!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, December 26, 2011

யுவர் ஹானர், நீங்கள் முட்டாள்கள்தான்! அதாவது அரசு அப்படித்தான்...

இந்த பதிவை ஆரம்பித்ததே எனது சிறை அனுபவங்களையும், நமது சட்ட அமைப்பில் நான் கவனித்த குறைகளை எழுதவும்தான். ஆனால் பல காரணங்களால் அந்த ஆர்வம் குறைந்து போனது. முக்கியமாக அவ்வப்போதைய பரபரப்பான அரசியல் என்னை அங்கே இழுத்துப் போக, எழுத வேண்டும் என்று நினைத்த பல பதிவுகள் எண்ணத்திலேயே இருக்கிறது. இந்த முறை அந்த எண்ணங்களில் ஓன்று பதிவாக.

அரசியல் என்ற துறையை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தாலே போதும், அன்றாட பரபரப்பு செய்திகள் உங்களை பல துறைகளை ஆராய வைக்கும். சில மாதங்களுக்கு முன் அணுசக்தி குறித்த ஆராய்ச்சி என்றால், இப்போது அணைகள் குறித்த ஆராய்ச்சி. இவை அவ்வப்போது மாறினாலும், அரசியலோடு எப்போது தொடர்புடையது பத்திரிகை துறையும், நீதித்துறையும். எனவே அதை கவனிக்காமல் இருக்கவே முடியாது.

அந்த வகையில் நீதித்துறை செய்திகளையும் நான் ஆர்வமாக கவனிப்பதுண்டு. அத்துடன் ஆங்கில மோகமும் என்னை ஆட்டிப் படைத்த சூழ்நிலையில், அதை கற்க எனக்கிருந்த ஒரே வழி ஆங்கில நாவல்கள் மற்றும் செய்திகள் படிப்பதுதான். எனவே பெரும்பாலும் இணையங்களில் செய்திகளிலும், மற்ற நேரங்களில் நாவலுமாக இருந்தேன்.

இப்படி நான் படித்த சில ஆங்கில எழுத்தாளர்களும் வழக்கறிஞர்கள் என்பதால், கதைகள் எல்லாம் கோர்ட், கேஸ் என்றுதான் இருக்கும். அந்த வகையிலும் அதை பற்றிய புரிதல் ஓரளவுக்கு வந்தது. இப்படி நான் கவனித்ததில் வெளிநாடுகளில் இரண்டு விஷயங்கள் என்னை ஈர்த்தது. ஓன்று ஜூரி சிஸ்டம், மற்றொன்று டார்ட் லா (Tort Law). இவை இரண்டுமே சில சீர்திருந்தங்களுடன் இந்தியாவில் கொண்டுவரப்பட வேண்டியவை.

டார்ட் லாவை பொறுத்த வரையில் இது வழக்கறிஞர்கள் பணம் சம்பாரிக்கத்தான் பயன்படும் என்றாலும், இவர்கள் நம் உயிரை எடுத்துவிடுவார்கள் என்ற பயம் தொழில் நிறுவனங்களை மோசடித்தனம் செய்யாமல் கட்டுபடுத்தும்.

இனி நமது நீதித்துறையில் நான் கவனித்த சில குறைபாடுகள்.

இதற்கும் சிறை அனுபவத்துக்கும் சம்பந்தம் இல்லை. நான் சிறையில் இருக்கும் போது இந்த செய்திகளை படித்தேன். எனவே கோபம் கொண்டு இதை பற்றி எழுதினாலும், எங்கேயும் அனுப்பவில்லை. நீதித்துறையை குறை சொல்லி சிறையிலிருந்தே கடிதம் போட முடியுமா? சாதாரணமாகவே எனது கடிதத்தை அனுப்பாதவர்கள் இதை எங்கே அனுப்பப் போகிறார்கள்? எனவே அது டிராப்டாகவே நின்றுபோனது. அதுதான் இந்த பதிவு.

