!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, October 4, 2011

நான் நடத்திய பத்திரிகையும், `நான் தமிழன்` ஜோக்கும்.



கூடங்குளம் பிரச்சினை சம்பந்தமாக இணையத்தில் ஒரு செய்தியை படித்தேன். அது குறித்து பதிவு போடும் எண்ணம் இல்லை. இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட புள்ளிவிவரம் என்னை குழப்பியதால்,மீண்டும் படிக்க நினைத்தேன். ஆனால் எங்கே படித்தேன் என்பது மறந்துவிட்டது. கூகுளில் `அணுசக்தி` என்று கொடுத்து தேடினாலும் கிடைக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் `Indian nuclear energy` என்று கொடுத்து தேடினால், அது கடலை காட்டியது. பின்னர் அதில் பல வடிகட்டிகளை பயன்படுத்தி ஓரளவுக்கு எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.

சில நாட்கள் இப்படி தகவல்களில் மூழ்கி கிடந்ததில், ஆங்கிலம் என்ற மொழியின் அருமையும், இணையம் ஒரு கடலாக இருந்தாலும் அதில் ஆங்கிலம் என்ற மொழியின் அவசியத்தையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. அப்படியே இதை கற்றுக் கொள்ள நான் எடுத்த விடா முயற்சியும் நினைவுக்கு வந்தது.       

இனி பிளாஷ்பேக். அதாவது என் சொந்த கதை. நானும் இந்த பதிவை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப் போகிறது. எனவே என்னை பற்றியும் சொல்லிவிடுகிறேன்.

13 வயதிலேயே கல்வியை கைவிட்டவன் நான். அம்மா இறந்து, மாமா ஆதரவில் வளர்ந்ததால் இந்த நிலைமை. மிடில் கிளாஸ் என்பதால் அவர் எங்களை (மூவர்) ஆதரித்ததே பெரிய விசயம்.

ஆனால் எனக்கு கிடைக்காத கல்வியை நான் வேறு வகையில் அடைந்தேன். புத்தகம் படிக்கும் ஆர்வம் எப்படியோ என்னுள் ஊறிவிட்டதால், ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஆன்மிகம் என்றால் என்ன என்று புரியாத வயதிலேயே படித்து முடித்தேன். அது ஒரு கதையாய், சுவாரசியமாய் இருந்ததால் படித்தேன். மற்றவை எல்லாம் கதை புத்தகங்களும், வார இதழ்களும்தான். முதலில் என்னை கவர்ந்த எழுத்தாளர்  சாண்டில்யன். அவருடைய கதைகளை கிடைத்த வரை முடித்தேன். இதையெல்லாம் நான் படிக்க முடிந்தது அகமதாபாத்தில் (பாபுநகர்) இருந்த தமிழ் லைப்ரரியால்.

இருந்தாலும் எனக்கு கிடைத்த அரைகுறை கல்வி தமிழ் மீடியம் என்பதால், நான் ஆங்கிலம் கற்க வாய்ப்பே இல்லை. கடலூர் வந்த பிறகு ஷேர் மார்கெட் ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக கம்பனி நிதி நிலை அறிக்கைகளை பிசினஸ்லைனிலும், தலால் ஸ்ட்ரீட்டிலும் தட்டு தடுமாறி படிக்க ஆரம்பித்த போதுதான் ஆங்கிலம் தெரியாததை ஒரு குறையாக உணர்ந்தேன்.

ஷேர் மார்கெட் எனக்கு பொருளாதார ரீதியாக எந்த லாபத்தையும் தரவில்லை என்றாலும், அது ஆங்கில மோகத்தை தூண்டிவிட்டதால்   அதை கற்றுக் கொண்டால் அது நமக்கு பலனைத் தரும் என்ற நம்பிக்கையில், விடாமுயற்சியோடு படிக்க ஆரம்பித்தேன்.

எனது இந்த விடாமுயற்சி அப்படி இப்படி போய் கடைசியில் ஜெப்ரி ஆர்ச்சர் வரை போனது. அவருடைய ஒரு நாவலை படித்ததும், அந்த டிவிஸ்டில் லயித்து போய், சாண்டில்யனுக்கு அடுத்த படியாக அவரின் (கிட்டத்தட்ட) அனைத்து நாவலையும் தேடி படித்து முடித்தேன்.

இந்த நாவல் மோகம் போய் அடுத்து இணைய மோகம் ஆரம்பித்தது. கம்ப்யூட்டர் வாங்கிய உடன், தினசரி ஒரு நாட்டுக்கு போய் அந்த நாட்டு பத்திரிக்கைகளை படிக்கும் வியாதி பிடித்தது. இப்படி படிக்கும் போதுதான் ஒரு இணையதளத்தில் ஒரு சீனன் இந்தியாவை விமர்சித்ததை படிக்க, அதை மறுத்து கடிதம் போட்டேன். அது பிரசுரமாக... அப்படியே தொடர்ந்து பல கடிதங்களும் பிரசுரமாகியது. அதன் பிறகு, புரிந்து கொள்ளவும், மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்காவது எழுதவும் ஆங்கிலம் கற்றுக் கொண்டோம் என்ற திருப்தி வந்ததால் கடிதம் எழுதுவதையும் நிறுத்திவிட்டேன்.

