!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, July 11, 2026

இவர்களுக்கு அரசு வேலையா?

கரூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. தன்னை நம்பி வந்தவர்களுக்கும், அதனால் உயிரை இழந்தவர்களுக்கும் உதவி செய்வது என்பது நல்ல விஷயம்தான். இங்கே ஒரு வகையில் தவறு விஜய் மீது இருந்தாலும், பல வகைகளில் தவறு அப்போதைய அரசின் மீதும் இருக்கிறது.

ஒருவர் ஒரு துறையில் எவ்வளவுதான் வெற்றியாளராக இருந்தாலும், பிற துறைகளில் அவர்களின் அனுபவ அறிவு குறைவாகவே இருக்கும். இத்தகைய நேரங்களில், அந்தக் குறிப்பிட்ட துறையில் அனுபவம் உள்ளவர்கள் இவர்களுக்குச் சரியான வழிகாட்ட வேண்டும்.

சமீபத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்த குழப்பம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். புதிதாக வழக்கறிஞர்களைத் தேர்வு செய்யாமல், பழைய திமுக சார்புடைய வழக்கறிஞர்களை விடுவித்துவிட்டார்கள். ஆனால், மாற்று ஏற்பாடு செய்யாமல் இப்படிச் செய்யக்கூடாது என்று அமைச்சருக்குத் துறை சார்ந்த (திராவிட விசுவாச) அதிகாரிகள் ஆலோசனை சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் வேண்டுமென்றே, "இவர்கள் தவறு செய்யட்டும்" என்ற நோக்கில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள். கடைசியில் பழி அமைச்சர் மீது விழுகிறது.

நிர்மல்குமார் சட்டம் படித்திருக்கிறார் போலிருக்கிறது; ஏதோ பேருக்குப் படித்திருக்கிறார். இன்ஜினியரிங், ஆர்ட்ஸ் என இன்னும் சில படிப்புகளும் வருகின்றன. கொஞ்சம் விட்டால் ஐஏஎஸ் முடித்து, ஐபிஎஸ் கூட படித்திருப்பார் போலிருக்கிறது! 

அளவோடு சாப்பிட வேண்டும்; அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் அது நம்மை மந்தமாக்கிவிடும். எனவே, இப்படி அதிகம் படித்தவர்கள் கூட கொஞ்சம் மந்தமாகத்தான் இருப்பார்கள் போல. அதனால்தான் இவர் நிர்வாகத்தில் சொதப்புகிறார். அமைச்சர் கீர்த்தனாவைப் போல் இவரும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார் என்று நினைக்கிறேன். எனவே, இவருக்கு இந்தத் துறையில் நிறைய ஆலோசகர்கள் தேவைப்படுவார்கள். அந்த வகையில், அவருக்குச் சரியான ஆலோசனை வழங்காத அதிகாரிகளும் குற்றவாளிகளே.

கரூர் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கக்கூடும். "கூட்டம் அதிகம், சமாளிக்க முடியாது, இது ஆபத்தானது என்றெல்லாம் அங்கே உள்ள காவல்துறை அதிகாரிகள் என்னிடம் சொல்லவில்லை" என்று விஜய் சொல்லியிருக்கிறார். இது உண்மை என்றால், பழி திமுக மீதுதான் போகும்.

அதாவது ஒரு விபத்தை அவர்களே உருவாக்கியிருக்கிறார்கள், அல்லது அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்தும் விஜய்யை எச்சரிக்காமல், அது நடக்க வேண்டும் என்று நடத்தியிருக்கிறார்கள். திராவிடத் தலைவர்களுக்கு உயிர் அவ்வளவு மலிவாகப் போய்விட்டது. அரசியல் பிரதானமாகிவிட்டது.

உண்மையிலேயே அப்போது ஏதோ ஒரு வகையில் விஜய் மீது தவறு இருந்திருந்தால் எப்படியாவது, கைது செய்யாமல், அவர் பெயரை வழக்கில் சேர்த்திருப்பார்கள். காரணம், இது போன்ற வழக்குகள் பிற்காலத்தில் உதவும். இப்போது நிஜம் தெரிந்துவிட்டதால் ஸ்டாலின் பெருந்தன்மையாக விட்டுவிட்டார் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கரூரில் இவர்கள் செய்த பாவத்திற்கு கொளத்தூர் மக்கள் தண்டித்துவிட்டார்கள். இதுதான் விதி.

