!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Tuesday, October 18, 2011

இந்த அரசியல்வாதியை (?) நீதிபதிகள் மன்னித்துவிட்டார்கள்.போலீசார் என் பிடிவாதத்தை பார்த்துவிட்டு, என் மாமாவிடம் எப்படியோ ஒரு புகாரையும் வாங்கிக் கொண்டு, எனக்கு ஜெயிலை பற்றிய பயமுறுத்தல் மற்றும் அட்வைஸ் என அவர்கள் கடமையையும் செய்துவிட்டு என்னை புழலுக்கு அனுப்பினார்கள்.

சிறைக்கு சென்ற பிறகு பத்திரிக்கைகள் படிக்கும் வாய்ப்பே சில வாரம் கிடைக்காததால், இந்த செய்தி பத்திரிக்கையில் வந்ததா இல்லையா என்றே எனக்கு தெரியவில்லை. என்னை பார்க்க வந்த உறவினர்களிடம் ஆர்வமாக விசாரித்தால், `இப்படி ஒரு ஆசை வேற உனக்கு இருக்கா?` என்று எதிர் கேள்வி. அப்படியே மாமா நன்றாகத்தான் இருக்கிறார் என்றும் தகவல். நான் உள்ளே வரவேண்டும் என்ற எனது நோக்கம் நிறைவேறிவிட்டது. எனவே இனி அது எனக்கு நல்ல செய்திதான். ஆனால் என்னைப்பற்றி பத்திரிக்கைகளில் செய்தி வராததுதான் எனக்கு ஏமாற்றம்.

அதன் பிறகு எனக்கும் யதார்த்தம் புரிய ஆரம்பித்தது. எனது இந்த செயலால் பாதிக்கப்பட்ட மாமாவே புகார் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்யும் நிலையில், போலீசார் இதை ஒரு சீரியசான வழக்காக கருத வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை மாமா வீட்டில் `இதை செய்தியாக்க வேண்டாம்` என்று போலீசாரை கேட்டுக் கொண்டிருக்கலாம்.இது செய்தியானால் அவர்களுக்கு தர்மசங்கடம். எனக்கோ தீர்வு. எப்படியோ என்னுடைய பிளான் மண்ணோடு மண்ணாகிவிட்டது.

ஒரே லாபம் சிறைக்கு சென்றதுதான். அந்த டென்ஷனான வாழ்க்கையிலிருந்து தப்பிவிட்டேன். அது ஒரு வகையில் எனக்கு நிம்மதியை கொடுத்தது. ஆனால் சிறைகள் நடத்தப்படும் விதமும், புதுக்கைதிகள் கொடுமைப்படுத்தப்படுவதும் என்னை டெண்ஷனாக்கியது. ஆனால் என் வாழ்கையே கேள்விக்குறியாக இருக்கும்போது, இங்கே நான் என்ன செய்ய முடியும்? நமது வழக்கு பிரபலமாகட்டும். அப்புறம் இந்த அநியாயத்துக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று அமைதியாகிவிட்டேன்.

இரண்டாம் நாளே என்னை விசாரித்த ஒரு பழைய கைதி சொல்லிவிட்டார். `அண்ணே! இது மொக்க கேஸ்... ஒரே செக்க்ஷன் (IPC 307 )... சும்மா பேருக்கு ஒரு கேஸ் போட்டு அனுப்சிருக்காங்க!` என்றார். அவர்கள் இதை ஒரு கேஸாகவே மதிக்கவில்லை. எனவே நான் நீண்ட நாள் ஜெயிலில் இருக்க முடியாது என்பதும் எனக்கு தெரிந்துவிட்டது.

ஆனால் நான் வெளியே போக விரும்பவில்லை. காரணம், மீண்டும் அதே விருந்தாளி வாழ்க்கைக்கு நான் தயாராக இல்லை.

