எனக்கு நுனி நாக்கில் ஒரு ஓரமாக கொஞ்சம் கருப்பாக இருக்கும். மச்சமோ என்னவோ? எனவே சிலர், `அய்யய்யோ... உன்னை பகைச்சிக்க கூடாதப்பா. நீ எது சொன்னாலும் பலிக்கும்` என்று சொல்லுவார்கள். அது உண்மையோ, பொய்யோ, ஆனால் நான் இதற்கு முந்தைய பதிவில் ஒரு உதாரணத்துக்கு சொல்லியிருந்தேன், தீவிரவாதிகள் குண்டு வைத்து விளையாடுவதற்காகவே உருவான நகரம்தான் மும்பை என்று! நான் அப்படி சொல்லி சில நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் தீவிரவாதிகள் மும்பையில் மீண்டும் குண்டு வைத்து விளையாடிவிட்டார்கள்.
இதற்காக அரசை எதிர்கட்சிகளும், மக்களும் கடுமையாக விமர்ச்சிப்பார்கள். ஆனால் குண்டு வெடிப்பும் நிற்கப்போவதில்லை. அதைத் தொடர்ந்த விமர்சனமும் நிற்கப் போவதில்லை. இது ஒரு தொடர்கதைதான்.
நமது பாராளுமன்றம் தாக்கப்பட்ட பிறகும், பிஜேபி அரசே போருக்கு தயாராக இல்லை எனும்போது, காங்கிரஸ் மட்டும் என்ன வீரத்தை காட்டப்போகிறது? அதே சமயம் இது பாகிஸ்தானின் ஆதரவில்லாமல் உள்நாட்டு தீவிரவாதிகளாலும் நடந்திருக்கலாம். எனவே நாம் பிராக்டிகலாக சிந்திப்போம். அதாவது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதைப்பற்றி மட்டும் சிந்திப்போம்.
ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனையும் சந்தேகத்தோடும் பார்க்கவும் முடியாது. பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுடைய உரிமையை பறித்தாலோ அல்லது வருடம் முழுவதும் அவர்களை சிரமத்துக்குள்ளாக்கினால் அதற்கும் கடுமையான விமர்சனம் வரும்.
மேலை நாடுகள் வசதி படைத்தவை என்பதால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மக்களுக்கு சிரமமில்லாமல் கண்காணிப்பை பலப்படுத்த முடியும். அங்குள்ள மக்களும் முழுமையான கல்வி அறிவு பெற்றவர்கள். சிரமத்தையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை, அரசுக்கு உதவுவதிலும் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஆனால் நமக்கு பல தலைவலிகள். ஓன்று, மக்கள் தொகை பெருக்கத்தால் இந்தியாவில் எதுவுமே விகிதாச்சார முறையில் இல்லாமல் இருப்பது. ஒரு லட்சம் மக்களுக்கு குறைந்தது 220 போலீசார் தேவை என்று UN நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இருப்பதோ 130 தான் (மேலைநாடுகளில் இந்த எண்ணிக்கை 300 க்கும் மேல்). நிலைமை இப்படி இருக்கையில், குறுக்கு வழியில் போவதும், அவசியம் இல்லாத இடத்தில் கூட அரசுக்கு பொய்யான தகவல்களை அளிப்பதும் வாழ்க்கை முறையாக கொண்ட நம் மக்களை எப்படி இவ்வளவு குறைந்த போலீசாரை வைத்துக் கொண்டு கண்காணிப்பது?
அப்படியும் சமூக அக்கறை கொண்ட சிலர், ஏதாவது விபத்தின் போது உதவி செய்யப்போனால் கூட அதற்கே ஆயிரத்தெட்டு நடைமுறைகளை சொல்லி மக்களை வெறுப்பேத்துவார்கள். இந்த லட்சணத்தில் சமூகவிரோதிகள் பற்றி தகவல் தருபவர்களின் கதி என்னவாகும். அது கேள்விக்குறிதான். எனவே இந்தியா போன்ற நாட்டில் சமூகவிரோதிகளை அடையாளம் காணுவது என்பது கடற்கரை மணலில் ஊசியைத் தேடுவதைப் போன்றதுதான்.
சரி, இதற்கு என்னதான் வழி? கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டியதுதான்.
மத்திய அரசு ஒரு பரிசுத் திட்டத்தை அறிவிக்கலாம். தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை அரசுக்கு தந்து, அந்த தகவல் அரசுக்கு உபயோகமானதாக இருந்தால், அப்படி தகவல் சொல்பவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 1 கோடி (ஆண்டுக்கு 100 பேர்) பரிசு அல்லது அரசு வேலைவாய்ப்பு தரப்படும் என அறிவிக்கலாம்.
தற்போது பல முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பதை அறிந்திருக்கும் சிலர், நமக்கேன் வம்பு என ஒதுங்கி இருப்பார்கள். இந்த பரிசுத் திட்டம் அவர்களை ரிஸ்க் எடுக்க தூண்டும். அதேபோல் சாதாரண மக்களும் பணத்தாசையில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என உளவு வேளை பார்க்க ஆரம்பிப்பார்கள்.
ப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள் அல்லவா, அதேபோல் ப்ரீலான்ஸ் உளவாளிகளை உருவாக்கும் திட்டம்தான் இது. ப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளர்கள் அளிக்கும் செய்திகள் /கட்டுரைகள் தரமானதாக இருந்தால் சன்மானம் கிடைக்கும். பத்திரிக்கைக்கும் நிரந்தர ஊழியர் என்ற அவஸ்த்தை இல்லை. அதேபோல்தான் இதுவும்.
இன்னும் சொல்லப்போனால் இந்த தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் போலீசாரிடம்தான் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் சாதாரண மக்களில் யார் உளவு வேளை பார்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. எனவே அவர்களிடம் மாட்டிகொள்ளும் வாய்ப்பு அதிகம்.
ஆனால் சாதாரண மக்கள் சமூக அக்கறையில் அதை போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா? அல்லது உப்புமா பரிசுக்காக அவர்கள் ரிஸ்க் எடுப்பார்களா? எனவே கோடிகளில் பரிசு என்றால் நிச்சயம் அது அவர்களை சலனப்படுத்தும்.
ஆண்டுதோறும் பல தீவிரவாதச் செயல்கள் மற்றும் பல்வேறு மோசடிகள் மூலம் நாடு பணத்தை இழந்துதான் கொண்டுதான் இருக்கிறது. எனவே இதற்காக ஒரு துறையை உருவாக்கி அதற்கு நிதியும் ஒதுக்கி இந்த திட்டத்தையும் நடைமுறைபடுத்திப் பார்க்கலாம்.
எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நாம் இருக்கிறோம். எனவே இப்படி வித்தியாசமாக சிந்திக்க வேண்டியதுதான்.
0 comments:
Post a Comment