வர வர கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. நான் டிரம்ப் செய்யும் அட்ராசிட்டியைத்தான் சொல்கிறேன். நான் வேறு ஷேர் மார்க்கெட் பைத்தியமாக இருக்கிறேன். இப்பதான் கொஞ்சநாளா அங்க ஏதோ பச்சை பச்சையா தெரியுது. இவர் அதுக்கும் ஆப்பு வச்சிடுவார் போலிருக்கிறது? காலையில் டீ சாப்பிடுகிறேனோ இல்லையோ, இன்னைக்கி இந்த ஆள் என்ன சொல்லியிருக்கார் என்று தெரிந்துகொண்டுதான் வேலையை ஆரம்பிக்கவேண்டும் போலிருக்கிறது.
உக்ரைன் -ரஷ்யா சண்டை முடிவுக்கு வராமல் இழுத்தபோது, ஏதோ ஒரு இடத்தில் ஜெலன்ஸ்கியோ அல்லது யாரோ சொன்னார்கள். இந்தியா ரஷ்யாவின் நட்பு நாடாக இருப்பதால், அதிலும் மோடி-புதின் உறவும் நல்ல நிலைமையில் இருப்பதால், மோடி இருதரப்பிடமும் பேசி ஏதாவது ஒரு ஒப்பந்தத்துக்கு அவர்களை சம்மதித்திருக்க வேண்டும் என்று.
ஆனால் நாம் இந்தியர்கள் எப்போதுமே ஒரே கொள்கையைதான் கடைபிடிக்கிறோம். அதாவது எவன் செத்தாலும் பரவாயில்லை, தலைவலி என் வீட்டு வாசலை நெருங்காதவரை நான் எதுவும் செய்யமாட்டேன் என்ற கொள்கை உடையவர்கள் நாம்.
முகலாயர்கள் இந்தியாவுக்கு படையெடுத்து யாரோ ஒரு மன்னரை காலி செய்தார்கள்; மற்றவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். வெள்ளைக்காரன் வந்தான் யாரோ ஒருவரின் தலையை தட்டினான்; வேடிக்கை பார்த்தோம். கடைசியில் முடிவு என்ன ஆனது? நாம் இன்னமும் பாடம் கற்கவில்லை.
உக்ரைனுக்கு இந்தியாவுக்கும் ரொம்ப தூரம்தாம். ஆனாலும் அங்கே எறியப்படும் ஏதோ ஒரு கல் ஓன்று இன்று இந்தியாவுக்கு தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த பட்டர்ஃபிளை தியரியை அமெரிக்கா முதலாம் உலகபோரிலேயே உணர்ந்ததால்தான் உலகில் எங்கேயாவது ஒரு ரவுடி அல்லது எதிரி தலையெடுத்தால் உடனே தலையிட்டு அவர்களை பலமிழக்க செய்துவிடுகிறார்கள். அணு ஆயுதங்கள் உடைய இந்தியா -பாகிஸ்தான் சண்டை மட்டுமின்றி, சின்னப்பசங்க தாய்லாந்து - கம்போடியா சண்டை என்றாலும் தலையிடுவார்கள். இந்த விஷயத்தில் நான் அமெரிக்கா பக்கம்.
ஆனால் டிரம்ப் விஷயம் வேறு. மனிதர் வாழ்க்கையில் நிறைய தவறுகளை அதுவும் தைரியமாக செய்திருப்பார் போலிருக்கிறது. ஆனாலும் அது அவரை பெரிதும் பாதிக்கவில்லை. எங்கேயோ அவருக்கு மச்சம் இருக்கிறது.
நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிறகும், மக்களால் தோற்கடிக்கப்பட்ட இவர் மறுபடியும் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால், இதுபோதாதா மனிதனுக்கு கொழுப்பு ஏற.