சம்பாதிக்கிறேன். அதுவும் ஆண். எனவே பேச்சிலராக எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிடலாம். அது பிரச்சினை இல்லை. நான் ஏற்கனவே அந்த வாழ்க்கையையும் வாழ்ந்துவிட்டேன். அது ஒரு உப்பு சப்பில்லாத வாழ்க்கை. அந்த நானும் `உள்ளேன் ஐயா` என்று சொல்லும் வாழ்க்கையில் எனக்கு உடன்பாடில்லை. இந்த அரசியல் ஆசை வேறு ஊறிப் போனதால், ரிஸ்க் எடுப்போம் அந்த ரிஸ்கில் வாழ்கை குட்டிசுவராகிப் போனாலும் பரவாயில்லை, ஆனால் விரும்பும் வாழ்கையைத்தான் வாழவேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.

அதே சமயம் நான் இதை ரிஸ்க் என்றும் சொல்லமாட்டேன். ஏனென்றால் வெளியே எனக்கு ஒரு திருப்தியான வாழ்க்கை இருந்தால் தானே நான் அதை இழக்க வேண்டி இருக்கும்? எனவே எனக்கு இதில் ரிஸ்கே இல்லை. மயிரைகட்டி கட்டி மலையை இழுப்போம் வந்தால் மலை ..... அதுதான் எனது இந்த துணிச்சலுக்கு காரணம்.

உள்ளே போனதன் மூலம் ஒரு தற்காலிக நிம்மதி எனக்கு கிடைத்தாலும், மீண்டும் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை உணர்ந்தேன். இது ஒரு ஒப்புக்கு சப்பாணி கேஸ். வழக்கை நான் ஒப்புகொண்டாலும் தண்டனை சில மாதங்களுக்கு மேல் போக வாய்ப்பில்லை. ஆனால் வழக்கை ஒப்புக்கொண்டு அதிகப் பட்ச தண்டனை கேட்டால்...? அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. ஆனால் என் விருப்பத்தை மீறி என்னை விடுதலை செய்வார்களா? அப்படி ஏதாவது நடந்தால் ஜெயிலுக்குள்ளேயே சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவுக்கு வந்தேன். அதேசமயம் ஒரு பலவீனமான வழக்கில் குற்றவாளி அதிகப்பட்ச தண்டனை கேட்டால் என்னவாகும்? நிச்சயம் செய்தியாகும்.

இந்த ஐடியா வந்ததும், உடனடியாக வழக்கை ஒப்புக்கொண்டு மனு அளித்தேன். ஆனாலும் போலீசார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. அதன் பின் சிறை கோர்ட்டுக்கு வந்த போலீஸ்காரர், `ஏம்பா உன் முடிவுல மாற்றம் இல்லையா?` என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் பிறகுதான் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

அதன் பிறகு செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட்டுக்கு என் வழக்கு மாற்றலானது. அங்கே போன முதல் நாளே `உனக்கு வக்கீல் இல்லையா?` என்று கேள்வி. `நான் வழக்கை ஒப்புக் கொள்கிறேன். எனவே வேண்டாம்` என்றேன். ஆனால் சட்டத்தில், அதுவும் செஷன்ஸ் கோர்ட்டில், அதற்கு இடமில்லையாம். நான் வக்கீல் வைத்தே ஆக வேண்டுமாம்.

நான் ஒரு வக்கீலை அமர்த்தி, அவருக்கு பணமும் கொடுத்து, `சார், நான் கேசை ஒத்துக்கிறேன். எனக்கு அதிகப் பட்ச தண்டனை வாங்கி கொடுங்கன்`னு கேக்கவா முடியும். அதற்கு பதில் நானே நேரடியாக கீழ்ப்பாகத்துல போய் அட்மிட் ஆயிடலாம்.

அதேசமயம் வக்கீலிடம் என்னோட பிளானையும் சொல்லவும் முடியாது. இதில் ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறது. என்னைப்பற்றி எதுவுமே தெரியாத ஒரு நபரிடம் எதை சொல்வது? நிறைய கேள்விகள் வரும்.

இருந்தாலும் அதன் பிறகு இந்த கேஸ் தாம்பரம் செஷன்சுக்கு மாற, இங்கே நான் இலவச வக்கீலுக்காக பெட்டிஷன் கொடுத்தேன். வந்தவர் புரிந்துக் கொண்டார். எனவே வஞ்சனை இல்லாமல் வாய்தா வாங்கினார். ஆனாலும் அவ்வப்போது கேட்பார்.

