!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Sunday, June 17, 2012

தனியாருக்கு லாபம். ஆனால் அரசுக்கு நஷ்டமில்லை

கடந்த பதிவில் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை மற்றும் பெட்ரோல் விலை உயர்வுக்கு, பிரணாப் முகர்ஜி பிரமோஷன் இல்லாமல் மந்தநிலைக்கு வந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கும் என்று எழுதி இருந்தேன். இப்போது அந்த வியாதி என்னையும் தாக்கிவிட்டது.

எப்படியாவது வாரம் பதிவு போடவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் குறைந்துவிட்டது. தீர்வுகள் இல்லாமல், இலக்குகள் இல்லாமல் ஒரு வாழ்கை என்ற நிலையில், டிப்ரசிவ் நோய் மீண்டும் தாக்கி இருக்கிறது. அத்துடன் சனிபெயர்ச்சி என்று சொல்வார்களே அதேபோல் அவ்வப்போது இடபெயர்ச்சி என்பதும் என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இது வி ஆர் எஸ்

இந்த ஜனாதிபதிக்கான போட்டியில் பல காமெடிகள். இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டது. மக்களும் அரசியல்கட்சிகளும் பொங்கினார்கள். பாரத் பந்த கூட நடந்தது. ஆனால் அடுத்த ஜனாதிபதி யார் என்ற பரபரப்பில், அது பழங்கதை ஆகிவிட்டது. ஒரு செய்தியை மக்கள் மறக்க இன்னொரு பரபரப்பு செய்தி போதும் என்பது அரசியல்வாதிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

அடுத்த காமெடி சோம்நாத் சட்டர்ஜி சொன்னது. ஒரு பத்திரிகையாளரிடம், `இது நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பு, இதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்` என்றார். அவர் மட்டுமில்லை போட்டியாளர் அனைவரும் அப்படித்தான் சொல்கிறார்கள். உண்மையில் பதவி ஆசை என்பது இந்த போட்டியில்தான் தெரிகிறது.

மற்ற (அதிகாரம் கொண்ட) அரசியலில், பதவி உங்களுக்கு பெருமையை கொடுத்தாலும் அது ஒரு முள்கிரீடம்தான். உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். அதைவிட நீங்கள் கறைபடாமல் தப்பவே முடியாது. ஜனாதிபதி பதவியில் இந்த தலைவலி எல்லாம் இல்லை. இப்படி ஒன்றுமே செய்யமுடியாத இடத்தில் இருந்துகொண்டு இவர்கள் சேவை செய்யப் போகிறார்களாம்!

பிரணாப் முகர்ஜியால் நாட்டுக்கு இரண்டு லாபம் நிச்சயம். மந்தமாகிவிட்ட அவருக்கு வி ஆர் எஸ் கொடுத்தாகிவிட்டது. இது ஒரு லாபம். இரண்டாவது லாபம், இவர் ஏற்கனவே பல வருடங்களாக மந்திரியாக இருந்தவர் என்பதால், பல நாடுகளை சுற்றிப் பார்த்து சலித்துப் போயிருப்பார்.பிரிதிபா பாட்டீல் புது அரசியல்வாதி என்பதால், குரங்கு கையில் பூமாலை என்ற கதையாய், வாய்ப்பு கிடைத்தவுடன் அரசு பணத்தில் குடும்பத்தோடு உலகை வலம் வந்தார். பிரணாப் அந்த வகையில் அரசுக்கு செலவு வைக்கமாட்டார் என்று நம்பலாம்.

ஆடு - புலி ஆட்டம்

கடந்த பதிவில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து எழுதும்போதே அதில் சில கிளை கதைகள் வந்தது. ஒரே பதிவில் எல்லாம் வேண்டாம் என தவிர்த்தேன். அதில் ஒன்றை இப்போது பார்ப்போம்.

தற்போதைய விலையேற்றத்துக்கு, பொதுத்துறை (எண்ணெய்) நிறுவனங்களின் திறமையின்மை அல்லது ஊதாரித்தனம் என பல குறைகள் இருக்கலாம். இருந்தாலும் மக்கள் கஷ்டப்படுகிறார்களே என்பதற்காக அதன் விலையை குறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு பொருளை அதன் உண்மையான மதிப்பை விட குறைவாக கொடுத்தால் அது விரயமாகும் வாய்ப்புதான் அதிகம்.

