!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, April 12, 2011

தேர்தல்: முட்டாள்களை அடையாளம் காண ஒரு வழி.

அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை முடித்து விட்டார்கள். இனி மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம். ஆனால் இப்போதும் சிலர், `ஆமா, இவங்க ஊழல் பண்ணி பணம் சம்பாதிப்பதற்கு நாம எதுக்கு ஓட்டு போடணும்?` என்று அபத்தமான வாதம் செய்கிறார்கள். இப்படி வாதம் செய்பவர்கள் படித்தவர்கள் என்பதுதான் கொடுமை. இதிலிருந்து ஓன்று தெரிகிறது. கல்வி அறிவு என்பது வேறு. பொது அறிவு என்பது வேறு என்று. இந்தியாவில் கல்வி அறிவு வளரும் வேகத்தில் பொது அறிவு வளரவில்லை. இவர்கள் ஓட்டு போடாததால் மிக மோசமானவர்கள் அதிகாரத்துக்கு வர வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை இந்த படித்த மேதாவிகளுக்கு யார் புரிய வைப்பது?

உங்கள்  மகனை ஒரு நல்ல தரமான கல்லூரியில் சேர்க்க விரும்புகிறீர்கள். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்காக நீங்கள் உங்கள் மகனை கல்லூரிக்கு அனுப்பமாட்டீர்களா என்ன? கிடைப்பதில் சிறந்ததை தேர்ந்தேடுப்பதுதானே நடைமுறை  வழக்கம். ஆனால் தேர்தலில் மட்டும் மக்கள் இது போல் சிந்திப்பதில்லை. காரணம், தன் மகனின் எதிர்காலத்தில் ஒரு வருடம் கூட பாழாகிபோகக்கூடாது என்று நினைப்பவர்கள், அப்படி ஒரு அக்கறையை தேசத்தின் மீது காட்டுவதில்லை.

இந்த தேர்தலில் மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளர் திருவாளர் தேர்தல் கமிஷன்தான். ஒவ்வொரு தேர்தலிலும் கிடைக்கும் பாடத்தைக் கொண்டு மேலும் மேலும் சிறப்பாக தேர்தலை நடத்தி இந்தியாவை ஒரு சிறந்த ஜனநாயக நாடாக மாற்றிகொண்டிருகிறது நமது தேர்தல் கமிஷன். இந்த தேர்தலிலும் பல குறைபாடுகள் இருக்கலாம். இருந்தாலும் ஓட்டு போடுவதை நமது கடமையாக நினைக்காத படித்த முட்டாள்களையும், பணத்துக்கு நாம் நம் ஓட்டை விற்கவில்லை மாறாக நாம் நம் எதிர்காலத்தை தான் விற்கிறோம் என்பதை உணராத கல்வி அறிவில்லாத மக்களையும் கொண்ட நாடு இது.  இப்படிப்பட்ட நாட்டில் முடிந்த அளவு தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருக்கிறது தேர்தல் கமிஷன். இதற்காக தேர்தல் கமிஷனையும், அதற்கு பக்கபலமாக இருக்கும் நீதிமன்றங்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதே சமயம் பணபல, ஊழல் அரசியலை எதிர்த்து கடுமையாகப் போராடிகொண்டிருக்கும் தேர்தல் கமிஷனை வெறும் பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதன் முயற்சிக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக, எந்தவித பணத்தாசைக்கும், போலி வாக்குறுதிக்கும் பலியாகாமல், இருப்பதில் சிறந்த வேட்பாளர்களுக்கு, அனைவரும் மறக்காமல் வாக்களித்து வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதுதான் தேர்தல் கமிஷனுக்கு நாம் செய்யும் மரியாதையாகவும், நாட்டுக்கு நாம் செய்யும் கடமையாகவும் இருக்கும்.


தேர்தலில் யார் வரவேண்டும் என்று விருப்பப்பட்ட காலம் போய், யார் வரக்கூடாது என்று முடிவு செய்து ஒட்டு போடவேண்டிய நிலைமைக்கு நாம் வந்து விட்டோம். இது ஒரு துரதிருஷ்டமான நிலைமைதான். இருந்தாலும் வியாதி முற்றி அது நம்மை அழித்துவிடும் என்ற பயம் வரும்போதுதான் நாம் விழித்துக் கொண்டு போராடுவோம். அந்த வகையில் ஊழலால் மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டாலும், அன்னா ஹசாரே மூலம் ஒரு மிகபெரிய ஊழல் எதிர்ப்பு போராட்டமும், மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வும் வந்ததே அதுவே நமக்கு மிகப்பெரிய லாபம்.

கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளும் இன்று ஊழலில் ஈடுபடுகின்றன. சிலர் பணத்தாசையினால் ஊழலில் ஈடுபடுகின்றனர். சிலர் பணம் இல்லாமல் கட்சி நடத்துவதோ அல்லது தேர்தலில் பங்கு கொள்வதோ சாத்தியமில்லாத நிலையில், தற்போதைக்கு அரசும் அந்த சுமையை ஏற்க முன்வராத நிலையில்,   ஊழலில் ஈடுபடுகின்றன. இதில் யார் உண்மையான ஊழல்வாதிகள், யார் சூழ்நிலை குற்றவாளிகள் (ஊழல்வாதிகள்) என்று கண்டுபிடித்து வாக்களிக்க வேண்டியது வாக்காளனின் கடமை.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இரண்டு முன்னணி கட்சிகளுமே நிஜமான ஊழலில் முன்னணியில் இருப்பவை. இருந்தாலும் இதில் எது மிக மோசம் என்று கணித்து அவர்களை ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிறகு யாருக்கும் இதில் சந்தேகம் இருக்காது. இன்று ஜெயலலிதா திமுக அரசின் மீது எந்தெந்த குற்றச்சாட்டுகளை சுமத்துகிறாரோ, அதே தவறை அவரும் செய்திருக்கிறார். ஆனால் ஒரு கூட்டணி கட்சியே வழக்கு போட்டு ஒரு மந்திரியை உள்ளே தள்ளும் அளவுக்கு ஒரு மெகா ஊழலை செய்ததன் மூலம் திமுக மிக மோசமான ஊழல் கட்சி என்ற அவப்பெயரை பெற்றிருக்கிறது. அத்துடன் அவர்களுடைய குடும்ப அரசியலையும் சேர்த்தால் தற்போதைக்கு தோற்கடிக்கப்படவேண்டிய திமுக தான் என்பது தெரியும். ஊழலும் குடும்ப அரசியலும் எல்லா கட்சியிலும் இருக்கிறது. ஆனால் இவர்கள் அதிலும் பிரமாண்டம்.

ஊழல் செய்பவர்களின் மீதான கடிவாளம் மெல்ல மெல்ல இறுகிக் கொண்டு வருகிறது. ஒரு மெகா ஊழலில் ஈடுபட்ட கட்சி மீண்டும் வெற்றி பெற்றால், ஊழலைவாதிகளை அழிக்க போராடும் நேர்மையான நீதிபதிகளும் மனம்தளர்ந்து தங்கள் வேகத்தை குறைத்து கொள்வார்கள். எனவே மக்களும் தங்கள் பங்குக்கு இவர்களை தோற்கடிக்க வேண்டும்

முட்டாள்களை அடையாளம் காண ஒரு வழி இருக்கிறது. ஏப்ரல் 13 ம் தேதிக்கு பிறகு யாருடைய விரலிலாவது மை இல்லைஎன்றால் அவர்கள் முட்டாள்கள் என்று முடிவு செய்து விடலாம். அரசியல் குறித்து பலருக்கு பல விதமான பார்வை இருக்கும். நான் ஆதரிக்கும் கட்சியை உங்களுக்கு பிடிக்காமல் நீங்கள் வேறு கட்சிக்கு வாக்களிக்கலாம். அது உங்களுடைய உரிமை. அதை நான் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் வாகளியுங்கள். முதல் முறை உங்கள் ஓட்டு செல்லாத ஓட்டாக இருந்தாலும் சரி அல்லது தவறான நபருக்காக இருந்தாலும் சரி, ஓட்டு போடுங்கள். இரண்டாவது முறை நீங்கள் அந்த தவறை செய்யமாட்டீர்கள், சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். அதுதான் நாட்டுக்கு தேவை.

2 comments:

Thamizhachi said...

miga nalla karuththu.

Anonymous said...

meendum oru makkal puratchi vendum... innum kudiya seekarathil athu varum....

Post a Comment