!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Wednesday, January 26, 2011

சிறை அனுபவம்: சிறையில் செல்போன் புழங்க காரணம் என்ன...part 1

சிறையில் அடிக்கடி செல்போன் கைபற்றப்படுவதாக வரும் செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். இதையெல்லாம் படிக்கும்போது சிறைத்துறையில் ஊழல் மலிந்து விட்டது, எனவேதான் கைதிகள் துணிச்சலாக செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இதுவும் ஒருவகையில் உண்மைதான். ஆனால் வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

அதற்கு முன் ஒரு தன்னிலை விளக்கம். சிறையில் அதுவும் நான் இருந்த பிளாக்கில் செல்போன் புழக்கம் கொஞ்சம் ஓவர். ஒரு மணிநேரத்துக்கு 500௦௦ ரூபாயும், அரை மணிநேரத்துக்கு 300 என்றும், `ஒரே ஒரு கால்தான், 5 நிமிஷம் பேசினால் போதும்` என்றால் ரூ. 100 என்றெல்லாம் ரேட் ஓடிகொண்டிருந்தது. இதுவும் நிரந்தரமல்ல. விலைவாசியை போல் அப்பப்ப மாறும். மற்றபடி இதிலும் மாமுல் (ஓசி), தெரிந்தவர்களுக்கு சலுகைகள் எல்லாம் உண்டு. என்னிடம் பணம் வேண்டாம் என்று சிலர் சொன்னாலும், சிறையில் நான் பேசவில்லை. காரணம், எனக்கு எந்த தேவையும் ஏற்படவில்லை என்பதுதான். நான் உறவுகளே வேண்டாம் என்று உள்ளே வந்ததால் அவர்களுடன் பேசவேண்டிய அவசியமும் இல்லை. பெயில் வேண்டாம் என்று இருந்ததால் வழக்கறிஞரின் உதவியும் எனக்கு தேவைப்படவில்லை.

சில சமயம் எனது கடை ஊழியரை வந்து பார்க்க சொல்லவும் மேலும் வரும்போது என்ன வாங்கி வரவேண்டும் என்ற தகவலும் சொல்லவேண்டி இருக்கும். இதற்காக சிறையிலிருந்து கடிதம் போடலாம். ஆனால் இவர்கள் அதை சென்சார் செய்து அனுப்பி அது போய் சேர எப்படியும் 10 நாளாகும். எனவே அவசரமான தகவல் என்றால் உள்ளே எனக்கிருந்த நண்பரிடம் சொல்வேன். அவருக்கு வாரம் ஒரு மனு வரும் என்பதால், அவரை பார்க்க வரும் உறவினர்களிடம் சொல்லி அனுப்பிவிடுவார். அல்லது `எப்படியோ` தகவல் போய் சேர்ந்துவிடும். எனவேதான் நான் அதை தொடவில்லை.

செல்போன் எப்படி உள்ளே வருகிறது என்றெல்லாம் நான் விரிவாக விளக்கப் போவதில்லை. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், சிறையில் நானாக எந்த ஆராய்ச்சியிலும் இறங்கவில்லை என்று. பலர் சொல்லி, கேட்டு தெரிந்து கொண்டவைதான். நான் புரிந்துகொண்டதை சுருக்கமாக சொல்வதென்றால், முக்கால்வாசி, சிறைக்காவலர்கள் தான் இந்த வேலையை செய்கிறார்கள். மற்றவை வெளியிலிருந்து `வரவழைக்கப்` படுகிறது. புழல் சிறை 2 -ல், சில பிளாக்குகளின் சுற்றுப்புற சுவரை ஒட்டி ரோடு இருக்கிறது. அங்கேயிருந்து பொருட்களை பந்தாய் சுருட்டி உள்ளே எறிந்தால் அது சரியாக பிளாக்கினுள் வந்து விழும். வெளியே இருக்கும் வீச்சாளர்களுக்கு உள்ளேயிருந்தே போன்மூலம் தகவல் சொல்லப்பட்டு, அங்கே காவலர் இருக்கிறாரா என்று கண்காணித்து, உள்ளே பிளாக்கினுள் காவலர் இருந்தால் அவரிடம் வேண்டுமென்றே பேச்சை கொடுத்து, அவர் கவனத்தை திசைதிருப்பி.... இதே வேலையில் இருக்கும் மற்ற கைதிகளின் கண்ணில் படாமல்... (பட்டுவிட்டால் அவர்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டி இருக்கும் அல்லது சிலர் போட்டுக் கொடுப்பார்கள்) இதற்காக ISRO கணக்காய் திட்டமிட்டு வரவழைக்கிறார்கள்.

