!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, April 8, 2011

அணு மின்சாரம்: நோகாமல் நுங்கு தின்ன முடியுமா?

இது ஒரு நேரம்கெட்ட பதிவு. அணு உலை விபத்திற்கு பிறகு, அதன் பாதிப்பை இன்னும் முழுதாக அலசமுடியாத நிலையில் , அணு உலைகளுக்கு ஆதரவாக யாரும் எழுத மாட்டார்கள்.  இருந்தாலும் கல்கியில் ஞாநி அவர்களின் அணுஉலைகள் பற்றிய `பிருமாண்டமான இலவசம் வருகிறது! உஷார் !!` என்ற கட்டுரையை படித்தவுடன் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தோன்றியது. எனவே எழுதிவிட்டேன். 
   

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு அணு மின் நிலையங்கள் விபத்தில் சிக்கிய பிறகு, இப்படி ஒரு ஆபத்தான பாதையில் நாம் போகவேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இன்றைய நமது தேவைக்காக பல தலைமுறைகளை சிக்கலில் விட்டுவிட்டு செல்ல நமக்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படுகிறது.

நியாயமான கேள்விதான் இது. ஆனால், ஒரு ஊதாரி தகப்பனாக நாம் நமது பரம்பரை சொத்தை காலி பண்ணிவிட்டு, பிள்ளைகளை நிதி ஆதாரம் இல்லாமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்லும் உரிமை மட்டும் நமக்கு இருக்கிறதா? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது? ஏனென்றால் நாம் தற்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலைமையை அப்படியே தொடர்ந்தால், எதிர்கால சந்ததியருக்கு எரிபொருள் இல்லாமல் மாட்டுவண்டியும், கைவிசிறியும் கூடவே பூமியை வாழ முடியாத அளவுக்கு வெப்பமாகவும் மாற்றிவிட்டுப் போகப்போகிறோம்.

இது தொடர்பான சமீபத்திய தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் இணையங்களில் படித்தால் குழப்பமும், தலைவலியும்தான் மிஞ்சுகிறது. அணு உலைகள் தேவையில்லை, அது ஆபத்தானது என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை. ஆனால் அதை புறக்கணிக்க கூடிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோமா என்பதுதான் தற்போதைய கேள்வி. இந்த கேள்விக்கு சரியான பதில் யாரிடமும் இல்லை. எல்லோரும் மரபுசாரா எரிசக்தியை நாம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்களே தவிர அது எந்த அளவுக்கு நமது எரிபொருள் பிரச்சினையை தீர்க்கும் என்று கணிப்பதில்தான் முரண்படுகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, மற்ற நாடுகளில் அணு மின்சாரத்தின் பயன்பாடு/நிலைப்பாடு என்ன என்று நான் ஆராய்ந்திருக்கிறேன். அப்போதும் இதே குழப்பம்தான். ஒவ்வொரு துறையினரும் பல புள்ளிவிவரங்களை காட்டி வாதாடினால் எதை நம்புவது? புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் உண்மையை சொன்னாலும் சில சமயம் அதை வைத்து நாம் மக்களை குழப்பவும் முடியும். உண்மையை தெரிந்து கொள்வது அதை படிப்பவரின் திறமையை பொறுத்தது. பல துறைகளை ஆராய்ந்து அதில் தெளிவு பெறுவது என்பதும் சாத்தியமில்லாத ஓன்று. நமக்கு ஆர்வம் உள்ள துறையில் கொஞ்சம் கூடுதலாக கவனிப்போம். மற்ற துறைகளில் பொது அறிவின் அடிபடையில் முடிவெடுப்போம்.

நடைமுறையில் நாம் எப்படி முடிவெடுப்போம் என்பதை பார்ப்போம். நாம் ஒரு பாதையில் போய்கொண்டிருகிறோம். வழியில் ஒரு சிறிய ஆறு வருகிறது. அந்த ஆற்றில் யாரும் போகவில்லை என்றால் நாம் அதில் இறங்க தயங்குவோம். இந்த ஆற்றின் ஆழம் எவ்வளவு? இதில் நடந்து போக முடியுமா? இந்த ஆற்றில் முதலை இருக்கிறதா? என்பது போன்ற கேள்விக்கெல்லாம் பதில் கிடைத்த பிறகுதான் நாம் அந்த ஆற்றில் கால் வைப்போம். ஆனால் அதே ஆற்றில், பலர் நமக்கு முன்னால் இறங்கி நடந்து போய் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சிந்தனைக்கே இடம் கொடுக்காமல் நீங்களும் ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பிப்பீர்கள். இதுதானே மனிதர்கள் முடிவெடுக்கும் முறை?


