!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, July 2, 2012

மௌனம்தான் பேரமோ?

இந்தியாவிற்கு இன்று தேவைப்படும் முக்கிய சீர்திருத்தங்கள் எவை என்று கேட்டால் நான் சொல்ல விரும்புவது இந்த மூன்றைத்தான்.

1) கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு 2) தேர்தல் செலவுக்கு அரசே நிதி ஒதுக்குவது 3) நீதித்துறை சீர்திருத்தம்.

முதல் இரண்டு விஷயங்கள் பற்றி நான் பதிவுகள் போட்டிருக்கிறேன். இந்த வாரம் நீதித்துறை. நீதித்துறை என்றாலும் இங்கும் பல பிரிவுகள் வரும். இங்கே இந்த வாய்தா ஊழல் மட்டும்.  

முதலில் ஒரு கதை. ஒருவன் எல்லையை தாண்டி ஏதோ கடத்துவதாக ஒரு அதிகாரிக்கு சந்தேகம். சைக்கிளில் நிறைய சரக்குகளை ஏற்றிவரும் அந்த நபரை பல முறை சோதித்து பார்த்துவிட்டார். ஒன்றும் சிக்கவில்லை.

ரிடைர்ட் ஆன பிறகு அந்த நபரிடமே, `நீ ஏதோ கடத்தியது தெரியும். என்ன அது? எனக் கேட்க, `சைக்கிள்` என்றான் அவன். சில இடங்களில் மோசடி என்பது இப்படித்தான், நாம் கொஞ்சமும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும். இந்திய நீதிமன்றங்களில் ஊழல் எப்படி என்று ஆராய்ந்தால் அது இந்த வகைதான்.

மற்ற துறைகளில் ஊழல் செய்தால் அது மேல்மட்டம் வரை தெரியும். முக்கியமாக அவர்களின் ஆசியுடனே நடக்கும். எனவே அது கவலை இல்லை. அப்படியும் சில வில்லங்கம் வீராசாமிகள் இருந்தால், அவர்களையும் `கவனித்து`விடலாம். நீதித்துறை அப்படி இல்லை. இங்கே பெரும்பாலான வழக்குகள் அப்பீலுக்கு போகின்றன.

ஐகோர்ட்டுக்கு வந்துவிட்ட நீதிபதிகளும் பெயரை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். தடம் புரளும் தீர்ப்புகள் இங்கே சரி செய்யப்படும். ஒருவேளை ஐகோர்ட்டிலும் சிலர் விலை போனாலும், சுப்ரீம் கோர்ட் அதை சரி செய்யும். எனவே தீர்ப்புகளில் அப்பட்டமாக குற்றவாளிகளுக்கு சாதகம் செய்யும் வாய்ப்பு குறைவு.

அப்புறம் எப்படித்தான் சம்பாதிப்பது?. வழி இருக்கிறது. நம் ஆட்கள் எதற்கும் ஒரு வழியை கண்டுபிடிப்பவர்கள் ஆயிற்றே. இங்கே பெயில் மற்றும் வாய்தா என்ற இரண்டு விஷயங்களில் சட்டங்கள் படு அபத்தமாக இருக்கிறது. குற்றவாளிகளும் வழக்கை இழுப்பதுதான்  புத்திசாலித்தனம் என நினைகிறார்கள். இந்த ஓட்டையை  பயன்படுத்திக்கொண்டு  நீதிபதிகள் இங்கேதான் புகுந்து விளையாடுகிறார்கள். 

சமீபத்தில், கர்நாடகாவில், பெயில் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் ஒரு நீதிபதி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது நல்ல செய்தி என்றாலும், நீதித் துறையில் இது ஒரு சர்வசாதாரணமான நிகழ்வு. கடைக்கு போய் கத்திரிக்காய் வாங்கும் அளவுக்கு ஜெயிலில் இது சாதாரண விஷயமாக பார்க்கபடுகிறது.

A1 பெயிலில் போய்விடுவார். A3 உள்ளே புலம்பிக்கொண்டிருப்பார்.அவருக்கு கிடைக்கும் பெயில் இவருக்கு ஏன்  கிடைப்பதில்லை?  காரணம் பணம்.

ஒரு பிரபலம் குண்டர் சட்டத்தில் உள்ளே வந்தார். ஐகோர்ட்டில் அதை உடைக்க கொஞ்சம் தாமதமாகியது. காரணம் கேட்டேன். `இப்ப இருக்கிறவர் வாங்க மாட்டார். அடுத்து வருபவர் வாங்குவார்`என்று வக்கீல் சொன்னாராம். எனவே கொஞ்சம் காத்திருந்து அந்த பெயிலை `வாங்கி`க்கொண்டு போனார்.

ஆனால் இந்த பெயிலில் கூட அதிகம் தேறாது என நினைக்கிறன். பெயில் என்பது சட்டபூர்வமான உரிமை. அதை இவர் மறுத்தால் இவருக்கு மேலே உள்ளவர் கொடுத்துவிடுவார். எனவே இதைவிட நல்ல பாதுகாப்பான வழி, வழக்கை இழுக்க குற்றவாளிகளுக்கு உதவுவதுதான். இங்கே எந்த ஆபத்தும் இல்லை. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் வழக்கை இழுக்கிறார்கள் என்று பழியை அவர்கள் மீது போட்டுவிடலாம். ஆனால் நிஜம் அப்படி அல்ல.

