!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Sunday, July 10, 2011

நீங்க இந்தியாகாரங்க, உங்க நாட்டை விட்டுகொடுக்க மாட்டீங்க....

சிறையில் நான் முதல் எட்டு மாதம் தொடர் குற்றவாளிகளின் பிளாக்கில் இருந்தேன். பின்னர் வேறு பிளாக் மாறிவிட்டேன். இந்த பிளாக்கில் நான் போய் சேர்ந்தது இலங்கை தமிழர்களுக்கான செல்லில். இங்கே நான் ஒன்றரை வருடம் இருந்தேன். இந்த செல்லில் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இலங்கைத் தமிழராக, போதை பொருள் கடத்தல் வழக்கில் உள்ளவராக அல்லது வசதியானவராக இருக்க வேண்டும். நான் இந்த மூன்றும் கிடையாது. இருந்தாலும் சிறை நூலக உதவியாளர் (ஈழத் தமிழர்) இந்த செல்லில் இருந்ததால், அவருடைய நட்பால் நான் இங்கே வந்து சேர்ந்தேன்.

இந்த செல் பல வகைகளில் சிறப்பானது என்றாலும், எனக்கு மிகவும் பிடித்து போனது பேப்பர் படிப்பதில்தான். சிறை நூலகத்துக்கு வரும் நாளிதழ்கள் அனைத்தும் நூலகம் முடிந்ததும் இந்த செல்லுக்கு வந்துவிடும். எனவே தினமலர், தினமணி, தினகரன், தினத்தந்தி, ஹிந்து, டைம்ஸ் ஆஃ இந்தியா என எல்லா பேப்பரும் தினமும் படித்துவிடுவேன். அரசியல் ஆர்வம் உள்ள, படிக்கும் ஆர்வம் உள்ள எனக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

இருந்தாலும் தலைவலி இல்லாத இடம் ஏதாவது உண்டா? எனவே இங்கேயும் வந்தது ஒரு தலைவலி. நான் இருந்த செல் 30 பேர் வரை அனுசரித்து படுக்கும் அளவுக்கு பெரியது. இந்த செல்லில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அவ்வப்போது மாறும். இங்கே மெஜாரிட்டியினர் பல வருடங்களாக இருக்க, புதியவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இந்த 30 ல் சாப்பாட்டு குரூப் நான்கு அல்லது ஐந்தாக பிரிந்திருக்கும். அதாவது தங்களுக்குள் ஒரு குரூப் அமைத்துக் கொண்டு, அவர்களில் சிலர் அவர்களுக்குண்டான படியை (சாப்பாடு) மொத்தமாக வாங்கிக் கொண்டு பின்னர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். இதில் பெரிய குரூப் எங்களுடையது. 8 முதல் 10 வரை போகும்.

காலைப் படியை நான் சாப்பிடுவது இல்லை. எங்கள் குரூப்பிலும் பலர் விரும்புவதில்லை. ஆனால் மற்ற பிளாக்குகளில் வசதி இல்லாத ஏழைகள் இந்த படிக்கும் அடித்துக் கொள்வார்கள். மதிய உணவிலும் எங்கள் குரூப்பில் பலர் பல வேலைகளில் (?) இருப்பார்கள். எனவே மதியம் சிலருடன் மட்டுமே சேர்ந்து சாப்பிடுவேன். இரவு படி 5 மணிக்கெல்லாம் வந்தாலும் நாங்கள் வாங்கி வைத்து, லாக்கபிற்கு பிறகு, 8 மணிக்கு மேல்தான் சாப்பிடுவோம். அப்போதுதான் எங்கள் குரூப்பில் எல்லோரும் ஒன்றாக சாப்பிடுவோம். இந்த குரூப்பில் மெஜாரிட்டி இலங்கைத் தமிழர்கள். நானும் வேறு சிலரும்தான் இந்தியத் தமிழர்கள். தினசரி பேப்பர் படித்துவிடும் பழக்கம் எல்லோரிடமும் இருந்ததால் இரவு சாப்பிடும்போதுதான் அரசியல் அதகளப்படும்.

நான் அந்த செல்லுக்குள் நுழைந்த சில நாட்களிலேயே ஒருவர் என்னிடம் `நீங்க எந்த கட்சின்னே?` என்று கேட்டுவிட்டார். நானும் யதார்த்தமாக, `நான் எந்த கட்சியிலும் கிடையாது. இருந்தாலும் காங்கிரசுக்குத்தான் அதிகமாக ஓட்டுப் போட்டிருக்கிறேன்` என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான். அதன் பிறகு அவர் என்னிடம் அரசியல் பேசுவதில்லை.

