!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, October 8, 2012

காவிரி: இப்படியும் ஒரு புலம்பல்

காவிரி பிரச்சினை மீண்டும் செய்திகளில். இங்கே அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே நம்பமுடியாது. இவர்கள் உண்மையைதான் சொல்வார்கள். அது திரிக்கப்பட்ட உண்மையாக இருக்கும்.

ஆனால் தற்போது வலைப்பதிவுகள் மற்றும் விவாத களங்கள் வந்துவிட்டன. இங்கே வாதிடுபவர்களின் வாதங்களில் அறியாமை இருக்கலாம், போலித்தனம் இருக்காது. எனவே இந்த வாரம் இது போன்ற பிரபலமில்லாத வலை தளங்களை தேடிப் படித்தேன்.

இதில் ஆரோக்கியமான வாதங்கள் ஒரு பக்கம். அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் இன்னொரு பக்கம்.

அங்கேயும், இங்கேயும் 

சமீபத்தில்தான் முல்லைப் பெரியாறு அணை செய்திகளில் அடிபட்டது. `தமிழர்கள் அண்டை மாநிலங்களுடன் ஏன் பிரச்சினை செய்கிறார்கள்?` என்று ஒருவர் கேள்வி எழுப்புகிறார். 

முதல் மனைவி புகார் சொன்னால் அது வெறும் புகார். இரண்டாவது மனைவியும் சொன்னால்? இங்கே கணவன் மீது நிச்சயம் சந்தேகப்பார்வை விழும். அப்படிப்பட்ட சிக்கலில் நாம்.

இந்த இரண்டு மாநில தண்ணீர் பிரச்சினைகளிலும் நீதிமன்றம் தமிழகத்தின் நிலையை புரிந்திருக்கிறது. ஆனால் நீதிமன்றங்களும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதால், அதன் தீர்ப்புகளுக்கும் இங்கே மரியாதை இல்லை.

`நீதிமன்ற தீர்ப்புகளை விலைக்கு வாங்கலாம்` என்று வெளிப்படையாகவே ஒரு முதல்வர் குற்றம் சாட்டுகிறார். நம் முதல்வர் அப்படி சொல்லமாட்டார். செயலில் காட்டுவார். இப்படிபட்ட நிலையில் நீதித்துறையை மக்களும் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள்.

இப்படியும் ஒரு புலம்பல்

ஒரு வித்தியாசமான வாதத்தையும் கவனித்தேன். தமிழகத்தில் மாநில கட்சிகளின் ஆட்சி நடக்கிறதாம். கேரளாவிலும், கர்நாடகாவிலும் தேசிய கட்சிகளின் ஆட்சி. மாநில கட்சிகள் தங்கள் எம் பி க்களை வைத்து மத்திய அரசை மிரட்டி காரியம் சாதிக்கலாம். எங்களால் மாநில உணர்வோடு செயல்படமுடியாது என புலம்பல்.

அதாவது டெல்லியில் தமிழர்களின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறதாம். இது அவர்களின் புலம்பல். இங்கே மத்திய அரசு தமிழர்களை வஞ்சிகிறது என்று புலம்பல். எதை நம்புவது?

வாதங்களை எப்படி முன் வைத்தாலும், இது மத்திய அரசின் முடிவல்ல. நீதிமன்றத்தின் முடிவு. அதுவும் நதிநீர்களை பகிர்வது உலகளாவிய பிரச்சினை என்பதால் அதற்கான விதிமுறைகள் சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுவிட்டன. அந்த நடைமுறையை அரசும் கோர்ட்டும் மீறாது.

அதுமட்டுமின்றி இந்தியாவுக்கு அண்டை நாடுகளோடும் இந்த பிரச்சினை இருக்கிறது. பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளுக்கு நாம் தண்ணீர் தரவேண்டிய நிலையில். சீனாவுடன் தண்ணீர் பெறும் நிலையில்.

