இந்த வேலையை எல்லா கட்சிகளும் செய்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதாலும், அவர்களுடைய சமூக ஊடகப் பிரிவினரின் அட்ராசிட்டி கொஞ்சம் அதிகமாக இருப்பதாலும், அவர்களுடைய வண்டவாளத்தை முதலில் பார்ப்போம்.
"இந்தியாவிலேயே வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகம்; அது 40 விழுக்காடு. இந்த திராவிட ஆட்சியில், குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண் உரிமை எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது பாருங்கள்" என்று அவர்கள் புளங்காகிதம் அடைகிறார்கள்.
இந்தப் புள்ளிவிவரம் மத்திய அரசு எடுத்ததுதான், எனவே தகவல் உண்மைதான். ஆனால், நம் நாட்டு அரசு ஊழியர்கள் வித்தியாசமானவர்கள்; கொடுத்த வேலையை மட்டும் செய்வார்கள், கூடுதல் தகவல்களைத் தேடமாட்டார்கள். 'அது எங்கள் வேலையல்ல' என்பதே அவர்களின் நிலைப்பாடு.
இதே போன்ற குழப்பம் பல ஆண்டுகளுக்கு முன் குஜராத்திலும் நடந்தது. திட்டக்குழு ஊழியர்கள் வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ளவர்களைக் கண்டறியக் குஜராத் முழுவதும் சுற்றினார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தரவுகளின்படி—வாடகை வீடா, தொலைக்காட்சி இருக்கிறதா, வாகனம் இருக்கிறதா எனப் பல கேள்விகளைக் கேட்டு—அதன் அடிப்படையில் குஜராத்தில் இத்தனை விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்குக்கீழ் இருக்கிறார்கள் என்று கணக்கிட்டார்கள்.
அங்கே அவர்கள் கேட்க மறந்த கேள்வி: "நீங்கள் குஜராத்தியா?" என்பதுதான். அப்போதுதான் அந்தப் புள்ளிவிவரம் உண்மையாக இருந்திருக்கும். பல மாநிலங்களிலிருந்து வேலை தேடி மக்கள் குஜராத் வருகிறார்கள். அவர்கள் ஆரம்பத்தில் வறுமைக்கோட்டிற்குக்கீழ் தான் இருப்பார்கள். அப்படி வேலை தேடி வந்தவர்களையெல்லாம் குஜராத் கணக்கில் சேர்த்ததால், அந்தப் புள்ளிவிவரப் பழி குஜராத்தின் தலையில் விழுந்தது. வறுமைக்கோட்டிற்குக்கீழ் இருப்பவர்கள் குஜராத்தில் அதிகம் என்ற பிம்பம் உருவானது.
கிட்டத்தட்ட அதே குழப்பம்தான் தமிழ்நாட்டிலும் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்தக் கணக்கை எடுத்தவர்கள் மொத்தப் பெண்களையும் கணக்கில் சேர்த்திருப்பார்கள். அதில் வேலை தேடிப் பிற மாநிலங்களிலிருந்து வந்த பெண்களும் அடங்குவர். இதில் தவறில்லை; எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் கணக்கெடுப்பார்கள். யாரோ ஒரு பெண்ணுக்குத் தமிழ்நாட்டில் வேலை கிடைத்தால் அது மகிழ்ச்சிதான். ஆனால், 'தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்கள்' என்பது வேறு, 'தமிழ்நாட்டுப் பெண்கள்' என்பது வேறு. அப்படிப் பார்த்தால் இந்த விழுக்காடு குறையும்.
சரி, அதையும் விட்டுவிடுவோம். கூடவே, "ஏன் வேலைக்குச் செல்கிறீர்கள்?" என்று அந்தப் பெண்களிடம் கேட்டிருக்க வேண்டும். அது இந்த ஆய்வின் நோக்கமில்லை என்பதால் விட்டுவிட்டார்கள்.
நிஜம் என்ன? டாஸ்மாக் தான். ஆண்கள் குடித்துவிட்டு வீட்டுக்குச் சரியாகப் பணம் தருவதில்லை; அப்படியே கொடுத்தாலும் அது குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டுப் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பெண்கள் விரும்பி, தங்களின் சுய முன்னேற்றத்திற்காக வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் திராவிட அரசியலைப் பாராட்டலாம். ஆனால், நிலைமை அப்படி இல்லை. இங்கே பெண்களுக்கு வெளியிலும் வேலை, வீட்டுக்கு வந்தால் சமையல் மற்றும் வீட்டு வேலை. இது அவர்களுக்கு வரமா அல்லது சாபமா என்பது அந்தப் பெண்களுக்குத்தான் தெரியும்.
அடுத்த சிக்கல் விலைவாசி. கல்விக்கட்டணம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான விலைவாசி தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. அதை ஈடுகட்டப் பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்றால், "விலைவாசி உயர்வால் ஒரு குழந்தையே போதும்" என்ற வாதம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் முன்வைக்கப்பட்டது. இதுவும் திராவிட மாடல் சாதனைதான் போலும்!
ஆனால், இந்த உண்மையான காரணங்களை மறைத்துவிட்டு, "தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்கிறார்கள்" என்ற அரைகுறை தகவலை மட்டும் சொல்லிப் பெருமை தேடும் மனநிலையில் திமுகவினர் இருக்கிறார்கள்.
இதில் திமுக ஒரு மிகப்பெரிய பரம்பரையை சேர்ந்தது. இவ்வளவு நாட்களாக இந்த விஷயம் என் கண்ணில் படவில்லை. கனிமொழி அவர்கள் பேசியதைக் கேட்ட பிறகுதான் எனக்கே இந்த விஷயங்கள் புரிந்தன. எனவே அப்படிப்பட்ட பரம்பரையை சேர்ந்தவர்கள் இப்படி அரைகுறை உண்மையை சொல்லாமல் இருக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

0 comments:
Post a Comment