கிளி ஜோசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள், அடி ஜோசியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ஜோசியம் பாட்ஷா படத்தில் வரும். அதாவது, ஒருவன் எதிரியை அடித்த விதத்தை வைத்தே, அடித்தவன் ஆட்டோக்காரன் இல்லை, நாடி நரம்பெல்லாம் ரத்த வெறி பிடித்த ஒருவனின் அடி என அடித்தவனின் ஜாதகத்தைக் கண்டுபிடிப்பதுதான் இந்த அடி ஜோசியம். இது போலீஸ்காரர்களுக்கு மட்டுமே தெரியும்.
இதேபோல் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒருவன் பணக்காரனா என கண்டுபிடிக்க அந்த ஆளின் வங்கிக் கணக்கைப் பார்க்க வேண்டாம். அவன் பிள்ளை எந்த பிராண்ட் மொபைல், எந்த மாதிரியான வண்டி வைத்திருக்கிறான் என்பதை கவனித்தாலே போதும். அதாவது, பல இடங்களில் உண்மையை இப்படி குறுக்குவழியிலும் கண்டுபிடிக்கலாம்.
எதற்காக இந்த உதாரணம் என்றால், என்னுடைய முகநூல் பக்கத்தில் இப்போது பாரதியார் குறித்த செய்திகள் அதிகமாக வருகிறது. சமீபத்திய சர்ச்சை காரணமாக அந்த செய்திகளை நிறைய படித்ததால் இந்த நிலைமை. இதை அப்படியே தாண்டி போக முடியவில்லை. எனவேதான் இந்தப் பதிவு.
புரட்சிக்கவி பாரதியார் விஷயத்திலும் மேலே சொன்ன அதே குறுக்கு வழியைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.எப்படி சராசரி மனிதன் அடிப்பதற்கும் ரவுடி அடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதோ, அதேபோல் சமூகத்தின் முரண்பாடுகளைக் கண்டு கொதிக்கும் தலைவர்களின் வார்த்தைகளும் இருக்கும். அது அவர்கள் உண்மையானவர்களா போலியா என்பதை நமக்கு உணர்த்திவிடும்.
`சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்` என ஒருவன் கவிதையும் எழுதி, தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றும் கொதித்தவனை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் என்ற வட்டத்துக்குள் அடைக்க முடியுமா?
இங்கே பிரச்சினை என்னவென்றால் பெரியாரையும், பாரதியாரையும் ஒப்பிடுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம். அவரவர் பார்வையில், அவர்கள் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலையில் அவர்களால் முடிந்த சாதனையை அவர்கள் செய்திருக்கிறார்கள். இதில் சில குறிப்பிட்ட சம்பவங்களை மட்டும் சுட்டிக்காட்டி அல்லது மிகைப்படுத்தி அவர்களின் தரத்தை சொல்ல முடியாது. இவர் ஒரு விதத்தில் சாதித்திருக்கிறார், அவர் வேறு வகையில். அவ்வளவுதான்.
தற்போது தமிழ்நாட்டில் இரண்டு விஷயங்கள் தொடர்ந்து நடப்பதை நீங்கள் கவனிக்கலாம். ஒன்று, திருமாவளவன் தினமும் காலையில் சனாதன தர்மம் ஒழிக என்று சொல்லிவிட்டுத்தான் காபியே குடிக்கிறார். இரண்டாவது, பிராமணர்கள் இரவு தூங்குவதற்கு முன் பெரியார் ஒழிக என்று கோஷம் போட்டுவிட்டுத்தான் தூங்குகிறார்கள்.
திருமாவளவன் அவர்களின் புலம்பல் ஒருவகையில் புரிந்துகொள்ளக்கூடியது. பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலி இன்னமும் வார்த்தைகளில் வந்துகொண்டிருக்கிறது.
ஆனால் பிராமணர்களின் புலம்பல் வேறு வகை. தமிழ்நாட்டில் பெரியார் பிராமணர்களின் கதையை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் பிராமணர்கள் ஏதோ ஒரு வகையில் அதிகாரத்துக்கு நெருக்கமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அது இல்லை. அந்த ஆற்றாமை அவர்களுக்கு.