இங்கே உள்நாட்டில் வழங்கப்படும் தீர்ப்புகள் அங்கேயும் எதிரொலிக்கும். தண்ணீர் உற்பத்தியாகும் மாநிலத்துக்கு சாதகமாக தீர்ப்பு என்றால், அதே வாதத்தை சீனா நமக்கு எதிராக முன் வைக்கும். தண்ணீர் பெறும் மாநிலத்துக்கு சாதகம் என்றால், பாகிஸ்தானும் பங்களாதேசும் அந்த வாதத்தை பயன்படுத்திக் கொள்ளும். இப்படிப்பட்ட நிலையில் நீதிமன்றம் எந்தவிதமான அபத்தத்துக்கும் இடங்கொடுக்காமல் நியாயமாகவே இருக்கும். இந்த யதார்த்தம் புரியாமல் கர்நாடக அரசியல்வாதிகள் உளறுகிறார்கள்.

பற்றாகுறை  

உண்மையை திரித்து சொல்வது சிலருக்கு பழக்கமில்லையா அதையேதான் கர்நாடக அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். பற்றாகுறை இருந்தால் நாங்கள் என்ன செய்வது? இதுதான் அவர்களின் வாதம்.

பற்றாகுறை இயற்கையாய் உருவானது என்றால் அந்த பாதிப்பை அனைவரும் ஏற்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் கர்நாடகாவின் பற்றாகுறை அந்த அடிப்படை அல்ல.

ஒரு நதியை ஒட்டி வாழும் மக்களுக்குதான் அதன் மீது முதல் உரிமை என்பது உலகளாவிய ஒப்பந்தம். அவர்களுக்கு போக மீதி இருந்தால் மற்ற காரணங்களுக்கு பயன்படுத்தலாம். அந்த வகையில் கர்நாடக விவாசாயிகள் மட்டும் பயன்படுத்தினால் இதில் பிரச்சினை வராது. பெங்களூரு நகரத்துக்கும் தண்ணீர் இதிலிருந்து போகவேண்டும் என்றால், அது யாருடைய பிரச்சினை?

அதேசமயம் இன்றைய மக்கள் பிரச்சினையில், அரசியல்வாதிகள்தான் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள். மக்கள் நிஜமாகவே நியாயம் நம் பக்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். மாற்று கருத்து அவர்களுக்கு போய் சேருவதில்லை. 

இந்த வியாதியைதான் நாம் அழிக்க வேண்டும். நம் பக்கம் நியாயம் இல்லை என்பதை உணர்ந்தால், மக்கள் அரசியல்வியாதிகளின் கைப்பிள்ளைகளாக மாறமாட்டார்கள்.

தற்போது நீதித்துறை மக்களின் நம்பிக்கையை இழந்திருப்பது மட்டுமின்றி பலவித நிர்பந்தங்களால் செயல்பட முடியாமல் இருக்கிறது. எனவே இதை தாண்டிய ஒரு வழியை நாம் யோசிக்க வேண்டும்.

நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் போது சிலர் கட்ட பஞ்சாயத்துக்கு போவார்கள். இங்கே நாம் அப்படி போகமுடியாது. ஆனால் இதற்கு பதில் வடமாநிலங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு வேறு ஒரு டிராக்கில் இந்த வழக்கை நடத்தலாம். அவர்கள் வழங்கும் தீர்வுகள் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காது.

நமக்கு தண்ணீர் வேண்டும் என்பதும் முக்கியம், அதேசமயம் நம் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை கர்நாடக, கேரளா மக்களுக்கு மட்டுமின்றி மற்ற மாநில மக்களுக்கும் புரியவைக்கவேண்டும். மேம்போக்காக செய்திகளை படிப்பவர்கள் தமிழர்கள் அண்டை மாநில மக்களுடன் மோதல் போக்கில் இருக்கிறார்கள் என்றே நினைக்கக்கூடும்.

