!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Tuesday, July 12, 2011

இந்தியாவில் தமிழனுக்கு மரியாதை இல்லையா?


யுத்தம் முடிந்துவிட்ட நிலையில், இனப்படுகொலைக்காக இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவும்,  ராஜபக்சேவை தண்டிக்கவும் ஈழத்தமிழர்களோடு இந்திய தமிழர்களும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் போர்ராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற போராட்டங்கள் சர்வதேச சமூகத்தை தூண்டிவிட அவசியம் தேவை. எனவே இதை நாம் வரவேற்போம், முடிந்த வரை உதவுவோம்.

ஆனால் இவர்கள் அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களுக்கு மட்டும்தான் தமிழுணர்வு இருப்பது போலவும் மற்றவர்கள் எல்லாம் தேசியம் என்ற பெயரில் இந்தியாவில் தமிழனுக்கு ஏற்படும் அவமானத்தை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டும் போது, அது நமது பொறுமையை கடுமையாக சோதிக்கிறது.

அதோடு இந்திய தேசிய கூட்டமைப்பின் மீது ஆதாரமில்லாத, அபத்தமான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனது பதிவுக்கு (ஈழத்தமிழர்களுக்கு ஒரு இந்தியத் தமிழனின் பகிரங்கக் கடிதம்) கடுமையான விமர்சனம் வந்த போதே அந்த விமர்சனங்களுக்கு நிச்சயம் பதிலளிப்பேன் என்று சொல்லி இருந்தேன். ஆனால் அதற்கடுத்து வந்த தேர்தல் பரபரப்பில் அது அரைகுறையாக நின்றுவிட்டது.

மீண்டும் சற்று காலம் கடந்து அதை படித்துப் பார்த்தபோது, அதில் இருந்த வார்த்தைகள் எனக்கே அதிர்ச்சி ஏற்படுத்தியது. நானும் கோபத்தில் இந்த பதிவை எழுதி இருக்கிறேன் என்பதை அது எனக்கு உணர்த்தியது. எனவே இப்படி ஒரு பதிவை போடவேண்டாம், சிறையில் அமைதி காத்ததை போல் இங்கேயும் இருப்போம். காலம் ஈழத்தமிழர்களின் காயத்தை ஆற்றும் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் இப்போதும் ஏதாவது ஒரு பதிவை படிக்கப் போனால் இந்தியா மீதான அபத்தமான விமர்சனங்களை எங்கேயாவது படிக்க வேண்டியதாகிவிடுகிறது. எனவேதான் இந்த பதிவையும் போட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த பதிவு ஈழத்தமிழர்களுக்கு அல்ல. இந்திய தமிழர்களுக்கு.

இந்தியாவில் தமிழனுக்கு மரியாதை இல்லை; தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்; ஐநூறுக்கும் மேற்ப்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட பிறகும் இலங்கை விஷயத்தில் இந்தியா மவுனமாக இருக்கிறது; அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்கவில்லை. இப்படி பல குற்றச்சாட்டுக்களை தமிழ் தேசிய ஆதரவாளர்கள் முன் வைக்கிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இந்தியாவில் தமிழன் புறக்கணிக்கப்படுகிறான் என்றால் யாரோ ஒருவனுக்கு முன்னுரிமை கொடுக்கபடுகிறது என்று தானே அர்த்தம்? யார் அந்த முன்னுரிமை பெரும் நபர்? இந்தியனா? இங்கே இந்தியன் என்றால் யார்?

ஒரு பேச்சுக்கு இந்தி பேசுபவர்கள்தான் உண்மையான இந்தியர்கள் என்றால், இந்தி பெல்ட் என அழைக்கப்படும் மாநிலங்களின் வளர்ச்சி என்ன என்று யாராவது ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா? இந்தியாவில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கி இருப்பவை இந்த மாநிலங்கள்தான்.