சிறைக்குள் செல்போனின் பயன்பாடு என்று பார்த்தோமேயானால், என்னுடைய கணிப்பின்படி 80 சதவிகீதத்திற்கும் மேற்பட்டவர்கள் போனை உறவினர்களிடம் மற்றும் வழக்கறிஞ்ர்களிடம் பேசுவதற்காகத்தான் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் வேண்டுமானால் சாட்சிகளை மிரட்டவும், அல்லது உள்ளேயிருந்தே வெளியில் இருக்கும் தங்கள் கூட்டாளிகளிடம் அடுத்த `காரியத்துக்கு` திட்டமிடுவதற்காக பயன்படுத்தலாம். சிலர் தங்கள் `தொழிலை` தொடரவும் பயன்படுத்துகிறார்கள்.

பல நாடுகளில் கைதிகள் உறவினர் களிடம் பேசுவதற்காக சிறைக்குள்ளேயே கண்காணிக்கப்பட்ட போன் வசதி உண்டு. இந்தியாவிலும் சில மாநிலங்களில் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் தமிழகத்தில் இந்த வசதியை செய்யாததன் காரணம் தெரியவில்லை.இது சிறைவாசிகளின் நியாயமான கோரிக்கை. இந்த வசதியை ஏற்படுத்துவதன் மூலம் சிறைக்குள் செல்போன் புழக்கத்தையும் கட்டுபடுத்தலாம், பலவகைகளில் சிறைத்துறையும், நாடும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

கைதிகள் என்னதான் குற்றவாளிகளாக, மோசமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் என்று உறவுகள் இருக்கும். அவர்களை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று நினைப்பது தவறில்லையே. ஆரம்பத்தில் தவறான பாதையில் செல்பவர்கள் கூட, தான் சிறையில் இருப்பதால், தனது உறவுகள் வருமானம் இன்றி கஷ்டப்படுவதை, அதை அவர்கள் காதாலேயே கேட்ட நேர்ந்தால் அவர்கள் மனம் திருந்தவும் வாய்ப்பிருக்கிறது. பல்வேறு குடும்ப பிரச்சினைகளில் உறவுகளுக்கு ஆலோசனையும் வழங்க வேண்டி இருக்கும். வழக்கு தொடர்பான சந்தேகங்களுக்காக வழக்கறிஞ்சரிடம் பேச வேண்டிய அவசியமும் ஏற்படும். இந்த நியாயமான வசதியை அரசு ஏற்படுத்திதராத சூழ்நிலையில், தவறான வழியில் அவர்கள் அதை வரவழைக்கிறார்கள்.

சிறையில் செல்போன் புழக்கத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தற்போது சென்னையில் இருக்கும் உங்கள் உறவினர் உங்களை பார்க்க வரவேண்டும் என்றால், அதுவும் அவர் வேலைக்கு போகும் நபராக இருந்தால் அவருடைய ஒரு நாள் வருவாய் இழப்பு மற்றும் வந்துபோகும் செலவு என்று கணக்கிட்டால் வறுமையில் வாடுபவர்களுக்கு இது ஒரு சுமை. வசதியானவர்களுக்கு செலவு. ஒரு நபருக்கே இப்படியென்றால், பலர் வந்து பார்க்க வேண்டுமென்றால் அதுவும் வெளி ஊர்களிலிருந்து வரவேண்டுமென்றால் என்றால் செலவுகளை நீங்களே கணக்குபோட்டுக் கொள்ளுங்கள்.