மாற்று தீர்வு 

இந்த வாதங்களில் அவர்கள் முன் வைத்த சில நியாயமான வாதங்கள். 

1) தண்ணீருக்காக சண்டை போடும் தமிழகம், இயற்கையாய் கிடைக்கும் மழையை பாதுகாக்கிறதா? 2) தண்ணீர் அதிகமாக தேவைப்படும் விவசாயத்தை விட, குறைவாக தேவைப்படும் பயிர்களுக்கு மாறலாமே?

முதலில் சொன்னது நியாயமானதுதான். பதிலை நமது அரசியல்வாதிகள்தான் சொல்லவேண்டும்.

இரண்டாவது கேள்விக்கு ஒரு தமிழர் பதிலளித்திருந்தார். நீண்ட காலமாக போர்களில் நாம் குதிரையைத்தான் பயன்படுத்துகிறோம். திடீரென்று அங்கே நாம் கழுதையை பயன்படுத்த முடியாது என்றார்.

நல்ல பதில்தான். விவசாயம் பற்றி  எனக்கு   தெரியாது என்பதால் நான் கருத்து சொல்லமுடியாது. ஆனால் பொதுவான வாதம் ஓன்று இருக்கிறது.

காலமாற்றத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும். அந்த சிந்தனை நம்மிடம் இல்லை. இன்றைய பணக்கார நாடுகளை பாருங்கள். அவர்கள் யாரும் பரம்பரை தொழிலை செய்வதாக தெரியவில்லை. குறைந்த பட்சம் அவர்களுடைய GDP யில் பெரும்பகுதியாக இருக்கும் துறை புதிய துறையாகத்தான் இருக்கும்.

அவர்கள் மாறிவிட்டார்கள். நாம்தான் மாற மறுக்கிறோம். பழைய பஞ்சாங்கத்தை பேசிக்கொன்டிருகிறோம். ஜப்பான் எலக்ட்ரானிக் துறையில் புகுந்து லாபத்தை வாரிக்குவித்தது. அவர்கள் 10 ரூபாய் பொருளை 100 ரூபாய்க்கு விற்றிருக்கலாம். நிஜம் யாருக்கு தெரியும்.

சந்தைக்கு புதிதாக வரும் பொருட்களில் லாபங்கள் இப்படிதான் இருக்கும். இங்கே இன்னொரு லாபமும் இருக்கிறது. இயற்கையை நம்பவேண்டாம். குறைந்த இடத்தில் நிறைய உற்பத்தியை காட்டலாம். வேலை வாய்ப்பையும் அபிரிதமாக உருவாக்கலாம். 

மிகசிறிய நாடான ஜப்பான் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் இருக்க காரணம், இதை அவர்கள் புரிந்து கொண்டார்கள், மாற்றங்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

எதை விற்றால் லாபம், இந்த உலகத்துக்கு என்ன தேவை என்று அவர்கள் சிந்திக்கிறார்கள். அதாவது வெற்றி பெற்றவர்கள்.

ஆனால் நாம்?

10 comments:

Anonymous said...

iyya.. neenga enna solla vareenga? oru elavum puriyala.. neengaley oru vaati padichu parunga..

Anonymous said...

நடந்தாய் வாழி காவிரி ! இன்று தவழ்ந்துக் கூட வராது போல உள்ளதே .. !!! நதி நீர் பங்கீடு இந்தியாவில் தோல்வி ! தோல்வி ! தோல்வி !

வடக்கில் கங்கை நீர் வீணாக வங்கத்தில் கலப்பது கொடுமையில் கொடுமை

சிவானந்தம் said...

வாங்க அனானிமஸ்,

என்ன விளக்கவுரை வேணுமா?