இந்தியாவுக்கு அதிக பிரதமரை கொடுத்தது உத்திர பிரதேசம் மாநிலம்தான். மத்திய ஆட்சியாளர்கள் மாநிலங்களுகிடையே ஓரவஞ்சனை செய்பவர்களாக இருந்தால், நாட்டிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலமாக உ பி இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. உண்மை என்னவென்றால், இந்தியாவில் ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அந்தந்த மாநிலத்தை ஆள்பவர்களின் திறமையை பொறுத்தது. இந்திய மாநிலங்களின் கூட்டமைப்புக்கு, அதாவது மத்திய அரசின் தலைமை பொறுப்புக்கு வந்தவர்கள் மாநிலங்களுகிடையே ஓரவஞ்சனையும் காட்டவில்லை, யாருக்கும் முன்னுரிமையும் அழைக்கவில்லை. அந்த நம்பிக்கை மக்களுக்கு இருப்பதால்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது, இனிமேலும் இருக்கும்.

அடுத்தது நதிநீர் பிரச்சினை. இங்கே தமிழகத்துக்கு நீதி கிடைக்காததற்கு காரணம் நிச்சயம் மத்திய அரசு அல்ல. மாநில ஆட்சியாளர்களும் மற்றும் நம்மிடம் (இந்தியர்களிடம்) ஊறி போயிருக்கும் ஒரு மனப்பான்மையும்தான் காரணம்.

இந்திய மக்களை பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையில் தலைவலி வரும் என்று தெரிந்தால் அதில் எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள். அதை அப்படியே ஆற விட்டுவிடுவார்கள். நியாயத்திற்கு துணை நிற்போம் என்ற வசனம் வெறும் பேச்சுக்குத்தான். நமக்கு சம்பந்தமில்லாத மூணாவது தெருவில் சண்டை நடந்தால் அங்கேயாவது நாம் நியாயம் பேசுவோம். ஆனால் நமது பக்கத்து வீட்டுக்காரனுக்கும் எதிர் வீட்டுக்காரனுக்கும் சண்டை வந்தால், நாம் நியாயம் யார் பக்கம் என்று பார்த்து அவர்களை ஆதரிக்கமாட்டோம். அவர்கள் இருவரையும் பகைத்துக் கொள்ளாமல் சமாதானப்படுத்தத்தான் முயற்சிப்போம். மக்களிடம் இருக்கும் இதே மனப்பானமைதான் ஆட்சியாளர்களிடமும், நீதிமன்றங்களிடமும் இருக்கிறது. அதேசமயம் இந்திய மக்கள் இன்னும் பக்குவப்படாததும் அரசின் தயக்கத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மக்களின் சிந்தனைகளை புரிந்து கொள்ள ஒரு சிறந்த உதாரணம், சென்னையில் ராணுவத்தினர் சுட்டு ஒரு சிறுவன் பலியான சம்பவம். நடந்தது உண்மையில் கண்டிக்கத்தக்கது. இதை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கப் போவதில்லை. ஆனால் ராணுவத்தின் இந்த செயல் தொடர்கதையா அல்லது விதிவிலக்காக நடந்த சம்பவமா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். 

போலீசுக்கு உண்மையை கண்டறிந்து குற்றவாளியை ஆதாரபூர்வமாக கைது செய்ய கால அவகாசம் தரவேண்டும். ஏதாவது தவறு நிகழ்ந்தால் அது அவர்களுக்கு பெரிய தலைவலி ஆயிற்றே? எனவே குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் நடவடிக்கை இல்லை என்றால்தான் போராட்டம் தேவை. ஆனால் அதற்குள், `ராணுவத்தினர் அத்துமீறல்`, `தமிழன் உயிர் என்றால் இளக்காரமா` என்று எத்தனைவிதமான விமர்ச்சனம். நல்லவேளை... சுட்டதும் தமிழன்தான். இல்லையென்றால் இதற்கும் இன உணர்வை தூண்டி இருப்பார்கள்.

பாதம் பருப்பை பறிக்க வந்தவனை, அதுவும் சிறுவனை, சுடுவது எவ்வளவு அபத்தமானதோ, அதேபோல் ராணுவத்தினர் ஏதோ மனம்போன போக்கில் சுடுவார்கள் என்று சொல்வதும் அபத்தமானதுதான். அப்படியே யாரோ ஒரு திமிர் பிடித்த ஒருவன் செய்திருந்தால் அதற்காக ஒட்டு மொத்த ரானுவத்தையுமா குறை சொல்வது? 