கல்வியை பொறுத்தவரையில், தொழில் சார்ந்த கல்விக்கு வேண்டுமானால் கல்வி நிறுவனங்களின் வழி காட்டுதல் அவசியமாக இருக்கலாம். ஆனால் பொது அறிவு வளர தினசரி பேப்பரும், வார இதழ்களும் படித்தாலே போதும். எனவே நிறைய புத்தகங்கள் படிக்க ஆராம்பித்த பிறகு படிப்பு கிடைக்கவில்லை என்ற மனவருத்தம் நீங்கியது.

அதற்கு பிறகு ஆரம்பித்தது பத்திரிகை மோகம். கடலூரில் (இலவசமாக கொடுக்கப்படும்) ஒரு விளம்பர பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அது ஒரு நல்ல மாற்றுத் தொழிலாக இருக்கும் என்று நினைத்தேன். அதை (கடலூர் பார்வை)  பதிவு செய்து ஆரம்பிக்கும் முன் டிரையலாக சில மாதம் நடத்தினேன். `விளம்பரம் வரும். ஆனால் காசு வராது` என்றார் ஒரு அனுபவஸ்தர். அது எந்த அளவு உண்மை என்பதை ஆரம்பித்த பிறகுதான் உணர்ந்தேன்.

அதைவிட பெரிய தலைவலி இது போன்ற பத்திரிக்கைகளை இலவசமாக விநியோகிப்பது. பெரும்பாலும் இதை செய்வது பார்ட் டைம் வேலை பார்க்கும் பசங்கள் என்பதால் அவர்களை நம்ப முடியவில்லை. சிலர் ஒழுங்காக டெலிவிரி செய்தாலும், பலர் ஒரே கடைக்கு நான்கு, ஐந்து என `தாராளமாக` போட்டார்கள். அதில் சிலர் பாதியை அவர்கள் வீட்டுக்கே போட்டுக் கொண்டார்கள்.

அந்த ஜோக் 
இந்த பிரச்சினைகள் இருந்தாலும், இந்த பத்திரிக்கை வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக இணையங்களில் நான் படித்து ரசித்த ஜோக்குகளை இந்த பத்திரிக்கையில் போட்டேன். அப்படி 2007 -ல் நான் போட்டதுதான் `நான் தமிழன்` ஜோக். இதை இதற்கு முந்தய பதிவில் போட்டிருந்தேன். ஆனால் ஒருவர், `தமிழன் என்றால் உங்களுக்கு இளக்காரமா?` என்று கோபப்பட்டார். தற்போதைய சூழ்நிலையில் அதை படிப்பவர்களுக்கு ராஜீவ் காந்தி கொலையாளிகளை நினைவுபடுத்தும் என்பதால் நானும் அதை மாற்றிவிட்டேன். எனவே அதை ஒரு ஜோக்காக மட்டும் பாருங்கள்.

இந்த பத்திரிக்கை எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், சில பாராட்டுகளால் திருப்தி அடைந்தேன். ஒரு நண்பர், `நானும் இதுபோலத்தான் நடத்த நினைத்தேன். இரண்டு பேரும் சேர்ந்து செய்வோம்` என்றார். நான் அவருக்கு பதில் சொல்லவில்லை. காரணம், வேறு ஒரு பிரச்சினை என்னை ஆக்கிரமித்திருந்தது.

அந்த பிரச்சினையை பற்றி சொல்லவேண்டுமென்றால் நான் ஜெயிலுக்கு போன கதையை சொல்ல வேண்டும். மறைக்கக் கூடிய அளவுக்கு அதில் ரகசியம் ஒன்றும் இல்லை. எனவே அதையும் சொல்லிவிடுகிறேன்.


5 comments:

Anonymous said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். இப்போதும் அந்தப் பத்திரிகையை தொடர்கிறீர்களா...

-சிவா

சிவானந்தம் said...

@ Anonymous

வாங்க நண்பரே. உங்கள் வருகைக்கு நன்றி.

நான் இதை நடத்திக் கொண்டிருக்கும்போதே ஜெயிலுக்கு சென்றுவிட்டதால் அது நிறுத்தப்பட்டு விட்டது.

ம.தி.சுதா said...

இந்தப் பதிவின் ஆழத்தையும் அதன் உள் அர்த்ததையும் உணர முடிகிறது சகோதரம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி

சிவானந்தம் said...

@ மதி சுதா

நன்றி நண்பரே.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Yaathoramani.blogspot.com said...

நல்ல பதிவு
எழுத்து உங்களுக்கு வசப்பட்டிருப்பது
படிக்கையில் புரிகிறது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment