!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Saturday, June 2, 2012

கடைசியாக ஒரு வீடு

பெட்ரோல் விலைதான் தற்போதைய பிரச்சினை. சர்வதேச சந்தையில் விலை ஏறுகிறதாம். இது ஒரு காரணம். அடுத்த காரணம் ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது. முதலாவது சர்வதேச நிலை. அது நம் கையில் இல்லை. இரண்டாவது நிச்சயம் இந்த அரசின் திறமையின்மையை காட்டுகிறது.

இங்கே விமர்சிக்கப் படவேண்டியவர் பிரணாப் முகர்ஜிதான். கூட்டணி நிர்பந்தம், பாப்புலர் அரசியல் என சில விஷயங்கள் முடிவெடுப்பதை பாதித்தாலும், இவருடைய நிர்வாகத் திறமை தற்போது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. 

இருந்தாலும் அனுபவசாலியான அவரிடம் திறமை இல்லை என்று சொல்லமுடியுமா? ஒருவேளை மந்தமாகிவிட்டாரா? அதற்கு ஒரு காரணம் தெரிகிறது. இந்தியாவின் வளர்ச்சியை விட அவருடைய அரசியல் வளர்ச்சி படு மந்தமாக இருக்கிறது. அது ஏற்படுத்திய பாதிப்பாகவும் இருக்கலாம்.

யதார்த்தம் இதுதான். பல சாதனைகளுக்கு அடிப்படை காரணம் அதில் ஒரு ஊக்கத்தொகை இருக்கும். அது பணமாக அல்லது அங்கீகாரமாக இருக்கலாம். அங்கீகாரம் என்றால் அது வெறும் பாராட்டு மட்டுமில்லை. பிரமோஷனும் தேவை. இந்த இரண்டில் ஏதாவது ஓன்று கிடைக்கும் என்ற வெறிதான் ஒரு மனிதனை வேகமாக, திறமையாக செயல்பட வைக்கிறது. இது பிரணாப் விஷயத்தில் இல்லை.

கட்சியின் நீண்டநாள் சீனியரான அவருக்கு நம்பர் ஒன் பதவிக்கான ஆசை இயற்கையாகவே இருக்கும். இருக்கவேண்டும். அப்படி ஆசைபடுபவன்தான் சாதனையாளன். சில அது சமயம் தடைபடும்போது, சூழ்நிலைகள் சரி இல்லை என காக்கவைக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலையை பார்த்தால் அவருக்கு அதற்கான அறிகுறியே இல்லை.

அவர் தகுதியானவரா, காங்கிரஸ் அவரை அந்த அளவுக்கு நம்புகிறதா என்பது வேறு கதை. ஆனால் பிரணாப்புக்கு அது தற்போதும் வாய்ப்பில்லை, அடுத்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சாத்தியமும் தெரியவில்லை. எனவே நீண்டகாலமாக நம்பர் 2 என்ற நிலையில் இருப்பவரை நிச்சயம் இது ஒரு தேக்க நிலையில் தள்ளிவிடும்.

அதேசமயம் இன்னொரு யதார்த்தமும் இருக்கிறது. நமக்கு அங்கீகாரம் தராத, ஆனால் நம்மை பயன்படுத்திக் கொள்ளும் ஒருவருக்கு (கட்சிக்கு) சேவை செய்யும் மனம் யாருக்கும் வராது. இப்படிப்பட்ட நிலையில் அவரின் செயல் சம்பிரதாயமாகவே இருக்கும்.

கடைசியாக ஒரு வீடு

இங்கே எனக்கு ஒரு நீதிக்கதை நினைவுக்கு வருகிறது. ஒரு கான்டிராக்டரிடம் ஒரு மேஸ்திரி வேலை பார்த்துவந்தார். நீண்ட நாளாக அவரிடம் வேலை செய்தும், தனக்கு சரியான அங்கீகாரம் இல்லை என்ற மனக்குறை அவருக்கு இருந்தது. ஒருநாள் வருத்தத்தின் உச்சத்தில், வேலையை விட்டுவிட முடிவு செய்தார். முதலாளியிடம் அதை சொல்ல, `கடைசியாக ஒரே ஒரு வீட்டை மட்டும் கட்டிக் கொடுங்கள்` என்று அவர் கேட்டுக் கொண்டார். 