தற்போதைய நீதித்துறையில் நமது நீதிபதிகளின் வேலை என்னவென்றால், சட்டம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே அமல்படுத்த வேண்டியதுதான். அதாவது ஒரு நீதிபதியின் வீட்டுக்கு விருந்துக்கு போகும்போது, பேச்சு வழக்கில், `எனக்கு இட்லி மட்டும் போதும்` என்று நீங்கள் சொன்னால், அவ்வளவுதான்.. சட்னியோ, சாம்பாரோ நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது.

நீதிபதிகள் ஆறாவது அறிவை பயன்படுத்துவதில்லையா அல்லது அவர்களுக்கு சுதந்திரம் இல்லையா என்பது வேறு கதை. ஆனால் இந்திய நீதிமன்றங்களின் செயல்பாடு பல சமயம் அபத்தமாகத்தான் இருக்கிறது. இதற்கு இரண்டு உதாரணங்களை சொல்லலாம். ஓன்று, நடிகர் பிரசாந்த் - கிரஹலட்சுமி விவாகரத்து வழக்கு. இன்னொன்று, சுப்ரீம் கோர்ட் உறுதிபடுத்திய ஒரு அபத்தமான தீர்ப்பு.

நடிகர் பிரசாந்த் வழக்கு எல்லோருக்கும் தெரியும். கிரஹலட்சுமி தனது முதல் திருமணத்தை மறைத்து பிரசாந்தை திருமணம் செய்தார். எனவே பிரசாந்துடனான திருமணம் செல்லாது என குடும்ப நல நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்பளித்துவிட்டது. இந்த பதிவுக்காக அந்த தீர்ப்பை தேடிப் படித்தேன். அதில் சில முக்கிய வரிகள் இங்கே.

...The appellant (Grahalakshmi ) is also a graduate and belongs to a decent family ..
...Since we have held that a suppression of registration of earlier marriage amounts to fraud, the provision under Sec.12(1)(c) is attracted and the competent court is empowered to annul the marriage...


இந்த வழக்கில் கிரஹலக்ஷ்மி தனது முந்தைய திருமணத்தை மறைத்ததால் அது மோசடி என்றும் எனவே பிரசாந்துடனான திருமணம் செல்லாது என்றும் தீர்ப்பு. சரி. நீதி நிலைநாட்டப்பட்டது. அந்த வகையில் சந்தோசம். ஆனால் இந்த தீர்ப்பு வேறு சில கேள்விகளை எழுப்புகிறதே? நீதிமன்றமே இது ஒரு மோசடி என்று தெரிவித்து இருக்கிறது. அதுவும் அவர் படித்தவர், நல்ல குடும்பம் என்ற சர்டிபிகேட் வேறு. ஒரு படிப்பறிவில்லாத பெண் என்றால் இந்த மோசடியை அறியாமை என்று மன்னித்து விடலாம். ஆனால் இங்கே அப்படி இல்லை. அவர் மோசடி செய்திருக்கிறார் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஊர்ஜிதம் செய்த பிறகு அதற்கான தண்டனை அவருக்கு வழங்கப்பட்டதா? இந்த தீர்ப்பில் அப்படி எதுவும் இல்லை.

மோசடி வழக்கு வேறு வழக்காக பதிவாகி இருக்கிறது. அதன் நிலை தெரியவில்லை. அங்கே இது மோசடி இல்லை என்று தீர்ப்பானால் இந்த தீர்ப்பின் கதி என்ன? அல்லது மோசடி என்று தீர்ப்பானால் ஒரே தீர்ப்பை இரண்டு நீதிபதிகள் எதற்கு எழுத வேண்டும். அனாவசிய செலவுதானே?

