!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, December 5, 2010

சிறை அனுபவம் 3: பலி ஆடுகள்

இது ஒரு தொடர், வரிசையாக படிக்க



அந்த புதிய பிளாக்குக்கு நுழைந்த உடனேயே புரிந்து விட்டது இது ஜெயில்தான் என்று. அந்த பிளாக்கில் இருந்த அத்தனை பெரும் அக்மார்க் கிரிமினல்கள். மொத்தமாக (சுமார் 60 பேர்) அனுப்பபட்டவர்களில் நாங்கள் 15 பேர் ஒரு பிளாக்குக்குள் நுழைந்தோம். எனக்கு ஓரளவு உதவி புரிந்த அந்த பழைய கைதி, அட்மிஷன்களை பிரித்து விடும் அந்த பரப்பான நேரத்தில் காணாமல் போய்விட்டார். அவர் தன் பழைய நண்பர்களுடன் சேர்ந்துவிட்டதை  பின்னர் நான் தெரிந்துகொண்டேன்.


நாங்கள் போன பிளாக்குக்கு வார்டன்கள் தான் எங்களை அனுப்பி வைத்தார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் நாங்கள் அனுப்பி வைக்கப்பட்ட `விதம்`
எனக்கு பின்னால் தெரியவந்த போது நான் உண்மையிலேயே அதிர்ந்து போனேன். பெரும்பாலும் இரவு லாக்கப் முடியும் நேரத்தில்தான் அட்மிஷனை பிற பிளாக்குக்கு மாற்றுவார்கள். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

நாங்கள் அந்த பிளாகுக்குள் நுழைந்த நேரம் பெரிய தலைகள் (ரவுடிகள் ) மட்டும் வெளியே உலாவி கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் உள்ளே அடைக்கப்பட்டு லாக்கப் பூட்டப்படிருந்தது. லாக்கப்பில் கடைசியாக நுழைபவர்கள் ஜெயிலில் பிஸ்தா என்று அர்த்தம்.

எங்களை ஒரு ஓரமாக உட்கார வைத்து அந்த பிளாக் ரைட்டர், ( இவரும் ஒரு கைதி. போலீசாரால் அந்த பிளாக்கை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர்) எத்தனை அட்மிஷன் வந்திருக்கிறது என்று கணக்கு போட்டுக்கொண்டும், எங்களின் ஜாதகத்தையும் விசாரித்து கொண்டிருந்தார். இதற்குள் சில பெரிய தலைகளும் வந்து எங்களின் கேஸ் மற்றும் ஊர் விவரங்களை விசாரித்தார்கள். அதில் ஒருவர், ஒரு புது அட்மிஷனை காட்டி, `டேய், இவன் எங்க ஊர் ஆளுடா! எங்க தெருவுக்கு பக்கத்து தெருவுலதான் இவன் வீடு இருக்கு...` என்று பிட் போட்டுவிட்டு, அந்த பிளாக் ரைட்டரிடம், `தல, இவன் எங்க ஊர் ஆளு. இவன என் கூட அனுப்பு` என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் சிறையில் இது போன்ற வடிகட்டிய பொய்களை நிறைய கேட்டுவிட்ட அந்த ரைட்டர், `எதுவாயிருந்தாலும் நாளை பார்த்துகொள்ளலாம்` என்று பதில் சொல்லிவிட்டு எங்களை, கோழி தன் குஞ்சுகளை  அடைகாப்பது போல் (இங்கே பலியாடு என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும்), பாதுகாப்பாக தன்னுடைய கண்ட்ரோலில் உள்ள செல்லுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்.

அட்மிஷனாக வந்த அந்த புது நபர், அடடா, நம்ம ஊர்காரன்னு அக்கறையா பேசறாரே! நாம அவர் கூட போனா பிரச்சினை இல்லாம இருக்கலாம் என்ற நம்பிக்கையில், `அண்ணே, அவர் எனக்கு தெரிந்தவர்தான். நான் அவர் கூடவே போறேன்.` என்று இவரும் கூசாமல் பொய் சொல்ல, அதற்கு அந்த ரைட்டர் சொன்ன சில வார்த்தைகளில், அவர் அன்று முழுக்க வாயே திறக்கவில்லை. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி கொண்டிருந்தார்.

பக்கத்திலிருந்த செல்லில் அடைக்கபட்டிருந்த கைதிகள், கைகளை மட்டும் நீட்டி எங்களை அதிகார தோரணையில் `இங்கே வா... இங்கே வா..` என்று மிரட்டலாக அழைத்து கொண்டிருந்தார்கள்.