இங்கே இரண்டு விஷயங்களை நான் வலியுறுத்தி இருக்கிறேன். இணையங்களில் வாதங்களை கவனித்தால், தமிழர்கள் அனைவருடனும் சண்டை போடுகிறார்கள் என்ற வாதம் பிற மாநில மக்களால் வைக்கப்படுகிறது. நீதிமன்றம் தீர்பளித்து இருக்கிறதே என்ற வாதம் இங்கே எடுபடுவதில்லை. நீதித்துறையில் லட்சணம் அப்படி.எனவே தண்ணீரை விட நமது இமேஜை காப்பாற்றவேண்டியது முக்கியமாகிவிடுகிறது.

இதுவரை இந்த வழக்குகளுக்காக இரு அரசுகளும் 65 கோடியை செலவு செய்திருக்கிறார்களாம். செலவோடு செலவாக நமது செலவில் பிரைவேட் டிடெக்டிவ் மாதிரி பிரைவேட் நீதிமன்றம் அமைக்கலாம். வட மாநிலங்களை சேர்ந்த நேர்மையான நபர்கள் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு தனிப்பட்ட முறையில் வழக்கு நடத்தலாம். இவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா அல்லது கர்நாடகம் மதிக்குமா என்ற கேள்வி வரும். அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் நமது பக்கம் நியாயம் இருக்கிறது நிரூபிக்கப்படும்.

இரண்டாவது நமது விவசாயத்துறை பற்றியது. இன்று கர்நாடகத்திடம் சண்டை போட்டு தண்ணீரை வாங்கிவிடலாம். நாளை ஒருவேளை இயற்கை கடுமையாக ஏமாற்றினால் தனக்கு மிஞ்சிதான் தானம் என்ற நிலையை கர்நாடகம் எடுக்கும். தமிழ்நாட்டிலும் கடும் வறட்சி ஏற்படலாம்.அப்போது என்ன செய்வது?

அதனால நான் என்ன சொல்ல வரன்னா, உணவு வாழ்வாதார பிரச்சினை என்றாலும், விவசாயத்தை சார்ந்துதான் வாழமுடியும் என்ற மனப்பான்மையிலிருந்து நாம் விடுபட வேண்டும். மற்ற தொழில்களை சார்ந்தும் பணக்கார நாடாக மாறலாம். இன்றைய பணக்கார நாடுகள் அப்படி சிந்தித்துதான் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்த எழவும் புரியலன்னா, `விவசாயம் இந்தியாவை காப்பற்றுமா` என்று ஒரு பதிவு போட்டிருக்கேன். படிக்கவும்.

-------------

வாங்க இக்பால் செல்வன்

மனிதன் நல்லவனாக இருப்பான், தனக்கு பிரச்சினை வராத வரையில். இதுதான் யதார்த்தம். இதே சூழ்நிலை தமிழனுக்கும் வந்தால் அவனும் அப்படித்தான்.

நதி நீர்களை இணைப்பது இந்த பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம். ஆனால் அது அந்தரத்தில் இருக்கிறது. பிரச்சினைகள் முற்றும்போதுதான் வழி பிறக்கும் என்று சொல்வார்களே, எனவே அதுவும் இனி சாத்தியமாகலாம். காத்திருப்போம்.

Anonymous said...

இதையும் படிச்சு பாருங்க
http://churumuri.wordpress.com/2012/10/08/8-reasons-karnataka-is-wrong-on-cauvery-issue/

வாலிபள் said...

காவேரி பகுதியில் இப்போது விவசாயம் குறைந்து விட்டது. பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்று விட்டார்கள. இப்போது வரும் காவேரி நீர் கூட பெரும்பகுதி இப்படி ரியல் எஸ்டேட் ஆன வீடுகளுக்கும், பிளாட்டுகளுக்கும்தான் செல்லும்.
மேலும் இனி தமிழக விவசாயிகள் காவேரியை நம்பி புண்ணியமில்லை. மழைநீரை சேகரிக்க வேண்டும்.
ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வார வேண்டும். மழைநீர் வீணாக கடலில் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோவை வேளாண் பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ள குறைந்த நீரில் பயிர் செய்யப்படும் "புஞ்சை நெல்"லை (இவர்கள் சூட்டிய பெயர் அண்ணா-4. அண்ணாவுக்கும் இந்த நெல்லுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை) காவேரி டெல்டா பகுதிகளில் பயிர்செய்ய முன்வர வேண்டும்.
இந்த நெல்லை மழைநீரை நம்பியிருக்கும் வானம் பார்த்த புன்செய் நிலங்களில் பயிர் செய்யலாம் என்பது சிறப்பு.