நிர்வாக வசதிக்காக கோர்ட்கள் பல துறைகளாக பிரிக்கப்படுவது நல்லதுதான். இருந்தாலும் சூழ்நிலைகளை அனுசரித்து போகவேண்டிய சூழ்நிலையும் வரும். எனவே ஒரு வழக்கு பல கிளை குற்றங்களை கொண்டிருந்தால், மிகப் பெரிய குற்றங்களை விசாரிக்கும் நீதிபதியே இவற்றையும் விசாரிக்கும் அளவுக்கு வழி காண வேண்டும். (ஏற்கனவே ஒரு பதிவில் `சிறைகளில் செல்போன்` போன்ற குற்றங்களை அந்த கைதியின் வழக்கு நடைபெறும் கோர்ட்டிலேயே விசாரிக்க வேண்டும் என்று எழுதி இருந்தேன்.)  

இல்லை... ஒரு நீதிபதிக்கு என்ன வேலை ஒதுக்கப்பட்டதோ அவர் அதை மட்டும்தான் செய்யவேண்டும், அதுதான் முறை என்றால், நான் உங்களுக்கு ஒரு பழைய செய்தியை நினைவுபடுத்துகிறேன்.

ஒரு போலீஸ்காரர் ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு ரோட்டில் கிடக்கிறார். அந்த வழியாக் வந்த அமைச்சரோ ஆம்புலன்சுக்கு போன் பண்ணிவிட்டு வேடிக்கை பார்கிறார். அவரை பொறுத்த வரையில் அடிப்பட்டவர்களை அழைத்துப் போக வேண்டியது ஆம்புலன்சின் வேலை. `சூழ்நிலைகளை அனுசரித்து அவர் மற்ற கார்களை பயன்படுத்தி இருக்கலாமே` என்று கடுமையான விமர்சனம் அவர் மீது வந்தது. சூழ்நிலைகளை அனுசரித்து முடிவெடுப்பதுதான் புத்திசாலித்தனம் என்றால் அதே சிந்தனையை நீதிமன்றத்திலும் ஏன் புகுத்தக் கூடாது?

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதன் காரணம் அது எளிமைபடுத்தப் படாமல், பல அனாவசியமான வழக்குகளால் இப்படி திணறுவதுதான். இன்னொரு முக்கிய காரணமும் (மோசடி) இருக்கிறது. அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Omprakash & Ors. vs Radhacharan & Ors.

இந்த அபத்தமான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திலிருந்து வந்த ஓன்று. ஒரு பெண்ணுக்கு திருமணமான சில மாதங்களிலேயே கணவன் இறந்துவிட்டான். புகுந்த வீட்டில் துரத்திவிட்டார்கள். பெற்றோர்கள் ஆதரவிலேயே வாழ்ந்தார். இந்த வாழ்க்கையில் அவர் சம்பாதித்து ஓரளவு பணமும் சேர்த்தார். ஆனால் இவரும் இறந்த பிறகு அந்த சொத்துக்கு அவருடைய தாயும், கணவனுடைய சகோதரி மகன்களும் உரிமை கொண்டாடினர். புகுந்த வீட்டில் கணவன் இறந்த உடனையே துரத்தி விட்டார்கள். சொத்தும் இந்த பெண் சுயமாக சம்பாதித்தது. ஆதரவளித்தது அந்த பெண்ணுடைய பெற்றோர்தான். எனவே நியாயமாக அந்த சொத்து அந்த பெண்ணின் பெற்றோர்களுக்குத்தானே போய் சேரவேண்டும்?

ஆனால் உச்ச நீதிமன்றம் சொல்வதை கேளுங்கள்.

...This is a hard case. Narayani during her life time did not visit her in-laws' place. We will presume that the contentions raised by Mr. Choudhury that she had not been lent any support from her husband's family is correct and all support had come from her parents but then only because a case appears to be hard would not lead us to invoke different interpretation of a statutory provision which is otherwise impermissible. It is now a well settled principle of law that sentiment or sympathy alone would not be a guiding factor in determining the rights of the parties which are otherwise clear and unambiguous. ...