`என்னப்பா! உன் மனசு மாறுச்சா... பெயில் போடவா?`

நான் மறுப்பேன். எனவே மீண்டும் வாய்தாதான்.

இதற்கிடையில், சிறையில், ஒரு ஈழத் தமிழரின் நட்பு கிடைக்க, நான் வேறு பிளாக் மாறி போனேன். இந்த செல்லில் எந்த பிரச்சினையும் இல்லை. அங்கே இருந்தவர்கள் எல்லாம் நீண்ட காலமாக இருப்பவர்கள். எனவே அந்த செல்லும், பிளாக்கும் பராமரிப்பு நன்றாக இருந்தது. அதை ஜெயில் என்றே சொல்ல முடியாது. இந்த செல்லில். பிரபல விபசார புரோக்கர் கன்னட பிரசாத், ஜே பி ஜே ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் தேவதாஸ், நடிகை சினேகா எஸ் எம் எஸ் புகழ் ராகவேந்திரா என பல வி ஐ பிக்கள் இருந்திருகிறார்கள்.

இங்கேயும் நான் அதிகம் யாரிடமும் பேசுவதில்லை மற்றவர்களிடம் பழகுவதில் உள்ள தலைவலி என்னவென்றால், அதிகமாக பழக ஆரம்பித்தவுடன் அவர்களுடைய சொந்தக் கதையை சொல்லிவிடுவார்கள். அடுத்து, `நீங்க ஏன்னே உள்ள வந்தீங்க?` என்று கேள்வி கேட்பார்கள். எனக்கு தர்மசங்கடமாக இருக்கும். எனவே அதிகம் யாரிடமும் ஒட்டவில்லை. இங்கே பேப்பருக்கும், புத்தங்களுக்கும் பஞ்சம் இல்லை என்பதால் நான் அதில் காலத்தை ஓட்டினேன். இது எனக்கு பிடித்தும் இருந்தது, வசதியாகவும் இருந்தது. இப்படி பிரச்சினையே இல்லாமல் வாழ்கை ஓடியதால் நானும் மந்தமாகிவிட்டேன். பிரச்சினைகள் இருந்தால்தானே அதிலிருந்து தப்பிக்க மனம் துடிக்கும். எனவே வாழ்க்கை வாய்தாவாகவே ஓடட்டும் என்று விட்டுவிட்டேன்.

எனக்காக ஒரு ஓட்டு  

அந்த சமயம், கடும் சர்ச்சைகளுக்கிடையில், நவீன் சாவ்லா தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். காங்கிரசின் இந்த செயல் எனக்கும் பிடிக்காததால், அதை விமர்சித்து சிறையிலிருந்தே தினமலருக்கு (நியாயமற்ற செயல்) கடிதம் போட்டேன். அது கீழ்மட்ட அதிகாரிகளால் பார்க்கப்பட்டு அனுப்பப்பட்டது, பிரசுரமும் ஆனது.

இது பிரசுரமாகி 15 நாட்கள் கழித்து எனக்கு மதுரையிலிருந்து அமிர்தசேகரன் என்பவர் ஒரு கடிதம் போட்டிருந்தார். அந்த கடிதம் `சிவானந்தம், சிறைக்கைதி` என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததால், பல இடங்களில் சுற்றி என்னிடம் வந்தது. பத்திரிகையில் எனது கடிதத்தை படித்ததாகவும், அந்த கருத்தில் உடன்படுவதாகவும், அதற்காக வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அத்துடன் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் எழுதி இருந்தார்.

நான் யார், என்னுடைய தகுதி என்ன, எந்த குற்றத்திற்காக ஜெயிலுக்கு போயிருக்கிறேன் என்பது எதுவுமே தெரியாத ஒருவர், பத்திரிக்கையில் என் கடிதத்தை படித்துவிட்டு, எனக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக கடிதம் போடுகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தமிழ்நாட்டில் எனக்காக ஒரு ஓட்டு உறுதியாயிருக்கிறது என்று அர்த்தம். எனவே மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது. சிறையிலிருந்து நிறைய எழுதுவோம். `சிறையிலிருந்து இப்படிப்பட்ட கடிதங்களோ` என்ற கேள்வி வரும். நிச்சயம் பத்திரிகையாளர்கள் வருவார்கள் என அடுத்த முயற்சியை ஆரம்பித்தேன்.