இந்த லாஜிக்படி பார்த்தால், இந்தியாவில் இமாலய ஊழலில் ஈடுபட்டது சில தமிழர்கள். எனவே இனி வடநாட்டுக்காரர்கள் தமிழர்கள் என்றாலே மெகாத் திருடர்கள் என்று சொன்னால் அதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். எனவே சிந்திக்காமல் இப்படி உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசும் முட்டாள்கள் நம் நாட்டில் இருக்கும் வரை நீதிமன்றங்களும், அரசும் சிக்கலான விஷயங்களில் நிதானப் போக்கைத்தான் கடைபிடிக்கும். நீதிமன்றங்கள் நியாயமான தீர்ப்பை வழங்கினாலும், இது போன்ற இன உணர்வுப் போராளிகள் அதை அரசியலாக்கி மக்களின் உணர்வுகளை தூண்டுவார்கள். இதுதான் நதீநீர் பிரச்சினை இழுத்துக் கொண்டு போகும் காரணம்.

நீதிமன்றங்கள் தமிழர்களுக்கு மட்டும் நீதியை மறுத்தால் அதை குறை சொல்வதில் அர்த்தம் இருக்கும். ஆனால் அயோத்தி பிரச்சினை, தெலுங்கானா பிரச்சினை மட்டுமின்றி இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் இது போல் முடிவே வராத ஏதாவது ஒரு தலைவலி இருக்கும். இது நமது அமைப்பில் இருக்கும் கோளாறே தவிர, ஆட்சியாளர்களின் எண்ணத்தில் அல்ல. ஏதோ இந்தியாவில் தமிழனுக்கும் மட்டும் துரோகம் இழைக்கப்படுகிறது என்பது அபத்தமான வாதம்.

ரொம்ப சிக்கலான பிரச்சினை தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்வதுதான். இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள நாம் இதை எதிரியின் பார்வையில் அணுகவேண்டும். ஒரு குஜராத்திய மீனவன் எல்லை தாண்டி போய் `நான் வழி தவறி வந்துவிட்டேன்` என்று சொன்னால் அதை பாகிஸ்தான் ராணுவம் நம்புகிறது. அது உண்மையும் கூட. ஆனால் தமிழக மீனவர்கள் அப்படி சொன்னால், அது உண்மையாக இருந்தாலும், பிரச்சினைக்குரிய பகுதிகளில் அதை நம்பமாட்டார்கள்.

இலங்கை ராணுவத்தை பொறுத்த வரையில் ஒரு போராட்டம் முடிவுக்கு வந்தாலும், மீண்டும் அதை வளரவிடாமல் தடுக்க வேண்டும் என்ற கவலை அவர்களுக்கு. கடந்த காலங்களிலும், புலிகள் இயக்கம் தடை செய்யப்பட பிறகும் புலிகளுக்கு பல வகைகளில் உதவியது இந்திய கடற்கரைதான். எனவே எல்லைதாண்டி இந்திய மீனவன் போகும்போது, அவர்கள் உண்மையிலேயே வழி தவறி போயிருந்தாலும், இலங்கை ராணுவம் அவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. எனவேதான் இந்த தலைவலி.

இது இலங்கைக்கு தலைவலியாக இருந்தாலும், ஒரு இந்திய குடிமகனை இன்னொரு நாட்டு ராணுவம் கொல்வது என்பது நமது நாட்டுக்கு அவமானம்தான். இது குறித்து நானும் ஒரு ஆவேசமான பதிவும் போட்டேன். ஆனால் இதிலும் பல வில்லங்கங்கள் இருக்கிறது. யாரும் இதைப்பற்றி அதிகம் எழுதுவதில்லை. எனவே நானும் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

