!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Sunday, July 29, 2012

சிறை அனுபவம் : இப்படியா கொடுமைப்படுத்துவாங்க!

நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. நமக்கு ஏதாவது பிரச்சினை வரவேண்டும். அப்போதுதான் நமது தரம் மற்றும் தகுதி தெரியவரும். அந்த வகையில் எனக்கும் சில அனுபவங்கள் இருக்கிறது. இந்த வாரம் அதை பார்ப்போம்.

படி (சாப்பாடு)

கிச்சனுக்கு போய் படி எண்ணி எடுத்துவரும் சூபர்வைசர் வேலையை பார்க்கும் போது ஒரு பிரச்சினை. அந்த பிளாக்கில் 200 முதல் 300 வரை ஏதோ ஒரு எண்ணிகையில் கைதிகள் இருப்பார்கள். இதில் தினம் சிலர் பெயிலில் போவார்கள். வேறு சிலர் கோர்ட்டுக்கு போவார்கள். கோர்ட்டுக்கு போபவர்களுக்கு படி பிளாக்குக்கு வராது. கோர்ட் படி என தனியாக அவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள். 250 பேர் இருந்தால் அதில் 10-15 இப்படி கழிந்துவிடும்.

வெளியே செல்பவர்கள், `நான் இந்த செல்லில் இருந்தேன், பெயிலில் போகிறேன் (அ) கோர்ட்டுக்கு போகிறேன்` என்று கேட்டில் வார்டனிடம் சொல்ல வேண்டும். அவரும் குறித்துக் கொள்வார். இது நடைமுறை.

பெரும்பாலும் அது நடப்பதில்லை. பழைய கைதிகள் இதில் கரெக்டாக இருந்தாலும், புதுக் கைதிகளுக்கு இந்த நடைமுறை தெரியாது. அவர்கள் விட்டால் போதும் என்று பறந்துவிடுவார்கள்.

பிளாக்குக்கு ஒரு வார்டன் இருந்தாலும், அவர் ஒரு அசிஸ்டெண்டை (கைதி) கேட்டில் நிற்க வைத்துவிட்டு ரவுண்ட்சில் இருப்பார். இதில் சில கைதிகள் கவனத்துக்கு வராமலேயே போய்விடுவார்கள். இப்படி சிலர் சொல்லாமல் போனாலும், மெயின் கேட்டில் சொல்லி, அந்த தகவல் கிச்சனுக்கு போய், அவர்களுடைய படி கட்டாகிவிடும்.

கிச்சனில் 10 படி குறைந்தால், இங்கே பிளாக் கணக்குப்படி அது 6-7 என கணக்கில் இருக்கும். வழக்கமாக 1-2 படி கிச்சனில் எக்ஸ்ட்ராவாக கொடுப்பார்கள். இருந்தாலும் படி அதிகமாக குறைந்தால்  எப்படி அட்ஜஸ்ட் பண்ணுவது? விட்டுகொடுக்க இது வெளி உலகமா? ஜெயிலாயிற்றே.

இங்கே இன்னொரு மோசடியும் உண்டு. பிளாக்குக்கு படி வந்தவுடன் எல்லோருக்கும்  பிரித்து கொடுப்பது பிளாக் ரைட்டரின் (ஆட்களின்) வேலை. இவர்கள் வேண்டுமென்றே படியை போடும் வேகத்தில் அதை உடைத்துவிடுவார்கள். அப்படி உதிரியாக சேரும் சோறே இரண்டு படி ஆகும். இதுவும் மோசடி என்றாலும், இது  உபரி என்பதால் இதில் தலைவலி இல்லை.

பிரச்சினை பெயிலுக்கு/ கோர்ட்டுக்கு போனவர்களால்தான் வரும். இங்கே ஒவ்வொரு செல்லிலும் 10-15 பேர் இருந்தாலும், அனைவருக்காகவும் படி யாராவது ஒருவர்தான் வாங்குவார். பெரும்பாலும் எடுபிடிகள்தான் இந்த வேலையை செய்யவேண்டும். சிலர்,  பெயிலில் ஆள் குறைந்த விஷயம் தெரியாமல் வாங்கி விடுவார்கள். சிலர் கமுக்கமாக சொல்லாமல் வாங்கிக் கொள்வார்கள்.