நான்கைந்து கடிதங்கள் பிரசுரமாகி இருந்தநிலையில் அதற்கும் ஆப்பு வந்தது. புழல் சிறை பற்றி நிறைய நெகடிவ் செய்திகள் பத்திரிகையில் வந்துக் கொண்டிருந்ததால், அதிகாரிகள் பத்திரிக்கைகளை முழுமையாக மேய ஆரம்பித்தார்கள். அப்படி அவர்கள் ஆராயும் போது என்னுடைய `தேவையா நில உச்சவரம்பு சட்டம்` என்ற கடிதத்தை கவனித்துவிட்டார்கள். அப்புறமென்ன.... `யாரப்பா அந்த சிவானந்தம்` என பிளாக்வாரியாக தேட ஆரம்பித்துவிட்டார்கள்.

இங்கேயும் ஒரு மன்மோகன் சிங்.

என்னை விசாரித்த ஒரு  அதிகாரி சந்தேகத்தோடு கேட்டார்.

இந்த கடிதம் எப்படி வெளியே போச்சு?

`இங்க சிறைத் தபால்லதான் போட்டேன்` - நான். (வெளியே கடிதம் அனுப்புபவர்கள் சிறைக்குள் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போடவேண்டும். நானும் அதைத்தான் செய்தேன்.)

இருந்தாலும் அவர்களுக்கு திருப்தி இல்லை. விசாரித்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாலும் அவர்கள் கவனத்துக்கு வராமலேயே பத்திரிக்கைக்கு கடிதம் போனதில் அவர்களுக்கு கோவம். எனக்கும் இது அப்போதுதான் தெரியும். நான் தவறாக எதுவும் எழுதவில்லை. முறைப்படிதான் அனுப்பி இருக்கிறேன். எனவே பயப்பட ஒன்றுமில்லை. எனக்கு பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் போடும் பழக்கம் இருப்பதை நிருபிக்க, நான் எழுதி பிரசுரமான ஆங்கில கடிதங்களின் காப்பியையும் அவரிடம் காட்டினேன். அதை படித்து பாராட்டிவிட்டு எனக்கு ஒரு பட்டத்தை கொடுத்தாலும், முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக, சிறை விதிகளில் பத்திரிக்கைகளுக்கு கடிதம் அனுப்ப இடமில்லை என்று மறுத்துவிட்டார்.

அது சரியல்ல என்பது எனக்கு தெரியும். ஆனால் சிறையில் இருந்து கொண்டு சட்டம் பேச முடியாது. எனவே நானும் அதை விட்டுவிட்டேன்.

அதன் பிறகு சூபரிடென்ட் ஆபீசுக்கு அழைத்து செல்லப்பட்டேன். அங்கே நிலைமை தலைகீழாக இருந்தது. `நல்லா எழுதி இருக்கீங்க` என்று பாராட்டியவர், `நீங்க எழுதுங்க. நாங்க அனுப்பி வைக்கிறோம்` என்றும் சொன்னார். அத்துடன் `கடிதங்களை போஸ்ட் பாக்ஸில் போடவேண்டாம். நேரடியாக எங்களிடமே கொடுத்துவிடுங்கள்` என்றார். ஆனாலும் அங்கேயும் பாலிடிக்ஸ். அவர் ஒரு மன்மோகன் சிங் ( எல்லா வகையிலும்) என்பது பின்னால்தான் தெரிந்தது.

`தலை`யே நீங்க எழுதுங்க என்று ஊக்கம் கொடுத்தாலும், மற்றவர்களை பகைத்துக் கொள்வது ஆபத்தாயிற்றே? இருந்தாலும் அவ்வபோது எழுதி அனுப்புவேன். அனுப்பினால் அனுப்பட்டும், இல்லையென்றால் நமக்கு இது நேரத்தையும் போக்கும் அதேசமயம் பயிற்சியாகவும் இருக்கும் என தொடர்ந்தேன்.

