!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Sunday, March 11, 2012

`கைப்புள்ள` ராகுல்

இரவு 10 மணிக்கு முன் டிவியை (நாடகங்கள்) பார்த்தால் எனக்கு தலைவலி வரும். அதே 10 மணிக்கு மேல் டிவியை பார்க்காவிட்டாலும் (செய்திச் சேனல்கள்) தலைவலி வரும். அதுவும் தேர்தல் நேரம். எனவே இந்த வாரம் முழுக்க கவனம் இங்கேதான்.

ஒரு ஆளுங்கட்சி (உ.பி.) தோற்கடிக்கப்பட்ட செய்தியை கேட்ட போது, அது இந்தியாவில் ஜனநாயகம் வெற்றி பெற்ற கதையை சொன்னதால் சந்தோஷமாய் இருந்தது. ஆனால் அடுத்த முதல்வர் அப்பாவா, பிள்ளையா என்ற போட்டியை பார்த்த போது அந்த சந்தோஷமும் பறிபோனது. இது இந்திய ஜனநாயகம் இன்னமும் சுத்திகரிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதை உணர்த்துகிறது.

அதேசமயம் மீண்டும் ஜெயிப்பது ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தாலும், வனவாசம் அவர்களை கொஞ்சமாவது சுயபரிசோதனை செய்ய வைத்திருக்கும் என்பதுதான் நிஜம். அதிலும் அரசியல் என்ற பெயரில் ஆளுங்கட்சியை எந்த காரணங்களுக்காக விமர்சித்தார்களோ, அல்லது எந்த காரணங்களுக்காக மக்கள் இவர்களை தண்டித்தார்களோ அதே தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள் என நம்பிக்கை வைக்கலாம்.

இங்கே ஒரு பிசினஸ் லாஜிக் இருக்கிறது. சில இடங்களில் தவறு செய்யும் ஆட்களை தூக்கி விட்டு, புது ஆட்களை வைப்பார்கள். ஆனால் அந்த பழைய நபர் மன்னிப்பு கேட்டு வந்தால், மறுபடியும் சேர்த்துக் கொள்வார்கள். 

ஒருவன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் (குற்றத்தை பொறுத்து) மன்னிப்பதுதான் நாகரீகம் என்றாலும், இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அவர்கள் பல ஆண்டுகள் வேலை செய்து அனுபவம் பெற்றிருப்பார்கள். எனவே அனுபவசாலிகளை வைத்துக் கொண்டு நிர்வாகம் செய்வதுதான் வசதியானது.

புதிதாக வேலைக்கு வருபவர்கள் ஒழுங்காக இருந்தாலும், அனுபவம் இல்லாத காரணத்தால் வியாபாரம் குறையும். அல்லது வேறு ஏதாவது வகையில் (unintentional ) நஷ்டத்தை உருவாக்குவார்கள். எனவே பழைய ஆட்களே வேண்டும், ஆனால் அவர்கள் அதிகம் சுருட்டாமல் இருக்க வேண்டும் என்பதுதான் வியாபாரிகளின் விருப்பம்.

அதேபோல் நிர்வாக அனுபவம் உள்ள பழைய கட்சிகளே தங்கள் குறைகளை களைந்து, `அளவோடு` இருந்து கொண்டு ஆட்சி செய்தால் நாடு வளம் பெரும்.

உ பி யில் இந்த வெற்றி குறித்து முலாயிங் சிங் மகன் அகிலேஷ் யாதவ் பிரஸ் மீட் வைத்து பேட்டி அளித்தார். பேச்சில் ஒரு பக்குவம் தெரிந்தது. மக்களுக்கும்,பத்திரிகையாளர்களுக்கும் பல முறை நன்றி சொன்னார். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவோம் என்று உத்தரவாதம் கொடுத்தார்.

இந்த பேட்டியை ஒளிபரப்பிய NDTV தனது ஸ்டுடியோவில் இருந்த மற்றவர்களிடம் கருத்து கேட்டது. அதில் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு பெண்மணி சொன்னார். `ஜெயித்திருக்கிறார்கள். வாழ்த்து சொல்வோம். ஆனால் பேச்சை வைத்து கணிக்க முடியாது. அதற்கு நாம் சில காலம் காத்திருக்க வேண்டும்` என்றார். இவர் நிறைய அரசியல்வாதிகளின் பக்குவமான பேச்சை கேட்டு சலித்திருப்பார் போலிருக்கிறது.