ஜெயிலில் ஆடு புலி ஆட்டம் விளையாடுவார்கள். அங்கே சிறு கல் மட்டுமே கிடைக்கும். கோடு கிழிக்க, போட்டியாளர் விளையாட காய் தேவை. என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? மாத்திரைதான். மாத்திரை காலியானவுடன் ஏதாவது தலைவலி என்று பொய் சொல்லி மாத்திரை வாங்கிவருவார்கள்.

அந்த மாத்திரையின் மதிப்பு 50 காசோ அல்லது 5 ரூபாயோ. நாம் வாங்கும் பொருளின் மதிப்பு நமக்கு தெரியாவிட்டால் அதன் விளைவு இப்படிதான் இருக்கும்.

இந்த அலட்சியம் எல்லா இடத்திலும் உண்டு. ஒரு நண்பன் வீட்டில் விளக்குகள் அனாவசியமாய் எரியும். நிறுத்த சொன்னால், `எங்க வீட்ல பில் கம்மியாதான் வரும்` என்பான். அந்த கம்மியாக வரும் காரணத்தை சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். நஷ்டம் ஒரு மனிதனை நேரடியாக தாக்காதவரை அவர்களுடைய சிந்தனைகள் மாறாது. எனவே விலை ஏற்றம் ஓரளவு தேவைதான்.

அதேசமயம் இந்த விலை ஏற்றத்தை ஆதரிக்கிறேன் என்பதற்காக நான் காங்கிரசை ஆதரிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். `வெல்கம் பிஜேபி` என ஒரு பதிவு நான் எப்போதோ போட்டுவிட்டேன். காங்கிரஸ் விரைவில் தோற்கடிக்கப்பட்டால், என் சார்பாகவும் ஸ்வீட் நிச்சயம். நான் இங்கே சொல்ல வருவது நடைமுறை யதார்த்தம்.

இந்த யதார்த்தத்தையும் படியுங்கள்.

ஒரு இடத்தில் சண்டை. வீட்டில் உள்ள ஆண் கோபமாக சண்டைக்கு கிளம்பினான். எல்லோரும் தடுத்தார்கள். அதில் அக்கறை இருந்தது. ஆனால் அந்த நபரின் மனைவி தடுத்தவிதத்தில் மட்டும் பயம் தெரிந்தது. காரணம், அந்த நபரின் உயிருக்கு ஆபத்து என்றால் நடுத்தெருவுக்கு வரப்போவது அந்த நபரின் மனைவியும் குழந்தைகளும்தான்.

பெட்ரோலிய பொருட்களை பொறுத்தவரையில் நாம் அந்த மனைவியின் நிலையில் இருக்கிறோம். மற்ற நாடுகளைவிட அதிக அளவில் சார்ந்திருக்கிறோம். எனவே விலையை மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு நம்மை நாமே முட்டாளாகிக் கொள்வதில் அர்த்தமில்லை. எண்ணெய் விலையில் நெருக்கடி ஏற்பட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது நாம்தான்.எனவே அதன் பயன்பாட்டை ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரவேண்டியது அவசியம்.

இப்போது நாம் பயன்படுத்துவது அவசியம் என்ற வகையிலும் இருக்கும், அனாவசியம் என்றும் இருக்கும். இதை வகைபடுத்தி அதற்கு தகுந்தாற்போல் கட்டணம் நிர்ணயிக்கலாம். ஆனால் அதுவும் இலவச மின்சாரம் என்ற கதையாய் விரயத்தில் போய் முடியும். சிக்கனத்தை பற்றிய உபதேசத்தை மக்கள் மதிப்பதில்லை. அது அவர்களின் பர்ஸை கடித்தால் மட்டுமே கட்டுபடுத்தப்படும்.

போக்குவரத்து வசதிகள் ஒழுங்காக இருந்தால் மக்கள் ஏன் தனி வாகனங்களை பயன்படுத்தப் போகிறார்கள்?

போக்குவரத்து பெரும்பாலும் அரசுத்துறைகள் கட்டுபாட்டில். அவை திறமையாக செயல்படும் வாய்ப்பு குறைவு. சமீபத்தில் மதுரை கலக்டர் கோஆப்டெக்ஸுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவர் கோஆப்டெக்ஸ் என்றால் என்ன என்று புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிக்கும் முன் அவரை வேறு துறைக்கு தூக்கி அடிப்பார்கள். இந்த லட்சணத்தில்தான் பொதுத்துறைகள் இயங்குகின்றன.

