!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, November 29, 2010

சிறை அனுபவம்: குண்டர் (டுபாக்கூர்) சட்டம், சில விளக்கங்கள்

சமீபத்தில் ஆள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் அறிவித்திருக்கின்றனர். அவ்வப்போது சில பரபரப்பான குற்றங்கள் நிகழ்வதும், அந்த நேரம் மக்களின் கோபத்தை தணிக்க, அல்லது உண்மையிலேயே குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக அவர்களின் மீது குண்டர் சட்டத்தை போலீசார் ஏவுவார்கள். ஆனால் எனது இரண்டரை ஆண்டுகால சிறை அனுபவத்தில் சொல்கிறேன், இந்த குண்டர் சட்டம் குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இல்லை, இதனால் குற்றங்கள் குறையப்போவதும் இல்லை.

குண்டர் சட்டம் (சிறையில் இது மிசா ) ஒரு வருட தடுப்பு காவல் என்று சட்டம் சொல்கிறது. மக்களும் இதை நம்பிகொண்டிருக்கிறார்கள். ஆனால் இது செயல்படும் விதமே வேறு. குண்டர் சட்டம் ஒருவர் மீது பாய்ந்த மூன்று மாதத்தில் போர்ட் (Board) வந்துவிடும். இந்த நபர் மீது குண்டர் சட்டம் போட்டது சரிதானா என்று மூன்று நீதிபதிகளை கொண்ட குழு விசாரித்து அதை உறுதி செய்யும் அல்லது தள்ளுபடி செய்யும். இதுதான் போர்ட். பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் இங்கே உடைந்து விடும் அல்லது `உடைக்கப்பட்டு`விடும்.

போர்டில் உடைக்க முடியவில்லை என்றால் மிசா கைதிகள் உடனே ரெட் பைல் பண்ணுவார்கள் (அதாவது போர்டின் முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் பண்ணுவது). இங்கேயும் மிச்ச மீதி வழக்குகளில் பாதி உடையும் அல்லது `உடைக்கப்படும்`. 

எனவே குண்டர் சட்டத்தில் உள்ளே போவதில் பெரும்பாலானோர் 4 அல்லது 5 மாதத்தில் வெளியே வந்து விடுவார்கள். முதல் முறையாக மட்டுமில்லை எத்தனை முறை குண்டர் சட்டம் போட்டாலும் இதே நடைமுறை தான். 

அப்படியே குண்டர் சட்டத்தில் உள்ளே வந்து 6 மாதமோ 1 வருடமோ உள்ளே இருந்தாலும், குற்றவாளிகளுக்கு இது பொங்கல் போனசை முன்கூட்டியே வாங்குவது போலத்தான். அதாவது தொடர் குற்றவாளிகளுக்கு ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை கிடைக்கத்தான் போகிறது. அந்த தண்டனையில் இது கழிந்து விடும் என்பதால், நடைமுறையில் அது அவர்களுக்கு நஷ்டமே இல்லை. அதனால்தான் குண்டர் சட்டத்திற்கு பயமில்லாமல் போய்விட்டது.

அதே சமயம், குற்றவாளிகளை சில மாதங்களாவது இந்த சட்டத்தின் மூலம் உள்ளே வைக்க முடியும். குண்டர் சட்டம் என்றாலே பல வழக்குகளும், சில பொய் வழக்குகளும் சேர்ந்து வரும். (நான் கவனித்த பலருக்கு அப்படித்தான் இருக்கிறது)  குண்டர் சட்டத்தை உடைக்கவும் மற்றும் பிற வழக்குகளில் பெயில் எடுக்கவும் இவர்களுக்கு நிறைய செலவாகும். இது அவர்களுக்கு ஒரு வகையில் தண்டனைதான். ஆனால், நஷ்டம் அவர்களுக்கு என்றால், லாபம் யாருக்கு? அது உங்களுக்கே தெரியும்.

பொன் முட்டையிடும் வாத்து

அரசு பல சட்டங்களை கொண்டு வந்தாலும், கீழ்மட்டத்தில் அதை அமல்படுத்தும் அதிகாரிகளுக்குதான் அதிலுள்ள நிறை குறைகள் தெரியவரும். ஆனால் பொன் முட்டையிடும் வாத்தை யாராவது பலியிடுவார்களா? எனவேதான் இந்த சட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்றாலும் இந்த விஷயத்தை அரசின் கவனத்திற்கு போலீசாரும், வக்கீல்களும் எடுத்து செல்வதில்லை.