இன்னொரு காங்கிரஸ் ஆதரவாளரோ, அந்த நாகரீகத்தையும் கடைபிடிக்கவில்லை. ஒரு வேளை முலாயம் சிங்கிற்கு மெஜாரிட்டி இல்லை என்றால் அங்கே ஆதரவு கொடுத்து டெல்லியில் அனுசரிக்கலாம் என்று காங்கிரஸ் கணக்கு போட்டிருக்கலாம். அதற்கு வாய்ப்பிலாததாலும், படுதோல்வியை தழுவியதாலும், `இவர்கள் ஆட்சியிலும் குண்டர்கள் ராஜ்ஜியம் நடந்தது` என்று சப்பைக்கட்டு கட்டினார்.

அடுத்து ஒரு பேட்டியில் அகிலேஷ், `மாயாவதியின் சிலைகளை உடைக்க மாட்டோம்` என்று உத்தரவாதம் கொடுத்தார். இது நல்ல செய்தியா, கெட்ட செய்தியா என்று தெரியவில்லை. இந்த சிலைகளை நிறுவியது அனாவசிய செலவு என்றாலும், இதை இடித்து அப்புறப்படுத்தவும் செலவுதான்.

ஆனால் அப்படியே விட்டாலும் ஆபத்துதான். நிகழ்கால மக்கள் நம்மை வெறுத்தாலும், வருங்கால வரலாற்றில் இடம் பெற, நமது அரசியல்வாதிகள் இதுபோல் ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பார்கள். அது வரலாற்றில் தவறான நபர்களுக்கு இடம் கொடுத்தாற்போல் ஆகும்.

சமீபத்தில் கடந்தகால (சுதந்திர போராட்ட) தலைவர்கள் பற்றிய சில செய்திகளை படித்தேன். அந்த செய்தி அவர்களின் மீதான மரியாதையை குறைத்தது. இருந்தாலும் அவர்களுடைய நல்ல தகுதிகளோடு ஒப்பிடும்போது இந்த குறைகளை ஒதுக்கிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்னவென்றால், ஒருவர் மறைந்த பிறகு அவருடைய குறைகளை யாரும் சொலவதில்லை. அவர் கொஞ்சம் நல்லவராக இருந்தால் போதும், அவருடைய வண்டவாளங்கள் மறைக்கப்பட்டு அவரை புனிதராக்கி விடுவார்கள். அதே ஆபத்து மாயாவதி விஷயத்திலும் ஏற்படலாம்.

அடுத்து டைம்ஸ் நவ் பக்கம் திரும்பினால், மணிப்பூர் ரிசல்ட் பற்றி பேட்டி. `சோனியா, ராகுல், மன்மோகன் சிங் என பெருந்தலைகள் பிரச்சாரத்துக்கு வராமலேயே எப்படி இவ்வளவு பெரிய வெற்றி?` என அர்னாப் ஒரு மணிப்பூர் காங்கிரஸ் தலைவரிடம் கேட்டார். அதற்கு அவர், `இவர்களெல்லாம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே (போன வருடமே) வந்தார்கள். அவர்களின் பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றிதான் இது` என்று தன்னடக்கத்துடனும், உண்மையான காங்கிரஸ்காரனாகவும் சிரிக்காமல் பதில் அளித்தார். இந்த பேச்சை கேட்டு அர்னாப் கோஸ்வாமியால்தான் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அதேசமயம் மணிப்பூர் ஒரு ஆச்சர்யம்தான். சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் தமிழகம் மட்டுமே புறக்கணிக்கப்படுவதாக சிலர் குறை கூற, இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மற்றும் தலைவலிகள் கொண்ட மாநிலம் என்ற வகையில் மணிப்பூர் மாநில தகவலை தேடிப்படித்தேன். நாகா போராளிகளால் ஹைவேக்கள் பல மாதங்கள் முற்றுகையிடப்பட்டு, மணிப்பூரில் விலைவாசி விண்ணை தொட்டது. அந்த விலைவாசியை கேட்டால் உங்களுக்கு மயக்கம் வரும். அவர்களோடு ஒப்பிட்டால் நாமெல்லாம் வசதியான மாநிலம்தான்.

இங்கே இரோம் ஷர்மிலா என்ற பெண் பல வருடங்களாக மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறார். இந்த மாநிலத்தின் நாகா பிரச்சினையை மத்திய அரசால் இன்னும் தீர்க்க முடியவில்லை. இவ்வளவு குறைகள் இருந்தும் இங்கே காங்கிரஸ் ஜெயிப்பது ஆச்சர்யம்தான்.