அவர்கள் என்னிடம் அரசியல் பற்றி கதைக்காவிட்டாலும், அவர்களுக்கிடையான பேச்சுக்களில் இந்தியாவின் தலை கடுமையாக உருளும். இந்திய தமிழர்களே இந்தியாவை கடுமையாக விமர்சனம் பண்ணும்போது, இலங்கைத் தமிழர்கள் பற்றி கேட்கவா வேண்டும். அதிலும் இலங்கையில் போர் உச்சகட்டமாக இருந்த நிலையில், இந்தியாவைப் பற்றிய விமர்சனம் சில சமயம் தரம்தாழ்ந்தும் இருக்கும். என் காதில் ரத்தம் வராத குறைதான். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நான் மெளனமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். வாழ்க்கையில் பல விஷயங்களை ஜீரனித்தே பழகிவிட்டதால் இதையும் ஜீரணித்துக்கொண்டேன்.

ஆனால் என்னுடன் இருந்த மற்றொரு இந்தியரான மதுரைக்கார தம்பி (பொய் கேசில் வந்தவர்) ஒருவரால் பொறுக்க முடியவில்லை. `என்னன்னே... இவங்க இந்தியாவபத்தி இப்படி பேசறாங்க. நீங்க ஒன்னும் பதில் சொல்லாம இருக்கீங்க?` என்று நாங்கள் தனியாக இருந்தபோது என்னிடம் கேட்டார். அப்போது நான் அவரிடம், தோற்றுப்போனவர்கள் மற்றும் விரக்தியில் இருப்பவர்கள் கோபத்தில் இதுபோல் பேசுவது சகஜம் என்றும், அவர்களுக்கு கோபத்தை வெளிபடுத்த இது ஒன்றுதான் வழி, எனவே அதிகம் கண்டுகொள்ள வேண்டாம் என்றும் சொன்னேன். அதன்பின் அவரும் அவவப்போது பதிலடி கொடுப்பார். ஆனால் அதிகம் பொருட்படுத்த மாட்டார்.

இங்கே இவர்களுக்கு பதிலடி கொடுப்பது பெரிய விஷயமில்லை. வாதம் முற்றினால் அது மனஸ்தாபத்தில்தான் போய் முடியும். இந்த ஒரு பிரச்சினையை தவிர்த்து வேறு தலைவலி எதுவும் அந்த செல்லில் இல்லாததால் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

ஆனால் என்னதான் நான் சாதுவாக இருந்தாலும், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? இல்லையென்றால் கொலை முயற்சி வழக்கில் ஜெயிலுக்கு போகும் அளவுக்கு நான் போயிருப்பேனா?

சிறைகுள்ளேயும் நான் பொறுமை இழக்கும் நேரம் வந்தது. சட்டீஸ்கரில் துணை ராணுவப்படையினர் மாவோயிஸ்ட்டுகளால் அதிக எண்ணிகையில் கொல்லப்பட்ட ( 2010 ) சமயம். அப்போது வந்த விமர்சனங்கள் ரத்தத்தை சூடேற்றுபவை. ஒரு நாள் நான் சாப்பாட்டை பாதியில் (ஜெயிலில் கொடுப்பதே பாதிதான்) வைத்துவிட்டு எழுந்து விட்டேன். வயிறு சரியில்லை என்று காரணம் சொன்னேன். ஆனால் அந்த குரூப்பில் இருந்த மிதவாத நண்பர்கள் இருவர் புரிந்து கொண்டார்கள். மறுநாள் என்னிடம், `அண்ணே, அவங்க இப்படிதான்னே. நீங்க எதுவும் மனசுல வச்சிகாதீங்கன்னே. இவங்களுக்கு.... என்று சில வார்த்தைகளை விட... எனக்கு ஆச்சர்யம். இவர்களும் இலங்கை தமிழர்கள்தானே? ஒரே செல்லில் நண்பர்களாக இருக்கிறோம் என்ற வகையில் எனக்கு சமாதானம் சொன்னது சரி. ஆனால் அவர்களை ஏன் குறை சொல்லவேண்டும்?

நான் பெரும்பாலும் எனது பிரச்சினைகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற சிந்தனையிலேயே அதிகம் மூழ்கி இருந்ததால், என்னை சுற்றி நடக்கும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன். வெளியில் இருந்தபோதும் , சிறைக்கு போனபிறகும் இதுதான் என் கேரக்டர். இந்த சம்பவம் நடந்த பிறகுதான் அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

நான் இருந்தது இலங்கைதமிழர்க்கான செல்லாக இருந்தாலும், அவர்களிலும் பல வகை இருந்ததை அதன் பிறகுதான் உணர்ந்தேன். ஈழத்தமிழர்கள், அவர்களில் இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள், இலங்கையில் வேறு பகுதியை சேர்ந்தவர்கள், நன்றாக சிங்களம் பேசினாலும் தங்களை இலங்கை தமிழர் என்று சொல்லாமல் இந்தியர் என்றே சொல்லிகொள்ளும் சிலர் என கதம்பமாக இருந்தது அது. இலங்கை பிரச்சினையில் அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்தது. என்னைப்போலவே அவர்களும் எதையும் காட்டிகொள்வதில்லை. ஈழத்தமிழர்கள் மட்டும்தான் கொஞ்சம் கோவமாக இருப்பார்கள்.