தாம்பரம் செஷன்ஸ் கோர்ட் 

அடுத்த தலைவலி கோர்ட்டில் ஆரம்பித்தது. அங்கே ஒரு அம்மா ஜட்ஜாக வந்தார். வந்தவர் வழக்குகளை விரைவாக முடிக்க ஆரம்பித்தார். என்னுடைய வழக்கும் வேகம் பிடித்தது. நீண்ட நாளாக வராமலிருந்த இன்ஸ்பெக்டரும் வந்து சாட்சி சொன்னார். கோர்ட் வாசலில் அவரை பார்த்ததும் வணக்கம் வைத்தேன். இதற்குள் ஒன்றரை வருடங்கள் ஓடி விட்டது. என்னை பார்த்ததும், அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக `இன்னுமா பெயில்ல போகல?` என்றார்.

ஜெயிலே எனக்கு நிம்மதியாக இருக்கிறது என்றேன் நான்.

உனக்கு என்னதான் பிரச்சினை? என்றார் மறுபடியும் சந்தேகமாக.

நான் மவுனமாக இருந்தேன். அங்கே இருந்த வக்கீல்கள் மற்றும் சிலரிடம் என்னை காட்டி மறுபடியும் என்னை காட்சி பொருளாக்கினார். எனக்கும் இதில் உடன்பாடுதான். ஆனால் தமிழ்நாடு முழுக்க என் கதையை கொண்டுபோவார் என்று எதிர்பார்த்தால் அவரோ சிலரோடு முடித்துக் கொண்டார். எல்லாம் என் நேரம்.

அடுத்த சில வாய்தாக்களிலேயே வழக்கு கிளைமாக்சை நெருங்கிவிட்டது. இன்ஸ்பெக்டர் சாட்சி சொல்ல வந்தபோதே என்னிடம் `நீ விடுதலை ஆகிவிடுவாய்` என்று சொல்லிவிட்டார். எனவே என்ன செய்வது என புரியாமல் திகைத்து நின்றேன்.

விடுதலை ஆனால் எங்கே போவது? நான் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் இடம் ஒரு உறவினர் வீடாகத்தான் இருக்கும். அதை நான் விரும்பவில்லை. எனவே வழக்கு விசாரணைகள் முடிந்து, அனைத்து சாட்சிகளின் வாக்கு மூலங்களும் எனக்கு படித்துக் காட்டப்பட்டு, அந்த வாக்குமூலத்தில் என்னுடைய கையெழுத்தை கோரியபோது அதில் கையெழுத்திட மறுத்துவிட்டேன். அதிகப்பட்ச தண்டனை அளிப்பதாக நீதிபதி வெளிப்படையாக சொன்னால்தான் போடுவேன் என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டேன். அப்படி சொல்லவோ, கொடுக்கவோ சாத்தியமே இல்லை. ஆனால் என் விடுதலையை தடுக்க அதைத் தவிர வேறு வழி இல்லை.

அதேசமயம் இந்த வழக்கை நீதிபதி முழுமையாக புரிந்துக் கொண்டாரா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஏனென்றால் நீதிபதிகளுக்கும் இருக்கும் பணிச்சுமையில் ஒவ்வொரு வழக்கையும் அவர்கள் முழுதாக அக்கறை எடுத்து பார்ப்பதில்லை. பார்க்கவும் முடியாது. அவர்களை பொறுத்தவரையில் பல வழக்குகளில் இதுவும் ஓன்று. எனவே இந்த நீதிபதிக்கு என் வாழ்கையை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, என் கதையை பெட்டிஷனாக எழுதிக் கொடுத்தேன். அதை ஆங்கிலத்தில் எழுதி சிறை அதிகாரிகள் மூலம் டைப் செய்து கொடுத்தேன்.

அதை படித்தவர், `இதை யார் எழுதியது?` என்று கேட்டார்.

`எனக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும். நான்தான் எழுதினேன்` என்று சொல்லியும் அவர் நம்பவில்லை. அந்த பெட்டிஷனை என்னிடமே கொடுத்து இதை படித்து எனக்கு அர்த்தம் சொல் என்றார்.

