நவோதயா பள்ளிகள் தேவையா?
பள்ளிகள் தேவைதான், ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற சேவைகள்/ கல்விகள் எப்போதும் தேவையில்லை. அங்கே இறுதி பலன் என்பது கொடுப்பவனின் நோக்கமாகத்தான் இருக்கும். இதுதான் நிதர்சனம்.
சமீபத்தில் மாரிதாஸ் காணொளி ஒன்றை கவனித்தேன். அதில் உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது, எனவே வேறு வழியில்லை, தமிழக அரசு நவோதயா பள்ளிகளை அனுமதித்தாக வேண்டும் என சந்தோஷமாக மேளம் அடித்திருந்தார். அதோடு விட்டால் பரவாயில்லை. இந்த திட்டத்தை தடுப்பதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை இந்த திமுக அரசு, அதாவது கலைஞரும், ஸ்டாலினும் தடுத்தார்கள், இனி அது நடக்காது என சொல்லியிருந்தார்.
திமுகவை திட்டுங்கள் அதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. `நீ விளக்கு பிடிச்சாதான் திட்டுவேன்` என்றால் நான் அதற்கும் தயார். அந்த அளவுக்கு அது ஒரு மோசமான கட்சி என்பதுதான் என் கருத்து.
அதற்காக எதற்கெடுத்தாலும் யாரையாவது திட்டுவது என்ற கொள்கையில் எனக்கு உடன்பாடில்லை. நான் எப்போதும் நடுரோட்டில் தான் நிற்பேன். அதாவது கொள்கையில். நியாயம் வலது பக்கம் என்றால் வலது பக்கமும், இடது பக்கம் என்றால் இந்த பக்கமும் என ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிடுவேன்.
மத்திய அரசு பல்வேறு சலுகைகளுடன் ஏழை மாணவர்களுக்காக இப்படிப்பட்ட பள்ளிகளை நாடு முழுக்க நடத்துவதாகவும், அதை ஏன் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்பதுதான் இங்கே கேள்வி.
முதலில் இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் ஜாதகத்தை பார்த்துவிடுவோம். நான் சில சமயம் கருத்துக்களை கவனிப்பேன், சில நேரங்களில் கருத்து சொல்பவனின் யோக்கியதையும் கவனிப்பேன்.
இங்கே இந்த இரு நீதிபதிகள் (பி வி நாகரத்னா-ஆர் மகாதேவன்) கொண்ட அமர்வை கவனித்தபோது கண்ட சில முரண்பாடுகள். ஒருவர் பிராமின் இன்னொருவர் நான் -பிராமின். பெண் நீதிபதி ஒரு வருடம் வயதில் மூத்தவர். ஆனால் பணி அடிப்படையில் இந்த பெண் நீதிபதி 5 ஆண்டுகள் மூத்தவர். இவருக்கு தலைமை நீதிபதியாகும் வாய்ப்பும் இருக்கிறதாம்.
அதாவது நாகரத்னா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2008ல் நியமிக்கப்பட்டார். ஆனால் மாதவன் 2013 ல் தான். அவர் பிராமின் என்பதால் இந்த முன்னுரிமையா அல்லது பெண் என்பதாலோ என்பது என் அறிவுக்கு எட்டவில்லை. தீர்ப்புகளில் தரம் இருந்தால் இது போன்ற ஆராய்ச்சிகளில் யாரும் இறங்கப்போவதில்லை. இந்த நாகரத்னா வழங்கிய தீர்ப்பில் அது இல்லை என்பதால் இந்த ஆராய்ச்சி. இது ஒரு அமர்வு என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் என்னை பொறுத்தவரையில் இது நாகரத்னாவின் தீர்ப்புதான்.
கூடுதலாக ஒரு தகவல் என்வென்றால், இந்த நாகரத்னாவின் தந்தை முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாம். ஏகப்பட்ட பேர் இப்படி இருக்கிறார்கள். அரசியலில் வாரிசு என்ற நிலைமை இருப்பதுபோல் நீதித்துறையில் இது இருக்கிறது. ஆனால் இந்த வாரிசு நீதிபதிகள் குறித்து பிஜேபி வாய் திறக்காது.
