் கட்சிகள் முன் வந்தால், ஜனநாயகம் அரசியல் கட்சிகளிலும் வேரூன்றும்.
தற்போது இவர்களை தட்டி கேட்க ஆள் இல்லாததால்தான், இவர்களே பொதுக்குழுவை கூடி `போட்டியின்றி ஏகமனதாக தேர்வு`என்று ஒரு அபத்தமான தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சர்வ வல்லமை பொருந்திய தலைவர் தேர்தலில் நிற்கும் போது, அவர் மீது அதிருப்தி இருந்தாலும், அவரை எதிர்த்து போட்டியிட யாராவது முன் வருவார்களா? அப்படியே ஒருவர் போட்டியிட்டு தோற்றுவிட்டால் அதன் பிறகு அவர் கதி? எனவே தற்போதைய முறையில் ஜனநாயகத்தின் எந்த அறிகுறியும் கட்சித் தேர்தலில் கிடையாது. ஒரு வாக்காளனுக்கு இருக்கும் சுதந்திரம் ஒரு கட்சித் தொண்டனுக்கு கிடையாது. தனது பிரதிநிதியின் (எம்எல்ஏ) செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால், தேர்தலில் எந்த வித பயமும் இல்லாமல் வாக்களித்து அவருக்கு பாடம் புகட்ட ஒரு வாக்காளனால் முடியும். ஆனால் கட்சித் தொண்டர்களால் அப்படி முடியுமா? இந்த சுதந்திரம்தான் கட்சித் தலைவர்களை சர்வாதிகாரியாக மாற்றிவிடுகிறது. எனவே இந்த அபத்தங்களுக்கும் நாம் விரைவில் முடிவு கட்டவேண்டும்.
ஒரு கட்சித் தலைவர் சர்வாதிகாரி ஆகாமல் தடுக்க அரசியல் கட்சிகளையும், தேர்தல் கமிஷனைப் போல், மும்மூர்த்திகளால் நிர்வகிக்கப்படும் ஒரு அமைப்பாக மாற்றமுடிந்தால் அதுவும் நல்லதுதான். கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டப்பின் கட்சியில் மிக அதிக செல்வாக்கு பெற்ற மற்ற இரு தலைவர்களையும் தேர்ந்தெடுப்பதன் மூலம் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதும் தெரிந்துவிடும். இந்த முறையில் கட்சித் தலைவரின் மகனும் தனது செல்வாக்கை நிருபிக்கலாம். ஒரு அரசியல் தலைவனுக்கு மகனாக பிறந்துவிட்டால் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா என்ன! அரசியல் ஆர்வமும் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் உண்மையிலேயே இவர்களுக்கு இருந்தால் தாராளமாக வரட்டும். ஆனால் `நானும் கட்சியில் செல்வாக்கு பெற்ற நபர்` என்பதை வாக்குகளின் மூலம் நிரூபிக்கட்டும். தகுதி இல்லாதவர்கள் திணிக்கப்பட்டால் அவர்கள் இந்த வாக்களிக்கும் குழுவால் நிராகரிக்கப்படலாம். எனவே வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு வராது.
தற்போது கட்சி தலைவரை ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள் யார், இவர்களை தேர்ந்தெடுப்பது யார், இவர்களுடைய பதவிக் காலம் எவ்வளவு என்பதெல்லாம் ஒரு குழப்பமான நடைமுறை. கட்சி எம்எல்ஏ, எம்பிக்கள், மாவட்ட மற்றும் நகர செயலாளர்கள் போன்றவர்களுக்கு இந்த உரிமையை அளிப்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் இவர்கள் கட்சித் தலைவரால் நியமிக்கப்பட்டவர்களாக இருந்தால் அதுவும் அபத்தமாக இருக்கும். எனவே ஜனநாயகத்தை பல மட்டங்களுக்கு கொண்டுபோக வேண்டும்.
மிக முக்கியமான தேவைப்படும் இன்னொரு சீர்திருத்தம் என்னவென்றால், கட்சித் தலைவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன் வரவில்லை என்றால், அவர் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்ற சட்டம். இதன் மூலம் தலைவரின் செயல்பாடுகளை பிடிக்காதவர்கள் அவரை எதிர்த்து நிற்க தயங்கினாலும், அவரும் அவருடைய ஆதரவாளர்களும் தலைவரை எதிர்த்து வாக்களித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தலாம். இதன் மூலம் கட்சியில் அந்த தலைவரின் உண்மையான செல்வாக்கும் தெரிய வரும், தலைவர்களுக்கும் பயம் வரலாம். அகங்காரம் பிடித்த தலைவர்களை உறுப்பினர்கள் மெளனமாக வாக்களித்து தோற்கடிக்கவும் இதன் மூலம் வாய்ப்பு வரும். ஆனால் இப்படிப்பட்ட தேர்தல் ஒரு பொது அமைப்பின் கீழ் ரகசிய வாக்கெடுப்பாக நடந்தால் மட்டுமே சாத்தியம்.
ஆனால் இந்த மாற்றங்கள் வரவேண்டுமே? நிச்சயம் சில கட்சித் தலைவர்கள் இப்படியெல்லாம் சட்டம் வருவதற்கு உடன்பட மாட்டார்கள். எனவே கருத்துக்களை பரப்புவோம். மாற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்.
ஆனால் இந்த மாற்றங்கள் வரவேண்டுமே? நிச்சயம் சில கட்சித் தலைவர்கள் இப்படியெல்லாம் சட்டம் வருவதற்கு உடன்பட மாட்டார்கள். எனவே கருத்துக்களை பரப்புவோம். மாற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்.
1 comments:
தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.html
Post a Comment