அணு உலைகள் குறித்த தகவல்களுக்காக இணையத்தை ஆராய்ந்தபோது,  பல வளர்ந்த, ஜனநாயக முதிர்ச்சி பெற்ற நாடுகளில் கூட அணுமின் நிலையங்கள் இருகின்றன என்பதையும், மேலும் இந்தியா மற்றுமின்றி பல நாடுகள் புதிய அணுமின் நிலையங்களை ஆரம்பிக்கப் போகின்றன என்பதையும் படித்தால், அணுமின்நிலையங்கள் தற்போதைக்கு புறக்கணிக்க முடியாத ஓன்று என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த அணுஉலைகளை வர்க்க வேறுபாடுகளே இல்லாமல் முதலாளித்தத்துவ மேலைநாடுகளும், கம்யுனிஸ மயக்கம் கொண்ட நாடுகளும் நடத்துவதன் மூலம் அதன் அவசியத்தை நாம் உணரமுடியும். 



அதிலும் அணுகுண்டின் கோர விளைவுகளை சந்தித்த ஒரே நாடான ஜப்பானிலேயே ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட அணுஉலைகள் செயல்பாட்டில் இருப்பதையும் மேலும் சில கட்டமைப்பில் இருப்பதையும் படித்தவுடன், அதிக சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் அந்த ஆராய்ச்சியை நிறுத்திக்கொண்டேன். இந்த செய்தியை எல்லாம் படித்த பிறகு, உண்மையில் இந்த அணு உலை எதிர்ப்பாளர்கள் பிரசங்கம் பண்ணவில்லை, மாறாக இவர்கள் செய்வது அதிகப்பிரசங்கித்தனம் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது. அதே சமயம் இவர்களின் இந்த எதிர்ப்பு சமூக அக்கறையில்தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அணுகுண்டின் கொடுமையை நேரடியாக அனுபவித்தவர்களே அதில் உள்ள ஆபத்தை எல்லாம் உணர்ந்தும் அணுஉலைகளை நடத்துகிறார்கள் என்றால், தற்போதைக்கு நம்மால் அதை புறக்கணிக்க முடியாது என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள்.

ஜப்பானியர்கள் திறமைசாலிகள், உழைப்பாளிகள், ஒழுக்கமானவர்கள் என்று (ஞாநி உட்பட) பலர் சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள். அப்படி இருக்கையில் அவர்களே அணுஉலைகளில் முதலீடு செய்திருகிறார்கள் என்றால் அதற்கான வலுவான காரணங்கள் இருக்குமல்லவா? தற்போதைய விபத்திற்கு பின் ஜப்பானியர்கள் அதை கைவிடுவார்கள் என்றாவது சொல்லமுடியுமா? அதற்கான வாய்ப்பும் குறைவு. இந்த விபத்தில் கிடைத்த பாடங்களை கவனத்தில் கொண்டு குறைகளை சரி செய்வார்கள். அவ்வளவுதான். உலக நாடுகளை பொறுத்த வரையில் 30 சதவிகீததிற்கும் மேல் அணுமின்சாரத்தை சார்ந்திருப்பவர்கள் அதை அதிகரிக்க மாட்டார்கள். மற்றவர்கள் அதை தொடரத்தான் செய்வார்கள்.

