!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, June 16, 2011

காங்கிரசின் ஊழல் ஆதரவும், தமிழக மக்களின் அம்மா ஆதரவும்... !

மாமியார் உடைச்சா மண் குடம், மருமகள் உடைச்சா பொன் குடம். இது மனிதர்கள் எந்த ஒரு பிரச்சினையையும் எப்படி அணுகுகிறார்கள் என்பதை புரியவைக்க சொல்லப்படும் வார்த்தை. மாமியார்கள் மட்டுமில்லை, பெரும்பாலான மனிதர்கள் பிரச்சினைகளை அணுகும் விதம் இப்படித்தான்.

கடந்த பதிவில் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் ஊழலை ஆதரிப்பவர்கள் இல்லை என்று சொல்லி இருந்தேன். ஆனால் இந்தியா இதுவரை கண்ட ஊழல்களில் பெரும்பாலானவை காங்கிரசுடன் தொடர்புடையவை. இப்போது வெளிவந்திருக்கும் பிரபலமான ஊழல்களிலும் காங்கிரஸ்காரர்களின் தொடர்பு இருக்கிறது அல்லது அவர்களின் ஆட்சியில் நடந்திருக்கிறது. எனவே மேம்போக்கான பார்வையிலேயே சொல்லிவிடலாம் காங்கிரஸ் என்றாலே ஊழல்தான் என்று!

ஆனால் லாஜிக் என்று ஓன்று இருகிறதே. எந்த ஒரு விஷயத்திலும் இது இருந்தால்தானே நாம் அதை நம்ப முடியும்? ஒரு கொலை வழக்கில் குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்ததற்கான ஆதாரமும், மற்ற ஆதாரங்களும் அவர்தான் இந்த கொலையை செய்தார் என்பதை ஊர்ஜிதப்படுத்தலாம். இருந்தாலும் இங்கே கொலைக்கான மோடிவ் வேண்டும். பணத்துக்காக அல்லது முன் விரோதம் என்று ஏதாவது ஒரு காரணம் இருந்து அத்துடன் இந்த ஆதாரங்களும் இணையும் போதும் அது ஒரு தெளிவான வழக்காக இருக்கும். அதனடிபடையில்தான் தீர்ப்பு வழங்கப்படும். நம்பும்படியான காரணங்கள் இல்லையென்றால் இங்கே லாஜிக் இடிக்கும். காரணமில்லாமல் கொலை செய்ய அவர் என்ன மனநோயாளியா என்ற கேள்வி வரும். இந்த கேள்விக்கு சரியான விடை கிடைக்கும்வரை அவர் தண்டிக்கபடமாட்டார்.  

அதேபோல் இங்கே காங்கிரசின் மேல்மட்ட தலைவர்களின் தகுதியை ஆராய்ந்தால் இந்த ஊழல் செய்திகளுக்கும் அவர்களுடைய தகுதிக்கும் சம்பந்தமில்லாமல் லாஜிக் இடிப்பது தெரியவரும். இருந்தாலும் இன்று காங்கிரஸ் கட்சியின் மீது அதிகமான குற்றச்சாட்டுகள் இருப்பதற்கான காரணம், அது அதிகாரத்தில் அதிக அளவு இருந்ததுதான். வெயிலில் யார் அதிக நேரம் இருக்கிறார்களோ அவர்கள்தானே அதிகம் கருப்பார்கள்? அந்த தியரிக்குதான் காங்கிரஸ் பலியாகி இருக்கிறது.

சோனியா காந்தியை தவிர்த்து மற்ற முன்னணி காங்கிரஸ் தலைவர்களின் தகுதி என்ன?

பிரதமர் மனமோகன் சிங்கின் நேர்மையைப் பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது. அடுத்த சீனியர் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, அந்தோணி, ப.சிதம்பரம் மற்றும் பிற தலைவர்களின் தகுதிகளை பார்த்தால் அவர்களும் நேர்மையானவர்களாகவே தெரிகிறது. ஒரு வேளை அவர்கள் மீதும் ஏதாவது புகார்கள் இருந்தாலும், அது இவர்கள் மோசடிப் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டக்கூடிய அளவுக்கு பெரிதாக இல்லை (நான் கவனித்த வரையில்). ஆக நேர்மையான தலைவர்களான இவர்கள் ஏன் சொந்த கட்சியில் சிலரின் ஊழலையும், மற்ற கட்சியினரின்  ஊழலையும் ஆதரிக்க வேண்டும்? தேர்தல் செலவுகள் ஒரு காரணம். மற்றொரு முக்கிய காரணம் கூட்டணி நிர்பந்தம்.