பலர் படி வாங்குவதும் சிறிய பக்கெட்டில். படியை போடும்போதே உடைந்து /உடைத்து போடுவதால், கணக்கில் சந்தேகம் வந்தால் திருப்பி எண்ணுவது சிரமம். கடைசியில் சிலருக்கு படி இல்லாமல் போகும் போதுதான் இது பிரச்சினையாகும்.

படி போடுபவரும் தன் செல்லுக்கு போடும்போது சில படிகள் எக்ஸ்ட்ராவாக போட்டுக்கொள்வார். எப்படியும் சில படிகள் மீறத்தானே போகிறது.அந்த நம்பிக்கையில் அவர் எடுத்துக்கொள்வார். ஆனால் படி குறையும்போது, அவர் நம்ம ஆள் என்பதால், இதை நான் சொல்லமுடியாது.

இப்படி தில்லுமுல்லு இரண்டு பக்கமும் இருக்கும் நிலையில் நான் என்ன செய்வது? படி வந்தவுடன், எண்ணி சரிபார்த்துவிட்டு அதன் பிறகு போடுங்கள் என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. ஒரு நாள் இது சண்டையில் முடிந்தது. `கிச்சனில் படி சரியாக எண்ணி எடுத்துவந்தீர்களா?` என்று என்னிடமே சிலர் கேட்க, எனக்கும் கோபம். நானும் வார்த்தைகளை விட்டேன்.

இந்த சண்டையின் போது, `அந்த அண்ணன் நாம்ப செய்ய வேண்டிய வேலையை செய்யறாரு.... எதையும் எதிர்பார்க்கிறதும் இல்ல. அவரை குறை சொல்லறீங்க` என்று அந்த இளம்வயது ரைட்டர்கள் எனக்கு ஆதரவாக எகிற, அந்த வாய் சண்டை முடிவுக்கு வந்தது. அந்த சண்டை, இனி எனக்கு இங்கே தலைவலிகள் இருக்காது என்பதையும் உணர்த்தியது.

இவர் கிட்ட நான் எதுவுமே வாங்கலயே

இரண்டாவதாக நான் வந்து சேர்ந்த பிளாக்கில், சில மாதம் கழித்து, நமது நண்பருக்கும், அவருடைய நெருங்கிய நண்பருக்கும் சண்டை. அது நண்பர்களுக்கிடையான வாய் சண்டைதான்.

எதையோ பேசிகொண்டிருந்தபோது நமது நண்பர் கோபமாகிவிட்டார். அவர்கள் இருவரும் சென்ட்ரலிருந்தே இருக்கிறார்கள். அதில் நமது நண்பர் ஜூனியர். மற்றவர் சீனியர். அவர்களுக்குள் பழைய கதைகள் ஓடியது.

சென்ட்ரல் ஜெயிலில் எல்லாம் மோசமாம். சாப்பாட்டில் புழு இருக்குமாம். கொசு, மூட்டை பூச்சி, மழை பெய்தால் தூங்க முடியாத அளவுக்கு ஒழுகுதல், வெயிலில் கடுமையான வெப்பம், தண்ணீர் பஞ்சம் என எல்லாவகையிலும் அது ஒரு நரகம் என பலர் சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் தாண்டி அங்கேயும் சாப்பாடு கிடைத்தது. அதில் பழைய ஆட்கள் அவர்களுடைய திறமைக்கு சமாளித்து கொஞ்சம் தரமாக சாப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் நமது நண்பர் ஜெயிலுக்கு போன புதிதில் இவருக்கு தரவில்லை. இவர் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டாரோ, `நீங்கல்லாம் என்ன செஞ்சீங்க. மனிதனை மனிதனா மதிக்கறதில்லை` என்று நமது நண்பர் புகார் வாசித்தார்.

சாப்பாட்டை பொறுத்தவரையில்,  ஜெயிலுக்கு போகும் எல்லோரும் முதலில் கஷ்ப்பட, பின்னர் `சமாளிப்பார்கள்`. இதுதான் யதார்த்தம் இதை நமது நண்பர் புரிந்து கொள்ளவில்லை.