இங்கே இவர்கள் இன்னொரு வாதத்தை முன்வைக்கலாம். இந்த நாடுகளில் மின் உற்பத்திக்கு ஆதாரம் குறைவாக இருப்பதால் அவர்கள் அணுமின்சாரத்தை நம்புகிறார்கள். ஆனால் இந்தியா சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலம் நிறைய உற்பத்தி செய்யலாம் என்று சொல்வார்கள். தற்போதைக்கு இப்படி ஒரு வாதத்தை முன் வைக்கலாமே தவிர நடைமுறை சாத்தியம் குறைவு. இன்று உலகம் சுருங்கிவிட்டது. நமக்கு என்ன தேவை என்பதைவிட இந்த உலகத்துக்கு என்ன தேவை என்று ஆராய்ந்து தான் பல நாடுகள் உற்பத்தி செய்கின்றன. எனவே பல நாடுகள் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கான ஆராய்ச்சியில் இறங்கியிருக்கின்றன. அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் அந்த சாதனங்கள் இந்திய மார்கெட்டில் குவிந்திருக்கும். கார், கம்ப்யூட்டர், செல்போன் என்று இந்திய சந்தையை குறிவைப்பவர்கள் இதையும் செய்திருக்க மாட்டார்களா என்ன? எனவே இந்தியா இந்த துறையில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்றோ அல்லது செலவு செய்யவில்லை என்றோ புகார் கூறுவது அபத்தமானது. இது நமது தேவை மட்டுமில்லை, உலகத்தின் தேவையும்தான். 

உண்மையில் சூரிய மற்றும் காற்றாலை சக்தி அபிரிதமாக இருந்தாலும், அதை எரிசக்தியாக மாற்ற செலவினம் அதிகம். எதிர்காலத்தில் தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்படலாம், மேலும் எரிபொருள் பற்றாகுறை அதிகரித்து அதன் கட்டணம் அதிகரிக்கும் போது இதுவும் அதனுடன் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கையிலும், அரசின் சலுகைகளினாலும் இந்த துறை வளர்ந்து கொண்டிருகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலைக்கு நமது (உலக) எரிபொருள் தேவையில் இத்துறைகளின் பங்களிப்பு 10 சத்விகீததிற்கும் குறைவாகவே இருக்கிறது. எனவே முடிந்த அளவு மானியங்கள் மூலம் இதன் வளர்ச்சியை நாம் ஊக்குவித்தாலும், இதன் மீது மட்டும் நம்பிக்கை வைத்து அணு மின்சாரத்தை புறக்கணிப்பது தற்போதைக்கு ஆபத்தானது. 

இங்கே இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க பல கட்சிகள் வெளிப்படையாக போராட்டம் நடத்தின. ஆனால் தற்போதைய தேர்தலில் வேட்பாளர் பட்டியலை பாருங்கள், அவர்கள் எத்தனை சதவிகிதம் ஒதுக்கி இருக்கிறார்கள் என்று! கம்யுனிஸ்ட்டுகள் உண்மையான நோக்கத்தோடு தான் ஆதரித்திருப்பார்கள். ஆனால் அவர்களும் வேட்பாளர் தேர்வில் இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தியிருக்க மாட்டார்கள். அரசியலை கவனிக்கும் அனைவருக்கும் இதற்கான காரணம் தெரியும். நல்ல நோக்கங்களை பின்பற்ற கூட நமக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. எதிர் அணியினர் `பல` தகுதிகளோடு வேட்பாளரை நிறுத்தும்போது நாமும் அந்த போட்டிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு வேட்பாளரை நிறுத்தினால்தான் நம்முடைய வெற்றிவாய்ப்பும் அதிகரிக்கும். எனவே பேச்சளவில் இது நடைமுறைக்கு வராது.

அணு உலைகளுக்கும் இதே தியரிதான். அணு உலைகளை நம்மால் தற்போதைக்கு புறக்கணிக்க முடியாது. அப்படியே அதை கைவிடுவது என்று முடிவு செய்தாலும் உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும் ஒப்புகொள்ளும் வகையில் சட்டம் வந்தால்தான் உண்டு. நாம் மட்டும் அதை புறக்கணிக்க, மற்ற நாடுகள் அதை புறக்கணிக்காவிட்டால் அதுவும் நமக்கு தலைவலிதான். மற்ற நாடுகள் அணுமின்சாரம் மூலம் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை தொழில்துறையினருக்கு வழங்கும். எனவே அவர்களுக்கு உற்பத்தி செலவு குறையும். ஆனால் இந்தியாவால் முடியாது. அப்போது நம்நாட்டு பொருகளின் விலை அதிகமாக இருந்து அது நமக்கு ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதற்கெல்லாம் என்ன தீர்வு?