எனவே பொருளாதாரரீதியாகப் பார்த்தால், கொஞ்சம் செலவானாலும் நீங்கள் சிறையிலிருந்தே இருந்தே பேசுவதுதான் சிக்கனமானது. செல்போன் உலகமாகிவிட்ட இந்த காலத்தில் அவசர தேவைகளுக்கு வேறு வழியே இல்லை.

வசதியானவர்கள் தங்களுகென்று போன் வாங்கி, அதிகம் பிரச்சினை வராமல் பார்த்துகொள்வார்கள். வேறு சிலர் கொஞ்சம் செலவு செய்து போன் வாங்க, கடைசியில் இது வசதியில்லாதவன் கார் வாங்கிய கதையாய் ஆகிவிடும். ஆசை தீர காரை ஓட்டியவுடன், இவ்வளவு செலவு ஆயிருக்கே, தெரிஞ்சவங்களுக்கு மட்டும் வாடகைக்கு விடுவோம் என்றுதான் தொழிலை ஆரம்பிப்பார்கள். பின்னர் ருசி கண்டவுடன், அது மிகப்பெரிய டிராவல்ஸ் கம்பனியாக மாறிவிடும்.

தற்போது புழல் சிறை - 2 பொறுத்தவரையில், மனு நாட்களில் சராசரியாக 1000 பேர் கைதிகளை பார்க்க வந்து போகிறார்கள் என்றால், தமிழகம் முழுக்க சிறைக்கு வந்துபோவோரின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும். சிறைகளில் போன் வசதி இருந்தால், இவர்களில் பாதிக்கு மேல் மனு பார்க்க வரவேண்டிய அவசியம் இருக்காது. எரிபொருளை மிச்சப்படுத்த அனாவசிய பிரயாணங்களை தவிர்க்கும் படி அரசு வலியுறுத்தும் நேரத்தில், இவர்களின் பிரயாணங்கள் குறைந்தால் நாட்டுக்கும் எரிபொருள் மிச்சம், கைதிகளின் உறவினர்களுக்கும் செலவினங்கள் குறையும், சிறைக்காவலர்களுக்கும் பணிச்சுமை குறையும்.

எனவே, தமிழக அரசு சிறைக்கைதிகளின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று விரைவில் சிறைகளில் போன் வசதியை வழங்க வேண்டும்.

இந்த அவசியமான தேவையையும் தாண்டி சில சிறைகைதிகள் துணிச்சலாக போன் பேச காரரணம், இந்த குற்றத்திற்கு கிடைக்கும் அபத்தமான தண்டனைதான். அது பார்ட் 2 -ல்  

4 comments:

நிகழ்காலத்தில்... said...

நல்ல யோசனைதான்., குற்றம் ஏன் நடக்கிறது என பார்த்து சரியான வழியாக கண்காணிக்கப்படக்கூடிய தொலைபேசி வைப்பது சிறந்ததுதான்.

அரசு கவனத்தில் கொள்ளுமானால் மிக நல்லது...

சிவா said...

நன்றி, (நிகழ்காலத்தில்) சிவா.

ஒரு மனிதனின் நியாயமான தேவை என்ன என்பதை புரிந்து கொண்டு அரசு அதை பூர்த்தி செய்தால் அவர்கள் தவறான பாதையில் போவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும். எனவே சிறைகளில் போன் அவசியமான ஓன்று.

அருண் பிரசாத் said...

தேவையான கோரிக்கைதான்.......

அரசு பரிசீலிகனும்...அல்லது ஹை கோர்ட்ல கேஸ் போட்டு கேட்டா என்ன?

சிவா said...

```அரசு பரிசீலிகனும்...அல்லது ஹை கோர்ட்ல கேஸ் போட்டு கேட்டா என்ன?``` - அருண் பிரசாத்

ஹைகோர்ட்டில் இது சம்பந்தமாக வழக்கு பதியப்பட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நான் சிறையில் இருந்தபோதே (4 மாதத்திற்கு முன்னால்) சிறைகளில் போன் வசதி ஏற்படுத்த போவதாக சொன்னார்கள். ஆனால். இன்னும் வரவில்லை

Post a Comment