மும்பையை எடுத்துகொள்ளுங்கள். தீவிரவாதிகள் குண்டு வெடித்து விளையாடுவதற்காகவே உருவான நகரம் இது. இதுவரை இந்த மாநிலத்தில் இறந்த மக்களின் கணக்கு இலங்கை ராணுவத்தால் இறந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். இதற்கான சூத்திரதாரி பாகிஸ்தான். ஆனால் அவர்கள் மீது போருக்கு போக முடிந்ததா? எனவே தமிழர்களை போலவே மராட்டியர்களும் கேட்கலாம், `மராட்டியனின் உயிர் அவ்வளவு மலிவானதா? என்று. ஆனால் அவர்கள் அப்படி கேட்பதில்லை. அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

எனவே இந்திய தமிழ் உணர்வாளர்களுக்கு எனது பதில் இதுதான். இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதை யாரும் குறை சொல்லப்போவதில்லை. அப்படி செய்யவேண்டும் என்ற துடிப்பு உங்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தால், அதை முறையாக செய்யுங்கள்.

உதவி செய்வதை விட முக்கியம், அதை சரியான நேரத்தில் செய்வதுதான். இலங்கையில் போர் முடிவதற்கு முன், அல்லது பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன் தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை முத்துகுமரன் கொடுத்தான். ஆனால் கோட்டை விட்டீர்கள். அப்போது தமிழகம் முழுக்க தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்திருந்தால் கலைஞர் என்ன செய்திருப்பார்? அதிகபட்சம் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். மெரீனாவில் கூடிய கூட்டத்தில் பாதியாவது போர்ராட்டம் நடத்தி ஜெயிலுக்கு போக துணிந்திருந்தால், அல்லது சாகும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தால், அது மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக இருந்திருக்கும். அது இலங்கை மீதான நிர்பந்த்தத்தை அதிகரித்து முடிந்த அளவு உயிர் சேதத்தை குறைத்திருக்கும்.

ஆனால் அந்த தியாகத்தை செய்யக்கூட நீங்கள் தயாராக இல்லை. உங்களால் முடிந்ததெல்லாம் save Tamil fishermen என்று போஸ்டர் அடித்து பாத்ரூமில் ஓட்டிக்கொள்வதும், மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன் என்று மெரினாவில் காற்றுவாங்க போவதும்தான். ஏனென்றால் இதில் எந்த ரிஸ்கும் இல்லை.

உண்மை என்னவென்றால் ஈழத்தமிழருக்காக இழப்புகளை சந்திக்க தயாராக இருந்தவர்கள் வைகோ, சீமான், முத்துகுமரன் போன்ற வெகு சிலர்தான். ஆனால் இவர்களை ஆதரிக்கிறோம் என்று கோஷம் இட்ட பலர், தேவையான நேரத்தில் அவர்களுக்கு பக்கபலமாக இல்லை. எனவேதான் அவர்களுடைய போராட்டம் பிசுபிசுத்தது. மத்திய அரசும் அலட்சியப்படுத்தியது.

நீங்கள் எல்லாம் அன்னா ஹசாரேவை போன்றவர்கள். உங்களை திட்டவும் முடியவில்லை. ஏனென்றால் ஊழலை ஒழிக்கவேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கு உதவவேண்டும் என்ற உங்களின் கோரிக்கையில் நானும் உடன்படுகிறேன். அதேசமயம் உங்களை பாராட்டவும் முடியாது. ஏனென்றால் உங்களின் இந்த போராட்டத்தில் வீரமோ, தியாகமோ இல்லை. பிரபலமானவர்களை சாக விடமாட்டார்கள் என்பதால் ரிஸ்கே இல்லாத உண்ணாவிரதத்தில் அன்னா ஹசாரேவும், போலீசார் கைது செய்யமாட்டார்கள் என்பதால் போஸ்டர் மற்றும் மெழுகுவர்த்தி போராட்டத்தில் நீங்களும் ஈடுபட்டீர்கள். 