அந்த சீனியரோ, `ஆரம்பத்துல எல்லாம் அப்படித்தான் இருப்பாங்க. ஜெயில்ல கிடைக்கிறதே பெரிய விஷயம். அதுவும் காஸ்ட்லி. அதை நாங்க எல்லார்கிட்டயும் பங்குபோட முடியுமா? கொஞ்சம் பழகன பிறகுதான் அதெல்லாம் நடக்கும்` என்று சொன்னவர், நீ மட்டும் என்ன சும்மாவா செல்லுல ஆளுங்கள விடற? என்று இவர் மீது விமர்சனத்தை திருப்பினார்.

அதுவும் நிஜம். நான் இருந்த செல்லுக்கு எல்லோரும் வர முடியாது. ஓன்று இலங்கை தமிழராக இருக்க வேண்டும் அல்லது போதைப் பொருள் கடத்தல் வழக்காக இருக்கவேண்டும். அதுவும் இவர்கள் விருப்பபட்டு அனுமதித்தால்தான் உண்டு. மற்றவர்கள் எல்லாம் கட்டணம் செலுத்திவிட்டுத்தான் வருவார்கள். அதேசமயம் அவருக்கு இது வருமானமல்ல. சிறையில் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட இவர்களுக்கு பணம் தேவை. அது இந்த வகையில் பூர்த்தியாகும்.

இந்த சண்டையில் நம் நண்பர், `சிவா அண்ணனை கேளுங்க. நான் அவர்கிட்ட ஒண்ணுமே வாங்கலயே` என்று என்னை இழுத்தார். அப்போதுதான் எனக்கு தெரியும். நான் மட்டும் இங்கு செலவில்லாமல் வந்திருக்கிறேன் என்று.

சிறையில் நம் நிலைமையே தகராறு எனும்போது, மற்றவர்களுக்கு உதவி என்பது மனமிருந்தாலும் செய்யமுடியாத ஓன்று. ஆனால் இவர் அந்த இடத்தில் எனக்கு உதவி செய்திருக்கிறார். இருவரும் புக்தகப் புழு என்பதுதான் ஒரே பொருத்தம். சிறை நூலகத்துக்கு நான் என்னுடைய மூடப்பட்ட லைபரரியிலிருந்து பழைய புத்தகங்கள் கொஞ்சம் கொடுத்தேன். அந்த புண்ணியம் கைமேல் பலனாக இந்த அமைதியான செல்லுக்கு என்னை வரவழைத்தது.

இவருடனான நட்பு விநோதமானதுதான். இந்தியா மீது கடுமையான காழ்புணர்ச்சியில் பேசுவார். அதையும்தாண்டி நட்பு தொடர்ந்தது. அங்கே வாதம் எடுபடாது என்பதாலும்,சூழ்நிலையை கெடுத்துக்கொள்ள நானும் விரும்பாததால்,அந்த விமர்சனங்களை நான் பொருட்படுத்தவில்லை.

இவரையும் மற்ற சில நண்பர்களையும்  அவ்வப்போது கோர்ட்டுக்கு சென்று பார்பதுண்டு. இந்த வாரம் இந்த நண்பருக்கு தீர்ப்பு என செய்தி வர, கோர்ட்டுக்கு சென்று பார்த்தேன். தீர்ப்பை சில நாட்கள் தள்ளி வைத்திருக்கிறார்கள். 8 வருடம் ஆகிவிட்டது. `இருந்த வருடங்களை தண்டனையாக அறிவித்து விடுதலை ஆகும் வாய்ப்பு இருக்கிறது. சமீபத்திய தீர்ப்புகள் அப்படித்தான் இருக்கின்றன` என்றார் நம்பிக்கையாக. அவருடைய நம்பிக்கை பலிக்கட்டும்.

இப்படியா கொடுமைப்படுத்துவாங்க!

இது ரம்ஜான் மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம் கைதிகள் சிறையிலும் நோன்பு இருப்பார்கள். இவர்களுக்கு மட்டும் இரவில் நல்ல சாப்பாடு. இந்த செலவை சில தன்னார்வ நிறுவனங்கள் ஏற்கின்றன.