சிறை நடத்தப்படும் விதம், அங்கு அமலில் இருக்கும் ரவுடிகளின் அறிவிக்கப்படாத சட்டமெல்லாம் பின்னர் ஓரளவு தெரிந்து கொண்டேன். ஒரு பிளாக் என்றால் அதற்கு ரைட்டர் என்று ஒருவர் இருப்பார்; எங்களை வழிநடத்தி கொண்டிருப்பவர்தான் ரைட்டர்.   இங்கே இவர் வைத்தது தான் சட்டம் என்பதெல்லாம் அப்போது எனக்கு தெரியாது. எனவே எதுவுமே தெரியாத அந்த இரண்டாவது இரவு எனக்கு ஒரு பயங்கரமான இரவுதான்.

எந்த பக்கம் போவது, எந்த செல்லில் நுழைவது என்ற குழப்பத்தில் திகைத்து நின்ற எங்களை, வார்டன் (சிறை போலீஸ்) ஒரு செல்லை காட்டி `உள்ளே போங்கள்` என்று உத்தரவிட்டார்.

பொழுது சாயும் அந்த நேரத்தில், அந்த செல்லின் உள்ளே நுழைந்ததும் எங்களை முதலில் வரவேற்றது கும்மிருட்டும், ஒரு மோசமான ஸ்மெல்லும் தான். இங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத, முரட்டுத்தனமான ரவுடிகள். உப்பு பெறாத விஷயத்துகெல்லாம் இவர்கள் அடித்துகொள்வார்கள் என்பதால் செல்லுக்குள் எதுவுமே இருக்காது. லைட் கிடையாது, பேன் கிடையாது. சுவர் உச்சியில் வெண்டிலேட்டர் வைக்ககூடிய அளவுக்கு கம்பிகளால் தடுக்கப்பட்ட ஓட்டை இருக்கும். ஓட்டைக்கு அந்த பக்கம் டியுப்லைட் எரிய ,அந்த கம்பி வழியாக இரவில் வெளிச்சம் வரும். இரவில் புத்தகம் படிக்க வேண்டும் என்றால் லாக்கப் கதவு அருகே உட்காரவேண்டும். வெளிச்சத்தையாவது ஓரளவு ஜீரணித்து கொள்ளலாம். ஆனால் சுத்தம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம் இவர்கள்.

`அட்மிஷனெல்லாம் ஓரமா போய் உட்காரு.... ஒரு சின்ன ரவுடி உத்தரவிட்டார்.

போலீஸ்காரர்களுக்கும், ரவுடிகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. குரலை உயர்த்தி பேசினால்தான் நம்மை பார்த்து மற்றவர்கள் பயப்படுவார்கள் என்ற எண்ணம் உள்ளவர்கள். எனவே இங்கு சின்ன பொடிசு முதல் எல்லாரும் சத்தம் போட்டு மிரட்டலாகத்தான் பேசுவார்கள்.

அதன் பின் ஆரம்பமாகியது அவர்களின் விசாரனைபடலம். வெளியே அரசாங்கங்கள் பல சட்டங்களை இயற்றியிருக்கிறது. அதை பலர் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால் இங்கே சிறைக்குள் உருவாகியிருக்கும் எழுதப்படாத சட்டங்கள், அதை மீறினால் ஏற்படும் விளைவுகளை பற்றி அவர்கள் எங்களுக்கு பாடங்கள், சாரி, எச்சரிக்கை விடுக்க, கம்பிக்களுக்கு பின்னால் இயங்கும் இன்னொரு உலகத்தை பற்றி நான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். 

                                                                                                              தொடரும் 

 இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.


4 comments:

நிகழ்காலத்தில்... said...

நிறைய தணிக்கை செய்தே எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்..


தொடர்கிறேன்...

சிவானந்தம் said...

``நிறைய தணிக்கை செய்தே எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்..`` நிகழ்காலத்தில்... சிவா

கூடுமானவரை எனக்கு தெரிந்த தகவல்களை மறைக்காமல் மக்களுக்கு தெரியப்படுத்தவே விரும்புகிறேன். இங்கே நான் எதையும் மறைக்கவில்லை. ஏதாவது சந்தேகம் இருந்தால் எனக்கு மெயில் அனுப்பலாம். இங்கே வரும் வாசகர்களுக்கும் ஏதாவது சந்தேகம் இருந்தால் அனானியாக பின்னூட்டம் இடுங்கள். விளக்கம் அளிக்கிறேன்.

Anonymous said...

This is exactly the same experience that I had when I joined my fist year in an engineering college (Ragging), this is exactly how I felt on the fist day when we (first year students) entered into the hostel from the college. I think it (Ragging) still happens in most of the colleges.

Your writing is very good, excellent narration, it makes the readers/viewers feel the mood and reality in the jail.

அருண் பிரசாத் said...

:(

Post a Comment