!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, January 29, 2014

மூடர் கூடம் (இது சினிமா அல்ல)



இந்தியாவில் ஒரு பிரிவினர் சுயநலம் காரணமாக சட்டத்தை மீறி நாட்டுக்கு நஷ்டத்தை உண்டாக்குகிறார்கள் என்றால், இன்னொரு பிரிவினர் சட்டத்தை பின்பற்றுகிறேன் என்று செய்யும் காமெடிகள் வேறு வகை. அப்படி சில கதைகள் இங்கே.

டைம்ஸ் ஆப் இண்டியா 

இங்கே உள்ளூர் நூலகத்திற்கு போனேன். டைம்ஸ் ஆப் இண்டியா படித்தேன். டேபிளில் நின்று கொண்டே படிக்கும் வகையில் இருந்தது. சற்று நேரத்தில் கால் வலிக்க, பேப்பரை எடுத்துக் கொண்டு உட்காரப் போனேன். நூலகர் தடுத்தார். அந்த பேப்பர் அந்த டேபிளில்தான் இருக்க வேண்டும் என்றார். அதாவது டைம்ஸ் ஆப் இண்டியா நின்றுகொண்டுதான் படிக்க வேண்டும். இப்படி ஒரு சட்டம்!  

இங்கே வருவது TOI -யும் இண்டியன் எக்ஸ்பிரசும். இந்த நூலகத்தை திறந்த போது யாராவது ஒரு அதிகாரி, ஒரு பேப்பரை இந்த டேபிளிலும் மற்றொன்றை சாதா டேபிளிலும் வை என்று டெமோ காட்டி இருந்திருப்பார். அப்படி அவர் இந்த டேபிளில் வைத்த பேப்பர் TOI ஆக இருந்திருக்கக்கூடும்.

இந்த நூலகரும் (மகாபாரத) குந்திதேவியின் மகன் பரம்பரையாக அதை அட்சரம் பிசகாமல் அப்படியே அமல்படுத்துகிறார்.

நான் யோசித்தேன். நின்றுகொண்டே  படித்தாவது  அறிவை வளர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை, இதுவரை வளர்ந்த அறிவே போதும் என்று நடையை கட்டினேன்.

இதில் இன்னொரு கொடுமையும் இருக்கிறது. இப்படி நின்றபடி படிக்கும் டேபிளில் பேப்பர் முழுவதும் வைக்கப்படிருக்கும். அதாவது, ஒருவர் நின்றுகொண்டு படித்தால் மற்றவருக்கு பேப்பர் கிடைக்காது. இந்த ஊர் மக்களுக்கு ஆங்கில மோகம் இல்லை என்பதால், நான் படிக்கும் போது யாரும் சீண்டுவது இல்லை. அது எனக்கு வசதிதான். 

இதுவே தமிழ்நாடாக இருந்து, `எனக்கு நடுப்பக்கம் மட்டும் கொடுங்கன்னு` யாராவது கேட்டா என்ன செய்யறது? ஒன்னும் புரியல. இதுக்கு அவர் என்ன ரூல்ஸ் வச்சிருக்கார்ன்னு தெரியல.

நாட்டிலேயே அதிகம் படிப்பவர்கள் நூலகர்கள்தான். அந்த வகையில் பொது அறிவு கொஞ்சமாவது இருக்கவேண்டும். ஆனால் இது இந்தியா. இங்கே எந்த தியரியும் வேலை செய்யாது.

நேரம் சரியில்லை 

இந்தியாவில்தான் நேரம் சரியில்லையாம். அந்த பக்கம் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்த பக்கம் குஜராத்துக்கும் இடையே 3 மணிநேர வித்தியாசம் இருக்கிறதாம். அசாமில் சூரியன் 4 மணிக்கு உதிக்க, குஜராத்தில் அது 7 மணிக்கு. தமிழ்நாட்டுக்கும் குஜராத்துக்கும் ஒரு மணிநேர வித்தியாசம். தமிழ்நாட்டில் 6 மணிக்கு விடியல்.

இந்த முரண்பாட்டாலும் இங்கே ஒரு காமெடி. 

இங்கே (குஜராத்) காலை 7 மணிக்கு டூட்டிக்கு வரும் சூரியனார் அதற்கு தகுந்தாற் போல்தானே வீட்டுக்கு போவார்? எனவே 7 மணிக்குதான் இருட்ட ஆரம்பிக்கும். இருந்தாலும் நம் ஆட்கள் சட்டத்தை மீறாத கடமை வீரர்கள் ஆயிற்றே. மாலை 6 முதல் காலை 6 வரை தெரு விளக்குகள் எரிய வேண்டும் என்ற சட்டம் இந்தியா முழுமைக்கும் அமலில் இருக்கும் போலிருக்கிறது. இவர்களும் அப்படியே நடந்து கொள்கிறார்கள். 6 மணிக்கு மேல் நான் இதை கவனிப்பேன். வெளிச்சம் நன்றாக இருக்கும், ஆனால் தெரு விளக்குகள் போடப்பட்டிருக்கும். 