Arun Kumar said...

அரசியல் வீண் பேச்சை விட்டு இந்த பிரச்சனைக்கு முடிவு இப்படியாக தான் இருக்க முடியும்

மக்கள் தொகை பெருக்கம் விளை நிலைங்களின் பெருக்கம் இரண்டுமே தவிர்க்க முடியாதவை. அனைவருக்கும் உணவு தேவை.

1. மகாநதி கோதாவரி நதிகள் இணைப்பு, கோதாவரி கிருஷ்ணா நதி இணைப்பு பின் கிருஷ்ணா நதி காவிரி இணைப்பு. இதன் மூலம் கடலில் வீணாகும் 2000 டிஎம்சி நீரை பாசனத்துக்கு பயன்படுத்தலாம்.

2. கர்நாடகாவில் மேற்க்கு நோக்கி செல்லும் நதியான நேதராவதியை காவிரியின் உப நதியான நேதராவதியோடு இணைப்பதன் மூலம் கூடுதலாக பல நூறு டிம் எசி நீர் கிடைக்கும்..

திண்டுக்கல் தனபாலன் said...

மரம் வளர்ப்பதைப் பற்றியோ, வெட்டுவதைப் பற்றியோ யாரும் நினைப்பதேயில்லை... புலம்பல்கள் கூட இல்லை...

சிவானந்தம் said...

வாலிபள், (பெயர் காரணம் என்னவோ?)

அனைத்து கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடுதான். நாம் சிக்கனமாக திட்டமிட்டு செயல்பட்டால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.
----------
அருண்குமார்,

மக்கள் தொகை பெருக்கம்தான் இவை எல்லாவற்றுக்கும் மூலகாரணம். இன்னமும் இந்த விஷயத்தில் சட்டங்களை கடுமையாக்காதது கொடுமைதான்.
----------------------
தனபாலன்,

///மரம் வளர்ப்பதைப் பற்றியோ, வெட்டுவதைப் பற்றியோ யாரும் நினைப்பதேயில்லை... புலம்பல்கள் கூட இல்லை...///

எங்க கவனிக்கறாங்க. எல்லாம் பேச்சோடு சரி. இதற்கு அரசு அபார்ட்மென்ட் சிஸ்டத்தை ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் இடம் மிச்சமாகும். மரங்களை வளர்க்கலாம். ஆனால் இதற்கும் மக்களை மாற்றவேண்டுமே? அவர்கள் பல நூற்றாண்டுகளாக தனி வீடுகளில் இருந்து பழகியவர்கள்.

மாற்றங்களை நாம் விரைவாக புரிந்து கொண்டு ஏற்காதவரை இந்த தலைவலிகள் தொடரும்.

வவ்வால் said...

சிவானந்தம்,

//காலமாற்றத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும். அந்த சிந்தனை நம்மிடம் இல்லை. இன்றைய பணக்கார நாடுகளை பாருங்கள். அவர்கள் யாரும் பரம்பரை தொழிலை செய்வதாக தெரியவில்லை. குறைந்த பட்சம் அவர்களுடைய GDP யில் பெரும்பகுதியாக இருக்கும் துறை புதிய துறையாகத்தான் இருக்கும்.//

தெளிவில்லாமல் உள்ளது, மற்றநாடுகளுக்கும், நமக்கும் உள்ள அடிப்படை வேற்றுமையை கவனிக்காமல் சொல்கிறீர்கள்.