பிஜேபி ஆட்சியில் இதுவரை நான்கு நபர்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மூவர் பிராமின். முதலில் தயக்கத்தோடு இதை செய்தவர்கள் பின்னர் பல கணக்குகளை போட்டு பார்த்து, நியமிக்கப்படுபவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும், கூடவே அவர்கள் தலைமை நீதிபதி பதவிக்கும் வர வேண்டும் என்று திட்டமிட்டு நியமித்திருக்கிறார்கள். தகவல்கள் இங்கே.
Justice L. Nageswara Rao (2016): Appointed directly from the Bar after serving as Additional Solicitor General. (Brahmin)
Justice Indu Malhotra (2018): The first woman to be directly elevated from the Bar to the Supreme Court.
Justice P.S. Narasimha (2021): Currently a sitting judge; he is slated to become the 56th CJI in 2027. (Brahmin, Father also Judge)
Justice K.V. Viswanathan (2023): The most recent Bar-elevated appointment; he is projected to become the 58th CJI in 2030.( Brahmin)
அவர்களும் எவ்வளவோ மறைக்க பார்க்கிறார்கள். இருந்தாலும் வடிவேல் காமெடியை போல் அவர்களால் குடுமியை மறைக்கமுடியவில்லை. சுருக்கமாக பிஜேபியை பிராமண ஜனதா கட்சி என்று சொல்லி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நவோதய பள்ளி குறித்த தீர்ப்பை பார்ப்போம்.
இனி இந்த தீர்ப்பில் நான் கவனித்த இரண்டு முரண்பாடுகள். ஓன்று, வேண்டுமென்றே ஒரு நான் பிராமினை இந்த அமர்வில் சேர்த்தது அத்துடன் அவர் தமிழராக இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்தது.
நான் பிராமின்களுக்கு சீனியாரிட்டி அவர்களுக்கு சீக்கிரம் கிடைக்காது. ஆனால் எப்போது தீர்ப்புகளில் இவர்களுக்கு ஒரு சமநிலை தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் பிற்படுத்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த நீதிபதிகளுக்கு இப்படி ஒரு மரியாதை கிடைக்கும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை நீதிபதிகளும் யோக்கிய சிகாமணிகள் இல்லை என்பது வேறு ஒரு சோகமான விஷயம்.
இரண்டாவது, வழக்கம்போல் மக்களை முட்டாளாக்க இந்த நீதிமான்கள் போடும் சில நாடகங்கள். நான் ஏற்கனவே முன்னாள் தலைமை நீதிபதி கவாய் குறித்து ஒரு பதிவு போட்டிருந்தேன். அவர் நடித்த அதே நாடகத்தை இந்த நாகரத்னாவும் நடித்திருக்கிறார்.
கவர்னர் ஆர் என் ரவி வழக்கில் கவர்னர்களுக்கு கால அவகாசம் நிர்ணயிக்க முடியாது என்று கவாய் தீர்பளித்தாரல்லவா, அதற்கு சில மாதம் முன் கிருஷ்ணர் குறித்து ஒரு அவதூறு கருத்து நீதிமன்றத்தில் தெரிவித்து சர்ச்சையாகி பின்னர் அவர் மீது செருப்பு வீசப்பட்டு மேலும் அவர் பிரபலமானது உங்களுக்கு தெரியும். அங்கே அவர் தன்னை ஒரு சங்பரிவார் எதிர்ப்பாளராக காட்டிக்கொண்டார். இது நடந்தது செப்டம்பர் 25ல்.
ஆனால் நவம்பர் 25 ல் மனிதர் மாறிவிட்டார். இங்கே பிஜேபியின் உத்தரவுக்கு பணிந்து கவர்னர்களுக்கு கால அவகாசம் நிர்ணயிக்க முடியாது என்று தீர்ப்பு கொடுத்துவிட்டார். ஒருவேளை என்னைப்போலவே எது சரியோ அந்த பக்கம் நான் நிற்பேன். இங்கே வலது இடது என்று நான் பார்ப்பதில்லை என்று சொல்லியிருந்தால் அதை வரவேற்கலாம். தீர்ப்பையும் கொடுத்துவிட்டு அது வந்து .. அது போயி என்று சமாளித்த விதம் இருக்கிறதே. அது ஒன்றே போதும் இது விற்கப்பட்ட தீர்ப்பு என்பது. அதைவிட கேவலம், இதற்கு முன் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் சக அமர்வையே கேலிப்பொருளாக்கிவிட்டார்.
