ஒரு காலத்தில் சினிமா என் டென்ஷனை குறைக்கும் மருந்தாக இருந்தது. என்னை டெண்ஷனாக்குவதில் சாப்பாட்டுக்கும் முக்கிய பங்கிருப்பதால், இது உச்சக்கட்டத்தை அடையும் போது அதை தணிக்க நான் செய்வது இரண்டுதான். ஓன்று, அன்று ஓட்டலுக்கு போய் வயிறு வெடிக்கும் அளவுக்கு திருப்தியாய் சாப்பிடுவது. இரண்டு, நல்ல சினிமா பார்ப்பது.
கடலூரில் நான் மினி லைப்ரரி வைத்திருந்ததால், முக்கியமான வார இதழ்கள் அனைத்தும் வாங்கிவிடுவேன். எனவே விமர்ச்சனம் படித்துவிட்டுதான் பெரும்பாலும் போவேன். இருந்தாலும் சில சமயம் திடீர் முடிவோடும் போவதுண்டு. கடலூரில் அனைத்து தியேட்டரும் பஸ் ஸ்டான்ட் சுற்றியே இருப்பதால், வண்டியில் அப்படியே எல்லா தியேட்டரையும் சுற்றி வருவேன். கூட்டம் அதிகமாக இருந்தால் அது நல்ல படம் என்ற தியரியை நம்பிப் போவேன். அதிலும் ஏமாறுவது உண்டு. சில சமயம் என் சிந்தனையும், ரசனையும் மக்களோடு ஒத்துப் போகாது.