அன்னா ஹசாரேவாவது தனது போராட்டத்தில் பாதி வெற்றி கண்டு விட்டார். இனி அரசு அவரை புறக்கணித்தாலும், லோக்பாலை புறக்கணிக்க முடியாது. ஆனால் நீங்கள்....? ஒருவேளை, அதாவது ஒருவேளை உங்களுடைய போராட்டமும் மத்திய அரசுக்கும், சாவதேச நாடுகளுக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களுக்கு உரிமையை பெற்றுத்தரலாம்.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, ஆனால் ஒருவரை ஆதரித்து பேசும்போது மற்றவர்களை குறை சொல்லவேண்டிய யதார்த்தத்துக்குள் நாம் மாட்டிக் கொள்கிறோம். அந்த வகையில்தான் நான் இந்திய தமிழ் உணர்வாளர்களை விமர்சித்திருக்கிறேன். இந்த பதிவுக்காக இன்னும் பல விஷயங்களை எழுதி இருந்தேன். ஆனால் அவற்றை அடித்துவிட்டேன். காரணம். ஒருவரை ஒருவர் குறை சொல்ல ஆரம்பித்தால் அது முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகும். எனவே நிஜத்தை நீங்கள் உணர சில உதாரணங்கள் போதும்.

எனவே இலங்கைத் தமிழருக்காக ரிஸ்க் எடுக்க நீங்களே தயாராக இல்லை எனும்போது, இந்தியாவை குறை சொல்வதை முதலில் நிறுத்துங்கள். சில ஈழத்தமிழர்கள் வேண்டுமானால் இந்தியா மீது விஷம் தோய்ந்த வார்த்தைகளை வீசலாம். எழவு வீட்டில் ஆறுதல் சொல்லப்போனால், உறவுகளை இழந்தவர்கள், `நீங்களெல்லாம் இருந்தும் யாரும் என் புள்ளையை காப்பாத்தலையே` என்று சகட்டுமேனிக்கு எல்லாரையும் தாக்குவார்கள். அது ஆற்றாமையின் குரல். எனவே அவர்களை நான் குறை சொல்லப்போவதில்லை. ஒருவேளை அவர்களுடைய இடத்தில் நாம் இருந்தால் நாமும் இப்படித்தான் புலம்புவோம். 


7 comments:

Anonymous said...

தற்போதைய சூழலில் மிக அவசியமான கட்டுரை. பலர் படிக்கும் படியாக திரட்டிகளில் சேர்க்கவும்.

Anonymous said...

I concur with you 100%.
Surya

சிவானந்தம் said...

@ anonymous

என் கருத்தோடு உடன்படுவோரும், அதை எதிர்ப்போரும் (நாகரீகமாக இல்லாததால் அதை பிரசுரிக்கவில்லை) அனானியாகத்தான் தங்கள் கருத்தை பதிவு செய்திருகிறார்கள். அந்த அளவுக்கு இலங்கை பிரச்சினை தமிழக மக்களிடையே பயத்தை உருவாக்கி இருக்கிறது.

மாயன் said...

உங்களின் இந்தப் பதிவு மிகவும் நடுநிலைமையோடு எழுதப்பட்ட சில பதிவுகளில் ஒன்று.

சிவானந்தம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாயன்.

மாயன் said...

நீங்கள் இந்தப் பதிவை மட்டுமாவது மீள்பதிவு செய்து திரட்டிகளில் இணையுங்களேன்...உங்களின் எல்லா பழைய பதிவுகளையும் கடந்த இரண்டு நாட்களாக படித்துக் கொண்டு இருக்கிறேன். சில பதிவுகள் மீண்டும் மீண்டும் படிக்கக் கூடிய அளவுக்கு நிறைய யோசிக்க வைக்கிறது. மிக முக்கியமான வலை உங்களுடையது.

சிவானந்தம் said...

என்னுடைய பதிவை மற்றவர்கள் மறுபிரசுரம் செய்வதில் எனக்கு ஆட்சபனை இல்லை. ஆனால் நான் அதை செய்யவேண்டும் என்றால் குறைந்தது ஒரு வருடமாவது ஆக வேண்டும், அல்லது இந்தியாவில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று மீண்டும் ஒரு சர்ச்சை வந்தால் அப்போது மறு பிரசுரம் செய்வேன்.

Post a Comment