இப்போது டிரம்ப் சில விஷயங்களை குறிப்பிடுகிறார். இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் வர்த்தகப் பற்றாக்குறை நிறையவே இருக்கிறதாம். ஒரு முடி திருத்தும் கடை வைத்திருப்பவர் அதே ஊரை சேர்ந்த மளிகை கடைக்காரரிடம்`யோவ்.. நான் உன் கிட்ட மாசம் 2000 ரூபாய்க்கு மளிகை சாமான் வாங்கிறேன், நீ என் கிட்ட மாசத்து ஷேவிங்க் -கட்டிங் என 200 ரூபாய்க்குத்தான் வியாபாரம் செய்யுறே, நீயும் கரெக்ட்டா 2000 ரூபாய்க்கு வியாபாரம் கொடு' என்று வாதம் செய்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட அபத்தம்தான் இது. வர்த்தக பற்றாக்குறை பல காரணங்களால் பல நாடுகளில் பலவிதமாக இருக்கும். சர்வதேச பொருளாதாரத்தில் இது சாதாரணமான விஷயம்.
இன்னொரு பக்கம் இந்தியா இன்னமும் ஏழை நாடு என்பதால் நம் விலை அவர்களுக்கு மலிவாக இருக்கிறது, வாங்குகிறார்கள். நமக்கு அப்படி ஒரு வாய்ப்பை அவர்கள் கொடுத்தால் நாமும் வாங்கலாம். ஆனால் கழுத்தில் கத்தி வைத்தால்? அது நிச்சயம் நடக்காது. இங்கே ஒரு முக்கியமான விஷயம். அவருக்கு மச்சம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா, எனவே அவ்வளவு சீக்கிரம் அவரை பகைத்துக்கொள்ளவும் முடியாது.
இரண்டாவது, அவர் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக அணுகுகிறார். முதலில் இஸ்ரேல் மூலம் ஹமாஸை அழித்தார். இல்லை, ஹமாஸ் சொந்த செலவில் அவர்களே அவர்களுக்கு சூனியம் வைத்துக்கொண்டார்கள். பின்னர் ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சிரியா , ஈரான் என வரிசையாக எல்லோரையும் பணியவைத்தார். ஆனால் ரஷ்யா இன்னும் அவர் மிரட்டலுக்கு பணியவில்லை, அதுதான் அவரை ரொம்பவே கடுப்பேத்திவிட்டது. எனவே ரஷ்யாவின் நண்பர்கள் மீது அவருடைய கோபம் திரும்பியிருக்கிறது.
இங்கே தியரி என்ன சொல்கிறது என்றால், சரியான பாதையில் பயணிப்பவர்களும் சரி, தவறான பாதையில் பயணிப்பவர்களும் சரி, இவர்கள் தொடர்ந்து வெற்றியை சுவைக்கும்போது அது கொடுக்கும் தன்னம்பிக்கையில் கொஞ்சம் அகல கால் வைப்பார்கள். இங்கே அவர்கள் ஜெயிக்கலாம் அல்லது சறுக்கியும் விழலாம். சறுக்கி விழுந்தால் கை கால் முறியும், கட்டு போடவேண்டியிருக்கும். இப்போது அவர்களின் மச்சம் அவர்கள் கண்ணுக்கே தெரியாது. டிரம்ப் விஷயத்தில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் இங்கே எனக்கு கவலை அளிப்பது வேறு விஷயம். பல இணைய புலிகள் இந்தியா BRICS மூலம் பதிலடி கொடுக்கவேண்டும், சீனாவுடன் இணைந்து போராட வேண்டும் என கருத்துக்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். எல்லைக்கு அருகே இருப்பவன்தான் எதிரி, எங்கோ தூரத்தில் இருப்பவன் அல்ல என்பதை இந்த அறிவாளிகள் உணர்வதில்லை.
டிரம்ப் அமெரிக்க வரலாற்றிலும், மோடி இந்திய வரலாற்றிலும் சில பக்கங்கள்தான். நாளை இந்த பக்கங்கள் பழங்கதையாகிவிடும். இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக நாடுகளாக நிலைத்து நிற்கும். விரைவில் டிரம்புக்கு அமெரிக்க கோர்ட் கடிவாளம் போடலாம். இங்கே மோடி தேர்தல் கமிஷன் விஷயத்தில் நீதிமன்றத்தில் குட்டு வாங்கலாம்.