இதுபற்றி சமீபத்தில் ஒரு செய்தியும் படித்தேன். அசாமில் ஒரு மணிநேரம் திருத்தப்பட்டிருக்கிறதாம். அதாவது ஒரு மணிநேரம் முன்னதாக. நமக்கு 5 மணி என்றால், அவர்களுக்கு மணி 6.

அவர்களும் மத்திய அரசிடம் வடகிழக்கு மாநிலங்களுக்கு வேறு டைம் ஜோன் கொடுங்கள் என்று கேட்டுபார்த்தார்கள். மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. எனவே அவர்கள் மாறிவிட்டார்கள். இதில்தான் ஒரு செய்தியை கவனித்தேன்.

இங்கே நேரம் உள்ளூர் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாற்றம் செய்யப்பட்டால், வேலை நேரம் மற்றும் எரிபொருள் கணிசமாக மிச்சமாகுமாம். இதனால் பல ஆயிரம் கோடிகளில் நஷ்டமாம்.

எனக்கு இதுதான் புரியவில்லை. அதாவது இந்த விஷயத்தில் அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது என்றாலும், அங்கே நாலு மணிக்கு விடியல் என்றால் அதற்கு தகுந்தாற்போல் மற்றவற்றை மாற்றிக் கொள்ளவேண்டியதுதானே? எப்படி நஷ்டம் வரும்?

ஒருவேளை அலுவலங்கள்/ பள்ளிகள் காலை 1 0 முதல் 5 மணிவரை என்பதை இவர்களும் அப்படியே கடைபிடிக்கிறார்களோ? இந்த விதியை கடைபிடித்தால் அவர்களுடைய சூரிய உதயத்தின்படி நிறைய முரன்படுமே?

அதாவது அந்த அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் ஒரு அலுவலர் மாலை 5 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு அவர் வீட்டுக்கு வரும்போது அவர்களுக்கு அது இரவு 8 மணியாக இருக்கும். சாப்பிட்டு அப்படியே படுத்து தூங்க வேண்டியதுதான்.

ஆக, அவர்களின் ஆபிஸ் உச்சி வெயிலில் ஆரம்பித்து இரவுதான் முடியும். இப்படியும் மின் செலவு. அல்லது உள்ளூர் வெளிச்சத்தை கணக்கில் கொள்ளாமல் அங்கேயும் 6 டு 6 என தெருவிளக்கையும் எரிய விடுகிறார்களா? இதுமட்டுமில்லாமல் வேறு என்ன காமெடிகள் அங்கே நடைபெறுகிறதோ? அங்கே போனால்தான் தெரியும். 

போஸ்ட் கவர்

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் (நங்கநல்லூர்) சில வருடங்களுக்கு முன் நடந்தது. பள்ளியில் மாணவர்களுக்கு அவர்களின் மார்க் சீட் அல்லது ஏதோ ஒன்றை வீட்டுக்கு தபாலில்தான் அனுப்பவேண்டுமாம். எனவே எல்லா பிள்ளைகளும் போஸ்ட் கவர் வாங்கி அவர்களுடைய முகவரியை எழுதி ஸ்கூலில் கொடுக்க வேண்டும்.

அப்போது நான் இருந்த ஏரியாவில் போஸ்ட் கவர் போஸ்ட் ஆபீஸிலேயே இல்லை. அவ்வளவு டிமாண்ட். பிள்ளைகளும் பெற்றோர்களும் அதற்காக அலைந்தார்கள். ஒருவர் கிண்டி போய் வாங்கி வந்தார். ஐஞ்சு ரூபாய் கவருக்காக பத்து ரூபாய் செலவு பண்ணியிருப்பார். பலர் இப்படி அலைந்து வாங்கி வந்தார்கள்.

இப்படி நூற்றுக்கணக்கான பேரை அலையவைத்து, அவர்களுக்கு வேலை மற்றும் பண விரயத்தை ஏற்படுத்தி.. ஏன் இந்த முட்டாள்த்தனம்? இவர்களே ஒரு ஆளை அனுப்பி மொத்தமாக வாங்கி விடலாமே? பிள்ளைகளிடம் கொடுத்து தற்போதைய முகவரி எழுதி கொண்டுவாருங்கள் என்று சொன்னால் போதுமே?

மக்களுக்கு அறிவை போதிக்க வேண்டிய பள்ளி நிர்வாகமே இப்படி முட்டாள்த்தனமாக இருந்தால், இந்த நாட்டை என்னவென்று சொல்வது? மூடர் கூடம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.


4 comments:

சேக்காளி said...

சுவராசியமான செய்திகள் நண்பா.

வவ்வால் said...