இது முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும்தான் என்றாலும், ஒரே பிளாக்கில் இருக்கும்போது மற்ற நண்பர்களை விட்டுவிட்டு சாப்பிட முடியுமா? பல வருடங்களாக அதே பிளாக்கில் இருக்கும் நண்பர்களுக்கும் வரும். அதிர்ஷ்டம் இப்படியும் எங்களுக்கு அடிக்கும்.

இதில் சமையலுக்கு உதவியாக கிச்சனுக்கு நமது சில நண்பர்களும் போவார்கள். எனக்கும் சில முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே எங்கள் செல்லுக்கு நிச்சயம் வரும்.

ஒருமுறை அப்படித்தான் வந்தது. நாங்களும் சந்தோஷமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மறுபடியும் ஏதோ வந்தது. இப்போது திருப்தியாய் சாப்பிட்டோம். கை கழுவி எழுந்துவிட்ட நிலையில் மறுபடியும் ஒரு நண்பர் கொண்டுவந்தார். இத்தனைக்கும் நான் ஓட்டலில் விரும்பி சாப்பிடும் அயிட்டம் அது. வயிறு ஃபுல்லாகி விட்ட நிலையில் நான் தயங்கினேன்.

மற்ற நண்பர்கள் விடவில்லை. ``சாப்பிடுங்கன்னே. இந்த அதிர்ஷ்டம் இந்த மாசம் மட்டும்தான். அதுவும் சிலநாள்தான். நாளைக்கி நிலைமை எப்படியோ என வற்புறுத்த, மறுபடியும் உட்கார்ந்தேன்.

அந்த சமயம் போலீஸ் ஸ்டேஷனில், கவுன்சிலிங் என்ற பெயரில் போலீசார் என்னை மிரட்டியது நினைவுக்கு வந்தது.

ஜெயில்ல பழைய கைதிகள் சாப்பாடு விஷயத்துல கொடுமைபடுத்துவாங்க`ன்னு போலீஸ்காரங்க சொன்னாங்க. ஆனா அது இப்படி இருக்கும்ன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல` என்று, கஷ்டப்பட்டு சாப்பிட்டுக்கொண்டே அந்த சம்பவத்தை சொல்ல, அங்கே வெடிச்சிரிப்பு கிளம்பியது. என்னாலும் சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை. வாய்விட்டு சிரித்தேன்.

வெளியே அமைதியாக, குறைவாக சாப்பிட்டு, இரவில் தூக்கம் வராமல் தவித்த எனக்கு, சிறை அனுபவம் வித்தியாசமான ஒன்றுதான்.

(மேலே சொன்ன அதிர்ஷ்டம் தற்போது கிடைப்பதில்லையாம். விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டதாம். இருந்தாலும் பழைய கைதிகளுக்கு கோபம் வராத அளவுக்கு அவர்களுடைய தேவை நிறைவேறுகிறது. காரணம், நான் ஏற்கனவே சொன்ன தியரிதான்)

5 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,

சிறை அனுபவம் தொல்லை இல்லாதது போல சொல்லுறிங்க,ஏகப்பட்ட பேரு திகில் கதை எல்லாம் சொல்லுவாங்க.

உங்களுக்கு நல்லப்படியாக கழிந்ததில் சந்தோஷமே, அடிக்கடி போய் வருபவர்களுக்கு சமாளிக்க தெரியும், சந்தர்ப்பவசமாக மாட்டிக்கொண்டு கஷ்டப்பட்டிருந்தால் ரொம்ப மோசமா போயிருக்கும்.

சாப்பிட இல்லாமல் கஷ்டப்படுவதும், அதிகமா சாப்பிட கிடைப்பதும் கஷ்டம்னு ரெண்டு எக்ஸ்ட்ரீமும் ஆகிடுது சமயங்களில் :-))

ராஜ நடராஜன் said...

நீங்கதான் இப்ப டான் ஆயிட்டீங்களே.அதனால் பாஸ் சொல்லியே அழைக்கட்டுமா வவ்வால்:)

சிவா சிறையில் இருந்த காலம் அவஸ்தை!காலம் கடந்து நிகழ்வுகளை அசை போடுவது அனுபவம்.