கோர்டில் அன்று கூட்டம். நிறைய வக்கீல்கள். எனக்கு அருகில் போலீசார். வெளியேயும் கூட்டம். எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானோ டென்ஷனாக இருந்தேன். எனவே நான் பேசியது அவர் காதில் விழவில்லை. என்னை சாட்சிகள் நிற்கும் கூண்டுக்கருகே வந்து சொல்லச் சொன்னார். நானும் சில வரிகள் படித்துக் காட்டி அர்த்தமும் சொன்னேன். அதில் கடைசியாக ஒரு உதவியை கேட்டிருந்தேன். ஆனால் என்ன உதவி என்று குறிப்பிடவில்லை.

அவர் ஒரு பெண்ணல்லவா. எனவே என்னுடைய பெட்டிஷன் வேலை செய்ய ஆரம்பித்தது. அதில் நான் `I will even digest a prison life than living that guest life ` என்று குறிப்பிட்டிருந்தேன். அதை குறிப்பிட்டவர், `நீங்க சொல்ல வர்றது புரியுது. ஆனா...` என்று இழுத்தவர், `சிறைக்கே நாங்க கவுன்சிலிங்குக்கு ஆள் அனுப்புவோம். அவங்க கிட்ட உங்க பிரச்சினையை சொல்லுங்க. எங்களால முடிஞ்ச உதவியை நிச்சயம் செய்வோம்` என்றார். நான் நீதிபதியிடம் எதிர்பார்த்த உதவி சிம்பிளானது. எனவே மீண்டும் நம்பிக்கை பிறந்தது. இந்த நீதிபதியிடம் எதையும் மறைக்கக் கூடாது என்ற உணர்வும் வந்தது. அதன்பின், இந்த வழக்கு பிரபலமானால் அது எப்படி என் பிரச்சினைகளை தீர்க்கும் என்பதையும் அரசியல் ரீதியாக எப்படி எனக்கு உதவும் என்பதையும் விவரித்து இன்னொரு பெட்டிஷன் எழுதினேன்.

இது என் வாழ்க்கையை தீர்மானிக்கும் பெட்டிஷன் அல்லவா, எனவே நிதானமாக கவனமாக எழுதினேன் (அப்படியும் அதில் சில குறைகள்). அதேசமயம் `அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு உன்னதமான துறை. அங்கே போக சில தகுதிகள் வேண்டுமே` என நீதிபதி கேட்டுவிட்டால் ...? அரசியல்வாதிகள் மேடைகளில் சொல்லும் கருத்துகளை வைத்து அவர்களின் தகுதியை நாம் கணிக்கலாம். ஆனால் நான் என் கருத்துக்களை வாசகர் கடிதங்களாக மாற்றி இருக்கிறேன். எனவே முழு உண்மையையும் அவரிடம் சொல்லும் முன் தமிழிலும், ஆங்கிலத்திலும் பிரசுரமான எனது சில கடிதங்களின் காப்பியை இணைத்து, `இதைப் படியுங்கள். அதன் பிறகுதான் நான் உண்மையை சொல்வேன்` என்ற முன்னுரையோடு அதையும் கோர்டில் சமர்பித்தேன்.

ஆனால் அந்த கடைசி பெட்டிஷனை நான் எழுதி டைப் செய்து கோர்ட்டுக்கு அனுப்புவதற்குள் அந்த நீதிபதிக்கு டிரான்ஸ்பர் வந்துவிட்டது. கொஞ்சம் தாமதித்துவிட்டேன் (அதிகமில்லை 6 மாதம்தான். அந்த பெட்டிஷன் ப்ர்பெக்ஷனாக இருக்க வேண்டும் செதுக்கியதில் இந்த தாமதம்)

வேறு ஒரு நீதிபதி வந்திருந்தார். ஏற்கனவே நான் குறிப்பட்டது போல் நீதிபதிகளுக்கு இருக்கும் வேலைப்பளுவில் ஒவ்வொரு கேசையும் அவர்கள் முழுமையாக படிப்பதில்லை. இதற்கு முன் இருந்த நீதிபதி என்ன குறிப்பு எழுதி இருக்கிறாரோ அங்கே இருந்துதான் அவர்கள் தொடர்வார்கள். சிக்கலான வழக்காக இருந்தாலாவது தீர்ப்பு வழங்கும் முன் பிரித்து படிக்கவேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால் என் வழக்கில் அதற்கும் வாய்ப்பில்லை.