ஆனால் சீனா அப்படி அல்ல. அவர்கள் சர்வாதிகாரிகள். இந்தியாவுக்கு எந்த பக்கமும் நண்பர்கள் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு தாக்குவார்கள். அப்போது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சொன்ன வசனத்தை அப்படியே திருப்பி நமக்கு சொல்வார்கள், நமக்கும் உதவ மாட்டார்கள். இது மிகவும் அபாயகரமான சூழ்நிலை.
இன்னொரு பக்கம் BRICS என்பது நல்ல முயற்சிதான். ஆனால் அங்கே சீனாவின் கரன்சியை தவிர எதுவும் பலமாக இல்லை. சீனாவின் கரன்சியை ஏற்பதற்கு பதில் நாம் இந்தியா- சீனா எல்லையையே திறந்து விட்டுவிடலாம்.
அடுத்த 50 ஆண்டுகளுக்கு அமெரிக்காவையோ அல்லது அமெரிக்க டாலரையோ ஒன்னும் செய்யமுடியாது என்பதுதான் நிதர்சனம். அல்லது வேறு ஏதாவது ஒரு முறையை கண்டுபிடிக்கும் வரை இந்த தலைவலிகள் தொடரும்.
இன்னொரு பக்கம் ரஷ்யா நமக்கு உற்ற நண்பனாம் எல்லோரும் சொல்கிறார்கள். அதில் உண்மை பாதி எதார்த்தம் மீதி. அமெரிக்காவை எதிர்க்க ரஷ்யாவுக்கு துணை தேவைப்பட்டது, நாம் இருந்தோம். ரஷ்யாவும் அமெரிக்காவைப்போல் எல்லாத்துறையிலும் முன்னேறாமல், ஆயுத உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தியதால் அந்த வகையில் நாம் அவர்களுக்கு வாடிக்கையாளர்களாக இருந்தோம். இதை தமிழில் மேரேஜ் ஆப் கன்வீனியன்ஸ் என்று சொல்வார்கள்.
காரணம் எதுவாக இருந்தாலும் ரஷ்யா இந்தியாவிற்கு பல விஷயங்களில் பக்கபலமாக இருந்திருக்கிறது. அந்த நன்றிக்காக நாம் ரஷ்யாவுடன் நட்புடன் இருப்போம். ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் சீனாவுடன் ஒரு முரண்பாடு /போர் வருவதற்கான வாய்ப்புதான் அதிகம். அந்த சமயத்தில் ரஷ்யாவால் ஒன்னும் பண்ணமுடியாது. ஏனென்றால் இப்போது ரஷ்யாவே பல விஷயங்களில் சீனாவை சார்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி உக்ரைன் போருக்கு நார்த் கொரிய ராணுவ வீரர்களை ரஷ்யா பயன்படுத்துகிறது என்றால் அவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி இந்தியா நிலவின் தென் துருவத்தில் இறங்க முயற்சி செய்தபோது, அந்த பெருமை இந்தியாவிற்கு கிடைக்காமல் இருக்க ரஷ்யா உடனடியாக ஒரு சாட்டிலைட்டை ஏவி தோல்வியை தழுவியதை நீங்கள் மறந்திருக்கலாம். அதே சமயம் இந்தியாவின் வெற்றியை பாராட்டி 'we are happy being partner' என்று நாசா ஒரு ட்வீட் போட்டது. அதாவது அந்த சமயத்தில் அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவி இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. இதுதான் நிஜம்.
எனவே இனி ரஷ்யாவை நம்புவது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான். இது நம்ம ஊர் வில்லேஜ் விஞ்சானிகளுக்கு புரிவதில்லை.
இந்தியா தற்போதுதான் கிங் மேக்கர் என்ற நிலைக்கு கிட்டத்தட்ட வந்திருக்கிறது. இன்னும் கிங் மேக்கர் ஆகவில்லை. அதற்குள் நான் ஒரு கிங் என்ற மனப்பான்மைக்குள் இந்தியா வரக்கூடாது. அதற்காக டிரம்ப்பிற்கு அடிபணிய வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. அனாவசியமாக வாய்ச்சவடால் விடாமல் அவர் தானாக நிதானத்துக்கு வருவார் என நாட்களை கடத்த வேண்டியதுதான்.
0 comments:
Post a Comment