தனியார் துறையினர் சாதிப்பதற்கு முக்கிய காரணம், நிர்வாகம் தொடர்ந்து ஒருவரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதும், லாபம், நஷ்டம் இரண்டும் அவர்களை சேர்வதுதான். பொதுத் துறையில் அது சாத்தியமே இல்லை. லாபம் வந்தால் பாராட்டும் (மட்டும்) நஷ்டம் வந்தால் தலைவலியும் (வழக்கும்) வரும். இந்த லட்சணத்தில் அவர்கள் எப்படி முடிவெடுப்பார்கள்? எனவே ரிஸ்கே எடுக்காமல் காலத்தை ஓட்டத்தான் பார்பார்கள்.  

போக்குவரத்து துறையை தனியாருக்கு திறந்துவிடுவதுதான் சரியான தீர்வு. இங்கே அவர்கள் நல்ல லாபம் பார்பார்களே? அவர்கள் லாபம் பார்த்தால், அது நாட்டுக்கு நஷ்டமாயிற்றே என்றெல்லாம் சிந்திக்காதீர்கள்.நிச்சயம் அப்படி நடக்காது.

இதற்கும் ஒரு உதாரணத்தை பார்ப்போம். நமக்கு தெரிந்த ஒருவர் புது வீடு கட்ட முடிவு செய்தார். இதை அப்படியே காண்ட்ராக்ட் விட சிலர் ஐடியா கொடுத்தார்கள். ஆனால் அவருக்கு உடன்பாடில்லை. காண்ட்ராக்டர் நிறைய லாபம் பார்ப்பாராம். தமக்கு ஓரளவு தெரியும் என்ற நம்பிக்கையில் அவரே வீடு கட்ட முடிவு செய்தார்.

ஆனால் கட்டி முடித்த பிறகு பார்த்தால், பல செலவுகளை இவர் கணக்கில் சேர்க்கவே நிலையிலும் செலவு அதிகமாகவே இருந்தது. இவர் புது நபர் என்பதால் இவர் வாங்கிய எந்த பொருளிலும் (கல், சிமென்ட், கம்பி) பேரம் பேசி விலையை குறைக்க முடியவில்லை (அவருக்கு அது தெரியாது என்பதுதான் உண்மை). வேலை செய்த ஆட்களோ 3 நாள் வேலையை 4 நாட்களாக செய்தனர். எவ்வளவு தேவை என்பது கணிக்க முடியாமல் வாங்கியதில் சேதாரம் அதிகமாகியது. கதவுக்கு நல்ல மரம் வாங்க அதை தேடி 3 நாள் காரில் சுத்தினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவும் செலவுதானே?

ஆனால் கான்ட்ராக்டருக்கு இந்த தலைவலி இல்லை. நிரந்த வாடிக்கையாளர் என்பதால் விலையில் அவருக்கு சலுகை உண்டு. அல்லது அவர் மொத்தமாகவே வாங்கி மிச்சம் பண்ணலாம். வேலை ஆட்கள் இவரிடம் வாலாட்ட முடியாது. 3 நாள் வேலை என்றால் என்றால் அதை இன்னும் விரைவாகவும் முடிப்பார். சேதாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கே மிச்சமாவது அங்கே போகும் அங்கே இருப்பது இங்கே வரும்.

எந்த பொருள் எங்கே தரமாக குறைவாக கிடைக்கும் என்பது இவர் அனுபவரீதியாக உணர்ந்திருப்பார் என்பதால் இவர் எங்கேயும் அலைய வேண்டியதில்லை. இப்படி இந்த அனுபவமே இவருக்கு லாபத்தை பெற்றுத்தரும். (ஒரு சில மோசடி காண்ட்ராக்டரை தவிர்த்து பலருக்கு இந்த வகையில்தான் கூடுதல் லாபம் வரும்) 

நாமே கட்டுவோம் என்று முடிவெடுத்தவருக்கு இந்த லாபங்கள் போய் சேராது. இதேதான் தனியார் துறையிலும் நடக்கும். திறமையான நிர்வாகத்தினால் அவர்கள் லாபம் பெறுவார்களே தவிர இதனால் அரசுக்கு ஒரு இழப்பும் வராது.

போக்குவரத்து துறையை, செல்போனுக்கு விட்டது போல், டெண்டர் விட்டால் அரசுக்கு பல ஆயிரம் கோடி (லட்சமாகவும்) வருமானம்தான். இதனால் கட்டணம் உயரவோ, சேவையில் குறைபாடு வரவோ வாய்ப்பிலை. போட்டி இருக்கும் இடத்தில் அது ஒரு கட்டுபாட்டுக்குள்தான் இருக்கும். சில சேவைகள் பாதிக்கப்படலாம். அதற்கும் ஏதாவது வழி வரும். 