அநேகமாக அந்த பெண் நீதிபதி, `அக்யூஸ்ட் மன உளைச்சலில் இருக்கிறார். எனவே எப்போது அவர் விடுதலை ஆக விரும்புகிறாரோ அப்போது வழக்கை தள்ளுபடி செய்துவிடுங்கள்` என்று குறிப்பு எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறன். எனவே என் கேஸ் கட்டை அவர் பிரிக்கவே இல்லை. நான் கடைசியாக கொடுத்த பெட்டிஷனை மட்டுமே படித்ததால் அது அவரை இம்ப்ரெஸ் பண்ணவில்லை. என் கதையில் அவர் கிளைமாக்ஸ் மட்டுமே (பாதியை) படித்தார்.

அதேசமயம் இவர்தான் என்னை கேட்டார்: ஜெயில் என்பது குற்றவாளிகளுக்கானது. அவர்களால் சமுகத்துக்கு ஆபத்து என்பதால் அவர்களை உள்ளே வைத்திருக்கிறோம். மற்றவர்களெல்லாம் உள்ளே போய் இருக்க அது என்ன கெஸ்ட் ஹவுசா?

சந்தோஷம்! என்னை குற்றம் செய்பவர்கள் லிஸ்டில் சேர்க்க முடியாதாம். அதை ஒரு நீதிபதியே சொல்லிவிட்டார். ஆனால் இதை தமிழ்நாடு முழுக்க கேட்கும் அளவுக்கு சத்தமாக...அட...என்னை கடுமையாக திட்டியிருந்தாலும் அல்லது ஆறு மாதம், ஒரு வருடம் தண்டனை கொடுத்துவிட்டு, இதை ஒரு தீர்ப்பாகவும், செய்தியாகவும் (பத்திரிக்கைகளுக்கு) கொடுத்திருந்தால், அது எனக்கு எவ்வளவு யூஸ்புல்லாக இருக்கும். இந்த உதவியைத்தானே நான் நீதிமன்றத்திடம் எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு கிடைத்த அந்த சர்டிபிகேட் தாம்பரம் செஷன்ஸ் கோர்ட்டின் நான்கு சுவர்களை தாண்டி செல்லவில்லை. அதுதான் என்னுடைய துரதிருஷ்டம்.

ஆக என்னுடைய கடைசி நம்பிக்கையும் காலை வாரிவிட, சில மாத குழப்பத்திற்கு பின் விடுதலை ஆக ஒப்புக்கொண்டேன். இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிபதி, `நீங்கள் விடுதலை ஆகி போனால் உங்கள் மாமா குடும்பத்தினர் மூலம் உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா?` என்று என்னை கேட்டார். எனக்கு மயக்கம் வராத குறை. இந்த நீதிபதிக்கு இந்த கொலை முயற்சி எதற்காக என்றே தெரியவில்லை. இதுதான் என் அதிர்ஷ்டம்.

உள்ளே போகும்போது திரும்பி வரக்கூடாது என்ற முடிவோடுதான் போனேன். ஆனால் சிறை இப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்கவில்லை. எனக்கு இது வசதியாக இருந்தாலும், அரசியல் என்ற துறையை நான் தேர்ந்தெடுத்திருக்கும் போது எந்த ஒரு விஷயத்தையும் பொதுநலன் என்ற பார்வையில்தானே பார்க்கவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் இது தவறு. எனவே பிரபலமானதும் இதை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்தது நடக்காவிட்டாலும், இப்போதும் நான் அதை செய்யலாம். ஆனால் சிறையிலிருந்து அதை செய்ய முடியாது. எனவேதான் விடுதலை ஆகிவிட்டேன்.  சில விஷயங்களை எழுதி இருக்கிறேன். இனிமேலும் எழுதுவேன்.

அரசியல் என்பது ஒரு சேவைத்துறை. இத்துறையில் இருப்பவர்களுக்கு கடுகளவும் சுயநலம் இருக்கக்கூடாது.  ஆனால் எனக்கு கொஞ்சம் சுயநலம் உண்டு. அதை நான் ஒப்புகொள்கிறேன். ஆனால் அது இன்றைய அரசியல்வாதிகளுக்கு இருப்பதைப் போல் பேராசை அல்ல. என்னுடைய வாழ்க்கையை ஓரளவாவது திருப்தியாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசைதான் அது. ஜெயிலுக்கு போவதன் மூலம் எனது இரண்டு பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் தீர்த்துக் கொள்ளமுடியும் என்பதால்தான்  நான் இந்த வழியை தேர்ந்தெடுத்தேன். அதேசமயம் எனது பிரச்சினைகளை தீர்க்க பல முறையான வழிகளில் முயன்று கடைசி கட்டமாகத்தான் நான் இந்த வழியை தேர்ந்தெடுத்தேன்.