தேர்தல் செலவுக்காக மற்றும் கட்சியை நடத்த சின்ன சின்ன ஊழல்களில் பெரும்பாலான கட்சிகள் ஈடுபடுவது உண்மை. இது எல்லோருக்கும் தெரியும். கிட்டத்தட்ட பலர் இதை ஜீரணித்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அதற்காக நாட்டை கபளீகரம் செய்யும் மெகா ஊழலில் சிலர் ஈடுபட்டால் அப்போது கூடவா பொறுத்துக் கொள்ளவேண்டும்? நாம் இந்த கேள்வியை ரொம்ப ஈசியாக கேட்டுவிடலாம். ஆனால் நடைமுறை சாத்தியம் என்பது சூழ்நிலைகளை பொறுத்தது.

இங்கே நாம் பிராக்டிகலாக யோசித்துப் பார்ப்போம்.  இவ்வளவு பெரிய ஊழலில் ராசாவோ அல்லது திமுகவோ ஈடுபடும் என்று பிரதமருக்கு தெரிந்திருந்தால் அவர் இதை அனுமதித்திருப்பாரா? பசையுள்ள அமைச்சகத்தை கூட்டணி கட்சியினர் கேட்கும்போதே புரிந்து கொள்ளலாம் அவர்கள் `எதையோ` எதிர்பார்கிறார்கள் என்று. எனவே ஊழல் செய்வார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் இது இவ்வளவு பெரிய மோசடியாக இருக்கும் என்று பிரதமர் என்ன, ராசாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். ராசா இந்த ஊழலில் தெரிந்தே ஈடுபட்டிருந்தாலும், இதன் விஸ்தீரணம் தெரியாமல் ஏமாந்திருப்பார் என்றுதான் நானும் நினைக்கிறன்.

சரி. தெரிந்த பிறகாவது விரைவாக நடவடிக்கை எடுத்திருக்கலாமே?

தற்போது தனி மெஜாரிட்டி இல்லாத ஒரு அரசு உடனடியாக அவர்களை பகைத்துக் கொள்ள முடியாது.  ஊழலுக்காக ஒருவர் மீது நடவடிக்கை என்று பார்த்தால் திமுக மீது மட்டுமில்லாமல் அடுத்து சரத்பவார் மற்றும் பலர் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்கள் சும்மா இருப்பார்களா? உடனடியாக ஆதரவை வாபஸ் வாங்குவார்கள். ஆட்சி கவிழும். மீண்டும் தேர்தல் வரும்.

இங்கே பிரச்சினை தேர்தலை சந்திப்பதில் அல்ல. அந்த தேர்தலிலும் தற்போதைய சூழ்நிலையில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு ஏன், தேர்தலுக்கு முன்பே பல கட்சிகளுடன் கூட்டணி வைத்தாக வேண்டும். தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் அதிமுகவுடன்தான்  கூட்டணி வைத்தாக வேண்டும். அது மட்டும் என்ன உத்தமர்கள் நிறைந்த கட்சியா? தமிழகத்தை விடுங்கள், எந்த மாநிலத்தில்தான் அப்படி ஒரு கட்சியை தேடுவது. எனவே ஊழலை ஒரு குறையாக வைத்து அரசியல் கட்சிகளை புறக்கணிப்பதற்கு தற்போதைக்கு சாத்தியமே இல்லை. நமது தேர்தல் அமைப்பு அப்படி. நீங்கள் தனித்து நின்றால் ஓட்டு விழும். ஆனால் அது எம் பி  ஆகவோ எம் எல் ஆகவோ மாறாது. நமது பாராளுமன்றம் உங்களிடம் எவ்வளவு எம் பிக்கள்  இருக்கிறார்கள் என்றுதான் பார்க்கும். எனவே ஊழல்வாதிகளுடன் கூட்டணி வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
(பிரதமரையோ அல்லது முதல்வரையோ மக்கள் நேரடியாக தேர்ந்தெடுத்தால் இந்த தலைவலி இல்லை. ஆனால் இந்தியா போன்ற பல மொழி பேசும் மாநிலங்களை கொண்ட நாட்டில் அது ஆபத்தில் போய் முடியும். அது இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமே நாடு முழுக்க பரவலான ஆதரவைத்தரும். ஒரு தமிழரோ அல்லது இந்தி தெரியாத ஒருவரோ பிரதமராக வருவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும். 
ஒரு கட்சி வாங்கும் ஓட்டின் அடிப்படையில் விகிதாசார முறையில் அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவது ஓரளவு பரவாயில்லை. இதனால் கூட்டணி நிர்பந்தம் இல்லாமல் தேர்தலில் இந்த ஊழல்வாதிகளை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்து அவர்களை மேலும் பலவீனப்படுத்தலாம். அதையும் மீறி அவர்கள் ஜெயித்து வந்தால் பின்னர் விதியே என்று அனுசரித்துக் கொள்ளலாம்.)  

