!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Sunday, June 24, 2012

இது விஷப் பரிட்சை

இந்த வாரம் `புதிய தலைமுறை`டிவியில் விவாதம் ஒன்றை கவனித்தேன். தமிழருவி மணியன் சில கருத்துக்களை முன் வைத்தார். பிரதமர், முதல்வர் போன்றவர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்.

நல்ல கருத்து. ஆனால் எல்லோருக்கும் பொருந்துமா? ஒரே மொழி ஒரு நாட்டை இணைக்கவேண்டும். அப்படிப்பட்ட நாடுகளில்தான் இது நல்ல முறையாக இருக்கும். இந்தியாவிற்கு இது தலைவலிதான்.

இங்கே மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே மாநில அளவில் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், போட்டி போடுபவர்கள் அனைவரும் ஒரே மொழியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்தியா என்ற பல மொழிகளை கொண்ட நாட்டில் பிரதமர் பதவிக்கு அப்படி ஒரு நிலை சாத்தியமில்லை. இந்தி பேசுபவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், ஒரு கட்சி இந்தி பேசுபவரை வேட்பாளராக நிறுத்தினால், மற்ற கட்சிகளுக்கும் அதையே பின்தொடர வேண்டியதுதான். வேறு வழியில்லை.

இப்போதே பல தொகுதிகளில் ஒரே ஜாதியை சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தும் போக்கு இருக்கிறது. வேறு ஜாதி வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்பதால் இப்படி. தேசிய அளவிலும் இதே நிலைதான் வரும்.

இன்று மக்கள் ஜாதி உணர்வில் வாக்களிக்கிறார்கள், இந்த போக்கு காலபோக்கில் மாறும் என்றும் சொல்லமுடியாது. இந்த போக்கு மாறினாலும் சில யதார்த்தங்கள் மாறாது.

மக்களை பொறுத்தவரையில் ஒருவனை நல்லவன் /கெட்டவன் என தீர்மானிப்பது, அந்த நபர் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறான், அந்த நபரை பற்றி நமக்கு என்ன தெரியும் என்பதை பொறுத்ததுதான்.

இதே விவாதத்தில் சங்மா நல்ல வேட்பாளர் என்றும் தமிழருவி மணியன் சொன்னார். சாதாரண மக்களுக்கு அதெல்லாம் தெரியுமா? வடகிழக்கு மாநிலங்களில் மக்களால் நல்ல தலைவர் என்று மதிக்கபடுபவர் தமிழகத்தில் குறைந்த ஓட்டு வாங்கலாம். நல்ல தென் இந்திய தலைவர் வட மாநிலங்களில் செல்லாக்காசாக இருக்கலாம். இதுதான் யதார்த்தம். இதில் மக்களை குறை சொல்வதற்கில்லை.

இப்படி இந்தி தெரியாதவர்கள் தேசிய அளவில் பிரபலமாக முடியாத நிலையில், மக்களே பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலை வந்தால், இந்தி தெரியாதவர்கள் பிரதமராகும் வாய்ப்பே வராது. ஒரு தமிழன் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பை மறந்துவிட வேண்டியதுதான். எனவே வேண்டாம் இந்த விஷப் பரீட்சை.

யார் புத்திசாலி?

`நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி` நிகழ்ச்சி அவ்வப்போது பார்க்க நேரிடுகிறது. போட்டியாளர் அனைவரும் ஒரு மாதமாக GK புக் சகிதமாக இருந்ததாக சொல்கின்றனர். மக்களை ஏதாவது ஒரு வகையில் படிக்க தூண்டுவது நல்லதுதான். ஆனால் அதற்காக இப்படியா?

இந்த ஹாட் சீட்டுக்கு போக அவர்கள் பல தடைகளை தாண்டி இருந்தாலும், ஜெயிப்பவர் அதிர்ஷ்டசாலியே தவிர, புத்திசாலி இல்லை.

இதே போட்டியில் சன்பீஸ்ட், விஜய் டிவி முதலாளிகள் /நிர்வாகிகள் மற்றும் சூர்யா போட்டியிட்டால் அவர்களால் ஜெயிக்க முடியுமா? நிச்சயம் சில படிகளை கூட தாண்டமாட்டார்கள். காரணம், பலவிதமான தகவல்களை மூளையில் ஏற்றிக்கொண்டு, அதை குப்பை கூடை ஆக்காமல், தங்களுக்கு பிடித்த துறையில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றி பெற்றவர்கள் இவர்கள். ஆனால் ஊருக்கு செய்யும் உபதேசமோ வேறு மாதிரி!