ஒரு படத்தில் விஜய் சொல்வார், `ஒரு முடிவெடுத்துட்டா அதன் பிறகு என் பேச்சை நானே கேட்க மாட்டேன்` என்று. அதேபோல்தான் இருக்கிறது உச்ச நீதிமன்றமும். இவர்களும் விஜய் பாணியைத்தான் பின்பற்றுகிறார்கள். (தலைப்பு இப்ப பொருத்தமாக இருக்கிறதா.)
இவர்கள் ஒரு தீர்ப்பை கொடுப்பார்களாம், ஆனால் அந்த தீர்ப்பை இவர்களே மதிக்கமாட்டார்களாம். இப்போது வந்திருக்கும் நவோதயா தீர்ப்பும் இரண்டு பேர்கள் கொண்ட அமர்வுதான். இரண்டு பேர் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பை நாங்களே மதிக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்ட பிறகு இப்போது நாம் என்ன செய்யவேண்டும்? ஒரே குழப்பமாக இல்லை..
இந்த நாகரத்னாவும் அதே வகை. நவோதயா பள்ளி குறித்த தீர்ப்பு வழங்கும் முடிவை எடுத்த பிறகு, கவாயை போல் இவரும் மக்களை முட்டாளாக்க ஒரு நாடகம் நடத்தியிருக்கிறார். அதாவது டில்லி பார் கவுன்சில் தொடர்பான ஒரு சந்திப்பில் அவர் சொன்ன தத்துவத்தை படியுங்கள்.
`Justice Nagarathna described India as a subcontinent with a multitude of languages, making it unrealistic to expect uniform Hindi proficiency across the nation.`
இப்படி நீதிமன்றங்களில் இந்தி கட்டாயமில்லை ஆங்கிலமே தென்னிந்திய மக்களுக்கு இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்று சொன்னவர், நவோதய பள்ளி விஷயத்தில் அப்படியே யு டர்ன் எடுத்து தமிழக மாணவர்கள் இந்தி கற்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லிவிட்டார்.
50 சதவிகித மேல்மட்ட நீதிபதிகளாவது பிற மாநிலங்களுக்கு, டில்லிக்கு சென்று பணியாற்ற வேண்டிய நிர்பந்தம். அவர்களுக்கே தேவைப்படாத ஒரு மொழி இங்கே மாணவர்களுக்கு ஏன்? தமிழ்நாட்டில் 10 சதவிகித மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இந்தி ஏதோ ஒரு வகையில் தேவைப்படும். மற்ற 90 சதவிகித மாணவர்களின் மீது அதை திணிப்பது நியாயமா?
இனி நவோதயா குறித்த விஷயத்துக்கு வருவோம். சுருக்கமாக சொன்னால் அது தேவையில்லை என்பதுதான். விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அதற்கு வேறு ஒரு பதிவு போட வேண்டும்.
ஒருவேளை தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசுக்கு, பிஜேபி அரசுக்கு அபாரமான அக்கறை என்று வைத்துக்கொள்வோம். அப்படி ஒரு ஆர்வம் உண்மையிலேயே இருந்தால் இந்த பள்ளிகளை திறக்கட்டும். அதேசமயம் தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கையை பின்பற்றி மாணவர்களிடம் கருத்தையும் கேளுங்கள்.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளில், மும்மொழி கொள்கையை பின்பற்றி இந்தி கற்கிறோம் என்று சொல்லும் மாணவர்களுக்கு A பிரிவும், நாங்கள் இரு மொழியே படிக்கிறோம் என்று சொல்லும் மாணவர்களுக்கு B பிரிவும் என வகுப்பறையை இரண்டாக பிரித்து நடத்துங்கள் என சொல்லி பாருங்கள். அவர்களின் பாசம் பல்லிளிக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் நீங்கள் நாசமா போங்க என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவார்கள்.
தமிழ் மொழி அல்ல, அது செம்மொழி, அதை பாதுகாப்பது நம் கையில்தான் இருக்கிறது.

0 comments:
Post a Comment