குற்றவாளிகள் சட்டத்தை ஏமாற்ற என்ன முயற்சி எடுத்தாலும் அதை முறியடிக்க வேண்டியது சட்டத்தின் சார்பாக இருக்க வேண்டியவர்களின் கடமையல்லவா? ஆனால் அவர்கள் அதை செய்வதில்லை.

ஒரு படத்தில் சில ரவுடிகள் வடிவேலுவை அடிப்பார்கள். இவர் ஒன்று, இரண்டு என எண்ண ஆரம்பிப்பார். அவர்கள் அடிக்க அடிக்க, மூன்று, நாலு என சொல்லிக் கொண்டே இருப்பார். மூன்றுக்கு பிறகு அடிவாங்கும் நபருக்கு கோபம் வந்து திருப்பி அடைக்க வேண்டும். அதுதானே (சினிமா) லாஜிக்?

நமது நீதிபதிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். நீங்கள் எத்தனை முறை வாய்தா கேட்டாலும் அவர்களுக்கு கோபம் வராது.  வடிவேலு செய்தது காமெடி என்றால், நீதிபதிகள் செய்வது ஊழல். சத்தம் போடாமல் இருக்கவே இவர்கள் `கவனிக்க`ப்படுகிறார்கள். இதுதான் ரிஸ்கே இல்லாத ஊழல்.

இந்தியாவில் வழக்குகள் அதிகமாக இருக்கிறது, நீதிபதிகள் பற்றாக்குறை இருக்கிறது என்பது உண்மையானாலும், நீதிபதிகளின் இந்த ஊழல்தான் வழக்குகள் தேங்குவதன் உண்மையான காரணம்.

பெங்களூரில் நடக்கும் அம்மாவின் வழக்கில் `நீதிபதி அப்படிப்பட்டவர், அரசு வக்கீல் இப்படிப்பட்டவர்` என செய்தி பரப்பப்படுகிறது. அவர்களும் அவ்வப்போது கோபப்படுவதாக காட்டிக் கொள்கிறார்கள்.கவனிக்கவும்... காட்டிக்கொள்கிறார்கள்.அனேகமாக அடுத்த வருடமும் இவர்கள் கோபப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.நாமும் அதை படித்துக்கொண்டே இருப்போம்.  இதையெல்லாம் படிக்கும்போது ஒருவேளை இதுவும் `சைக்கிள்` கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. 

பெரிய இடத்து விஷயத்தை விட்டுத்தள்ளுங்கள். அங்கே எல்லோருக்கும் கொஞ்சம் கை நடுங்கும். ஆனால் கீழ்மட்டத்தில் கூட இவர்கள் தங்கள் வீரத்தை காட்ட தயாராக இல்லை. இதற்கு என்ன அர்த்தம்? `தீர்ப்பில் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் தீர்ப்பே வராமல் வழக்கை நீ இழுக்க, அதை நான் கோபப்படாமல் வேடிக்கை பார்க்கமுடியும். அதற்கு என்ன விலை?` என்பதுதான் இவர்களின் பேரமாக இருக்கும்.

இங்கே இன்னொரு கொடுமையும் இருக்கிறது. பல சீனியர் வக்கீல்கள் நீதிபதிகளை மதிப்பதில்லையாம். `ஏன் அடிக்கடி வாய்தா?` என கேட்டால், `நீ வக்கீலா இருந்தபோது ரொம்ப யோக்கியமா? என திருப்பி கேட்பார்கள். வக்கீல்கள் நீதிபதிகளாக ஆவதால் இந்த தலைவலி வேறு. இந்த சிஸ்டத்துக்கும் ஒரு வழி கண்டாக வேண்டும்.         

இது நல்லா இருக்கே

செல்போனில் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவதாக ஒரு டிரைவர் மீது மூன்று கம்ப்ளைன்ட் வந்தால் அவர் பணிநீக்கம் செய்யப்படுவாராம். அதேபோல் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்தால் அவர் பணிநீக்கம் செய்யபடுவது மட்டுமின்றி அவருடைய கல்வித்தகுதியும் ரத்து செய்யப்படுமாம். அரசு அறிவித்திருக்கிறது. இப்படி இங்கே கடிவாளத்தை இறுக்குபவர்கள், இதேபோன்ற கடுமையை நீதித்துறையிலும் காட்டலாமே?

ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். ஒருவேளை அரசே விழித்துக்கொண்டு (தற்போதைய ஆட்சியில் அதற்கு சாத்தியமே இல்லை) மூன்றுக்கும் மேற்பட்ட குற்றங்கள் செய்தால்/ குறிப்பிட்ட அளவுக்குமேல் வாய்தா கேட்டால்,அவர்களின் பெயில் ரத்து செய்யப்படும் (சட்டம் இருக்காமே)  என விதிமுறை கொண்டுவந்தால்,இதை கடுமையாக எதிர்ப்பது  போலீஸ், வக்கீல் மற்றும் நீதிபதிகளாகத்தான் இருக்கும்.

2 comments:

ராஜ நடராஜன் said...

//இந்தியாவில் வழக்குகள் அதிகமாக இருக்கிறது, நீதிபதிகள் பற்றாக்குறை இருக்கிறது என்பது உண்மையானாலும், நீதிபதிகளின் இந்த ஊழல்தான் வழக்குகள் தேங்குவதன் உண்மையான காரணம்.//

நெத்தியடி!

ஜோதிஜி திருப்பூர் said...

மூன்று பதிவுகளை ஓரே மூச்சில் படிக்க முடிந்தது.

Post a Comment