தற்போது பாரதியார் குறித்த சர்ச்சை வந்ததற்கு காரணமும் அதுதான். தமிழ்நாட்டில் பாரதியாரை யாரும் அந்த அளவுக்கு வெறுக்கவில்லை. திராவிட கும்பலையும் சேர்த்துதான் சொல்கிறேன். ஆனால் பிராமணர்களின் அடிமடியில் கைவைத்த பெரியாரை மட்டம் தட்ட பல வகைகளில் அவர்கள் முயன்று, தோற்று, கடைசியில் சீமான் மூலம் பெரியாரை தாக்கிய பிறகுதான் இது இப்படி விகாரமாக மாறியிருக்கிறது.
இரண்டு பேர் சண்டை போடும்போது யாரோ ஒருவன் திடீரென்று ஓ... என்ற வார்த்தையை பயன்படுத்தி, சம்பந்தமே இல்லாமல் எதிரியின் அம்மாவை இழுத்துவிடுவான். இப்போது எதிரே இருப்பவனுக்கு கோபம் தலைக்கேற, அவன் இவனுடைய அம்மா, அக்கா என எல்லாரையும் இழுப்பான். அதன்பின் தமிழின் அகராதியில் இல்லாத வார்த்தைகள் எல்லாம் அங்கே வெளியே வரும். இதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் சண்டையில் சம்பந்தமே இல்லாத இரண்டு அம்மாக்களின் தலை உருளும்.
அப்படித்தான் பெரியாரும், பாரதியாரும் இங்கே மாட்டிக்கொண்டார்கள். என்னைப் பொறுத்தவரை இருவருமே போற்றுதலுக்குரிய தலைவர்கள். அதில் பெரியார் ஒருபடி மேலே. இதை புரிந்துகொள்ள மேலும் சில உதாரணங்கள் தேவை.
தற்போது அரசு இரு குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பம்தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆரோக்கியமானது என்று பிரச்சாரம் செய்கிறது. காரணம், சுமை அதிகமாக இருந்தால் உங்களால் வேகமாக பயணிக்க முடியாது என்பதுதான்.
ஆனால் இதே மத்திய அரசு மூன்று மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது. இங்கே மாணவர்களுக்கு சுமை அதிகமானால், அவர்கள் கல்வி கற்பது சிரமமாக இருக்கும், சில சமயம் அது அவர்களை பள்ளிப்படிப்பை இடையிலேயே கைவிடும் அளவுக்கு கொண்டு செல்லும் என்பதை மத்திய அரசு உணர்வதில்லை. காரணம், இங்கே வேறு ஒரு சுயநலம்.
மனிதர்கள், தலைவர்கள் என எல்லாமே இப்படித்தான். இவர்கள் காலையில் ஒன்றைச் சொல்வார்கள். மாலையில் சரக்கு போடாமலேயே வேறு ஒன்றைச் சொல்வார்கள். பிரபஞ்சத்தைக் கூட புரிந்துகொள்ளலாம், ஆனால் இந்த மனிதர்களின் கொள்கைகள் அதையும் தாண்டி புனிதமானது; சாரி சிக்கலானது.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எது பெற்றோருக்கு சரியோ, எது மாணவர்களுக்கு சரியோ, அதுதானே தலைவர்களுக்கும் சரியாக இருக்கும்? தலைவர்களின் வெற்றி தோல்வியையும் இதே அடிப்படையில்தானே கவனிக்க வேண்டும்.
இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். பிராமண மாணவன் நன்றாகப் படித்து கூடுதலாக மதிப்பெண் பெறுகிறான் என்றால், அவனுக்கு கல்விக்கான நல்ல கட்டமைப்பு இருக்கிறது, அதன் மூலம் அவன் நல்ல மதிப்பெண் எடுக்கிறான். தலித்துகளுக்கு அந்த நிலைமை இல்லை என்பதால் இட ஒதுக்கீடு வந்திருக்கிறது.
இப்படி இங்கே குறிப்பிட்ட எல்லா தியரிகளையும் தலைவர்களின் வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள், பல விஷயங்கள் புரியும்.
தமிழ்நாட்டின் நம்பர் ஒன் சாதனையாளர் பெரியார்தான். ஆனாலும் அவருக்கு சில விஷயங்கள் சாதகமாக இருந்தது. அது பாரதியாருக்கு இல்லை. பெரியாருக்கு குழந்தை இல்லை, வறுமை இல்லை. முக்கியமாக அவர் சமூகச் சீர்திருத்தம் என்ற இலக்கை நோக்கி சென்றதால், அதில் மட்டுமே கவனமாக இருந்தார்.