அதற்கு சம்மதித்த அந்த மேஸ்திரி, அந்த கடைசி வீட்டையும் கட்டிமுடித்தார். ஆனால் முதலாளியின் மீது வருத்தத்தில் இருந்த அவருக்கு, வேலையில் மனம் இல்லை. எனவே அந்த வீடு தரமாக இல்லை. அப்படி தரமில்லாத வீட்டை கட்டி முதலாளியிடம் ஒப்படைக்க, அவரோ, `இதுவரை நீங்கள் விசுவாசமாக, எங்களிடம் வேலை செய்ததற்கு பரிசாக இந்த வீட்டை நான் உங்களுக்கே தருகிறேன்` என்று அவரிடமே கொடுத்துவிட்டார். 

அந்த மேஸ்திரியின் முகத்தில் அதிர்ச்சி. ஒருபக்கம் முதலாளி அவர் மீது வைத்திருந்த மரியாதை கண்டு ஆச்சர்யம். அதேசமயம் அவருக்கு விசுவாசமாக இல்லையே என்றும் வருத்தம். அதைவிட முக்கியமாக நமக்காக கட்டிய வீட்டையே நாம் தரமாக கட்டவில்லையே என்றும் வருத்தம்.

இங்கே இரண்டுவிதமான நீதி இருக்கிறது. மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்கிறார்களோ, ஆனால் நாம் எப்போதும் நமது தரத்தை இழக்கக் கூடாது என்பது ஓன்று. இரண்டாவது நீதி என்னவென்றால், ஒருவரின் திறமையை, சேவையை அங்கீகரிக்க நாம் கடைசிவரை காத்திருக்கக் கூடாது. அது செத்த பிறகு பால் ஊற்றுவதற்கு சமம். அந்த மேஸ்திரி நடந்து கொண்ட முறை தவறு என்றாலும், யதார்த்தமாக பார்த்தால் நம்மில் பலர் அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

காங்கிரஸ் மற்றும் பிரணாப் முகர்ஜியின் நிலை இந்த வகையில்தான் இருக்கிறது. தனக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை என தெரிந்தவுடன் பிரணாப் கவுரவமாக ஒதுங்க வேண்டும். ஆனால் இவரும் கிரிகெட் பிளேயர் மாதிரி ஆகிவிட்டார். விளையாட முடியாமல் இவர் கட்டை போடுவதை பார்க்கும் போது, இவரை வீட்டுக்கு அனுப்பினால் தேவலை என்ற மனநிலைக்கு நாம் வரவேண்டி இருக்கிறது.

அதேபோல் காங்கிரசும் இவரை பயன்படுத்திக் கொண்டு, அதற்கான அங்கீகாரத்தை தராதது வருத்தமான விஷயம்தான். அவர் மீது நம்பிக்கை இல்லையென்றால் முறையான மரியாதை செய்து அனுப்பிவிட வேண்டியதுதானே? என்ன சிக்கலோ, என்ன குழப்பமோ?

ஒரு அணிக்கு பலமாக இருந்த பல வீரர்கள், கால மாற்றத்தில் பாரமாகும் ஆகிவிடுகிறார்கள். ஆனால் கடந்த காலத்தில் அவர்கள் செய்த சேவை காரணமாக, `நீங்கள் பலவீனமாக ஆகிவிட்டீர்கள்` என்ற உண்மையை முகத்துக்கு நேரே சொல்ல முடிவதில்லை. துரதிருஷ்டவசமாக அவர்களும் இதை புரிந்து கொள்வதில்லை. 

1 comments:

mani said...

VERY GOOD REASONING FOR OUR FINANACE MINISTER CAPACTIY'
IT IS HIGH TIME THAT OUR FINANACE MINISTER SRI
PRANAB MUHEERJEE SHOULD TAKE A REST FROM THE ACTIVE POLITICS AND STAY IN HIS OWN STATE AND DO SOME WORK AT RAMAKRISHNA MUTT AND HELP THE NEEDDY PEPOLE HOW TO COME OUT OF THE POVERTY. HIS RICH EXPERIENCE IN THE FINANCE PORTFOLIO WILL GIVE SOME EXPERIENCE TO THE YOUNG CHARTED ACCOUNTANTS HOW TO PRACTICE INCOME TAX LAWS.

ARJUNAN

Post a Comment