விஜய் டிவியில் பல நல்ல நிகழ்சிகள் வந்தாலும், இது போன்ற களைகளும் வந்துவிடுகிறது. ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்தி அதில் காசு பார்த்தால் கோவம் வராது. ஆனால் இவர்கள் பணம் சம்பாரிக்க மக்களை முட்டாளாக்கும் இந்த நிகழ்ச்சியை பற்றி என்ன சொல்வது? இது போன்ற நிகழ்சிகளை தடை செய்ய யாராவது வழக்கு தொடர்ந்தால் நன்றாக இருக்கும். வக்கீல் பீஸ் கூட நான் கொஞ்சம் கொடுப்பேன். (ரொம்ப கேட்கக்கூடாது.)

பொதுவான நீதி மட்டும் இங்கே. அங்கே 10 அடி இங்கே 10 அடி என தோண்டி (எல்லாவற்றையும் படித்து) நேரத்தை வீணாக்காமல் ஒரே இடமாக தோண்டுங்கள் தண்ணீர் வரும். இது ஒரு விவசாயிக்கு கிடைத்த உபதேசம். எல்லோருக்கும் பொருந்தும்.

ஜூவி

சில வாரங்களுக்கு முன் ஜூவியில் சின்ன கட்டத்தில் ஒரு செய்தி வந்தது. `உங்களை சுற்றி நடக்கும் ஊழல்களை, குற்றங்களை சொல்லுங்கள்` என கேட்டுக் கொண்டு, `ரகசியம் காக்கப்படும்` என வாக்குறுதியும் கொடுத்தார்கள். இந்த விளம்பரம் தொடர்ந்து வருவதில்லை. அவ்வப்போது வருகிறது.

நானும் இதே கருத்தில் ஒரு பதிவு எழுதி இருந்ததால், தொடர்ந்து ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன். இதுவரை ஒன்றும் காணோம். முதல் காரணம், பணமில்லாமல் எந்த பிணமும் வாயைத் திறக்காது. அதை யாரும் புரிந்து கொள்வதில்லை.

இரண்டாவது காரணம், ஜூவிக்கே இதில் ஆர்வம் இருக்காது என்று நினைக்கிறன். இருந்திருந்தால் இந்த விளம்பரம் தொடர்ந்து வந்திருக்கும். தானே புயலுக்கு நிதி (மற்றும் நிறைய பக்கம்) வழங்கியவர்கள் இதற்கும் அதேபோல் செய்திருப்பார்கள்.

ஊழல் செய்திகளை யாரவது வெளிபடுத்தினால், அதை வழிமொழியத்தான் இவர்கள் தயாராக இருக்கிறார்களே தவிர, அதில் நாம்தான் முதலில் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய பத்திரிகைகளுக்கு இல்லை.

வெற்றிபடியில் ஏற ஏற இன்றைய பத்திரிக்கைகளும் சில இடங்களில் தடம் புரண்டு `காம்பிரமைஸ்` ஆகி இருக்கிறார்கள். எனவே பெரிய இடத்து வம்புகளை விலைக்கு வாங்கினால், அது இவர்களுக்கே தலைவலியில் போய் முடியும். எனவே இது அவர்களின் சம்பிரதாய முயற்சி என தெரிந்தாலும், கீழ்மட்ட மோசடிகளாவ்து வெளியே வரும் என பார்த்தால் அதுவும் காணோம்.

இன்றைய செய்தியை பாருங்கள். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் 19 ஆண்டுகளாக வாடகை, மின் கட்டணம் செலுத்தாமல் ஒருவர் ஏமாற்றி இருக்கிறார். நிச்சயம் இந்த மோசடி அக்கம் பக்கம் என சில பேருக்காவது தெரிந்து இருக்கும். ஆனால் யாரும் வாயை திறக்கவில்லை. அந்த நபருக்கு கெட்ட நேரம் வர, செய்தி எப்படியோ வெளியே வந்துவிட்டது.

இதே செய்தி 10 வருடம் முன் வந்திருந்தால் 9 ஆண்டு வாடகை அரசுக்கு மிச்சமாகி இருக்கும்.

பொதுவாக முறைகேடுகளை செய்வதே ஆளும்வர்க்கம்தான் என்ற நிலையில் எங்கே புகார் செய்வது என்ற குழப்பத்தில் மக்கள். இதுபோல் பத்திரிகையில் செய்தியாக வந்துவிட்டால், நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு அரசு தள்ளப்படும். எனவே இதுதான் ஊழலை ஒழிக்க நாம் எடுக்கக் கூடிய யதார்த்த நிலை.

அதிலும் மேலிடத்து ஊழல்களை மக்கள் துணிச்சலாக சொன்னாலும், பத்திரிகைகள் அதை தொடாது. எனவே மேலே வந்த செய்தியைப் போன்ற கீழ்மட்ட ஊழல்களையாவது வெளிபடுத்தலாம். அதைத்தான் தற்போது மக்கள் செய்யவேண்டும். செய்வார்களா?

0 comments:

Post a Comment