நான் `உள்ளே` இருந்தபோது மிசா போடப்பட்ட ஒருவர், `ரெட் பைல் பண்ணனும், பெயில் எடுக்கணும், வக்கீலுக்கு பணம் கொடுக்கணும், என்ன பண்றதுன்னு தெரியலியே ` ன்னு புலம்பிகொண்டிருந்தார். நான் `எவ்வளவு செலவாகும்`னு சும்மா கேட்டு வைக்க, அவர் சொன்ன தொகை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

பின்னர் பலரிடம் பேசியதில் நான் தெரிந்து கொண்டது இதுதான்: வக்கீல் என்பவர் நம்மிடம் பீஸ் வாங்கிகொண்டு நமக்காக திறமையாக கோர்டில் வாதாடி நம்மை காப்பாற்றுவார் என்றுதான் நாம் நினைக்கிறோம். சில வழக்குகளில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வழக்குகளில் அவர் ஒரு மீடியேட்டர்தான். ஒரு வழக்கை சுமுகமாக முடிக்க அல்லது வழக்கை இழுக்க யாரையெல்லாம் `கவனிக்க` வேண்டுமோ அந்த கட்டணங்கள் அனைத்தும் உள்ளடக்கியதுதான் அவருடைய பீஸ். இதில் சில வழக்குகளில் `மரியாதைக்குரியவரும்` அடக்கம். அல்லது அந்த மரியாதைகுரியவரின் பெயரை சொல்லி வக்கீல்கள் சுருட்டலாம்.

போலீசாரை பொறுத்தவரையில், மிசா போடுவதன் மூலம் நாங்கள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம் என்று காட்டிக்கொள்ளவும் முடியும், அதே சமயம் இது அவர்களுக்கு ப்ரமொஷனுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். இதை விட முக்கியமாக வேறு ஒரு லாபம் உண்டு. ஒரு படத்தில் ஒரு பாட்டி, வடிவேலுவை நாய் கடிக்க வைத்து ஒரு காமெடி பண்ணுவாரே அதை பாருங்கள் உங்களுக்கு ஏதாவது புரியும்.

உண்மையில் இந்த குண்டர் சட்டமே தேவையில்லை. இதனால் போலீசாருக்கு பணிச்சுமையும், அரசுக்கு தெண்டசெலவும்தான். இதற்கு பதிலாக பெயில் வழங்கும் நடைமுறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வரலாம்.

தாராளப் பிரபுக்கள் 

நான் சிறையில் இருந்த போது எங்கள் செல்லுக்கு ஒருவர் வந்தார். இவர் கைது செய்யப்பட செய்தி தினத்தந்தியில் முதல் பக்கத்திலேயே செய்தியாக வந்தது. இவர் ஏற்கனேவே சில முறை குண்டர் சட்டத்தில் உள்ளே இருந்தவர். இவர் மீது பல வழக்குகளும் இருக்கிறது. பின்னர் விரோதிகளால் இவர் படுகொலையும் செய்யப்பட்டார். ஆனால் வந்த ஒரு வாரத்திலேயே இவர் பெயிலில் வந்து விட்டார். நீங்கள் எத்தனை குற்றம் செய்தாலும் உங்களுக்கு பெயில் உண்டு என்று நீதிபதிகள் தாராளப் பிரபுவாக இருப்பதால், இவர்கள் எதற்கும் கவலைப்படுவதில்லை. பெயிலில் வந்த பிறகு நீங்கள் உங்கள் திறமையையும், பொருளாதார பலத்தையும் பொறுத்து வழக்கை உங்கள் விருப்பபடி முடித்துக்கொள்ளலாம்.

தேவை கடிவாளம் 

இனி பெயில் வழங்கும் போது குற்றத்தின் தன்மையை மற்றுமின்றி குற்றம் சாட்டப்பட்டவரின் குற்ற செயல்களின் எண்ணிக்கையையும் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும். அதாவது முதல் முறையாக ஜெயிலுக்கு வருகிறார் என்றால் விதிமுறைகளின்படி பெயிலும், இரண்டாவது முறை என்றால் (குற்றத்தின் தன்மை எப்படி இருந்தாலும்) மூன்று மாதம் கழித்தும், மூன்றாவது முறை என்றால் ஒரு வருடம் கழித்தால்தான் பெயில் என்று சட்டம் கடுமைப்படுத்த வேண்டும்.

நான்காவது முறையாக அவர் மீது வழக்கு தொடர நேருமானால், அந்த வழக்கில் அதிக பட்ச தண்டனையில் பாதி காலத்தை கழித்தால்தான் பெயில் என்றும் இருக்கலாம். 4 வது முறையாக ஏதாவது வழக்கில் மாட்டினால் இனி பெயிலே கிடையாது என்ற சூழ்நிலை உருவானால், `30 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் மீண்டும் திருட்டு வழக்கில் மாட்டினார்` என்ற செய்தியெல்லாம் வராது.