எனவே தேர்தலுக்கு முன்னரும், தேர்தலுக்கு பிறகும் இந்த ஊழல்வாதிகளில் யாராவது ஒருவர் கை ஓங்கி இருக்கும். அவர்களின் மீதான நடவடிக்கை தாமதபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். காங்கிரஸ் இந்த அனுசரித்தலை செய்யவில்லை என்றால், இதே வேலையை பி ஜே பி செய்யும். மெஜாரிட்டி சிக்கல் உள்ள ஜார்கண்ட் மற்றும் கர்நாடக மாநில அரசியலை பாருங்கள், பி ஜே பியும் இதே தியரியின்படி செயல்படுவது தெரியும். அல்லது இருவருமே நாங்கள் அனுசரிக்க மாட்டோம் என்று அடம் பிடித்தால், நாடு அடிக்கடி தேர்தலை சந்திக்கும்.

வளர்ந்த நாடுகளில் 6 மாதத்திற்கு ஒரு முறை ஆட்சி மாறுவதோ அல்லது பிரதமரை மாற்றுவதோ  ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் வளரும் நாடுகளில் அது வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். அரசு ஸ்திரமாக இல்லையென்றால் எந்த ஒரு நாடும், தொழில் முனைவோரும் இந்தியா தொடர்பான (அது தொழில் முதலீடோ அல்லது நாட்டுக்கு அவசியமான ஒப்பந்தமோ) எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டார்கள். தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளுக்காக ஒரு மாதம் அமைச்சர்கள் கையை கட்டிப்போட்டதற்கே `வளர்ச்சிப் பணிகள் பாதிக்கின்றன` என்று விமர்சிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் ஒரு ஸ்திரமான அரசு இல்லையென்றால் நம் நாட்டிலும் வளர்ச்சி பணிகள் மந்த நிலையில் இருக்கும்.

இதுதான் காங்கிரஸ் ஊழல் விஷயத்தில் கொஞ்சம் அனுசரித்து போகும் காரணம். அதாவது ஊழலை எதிர்த்து காங்கிரஸ் ஆட்சியை இழந்து தியாகி ஆனாலும், அடிக்கடி தேர்தல் நாட்டுக்கு நல்லதல்ல என்பதாலும், அடுத்த ஆட்சியிலும் காங்கிரசோ அல்லது பி ஜே பி யோ இதே தவறை செய்ய வேண்டி இருக்கும் என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டதாலும் இந்த அனுசரித்தல்.

ஆனால் அதற்காக இந்த ஊழல் பெருச்சாளிகளை அப்படியே விட்டுவிட முடியுமா? கண்டிப்பாக விட மாட்டார்கள். சற்று தாமதமானாலும் இந்த பேராசைக்கான விலையை திமுக கொடுக்கும். இந்த ஊழலை வெளிப்படுத்தியதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பங்கு இருந்தாலும் அவர்களுக்கு தீனி போட்டது காங்கிரஸ்தான் என்பதை மறந்துவிட வேண்டாம்.


மேலே சொன்ன  காரணங்களை படித்தும் உங்களுக்கு திருப்தி வரவில்லை என்றால் இந்த வினோதத்தையும் படியுங்கள்.