இந்த லாஜிக்கை ஜீரணிக்க முடியாமல், அந்த மாநில அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் பத்திரிகைகளை விட (மணிப்பூர்) பிளாக்கர்கள் கொஞ்சம் சுதந்திரமாக எழுதுவார்கள் என்று அவர்களை தேடினால் இந்த நிமிடம் வரை அப்படி கிடைக்கவில்லை. பொறுமையாக தேடவேண்டும்.

மொத்தத்தில் இன்றைய அரசியலை புரிந்து கொள்வது சிரமம். இவர் தோற்றார் என்று சிலரை அடையாளம் காட்டலாமே தவிர, ஜெயித்தவர் எப்படி ஜெயித்தார் என்பது ஜெயித்தவர்களுக்கே தெரியாது.

`என் பெண்ணை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர, உனக்கு கொடுக்கமாட்டேன்` என்று சிலர் கோபமாக பேசுவார்களே, அதே நிலைமையில்தான் மக்களும் இருகிறார்கள். ஆளுங்கட்சி மீதான கோபம், ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவரே வந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு மக்களை தள்ளுகிறது.

`கைப்புள்ள` ராகுல்

உ பி யும், பஞ்சாபிலும் அப்பாவா, பிள்ளையா? என்றுதான் கேள்வி. இதிலிருந்து என்ன தெரிகிறது? இனி நாம் வாரிசு அரசியலை குறை சொல்லக் கூடாது. பேசாமல் எது நல்ல வாரிசு என்று ஆராயலாம்.

இதில் தோற்ற வாரிசான ராகுல்காந்தியை எல்லோரும் கலாய்ப்பதை பார்க்கும் போது பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால் இது அரசியல். வெற்றி பெற்றவருக்கு சாணக்கியன் பட்டமும் தோற்பவருக்கு கைப்புள்ள பட்டமும் உடனடியாக கிடைத்துவிடும். அடுத்த தேர்தலில் பட்டங்கள் இடம் மாறலாம்

இனி காங்கிரஸ் ஜெயிக்க ஒரே வழிதான் இருக்கிறது. ஆளுகட்சி என்ற பெயர் இல்லாமல், (புதிய) ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமல், எதிர்கட்சி என்ற வகையில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தால் பலனுண்டு. அதாவது காங்கிரஸ் மறுபடியும் ஜெயிக்க, மத்தியில் காங்கிரஸ் தோற்று அது வனவாசம் போக வேண்டும். காங்கிரசின் தோல்வி நாட்டுக்கும் நல்லது, காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது.

என்ன கொடுமை சரவணன் இது?

இளைஞரான அகிலேஷுக்கு வழி விட்டதற்காக முலாயம் சிங்கிற்கு பாராட்டாம்! இன்றைய நாளிதழில் தலைப்பு செய்தி. இதை என்னவென்று சொல்வது? அப்பா பிள்ளைக்கு வழி விட்டது ஒரு தியாகமா? இங்கே அழகிரி மட்டும் இல்லாவிட்டால் கலைஞர் இந்த தியாகத்தை எப்போதோ செய்திருப்பாரே! அவர் மட்டுமா, இது போன்ற தியாகத்தை செய்ய நம் நாட்டில் ஏகப்பட்ட தலைவர்கள் காத்திருக்கிறார்களே! 

இது `கரும்பு தின்ன கூலி` கொடுக்கும் வகை.

           

2 comments:

Sankar Gurusamy said...

இது தேசியக் கட்சிகளின் இறங்குமுக காலம். அடுத்த தேர்தலில் மூன்றாவது அணிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு. ஆனால் அது ஒரு நண்டுக் கூட்டம் ஆகையால் மீண்டும் காங்கிரசுக்குத்தான் சாதகமாக ஆகும்.

எல்லாம் விதி...

பகிர்வுக்கு மிக்க நன்றி.

http://anubhudhi.blogspot.in/

சிவானந்தம் said...

வாங்க சங்கர்.

பிஜேபியோ அல்லது மூன்றாவது அணியோ அமையட்டும். நல்லதுதான் அது. அவர்களால் நல்ல நிர்வாகத்தை கொடுக்க முடிந்தால் சந்தோசம். இல்லையென்றால் நமது அமைப்பில் ஏதோ கோளாறு, அதனால்தான் எல்லா கட்சிகளும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகின்றன என்பதை உணர்ந்து அதை சரி செய்ய முயற்சிப்பார்கள்.

Post a Comment