உடலும்,மனமும் சில கால சூழலை வெறுத்தாலும் பழகிப் போகும் போது தொல்லை இல்லாமல் போகும்.உதாரணமாக கொசுக்கடியெல்லாம் தாங்கிட்டு சென்னையில் வாழ்வதில்லையா:)

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

சிறை எனக்கு உண்மையிலேயே அதிசயம்தான். இங்கே சிரமமில்லாமல் நாட்களை கழித்த ஆயிரத்தில் ஒருவன் நான்.

நான் எனது பதிவுகளில் புதுக்கைதிகள் படும் கொடுமைகளை பல பதிவுகளில் விவரித்திருக்கிறேன். எனவே எனது அனுபவத்தை மட்டும் நம்பி யாரும் கிளம்பிவிடவேண்டாம். பின்னூட்டத்தில் ரொம்ப விளக்கம் வேண்டாம். அடுத்து வரும் பதிவுகளில் பல சோகக் கதைகளையும் பார்ப்போம்.

நான் வேறு பிளாக்குக்கு மாறி வந்த பிறகு ஒரு காவலர், `இவ்வளவு அமைதியா இருக்கீங்க. அந்த (தொடர் குற்றவாளிகள்) பிளாக்குல எப்படி இவ்வளவு நாள் இருந்தீங்க?` என்று ஆச்சர்யமாக கேட்டார். கைதிகள் கொடுமைபடுத்தப்படுவது இதுபோன்ற பிளாக்கில்தான் அதிகம். இருந்தாலும் எனக்கு அங்கேயும் பெரிய தலைவலிகள் இல்லை.

நான் அங்கே பிரச்சினை இல்லாமல் இருக்க சில காரணங்களை சொல்லலாம்.

1)நான் அவர்களுடைய நிர்வாக விஷயங்களில் தலையிடுவதில்லை. நானும் அமைதியாகவே இருந்தேன்.

2)எனது உறவினர்களுக்கு தெரிந்தவர் பக்கத்து ஜெயிலில் காவலாராக இருக்க, அவர் வந்து எனக்கு கவுன்சிலிங் செய்துவிட்டு, பிளாக் ரைட்டரிடம் சொல்லிவிட்டும் போனார்.

3)சில நாட்களில் கோவம் தணிந்ததும் நான் பெயிலில் போய்விடுவேன் என அவர்கள் நினைக்க, நான் பிடிவாதமாக இருந்தேன். இந்த பதிவில் சொன்னதுபோல் அவர்களுடனே, அவர்களுக்கு உதவியாய் இருந்ததும் எனக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை கொடுத்தது.

**************************
வாங்க நடராஜன் சார்

//சிவா சிறையில் இருந்த காலம் அவஸ்தை!//

அது உண்மையாக இருந்தாலும்,எனக்கு வெளி உலகம்தான் அவஸ்தை. விருந்தாளி வாழ்கை எனக்கு நிறைய கூச்சத்தை உருவாக்கிவிட்டது. ஆனால் ஜெயில் எனக்கு அப்படி தோன்றவில்லை. இது நம் நாடு என்ற உணர்வு ஊறிவிட்டதால், அரசுக்கு (ஜெயிலில்) செலவு வைப்பதில் எனக்கு கூச்சம் வரவில்லை.

எனது பதிவுகளை படித்து என் வாழ்க்கைநிலை உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். புரியாவிட்டால் விடுங்கள். நான் மேலும் விளக்கப்போவதில்லை.

rajan said...

மிகவும் நன்றாக எழுதுறிங்க ! இப்ப என்ன செய்து கொண்டு இருக்கீக நான் கேட்பது தொழில் பற்றி ......

சிவானந்தம் said...

ராஜன்,

சொல்லும் அளவுக்கு தற்போது எதுவும் செய்யவில்லை. எப்படி இந்த நிலைமைக்கு வந்தேன் என்று விளக்க வேண்டுமென்றால்,அதற்கும் ஒரு பதிவு எழுத வேண்டும். எனவே பிறகு பார்ப்போம்.

Post a Comment