ஒரு பெண் உயில் எழுதாமல் இறந்தால் சொத்துக்கள் அந்த பெண்ணின் குழந்தைகளுக்கும், அப்படி இல்லாதபட்சத்தில் கணவனின் (உறவுமுறை) வாரிசுகளுக்கே முன்னுரிமை என்று சட்டம் சொல்கிறதாம். இதற்கு ஒரே விதிவிலக்குத்தான். அதாவது அந்த பெண்ணுக்கு குழந்தைகள் இல்லாத சூழ்நிலையில், அந்த பெண்ணுக்கு பெற்றோர் வழியில் வந்த சொத்துக்கள் பெற்றோர்களுக்கும், கணவன் வழியில் வந்தவை, கணவனின் உறவுகளுக்கும் போய் சேரும். இதுதான் சட்டமாம். ஒரு பெண் தானாக சம்பாரித்த சொத்துக்களை என்ன செய்வது என்று சட்டம் சொல்லவில்லை. எனவே இது ஒரு Hard Case ஆக இருந்தாலும் நாங்களாக எதையும் அர்த்தம் கொடுக்க முடியாது. எனவே சட்டப்படி அந்த பெண்ணின் கணவனின் உறவுகள்தான் வாரிசு என்று தீர்பளித்துவிட்டார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்த பலரும், நீதிபதிகள் உட்பட, இது அபத்தமான தீர்ப்பு எனவே சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்றே சொல்கின்றனர். அது சரி என்றாலும், இது மட்டும் பல அபத்தங்களை தடுக்குமா. இது மக்களின் கவனத்துக்கு வந்த ஒரு அபத்தம். பல அபத்தங்கள் நமக்கு தெரியாமலே போயிருக்கலாம். பலருக்கு நீதியும் மறுக்கப்பட்டிருக்கலாம். இந்த சட்டங்கள் திருத்தப்பட்டாலும், நாளை வேறு ஒரு துறையில் வேறு ஒரு அபத்தம் கண்டுபிடிக்கப்படும். இதற்கு என்னதான் வழி?

அதை அலசும் முன் ஒரு கதையை பார்ப்போம். ஒரு ராஜாவின் பேரன் நடக்கும் போது காலில் முள் குத்திவிட்டதாம். ராஜா துடித்துப் போய்விட்டார். உடனே உத்தரவு போட்டார். `என் பேரன் நடக்குமிடம் எல்லாம் மலரை தூவுங்கள்` என்று. ஆனால் ஒரு மந்திரி, `அதற்கு பதில் உங்கள் பேரனுக்கு பாதரட்சை அணியுங்களேன்` என்றாராம். ஆக எது புத்திசாலித்தனம்?           

ஒரே ஒரு சட்டம்போதும். அதாவது சட்டங்கள் தேவை என்றாலும், அதை அப்படியே பின்பற்றவேண்டும் என்று நீதிபதிகளுக்கு சொல்வது அவர்களை முட்டாள்கள் என்று சொல்வதற்கு சமம். அதைவிட அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கலாம். ஏதேனும் ஒரு வழக்கில் சட்டத்திற்கும், அறிவார்ந்த பார்வைக்கும் மோதல் ஏற்பட்டால், நீதிபதிகள் அறிவார்ந்த பார்வையில் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை கொடுக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்றி விடலாம். இதன் மூலம் அபத்தமான சட்டங்களையும் மீறி உண்மையான நீதியை நீதிபதிகள் வழங்க முடியும்.

ஆனால் இப்படி ஒரு சுதந்திரத்தை நீதிபதிகளுக்கு கொடுத்தால், நீதித்துறையும் இன்று ஊழலில் திளைக்கும் நிலையில், பல நீதிபதிகள் பல அர்த்தங்களை கொடுத்து புகுந்து விளையாடுவார்களே? நியாயமான கேள்விதான். எனவே இதற்கும் சில விதிமுறைகளை புகுத்தலாம். 