இன்று பொதுத் துறை நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை என்பதை அனுபவரீதியாக உணர்ந்துவிட்டோம். கட்டணத்தையும் உயர்த்த முடியவில்லை. சமீபத்தில்தான் ரயில்வே கட்டண உயர்வு வாபஸ் வாங்கப்பட்டது. எனவே நிதி ஆதாரம் இன்றி அவர்களால் மக்களின்  தேவையை பூர்த்தி செய்யமுடியாத நிலை.

இந்த வேலையை அவர்கள் செய்யாத பட்சத்தில் மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இது எரிபொருள் விரயத்திலும், போக்குவரத்து நெருக்கடியிலும்தான் கொண்டுபோய் விடும். எனவே தனியாரை இந்த துறையில் பெருமளவு பயன்படுத்தாத வரையில் இதற்கு தீர்வு வராது.

மக்களுக்கு சேவை செய்ய என பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தாலும், அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதுமில்லை, அதேசமயம் அரசுக்கு பெருத்த நஷ்டத்தையும்தான் உருவாக்குகின்றன. தனியார்துறையினர் லாபநோக்கில் செயல்பட்டாலும், அது மக்களுக்கு வசதியாகவும் அரசுக்கு லாபமாகவும் போய் முடியும் என்பதுதான் உண்மை.

2 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,

எப்படி சார் இப்படிலாம் சிந்திக்க முடியுது , எதாவாது லேகியம் சாப்பிடுறிங்களா :-))

எழுத்துப்பிழைகளை விட கருத்துப்பிழைகள் ஆபத்தானவை!

//போக்குவரத்து துறையை, செல்போனுக்கு விட்டது போல், டெண்டர் விட்டால் அரசுக்கு பல ஆயிரம் கோடி (லட்சமாகவும்) வருமானம்தான். இதனால் கட்டணம் உயரவோ, சேவையில் குறைபாடு வரவோ வாய்ப்பிலை. போட்டி இருக்கும் இடத்தில் அது ஒரு கட்டுபாட்டுக்குள்தான் இருக்கும். சில சேவைகள் பாதிக்கப்படலாம். அதற்கும் ஏதாவது வழி வரும். //

வீட்டை விட்டு எங்கும் செல்வதேயில்லையோ என நினைக்க தோன்றுகிறது.

இப்போதும் சென்னையை தவிர அனைத்து இடங்களிலும் தனியார் போக்குவரத்து செயல்ப்பட்டு வருகிறது. மேலும் டெண்டருக்கு பதில் பெர்மிட் வழ்ங்கி அரசு கட்டணம் வசூலிக்கிறது ,இது டெண்டர் மூலம் வரும் வருவாய் போன்றதே.

அதோடு இல்லாமல் ஆண்டு தோறும் பேருந்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

எனவே அரசுக்கு தனியார் பேருந்துகளின் மூலமும் வருவாய் வந்துக்கொண்டு தான் இருக்கிறது.யார் வேண்டுமானாலும் ஒரு பேருந்து வாங்கி இயக்கிக்கொள்ளலாம்.

இப்போ நிறைய தனியார் இருக்காங்க,அப்படி இல்லாமல் ஒருத்தர் ரெண்டு பேரு மட்டும் ஒட்டு மொத்தமாக டெண்டர் எடுக்கணும் என சொன்னேன் என நீங்கள் சொன்னால் அது இன்னும் மோசமான விளைவையே தரும்.

ஏன் எனில் கட்டுப்பாடு ஒரு சிலர் கைக்கே போய்விடும்,அவர்கள் விரும்பிய ,அதிக வருவாய் உள்ளத்தடத்தில் மட்டும் இயக்குவார்கள். மற்ற தடத்தினை புறக்கணித்து விடுவார்கள்.கட்டணமும் அவர்கள் வைப்பது தான். பேருந்து முழுக்க நிரம்பினால் தான் எடுப்பேன் என்பார்கள் ,என பல தலைவலிகளே வரும்.