சிவானந்தம்,

நூலகங்களுக்கென எப்பொழுது தனி நடைமுறைகள் உண்டு! அபத்தமாக இருந்தாலும் கேள்விக்கேட்க முடியாது.

# நூலகத்தில் பொதுவாகவே செய்த்தித்தாள்களை ,பஞ்ச் போட்டு டேக் வைத்து கட்டி ஒரே பேப்பராகத்தான் வைப்பார்கள்,நம்ம ஆட்கள் தான் ஆளுக்கொரு பேப்பர்னு பாகப்பிரிவினை செய்வதே :))

கன்னிமரா நூலகத்தில் காலையில் கட்டி வச்சதை மக்கள் கொஞ்ச நேரத்தில் பக்கம்,பக்கமா பிரிச்செடுப்பதும்,நூலக உதவியாளர் கொஞ்ச நேரத்தில் வந்து யார் பிரிச்சா...பிரிச்சானு கத்துவதும் வாடிக்கையான ஒன்று.

ஒருக்காலத்தில் அங்கு தினப்படி காலையில போய் மாலை மூடும் வரையில் "பட்டறைப்போட்டு" படிச்ச கோஷ்டி ஆளு நாம அவ்வ்!

#//அசாமில் சூரியன் 4 மணிக்கு உதிக்க, குஜராத்தில் அது 7 மணிக்கு. தமிழ்நாட்டுக்கும் குஜராத்துக்கும் ஒரு மணிநேர வித்தியாசம். தமிழ்நாட்டில் 6 மணிக்கு விடியல்.//

இதனை எனது பதிவில் கூட முன்னரே சொல்லி இருக்கேன்.

அஸ்ஸாமில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலைனாலும்,அஸ்ஸாம் ஸ்டேண்டர்ட் டைம் என அங்கு பயன்ப்பாட்டில் உள்ளது.

2 மணிக்கெல்லாம் அங்கே குளோஸ் ஆகிடும்.

2 மணிக்கு மேல பஸ் கூட இருக்காதாம் அவ்வ். ஷேர் ஆட்டோ போல ஷேர் ஜீப் தான் ஓடுதாம்,அதுவும் 5 மணியோட சரி அவ்வ்.

நம்ம நண்பர் ஒருவர் அங்கேப்போயிட்டு வந்து செம பொலம்பல் அவ்வ்!

ஜோதிஜி said...

இதுவரையிலும் தெரியாத செய்திகள்

சிவானந்தம் said...

@சேக்காளி

@ஜோதிஜி

இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிவரை எவ்வளவோ வித்தியாசங்கள்! சாப்பாட்டிலிருந்து வாழ்வியல் வரை எல்லாமே புதுமைதான்.
------------
வாங்க வவ்வால்,

///# நூலகத்தில் பொதுவாகவே செய்த்தித்தாள்களை ,பஞ்ச் போட்டு டேக் வைத்து கட்டி ஒரே பேப்பராகத்தான் வைப்பார்கள்,நம்ம ஆட்கள் தான் ஆளுக்கொரு பேப்பர்னு பாகப்பிரிவினை செய்வதே :))

கன்னிமரா நூலகத்தில் காலையில் கட்டி வச்சதை மக்கள் கொஞ்ச நேரத்தில் பக்கம்,பக்கமா பிரிச்செடுப்பதும்,நூலக உதவியாளர் கொஞ்ச நேரத்தில் வந்து யார் பிரிச்சா...பிரிச்சானு கத்துவதும் வாடிக்கையான ஒன்று.///

எனக்கு பிடிக்காத ஓன்று இது. கல்வியை வேண்டுமானால் ஒன்னாம் கிளாஸ், ரெண்டாம் கிளாஸ் என்று வரிசைப்படுத்தலாம். செய்திகளை தெரிந்து கொள்ளவதில் எந்த பக்கத்தை முதலில் படித்தால் என்ன? நூலகங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பிரித்துபோடுவதுதான் சரி.

//ஒருக்காலத்தில் அங்கு தினப்படி காலையில போய் மாலை மூடும் வரையில் "பட்டறைப்போட்டு" படிச்ச கோஷ்டி ஆளு நாம அவ்வ்!//

அதான் எல்லாத்துலயும் கலக்குறீங்களோ. சேம் பிளட்.

நானும் இப்படிதான். ஆனால் அதிகம் நூலகம் போனதில்லை. கடலூரில் நம் கடைக்கு பக்கத்திலேயே பேப்பர் கடை. தினம் அப்படியே மேய்ந்துவிடுவேன். சில சமயம் வார இதழ்களை படித்துவிட்டு, மனசாட்சி உறுத்தினால், அதற்கு ஒரு ரூபாய் கட்டணம் கொடுத்துவிடுவேன்.

ம்ஹும்.. இப்படியெல்லாம் படித்து அறிவை வளர்த்தும் நாம் இன்னும் பதிவுலகில்தான் குப்பை கொட்றோம்.

Post a Comment