நான் விடுதலை ஆவதற்கு சில மாதம் முன் என்னை விட மூத்தவரான ஒரு ஈழத்தமிழருடன் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினேன்.என்னுடைய கதையை அவரும், அவருடைய கதையை நானும் தெரிந்துகொண்டோம். அதன் பிறகு இலங்கையும், இந்தியாவும் விவாதத்துக்குள் வந்தது.

நான் எனது பதிவில் சொன்னதையும் மேலும் சில உதாரணங்களையும் சொன்னேன். அதற்கு அவர், `நீங்க இந்தியாகாரங்க, உங்க நாட்டை விட்டுகொடுக்க மாட்டீங்க` என்றார். இருவரும் தமிழராக இருந்தாலும் உணர்வால் பிரிந்திருந்தோம். அதன் பிறகு அரசியல்பற்றி அதிகம் பேசுவதில்லை. நானும் என் வழக்கு பற்றிய கவலையில் மூழ்கிப்போனேன்.

விடுதலை ஆகி, அந்த விஷயங்களை மறந்த நிலையில் வேறு ஒரு பதிவில் ஏற்பட்ட கருத்து மோதலால் சிறை அனுபவங்கள் நினைவுக்கு வர, `ஈழத் தமிழர்களுக்கு ஒரு இந்தியத் தமிழனின் பகிரங்க கடிதம்` என்ற பதிவை இட்டேன். இந்த பதிவுக்கும் கடுமையான விமர்சனம். நிறைய கேள்விகளும் வந்தன. அந்த கேள்விகளை எல்லாம் தொகுத்து அதற்கு பதில் போட நினைக்கையில், தேர்தல் பரபரப்பில் கவனம் அங்கே போய் விட்டது.

ஆனால் அதன் பின்னும் சில இந்திய தமிழர்களும், ஈழத்தமிழர்களும் பல அபத்தமான கேள்விகளை ஏதோ ஒரு பதிவில் கேட்டுகொண்டே இருக்கும் போது, இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

இவர்களைப்பற்றி.... இவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதில்... அடுத்த பதிவில் (நாளை)

3 comments:

ராஜ நடராஜன் said...

கடைப்பக்கம் ஒருத்தரையும் காணோமே!

சிவானந்தம் said...

@ராஜ நடராஜன்

////கடைப்பக்கம் ஒருத்தரையும் காணோமே!///


வாங்க நண்பரே!

இலங்கை பிரச்சினையை பொறுத்தவரையில் இது பற்றி கருத்து சொல்வது கத்தி மேல் நடப்பது போன்றது. காயம்படாமல் தப்பிக்கவே முடியாது. இதில் நடுநிலைமை சாத்தியமே இல்லை என்பதால் ஒரு பதிவோடு நிறுத்திக் கொள்வோம் என்று ஒதுங்கி இருந்தேன். இருந்தாலும் பல இந்தியத் தமிழர்களும் இல்லாத ஒரு பேயை இருப்பது போல் காட்டி இந்தியாவுக்கு எதிராக விமர்சனம் செய்யும் போது இதற்கு பதில் சொல்வதுதான் சரி என்று இந்த பதிவை போட்டேன்.

காஷ்மீரை ஈழத்தோடு ஒப்பிடமுடியாது என்று ஒரு நட்சத்திர பதிவில் நீங்கள் கருத்து சொல்லிய போதே , இந்தியாவில் யாரும் இன ரீதியாக புறக்கணிக்கப்படவில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பது எனக்கு புரிந்து போனது. இந்தியாவில இனவேற்றுமை இல்லை என்பதை மக்கள் உணர்ந்தால் போதும். இலங்கை பிரச்சினைதான் மனவருத்தத்தை தரக்கூடியது. நீங்கள் சொன்னது போல் தெற்கு சூடான் அவர்களுக்கு நம்பிக்கையை தரட்டும்.

Anonymous said...

click and read

>>> இந்திய மூளை திருடப்பட்டு விட்டது. யாவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது. நாம் எதையெல்லாம் இழந்து வந்திருக்கிறோம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கொஞ்சமாவது யோசித்து பாருங்கள்

.

Post a Comment