காவிரியில் தண்ணீர் தடையில்லாமல் வந்தாலும் விவசாயம் செய்ய அடுத்த தலைமுறையில் ஆட்கள் இருக்காது, இன்னும் 20 ஆண்டுகளுக்கு பின் நீங்கள் பதிவெழுதினால் "அரசு தொழில் வளர்ச்சி,பணம் என போய் விவசாயத்தை அழித்துவிட்டது என்பதாக இருக்கும் :-))

கிராமங்களில் என்ன நடக்கிறது என்பதையும் ஒரு முறைக்கவனித்துவிட்டு கருத்துக்களை சொல்லுங்கள்.

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

நான் விவசாயத்துறையை எதிர்க்கவில்லை. ஆனால் தற்போது உலகம் மாறிவிட்டது.

ஒரு காலத்தில் இது மிகப்பெரிய துறை. போக்குவரத்து வசதியும் இல்லை. விவசாயப் பொருட்களை அருகிலேயே வாங்க வேண்டும். எனவே அன்று இந்தியா இதில் பலமாக இருந்தது. இப்போது எல்லாம் தலைகீழ்.

இன்று உலக பொருளாதாரத்தில் இது 6 சதவிகிதம். இந்தியாவில் 20. சுருங்கிவிட்ட துறை. போக்குவரத்து விரைவான இறக்குமதியை சாத்தியமாகிவிட்டது. உலகில் எந்த மூலையில் விலை குறைவாக இருந்தாலும் இறக்குமதி செய்யலாம். முக்கியமாக மக்கள் தொகை பெருக்கத்தால் நிலம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை. இப்படி விவசாயத்துறைக்கு எதிராக பல விஷயங்கள் இருக்கிறது.

எனவே லாபகரமான வியாபாரம் இங்கே சாத்தியமில்லை. நம்முடைய தேவைக்கு மட்டும் பார்க்கலாம். தேவைபட்டால் இறக்குமதியும் செய்யலாம்.

இன்று வளர்ந்த நாடுகளில் GDP யில் விவசாயத்தின் பங்கு 2 சதவிகிதம்தான். அந்த அளவுக்கு பிற துறைகள் வளர்ந்துவிட்டன. ஆயுதம் விற்பது, மற்ற நாடுகளிலிருந்து கல்வி கற்க மாணவர்கள் வருவது, டூரிசம், ஹாலிவுட் மூலம் அன்னிய செலாவணி. இது அமெரிக்கா. இப்படி ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு துறை மூலம் சம்பாதிக்கிறது.

அதேபோல் நமக்கும் பல துறைகள் இருக்கலாம். வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கே வந்தால், நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்கு போவது தடுக்கப்பட்டு அந்நிய செலவாணி மிச்சமாகும். இங்கே கல்வி தரமானால், பல நாடுகளிலிருந்து மாணவர்கள் படிக்க இங்கே வருவார்கள். மெடிகல் டூரிசம் போல் கல்வி டூரிசம் மூலம் வருவாய் வரும். இது ஒரு உதாரணம்.

இதையே வேறுவிதமாக சொல்லலாம். நீங்கள் மாதம் 5000 ரூபாய் சம்பாதித்தால் நீங்களே சமைக்கலாம் அப்போது அது சிக்கனம். ஆனால் மாதம் 50,000 சம்பாதிக்கும் திறமை உங்களுக்கு இருந்தால், உங்கள் கவனத்தை தொழிலில் செலுத்துங்கள், சமையலுக்கு ஆள் வைத்துக்கொள்ளலாம். இதுதான் புத்திசாலித்தனம்.

நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களே கூடாது என நினைத்தால் அது ஒரு தொடர் விவாதத்தில் முடியும். அது வேண்டாம். ஆனால் விவசாயத்துறை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அது லாபகரமாக இயங்க ஒரு சாத்தியமான வழி சொல்லுங்கள்.

Post a Comment