நடந்து முடிந்த தேர்தலில் தமிழக மக்கள் ஜெயலலிதாவுக்கு அமோக ஆதரவு அளித்து ஆட்சியில் அமர வைத்து இருகிறார்கள். இது உங்களுக்கு அதிர்ச்சியாக இல்லை? அவர் ஒன்றும் புது அரசியல்வாதி இல்லை. வளர்ப்பு மகன் திருமணம், தர்மபுரியில் அப்பாவி கல்லூரி பெண்கள் பலி, மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் எல்லாம் மக்களுக்கு தெரிந்ததுதானே? இந்த ஐந்தாண்டுகளில் உண்மையான எதிர்கட்சித் தலைவராக தன கடமையைத்தான் செய்தாரா? அதைவிட முக்கியமாக இவர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அப்படி என்றால் ஒரு குற்றவாளியை ஆதரிக்கும் அளவுக்கு தமிழக மக்கள் முட்டாள்களா? இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

காங்கிரசின் ஊழல் ஆதரவும் (என்ற தோற்றம்), தமிழக மக்களின் ஜெயலலிதா ஆதரவும், நம்மிடம் தற்போது இருக்கும் மாற்று இதைவிட மோசமானவை என்ற அச்சத்தில் வேறு வழி இல்லாமல் எடுக்கப்பட்டவை. இதை நீங்கள் காங்கிரஸ் ஊழலை ஆதரிக்கிறது என்றும், தமிழக மக்கள் குற்றவாளிகளை ஆதரிகிறார்கள் என்றும் அர்த்தம் எடுத்துக் கொண்டால், அது அரசியல் குறித்த தவறான புரிதலாக இருக்கும்.

இதையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சில நாடுகளில், சில முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், ஜுரிக்களை வழக்கு முடியும் வரை தனிமைப்ப்டுத்திவிடுவார்கள். தீர்ப்பு அளிக்கும் வரை அவர்கள் பத்திரிக்கைகள் கூட படிக்க முடியாது. பத்திரிக்கைகளில் வரும் பரபரப்பு செய்தியை படித்துவிட்டு குற்றம் சாட்டப்பட்டவரை அவர்கள் அவநம்பிக்கையோடு பார்க்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட நடைமுறை அது.

அதேபோல் பல்வேறு ஊழல் செய்திகளை படிக்கும் மக்கள், அரசியல்வாதிகள் என்றாலே அவர்கள் ஊழல்வாதிகள், நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள் என்ற தவறான முடிவுக்கு வந்துவிட்டார்கள். இந்த பதிவு நிச்சயம் அந்த தோற்றத்தை மாற்றப் போவதில்லை. ஆனால் நமது ஜனநாயக அமைப்பில் இருக்கும் குறைகளையும், நேர்மையான அரசியல்வாதிகளும் சில சமயம், நாட்டின் நீண்டகால நலன் கருதி, சில நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து போகவேண்டி இருக்கும் என்ற யதார்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.

காங்கிரசுக்காக உழைத்த பல கட்சித்தலைவர்கள் இருக்கையில் தன்னை இரண்டு முறை பிரதமராகிய சோனியாவுக்கு மன்மோகன் சிங் நன்றிக் கடன்பட்டவராக இருக்கலாம். ஆனால் அதற்காக மன்மோகன் சிங்கும் மற்ற நேர்மையான முன்னணி காங்கிரஸ் தலைவர்களும் ஊழலை ஆதரிப்பார்கள் என்றோ அல்லது பதவி சுகத்திற்காக நாட்டு நலனை அடகு வைப்பார்கள் என்றோ நான் நினைக்கவில்லை. அவர்கள் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறன்.


3 comments:

shiva said...

ama ammaa is a very honest women in politics???

Anonymous said...

?

சிவானந்தம் said...

@ shiva

@ Anonymous

இந்த கருத்துக்களில் உடன்பாடு இல்லையென்றால் அதை வெளிப்படையாக விமர்சியுங்கள். அவரவருக்கு அரசியல் குறித்த ஒரு பார்வை இருக்கும் அதை வெளிப்படுத்த உங்களுக்கு என்ன தயக்கம்?

Post a Comment