இந்த விதியின் கீழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் அதை உடனடியாக அமல்படுத்தவும் கூடாது, அதேசமயம் அந்த தீர்ப்பு தன்னிச்சையாகவும், உடனடியாகவும் இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகளால் அப்பீலுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் விதி வகுக்கலாம். அவர்கள் இந்த தீர்ப்பை உறுதிபடுத்தினால், சம்மந்தப்பட்ட  சட்டமன்றம் இதை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு விவாதித்து சட்டமாகி விடலாம். ஆனால் அந்த தீர்ப்பு நிராகரிக்கப்படும் பட்சத்தில், இது கருத்து வேறுபாடு என்ற அளவில் இல்லாமல் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்தால், அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் எதிர்காலம் பாதிக்கும் அளவுக்கு விதிமுறைகள் இருந்தால் போதும். கருப்பு ஆடுகள் ஒருபோதும் துணியாது.

அதாவது சட்டங்களில் இருக்கும் குறைகளை கண்ட பிறகு, சிலருக்கு நீதியும் மறுக்கப்பட்ட பிறகு,   அவற்றை விவாதித்து சரி செய்வதை விட, சரியான நீதியையும் வழங்கி, சட்டங்களில் இருக்கும் குறைகளை தானாகவே சரி செய்யும் Inbuilt system ஆக இது இருக்கும்.

ஏற்கனவே எனது சில பதிவுகள் காபி பேஸ்ட் ஆகி இருக்கிறது. எனது பதிவுகளில் மாற்றுக் கருத்து இருந்தால் சுட்டி காட்டுங்கள். சரி எனப்பட்டால் காபி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.  எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.


               

5 comments:

Anonymous said...

ஒருவேளை கேசுக்கு தகுந்த மாதிரி தீர்ப்பு சொன்னா அதையே முன்னுதாரணமா வச்சுகிட்டு வாதிட்டா என்ன செய்றது? எனக்கு இப்ப ஞாபகம் வர்றது' சுப்ரீம் கோர்ட் தீர்ப்புதான் சரி ஏன்னா அதுக்கே மேலே போக வேற கோர்ட் இல்ல...இருந்தா கண்டிப்பா போவோம். வேற வழியில்ல..இல்லையா...

Stumblednews said...

If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

சிவானந்தம் said...

@ Chilled beers said...

///ஒருவேளை கேசுக்கு தகுந்த மாதிரி தீர்ப்பு சொன்னா அதையே முன்னுதாரணமா வச்சுகிட்டு வாதிட்டா என்ன செய்றது? எனக்கு இப்ப ஞாபகம் வர்றது' சுப்ரீம் கோர்ட் தீர்ப்புதான் சரி ஏன்னா அதுக்கே மேலே போக வேற கோர்ட் இல்ல...இருந்தா கண்டிப்பா போவோம். வேற வழியில்ல..இல்லையா...///

வாங்க நண்பரே.

அப்பீலில் நமது தீர்ப்பு பரீசீலிக்கப்படும் என்ற பயம் கீழ் கோர்ட் நீதிபதிகளுக்கு இருக்கும், எனவே பயப்பட தேவையில்லை. அடுத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்புதான் சரி என்று சொல்லி இருக்கிறீர்கள். நான் இரண்டாவதாக குறிப்பிட்ட அபத்தமான தீர்ப்பை வழங்கியதே சுப்ரீம் கோர்ட்தான். அப்புறம் அதையும் தாண்டி எங்கே நீதி கிடைக்கும்? எனவே நீதிபதிகளுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுப்பதுதான் சரி.

Rathnavel said...

அருமையான பதிவு.
எல்லோரும் யோசிக்க வேண்டும்; செயல் படுத்த வேண்டும்.
உங்கள் பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

சிவானந்தம் said...

வாங்க ரத்னவேல் சார்.

உங்களின் வருகைக்கும், முகநூல் பகிர்வுக்கும் நன்றி

Post a Comment