சில விளக்கங்கள்:

1: என் வழக்கை பொறுத்த வரையில், போலீசார், வக்கீல், நீதிபதி, சிறை அதிகாரிகள் என யார் மீதும் எந்த கோபமும் இல்லை. அவர்களால் எனக்கு எந்த பிரச்சினையும் உருவாகவில்லை. நானாக என் குற்றத்தை ஒப்புகொண்டாலும், அவர்கள் என் வழக்கை மனிதாபிமானத்தோடு தான் அணுகினார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டதால் குறைந்தது 6 மாத தண்டனையாவது கிடைக்கும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. எனவே இந்த பதிவுகள் இவர்கள் மீதான காழ்புணர்ச்சியால் எழுதப்பட்டது அல்ல. சமுக அக்கறையில் தான் எழுதியிருக்கிறேன்.

2: இந்த ஒரு பதிவின் மூலம் நான் சொல்ல நினைப்பதை என்னால் தெளிவாக சொல்ல முடியாது. சட்டத்தில் உள்ள பல ஓட்டைகளில் இது ஓன்று. மற்றவற்றை அடுத்த பதிவுகளில் பார்ப்போம். இதில் உங்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். அல்லது உங்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். 

3:ஒட்டு மொத்தமாக ஒரு அமைப்பை குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் இங்கு பலரை குறை சொல்லியிருக்கிறேன் என்றால் அவர்களிடம் நிறைகளே இல்லை என்று அர்த்தம் எடுத்துகொள்ள கூடாது. சில தவறுகளை செய்யத்தூண்டும், நியாப்படுத்தும் விநோதமான நீதிகளெல்லாம் இருக்கின்றன. அதை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.


9 comments:

Anonymous said...

Keep going.

Sundararajan P said...

இன்றுதான் இந்தப் பதிவை பார்க்க நேர்ந்தது.

நிறைய எதிர்பார்க்கிறேன்.

அருண் பிரசாத் said...

பல ஆறிய முடியாத விஷயங்கள்... தொடருங்கள்.... கண்டிப்பாய் தெரிந்து கொள்ளவேண்டும் எல்லோரும்

அருண் பிரசாத் said...

நண்பரே!

என் வலைப்பூ நீங்கள் பின்னோட்டம் இட்ட வலைப்பூ அல்ல. இநத் வலைப்பூவில் நான் ஒரு வாரம் மட்டுமே ஆசிரியராக இருப்பேன்

என் வலைப்பூவிற்கு இங்கு வரவும்

http://arunprasathgs.blogspot.com/

உங்கள் கருத்துக்கு நன்றி

அருண் பிரசாத் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post.html

நன்றி

சிவானந்தம் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

நன்றி, அருண்

நான் எனது தலைப்பில் குறிபிட்டுள்ள படி இன்னும் பிரச்சினைகளில் இருந்து விடுபடவில்லை. எனவே பதிவுகளுக்காக நேரம் ஒதுக்குவது சிரமமாக இருக்கிறது.

Anonymous said...

Well balanced and matured writing, very informative and useful to the society.

As a part of the society or community, it makes me realize how corrupt and selfish we all are, how are we going to clean it up!

As Gandhi stated, the change (or cleaning process) should start from us.. to be specific from "me".. let me start and try....

சிவானந்தம் said...

Yes. You are right. The changes must start from us. I don’t believe that an honest society can produce corrupt politician. If today’s politicians are corrupt then the society itself is corrupt. At the same time it is unreasonable to put blame solely on people. India is so divergent and still illiterate; it is the educated lot who deserved to be condemned


We notice lot of undesirable things, corrupt practices around us. But we never feel it is our responsibility to report that to concerned authorities, even as anonymous. And it is also our responsibility to analyze why it happened, what can be done to prevent that. If we do that, that will be great service we are rendering to our society (country)

Unknown said...

இப்பொழுதுதான் உங்கள் பதிவை பார்த்தேன், அருமையாக சொல்லி இருக்குறீர்கள், சட்டத்தில் உள்ள ஓட்டைகளே நாட்டின் ஓட்டைகளாகவும் மாறிவிட்டது வேதனையான ஒன்றுதான், இருந்தாலும் உங்கள் அளவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எனக்கு எந்த அனுபவமும் இல்லாததால் என்னால் எந்த கருத்தும் சொல்லமுடியவில்லை, மன்னிக்கவும், நன்றி

Post a Comment