அதிலும் வெள்ளைக்காரன், அவனுடைய குறைகளை களையாமல், இந்து மதத்தின் குறைகளை மட்டும் தடுப்பதில் சரியாக இருந்தான். இது பெரியாருக்கு அவர்கள் மீது ஒரு மரியாதையைக் கொடுத்தது. எனவே அவர் வெள்ளையர்களை எதிர்க்கவில்லை. வெள்ளைக்காரனும் பெரியாரை தொந்தரவு செய்யவில்லை.
பாரதியார் இந்த வகையில் வரவில்லை. அவருக்கு எல்லா தலைவலிகளும் இருந்தது. வறுமை இருந்தது, குடும்பம் இருந்தது, வெள்ளைக்காரனோடு மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. இப்படி பாரங்களோடு ஓடும்போது மனிதன் தடுமாறுவதும், தலைமறைவாவதும், ஒருகட்டத்தில் பணிந்து போவதும் இயற்கை. அதைத்தான் பாரதியார் செய்திருக்கக்கூடும். அதையெல்லாம் கவனிக்காமல் பாரதியாரை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்?
ஒருவேளை இதே நிர்பந்தங்களோடு பெரியாரும் போராடியிருந்தால், அப்போது பெரியார் எந்த மாதிரியான முடிவை எடுத்திருப்பார் என்பதை நான் உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
எனவே இரண்டு பேரும் வேறு வேறு இடத்தில் அவர்களுடைய தரத்தை நிரூபித்து நாங்கள் தலைவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் என்பதை மட்டும் கவனித்தால் போதும்.
இங்கே பெரியார் சாதி அமைப்பை கண்டித்ததோடு மட்டுமில்லாமல், நான் அந்த அடையாளத்தை தூக்கி எறிகிறேன் என்று சொன்னார். அந்த செயல் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே வித்தியாசமான மாநிலமாக மாற்றிவிட்டது. இது பெரியாருடைய சாதனை.
இன்னொரு பக்கம், பாதிக்கப்பட்டவன் தனக்காக (அயோத்தி தாசர்) போராடினால் அது நியாயம் கேட்ட போராட்டம். தான் பாதிக்கப்படாமல் பாதிக்கப்பட்டவனுக்காக போராடினால் அவன் (பெரியார்) சமூகப் போராளி.
ஆனால் தன்னுடைய சமூகம்தான் இந்த தவறை செய்கிறது என்பதை உணர்ந்து அந்த சமூகத்தையே பகைத்து வீறு கொண்டு எழுந்தவன் இந்த புரட்சிக் கவிஞன்.
இங்கே இவர்கள் இருவரையும் குறை சொல்லி வரும் பல செய்திகளை கவனித்தால் தலை சுற்றும். அவை உண்மையாக இருக்கலாம், அல்லது அந்த கால நிர்ப்பந்தமாக இருக்கலாம். எங்கே சாதனைகள் அதிகமாக இருக்கிறதோ அங்கே குறைகளை புறந்தள்ளிவிட்டு அவர்களை போற்றுவதுதான் உலக இயல்பு. அதையே நாமும் தொடர்வோம்.
இன்று பாரதியாரை போற்றும் பிராமணர்கள் அன்றே பாரதியாரின் பேச்சை கேட்டு திருந்தியிருந்தால், பெரியார் அரசியலில் இந்த வளர்ச்சியை பெற்றிருக்க மாட்டார். இப்போது அந்த பெருமை பெரியாருக்கு போவதை ஜீரணிக்க முடியாமல் அவர்கள் பெரியாரை கழுவி ஊற்ற, இந்த பக்கம் இவர்கள் பாரதியாரை... என சின்னப் பசங்க விளையாட்டாகத் தான் இது இருக்கிறது.
பாரதியார் உணர்ச்சி பொங்க கவிதை எழுதியிருக்கலாம், சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியிருக்கலாம், ஆனால் எந்த ஒரு போராட்டத்தையும் வெற்றிகரமாக முடிப்பவன்தான் சாதனையாளனாக உயர்கிறான். அதைத்தான் பெரியார் செய்துவிட்டார்.
இங்கே இந்த பாராட்டுப் பத்திரம் பெரியார், அண்ணா மற்றும் பாரதியாருக்குத்தான். வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்களே, அதுபோல் இப்போதிருக்கும் திராவிட திருட்டு கும்பலை பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.

0 comments:
Post a Comment