இங்கே சொன்ன அனைத்து விஷயங்களையும் நான் பெட்டிஷனாக எழுதி நீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க வேறு வழி இல்லாமல் இந்த குற்றச் செயலில் இறங்கியதாக குறிப்பிட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டு, அதேசமயம் நீதிமன்றம் வழங்கும் எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன். இருந்தாலும் எனது வழக்கு, நான் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலும், (பழவந்தாங்கல் போலீஸ் ஸ்டேஷன். குற்ற எண்: 206 / 08 ) தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே நீதிபதிகள் என்னை மன்னித்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறன்.

என்னுடைய வக்கீலுக்கு நான் முழு உண்மையையும் சொன்னதும் என் மீது கோபம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.நான் இரண்டரை வருடம் பிடிவாதமாக உள்ளே இருந்தததாலும் மற்றும் என்னுடைய மன உளைச்சலையும் அவர் புரிந்து கொண்டிருக்கலாம்.

பிரபலமாகி எனது பிரச்சினைகள் தீர்ந்ததும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். நீதிபதியிடம் கேட்டாகிவிட்டது.   இனி மக்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் கேட்கவேண்டும். இதோ இந்த பதிவின் மூலம் நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். இனி நீங்கள்தான் தீர்ப்பு எழுத வேண்டும்.

மேலே சொன்னவை அனைத்தும் நடந்து 2010 ல். உங்களில் யாராவது ஒரு டவுட்டிங் தாமஸ் இருந்தால் தாம்பரம் செஷன்ஸ் கோர்ட் வக்கீல்களில் யாராவது ஒருவரின் காதைக் கடியுங்கள்.  

கடைசியாக.... 

நான் இந்த பிளானை யாரிடமும் சொல்ல முடியாது என்பது இதை படிப்பவர்களுக்கு புரியும். இருந்தாலும் முக்கியமான காரணம் என்னவென்றால், நாம் மனிதர்களாக பிறந்ததே கல்யாணம் செய்து கொண்டு, குழந்தைகளை பெற்று கொண்டு குடும்பம் நடத்தத்தான் என்ற தியரியை பெரும்பாலான இந்தியர்கள் ஆழமாக நம்புகிறார்கள். அது ஓரளவுக்கு உண்மையாகவும் இருக்கலாம்.

என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் வித்தியாசமாகிப் போனேன். நான் படித்த புத்தகங்கள் என்னை அப்படி மாற்றிவிட்டது. ஆனால்  யாரிடமும் என்னுடைய ஆரசியல் ஆசையை பற்றியோ அல்லது இந்த சிந்தனை தவறு என்றோ சொல்ல முடியாது. பின்னி எடுத்துவிடுவார்கள். எனவே எதற்கு வம்பு, இந்த வழக்கு பிரபலமாகி அந்த பிரபலத்தின் வீரியம் என்ன என்பதை தெரிந்து கொண்ட பிறகு கொஞ்சம் தைரியமாகவும், சத்தமாகவும் சொல்வோம் என்று அமைதியாகிவிட்டேன்.

இப்போது நான்...

If you can`t prevent rape, you better enjoy it.  இந்த ஆங்கில வசனத்தை முதல் முறையாக படித்தபோது, இப்படியெல்லாம் கூட மனிதர்களால் உபதேசிக்க முடியுமா என்று அதிர்ந்து போனேன். ஆனால் ஒரு வகையில் பார்த்தால் அதுவும் யதார்த்தம்தானே! எனவே நானும் இப்போது அந்த முடிவுக்குத்தான் வந்திருக்கிறேன். அனுபவிப்போம். வேறு வழி?


1 comments:

parithy360 said...

You Have a good vision and kindly keep it up.

Post a Comment