தேர்தலில் படித்தவர்களுக்கு வாக்களியுங்கள் என்று எதற்காக சொல்கிறோம்? அவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என்பதால்தானே? முழுமையான கல்வியறிவு பெற்ற, ஆரோக்கியமான ஜனநாயகம் கொண்ட பல நாடுகளில் அணுமின் நிலையங்கள் இருகின்றன. ஒரு அரசாங்கம் தவறான பாதையில் போனாலும், அடுத்து வரும் அரசுகள் அதை சரிசெய்யக் கூடிய ஆரோக்கியமான சூழ்நிலை அங்கு இருக்கிறது. எனவே இந்த நாடுகள் ஆபத்தான பாதையை தேர்ந்தெடுபதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. வேறு வழி இல்லாத சூழ்நிலைதான் இந்த பாதையை தேர்ந்தெடுக்க வைக்கிறது.

தற்போதைய பூகம்பத்திற்கு பிறகு `ஜப்பான் டைம்ஸ்` பத்திரிக்கையை படித்த போது சில கட்டுரைகளில் கவனித்த வாக்கியங்கள் இவை:

  • And since there doesn't appear to be an alternative for the time being, abandoning atomic energy altogether may be unrealistic.
  • Renewable energy sources, such as solar or wind power, have huge potential, but their generation costs are high and the technologies have not developed sufficiently enough to maintain stable output.
  • But while public concern escalates over the use of atomic energy, it is uncertain how far the nation's  [japan] reliance on atomic power will be scaled back, given the lack of environmentally safe equivalents and fears of power shortages hitting the economically vital Kanto region.
  • "If nuclear power generation becomes really difficult, even if we take measures to enhance the safety of reactors, we may have to depend more on thermal power. . . . But that option would mean going against efforts to fight global warming," the official said.
  • "So in that case, we may face the ultimate dilemma of whether we allow power shortages or cause global warming," he added.
  • If East Asia continues business as usual, its air pollution and CO2 emissions will double in next two decades.
  • Asia is at the epicenter of both nuclear power expansion and vulnerability to climate change. This is a key reason is why governments in the region, especially China, made commitments to invest in nuclear power. 

நம்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரும் உத்தமர்கள் என்றோ அல்லது அவர்கள் தவறான முடிவே எடுக்கமாட்டார்கள் என்றோ சொல்லமுடியாது. சில சமயம் அவர்களுடைய கணக்கும் தவறாகலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பல நாடுகள் தவறான பாதையில் போகின்றன என்று சொல்வது அபத்தத்தின் உச்சகட்டம். மாவோயிஸ்டுகளுக்கு ப.சிதம்பரம் சொன்னார்: `அரசின் கொள்கைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தேர்தலில் பங்கு கொண்டு அதிகாரத்தை கைப்பற்றுங்கள். அதன்பின் உங்களுக்கு எது சரியான பாதையாக தெரிகிறதோ அந்த பாதையில் நாட்டை வழி நடத்தி செல்லுங்கள்.`       அதே ஆலோசனையைத்தான் நானும் இந்த அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சொல்வேன்.

எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. அப்படி இருந்தால் வைகோவைப்போல் நாமும் ஏமாளியாகத்தான் இருப்போம். நம்பிக்கை ஒருபக்கமும் முன்னெச்சரிக்கையை மறுபக்கமாகவும் கொண்டதுதான் வாழ்க்கை. எனவே மாற்று ஏற்பாட்டை நாம் கைவசம் தயாராக வைத்திருக்க வேண்டும்.நாளைய எரிபொருள் சந்தை எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில், தற்போதைய சூழ்நிலையை அப்படியே தொடர்வதும் எதிர்கால சந்ததியருக்கு நாம் செய்யும் துரோகம் என்ற நிலையில், 20 சதவிகிதம் அளவுக்காவது நாமும் பிற நாடுகளை போல் அணுமின்சாரத்தை சார்ந்து இருப்பது தவறில்லை என்பதுதான் என் கருத்து.  
          
      

0 comments:

Post a Comment