ஆம்னி பேருந்துகளை எல்லாம் பார்த்த பின்னுமா இப்படிலாம் "புதிய சிந்தனைகள்" உங்களுக்கு ஊற்று எடுக்கிறது :-))

புதுவை -கடலூர் இடையே எத்தனை அரசுப்பேருந்துகள் ,தனியார்ப்பேருந்துகள் என ஒப்பிட்டு பார்க்கவும்.

அதுவே ஏன் கிராமங்களுக்கு பேருந்து இயக்க தனியார் முன் வருவதில்லை. அரசு தடுக்கிறதா இல்லையே , கலெக்‌ஷன் இல்லாத தடங்களில் தனியார் இயக்க முன் வரவே மாட்டார்கள். ஒரு வேளை நீங்கள் நகரத்தில் இருப்பதால் அங்கு மட்டும் பேருந்து ஓடினால் போதும் ,கிராமத்திற்கு எதுக்கு பேருந்து ,மாட்டு வண்டி போதாதா என நினைத்திருக்கலாம்.

ஆமாம் பேருந்தில் போனால் கிராமத்தானுக்கு காசு செலவாகும், அவங்களுக்கு எதுக்கு அநாவசிய செலவு என்ற உங்களின் நல்ல மனம் புரிகிறது :-))

ஹி...ஹி நான் தலைக்கீழா பார்க்கிறேன் தானே :-))

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

உங்களுக்கு பின்னூட்ட பின்லேடன் என்ற பட்டப் பெயர் பொருத்தமானதுதான். இருந்தாலும் நீங்கள் ஆரோக்கியமான போராளி. எனவே உங்களை வரவேற்கிறேன். கருத்து முரண்பாடுதான் பிரச்சினை.

கடலூர்வாசியான எனக்கு தமிழகத்தில் தனியார் பஸ் ஓடுவதும், இந்த ஆம்னி பஸ் வகையறாக்களும் அவர்கள் அடிக்கும் கொள்ளைகளும் தெரியும். ஆனால் ஒட்டுமொத்த இந்தியா என்ற அடிப்படையில் பார்த்தால் போக்குவரத்து அரசுத்துறைதான். அந்த வகையில்தான் இந்த பதிவு.

தற்போது உள்ள தனியார் பஸ்கள் எல்லாம் ஆட்டோ ரேஞ்சுக்கு இருக்கின்றன. இது அவர்களுக்குதான் லாபம், மக்களுக்கல்ல. இதையே கொஞ்சம் பெரிய அளவில் செய்தால்தான் போட்டியும் வசதிகளும் சாத்தியமாகும். கிட்டத்தட்ட செல்போன் கதைதான் நான் சொல்ல வருவது. 10, 15 நிறுவனங்கள் களத்தில் என்ற நிலையில், மக்களிடையே விழிப்புணர்வும் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கட்டுப்பாடு அவர்கள் வசம் போய்விடும் என்ற பயம் அனாவசியமானது.

அரசால் மக்களுக்கு முறையான வசதியை செய்து தரமுடியாத நிலையில், தனியார் வாகனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலையில் வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.

//அவர்கள் விரும்பிய ,அதிக வருவாய் உள்ளத்தடத்தில் மட்டும் இயக்குவார்கள். மற்ற தடத்தினை புறக்கணித்து விடுவார்கள்.கட்டணமும் அவர்கள் வைப்பது தான். பேருந்து முழுக்க நிரம்பினால் தான் எடுப்பேன் என்பார்கள் ,என பல தலைவலிகளே வரும்.///

இந்த தலைவலிகள் வரக்கூடும். அது உண்மைதான். ஆனால் இன்று அரசுக்கு ஏற்படும் இழப்பு, மக்களுக்கு சேவை செய்வதால் வரவில்லை. நிர்வாகத் திறமையின்மைதான் காரணம். ஒரு ஏழைக்கு 10 ரூபாய் செலவு செய்ய, 100 ரூபாய் நஷ்டத்தில் ஒரு நிறுவனத்தை அரசு நடத்தவேண்டிய அவசியமில்லை. அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய மாற்றுவழி இருக்கலாம்.

மொத்தத்தில் இன்று அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்பதால் ஜனநாயகத்தை வெறுக்க முடியாதல்லவா. அதேபோல் இன்று தொழில் அதிபர்களிடம் நாணயமும், சேவை மனபாண்மையும் இல்லை என்பதற்காக தனியார் துறையே கூடாது என ஒதுக்க முடியாது. இருவருக்கும் கடிவாளம் கட்ட கொஞ்சம் கடுமையான சட்டங்கள் தேவை. அவ்வளவுதான்.

Post a Comment