இனி கரூர் விஷயத்திற்கு வருவோம். இங்கே விஜய் கூட்டத்திற்கு வந்த மக்கள் முட்டாள்களாக இருக்கலாம்; ஆனால் குற்றவாளிகள் இல்லை. எனவே, அந்த ஒரு காரணத்திற்காக அவர்களுக்கு உதவி செய்வது நல்ல செயல்தான். ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு அளவுகோல் இருக்கிறது அல்லவா? இந்த விஷயத்தில்தான் நம் ஆட்கள், விஜய் போன்ற தலைவர்கள் உட்பட, 'எமோஷனல் ஏகாம்பரமாக' மாறிவிடுகிறார்கள்.

அந்த விபத்திற்குப் பிறகு விஜய் சார்பில் 20 லட்சமும், அப்போதைய அரசு சார்பில் 10 லட்சமும் வழங்கப்பட்டது. இதுவே போதுமானதுதான்; ஏன், கொஞ்சம் அதிகம் என்று கூடச் சொல்லலாம்.

இங்கே என்ன செய்திருக்க வேண்டும்?

கரூர் விஷயத்தில், விஜய் மற்றும் அப்போதைய அரசு இணைந்து வழங்கிய 30 லட்ச ரூபாயை வங்கியில் போட்டாலே, அதில் மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாய் வட்டி வரும். அதுவே அவர்களின் வாழ்வாதாரத்திற்குப் போதுமானது. அப்படியிருக்கையில், இந்த வேலைவாய்ப்பு என்பது ஒரு வகையில் அனாவசியமானது.

இங்கே நேர்மையானவர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் வேலை கிடைக்காது, தவறான வழியில் முட்டாள்தனமாக நடந்துகொள்பவர்கள் தான் பெறுவார்கள் என்றால், இது என்ன மாதிரியான நிர்வாக முறை?

நீதிமன்றம் இவர்களைத் தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கவே வழிகாட்டியிருக்கிறது. நல்ல விஷயம். அதே சமயம், நம் நாட்டு நீதிபதிகள் அரசியல்வாதிகளைவிட அதிபுத்திசாலிகள். முட்டாள் அரசியல்வாதிகளைக் கூட ஐந்து ஆண்டுகளில் வீட்டுக்கு அனுப்பிவிடலாம்; ஆனால், நீதித்துறையில் இருக்கும் முட்டாள்களை ஒன்றுமே செய்ய முடியாது. அவர்கள் அப்படி இருப்பதுதான் தங்களுக்கு நல்லது என்று அரசியல்வாதிகளும் இப்படிப்பட்டவர்களைத் தேர்வு செய்கிறார்கள்.

எதிர்காலத்தில் தற்காலிகப் பணியாளராக உள்ளவர்கள் பணி நிரந்தரம் கேட்கும்போது, நீதிமன்றம் இந்த வழக்கைக் கையில் எடுத்து, மேலும் 10 வருடங்கள் இழுப்பார்கள். அதன்பின் இந்த ஊழியர்கள் ஓய்வு பெறும் தருவாயில், "இது செல்லாது" என்றோ அல்லது "இனி காலம் கடந்துவிட்டது" என்றோ ஒரு பலனளிக்காத தீர்ப்பைக் கொடுப்பார்கள்.மொத்தத்தில் இந்தியாவில் எல்லாமே வித்தியாசம்தான். சரியானதை தவறாகவும், தவறானதை சரியாகவும் செய்யக்கூடியவர்கள்.

இது தவறான முன்னுதாரணம் என்று விஜய்க்கு யாராவது இதை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், அவருக்கு மேலே ஒரு நல்ல அனுபவமுள்ள ஆலோசகர் இருப்பது போல் தெரியவில்லை.

அவர் ஒரு தலைவர் என்பதால், தவெக வில் இருக்கும் மூத்த அரசியல்வாதிகள் கூட அவரை எதிர்த்து பேசாமல் ஆமாஞ்சாமிகளாகத்தான் இருப்பார்கள். இந்தத் தலைவலியைத்தான் ஸ்டாலின் அவர்களும் சந்தித்தார். அப்படியே தோல்வியையும் சந்தித்தார். விஜய்க்கு இது ஒரு பாடம்.

இந்த ஆபத்தை விஜய் உணர்ந்து நாட்டு நடப்பை ஊடகங்கள் மூலம் கவனித்துச் சரி செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment