!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, March 12, 2012

இந்திய ஜனநாயகம். இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை!

குடும்ப அரசியல் இந்தியாவில் வேரூன்றிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் ஓமர் அப்துல்லா வந்தார். அடுத்து உ பி யில் அகிலேஷ் பதவி ஏற்கப் போகிறார். பஞ்சாபில் பிள்ளைக்கு இன்னும் தகுதி வரவில்லை. இனி என்ன... மாநிலம் தோறும் இந்த அநியாயத்தை கட்சித் தலைவர்கள் அரங்கேற்றலாம். அதேசமயம் இந்தியாவில் வாரிசுகள் ஆட்சியை பிடிப்பது அப்பட்டமான சர்வாதிகாரத்தினால் இல்லை. இருந்தாலும் இது வேறுவிதமான சர்வாதிகாரம்.

இது அது குறித்த பழைய பதிவு. சற்றே மாற்றங்களுடன்... 

இந்தியா ஒரு முழுமையான ஜனநாயக நாடு என்று சொல்ல விடாமல் தடுப்பது நம் நாட்டின் சில அரசியல் கட்சிகள் சில தனிப்பட்ட நபரின் குடும்ப சொத்தாகிப் போனதுதான். இன்று இந்தியாவில் கட்சிகள் பெருகிவருவதன் காரணமும் இதுதான். ஒரு கட்சியில் தொண்டனாக சேர்ந்து பின்னர் அந்த கட்சியின் தலைமை பொறுப்புக்கு வருவது தற்போது சாத்தியமில்லாத சூழ்நிலையாக உருவாக்கி இருப்பதால், பலர் தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இதை தடுக்க அரசியல் கட்சிகளையும் முழுமையான ஜனநாயக இயக்கமாக செயல்பட வைக்க வேண்டும்.

நாட்டின் தேசிய மற்றும் மாநில கட்சிகளில், அவர்கள் வாங்கும் ஓட்டு சதவிகீதத்தின் அடிப்படையில் முதல் ஐந்து கட்சிகளை தேர்ந்தெடுத்து, அந்த கட்சியின் தேர்தலை தேர்தல் கமிஷனின் மேற்பார்வையிலோ அல்லது வேறு ஒரு பொது அமைப்பின் கீழோ வெளிப்படையாக நடத்த அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும்.

தற்போது இவர்களை தட்டி கேட்க ஆள் இல்லாததால்தான், இவர்களே பொதுக்குழுவை கூடி `போட்டியின்றி ஏகமனதாக தேர்வு`என்று ஒரு அபத்தமான தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சர்வ வல்லமை பொருந்திய தலைவர் தேர்தலில் நிற்கும் போது, அவர் மீது அதிருப்தி இருந்தாலும், அவரை எதிர்த்து போட்டியிட யாராவது முன் வருவார்களா? அப்படியே ஒருவர் போட்டியிட்டு தோற்றுவிட்டால் அதன் பிறகு அவர் கதி?

எனவே தற்போதைய முறையில் ஜனநாயகத்தின் எந்த அறிகுறியும் கட்சித் தேர்தலில் கிடையாது. ஒரு வாக்காளனுக்கு இருக்கும் சுதந்திரம் ஒரு கட்சித் தொண்டனுக்கு கிடையாது. தனது பிரதிநிதியின் (எம்எல்ஏ) செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால், தேர்தலில் எந்த வித பயமும் இல்லாமல் வாக்களித்து அவருக்கு பாடம் புகட்ட ஒரு வாக்காளனால் முடியும்.

ஆனால் கட்சித் தொண்டர்களால் அப்படி முடியுமா? இந்த சுதந்திரம்தான் கட்சித் தலைவர்களை சர்வாதிகாரியாக மாற்றிவிடுகிறது.

ஒரு கட்சித் தலைவர் சர்வாதிகாரி ஆகாமல் தடுக்க அரசியல் கட்சிகளையும், தேர்தல் கமிஷனைப் போல், மும்மூர்த்திகளால் நிர்வகிக்கப்படும் ஒரு அமைப்பாக மாற்றமுடிந்தால் அதுவும் நல்லதுதான்.

அதாவது கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டப்பின் கட்சியில் மிக அதிக செல்வாக்கு பெற்ற மற்ற இரு தலைவர்களையும் (கட்டாயமாக) தேர்ந்தெடுப்பதன் மூலம் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதும் தெரிந்துவிடும். முக்கியமான முடிவுகளில் மெஜாரிட்டி தேவை என்ற நிலைமை சர்வாதிகாரத்தை ஒழித்துவிடும்.

இந்த முறையில் கட்சித் தலைவரின் மகனும் அரசியலுக்கு வந்தால் அதை யாரும் குறை சொல்லப்போவதில்லை. `நானும் கட்சியில் செல்வாக்கு பெற்ற நபர்` என்பதை கட்சித் தேர்தலில் வாக்குகளின் மூலம் அவர் நிருபித்தால் போதும். தகுதி இல்லாதவர்கள் நிராகரிக்கப்படலாம்.

தற்போது கட்சி தலைவரை ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள் யார், இவர்களை தேர்ந்தெடுப்பது யார், இவர்களுடைய பதவிக் காலம் எவ்வளவு என்பதெல்லாம் ஒரு குழப்பமான நடைமுறை. கட்சி எம்எல்ஏ, எம்பிக்கள், மாவட்ட மற்றும் நகர செயலாளர்கள் போன்றவர்களுக்கு இந்த உரிமையை அளிப்பது பொருத்தமாக இருக்கும்.

ஆனால் இவர்கள் கட்சித் தலைவரால் நியமிக்கப்பட்டவர்களாக இருந்தால் அதுவும் அபத்தமாக இருக்கும். எனவே ஜனநாயகத்தை பல மட்டங்களுக்கு கொண்டுபோக வேண்டும்.

இதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால், நாம் தலைவராக ஏற்றுகொண்ட ஒரு நபரை எதிர்த்து போட்டியிடுவது என்பது மனரீதியாகவும் நடைமுறையிலும் சாத்தியமே இல்லாத ஓன்று. அதேசமயம் கட்சித் தலைவரை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள் என்றும் சொல்ல முடியாது. இந்த சிக்கலை தீர்க்க, தலைவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன் வரவில்லை என்றால், அவர் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்ற சட்டம் தேவை.

இதன் மூலம் தலைவரின் செயல்பாடுகளை பிடிக்காதவர்கள் அவரை எதிர்த்து நிற்க தயங்கினாலும், அவரும் அவருடைய ஆதரவாளர்களும் தலைவரை எதிர்த்து வாக்களித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தலாம்.

இதன் மூலம் கட்சியில் அந்த தலைவரின் உண்மையான செல்வாக்கும் தெரிய வரும், தலைவர்களுக்கும் பயம் வரலாம். அகங்காரம் பிடித்த தலைவர்களை உறுப்பினர்கள் மெளனமாக வாக்களித்து தோற்கடிக்கவும் இதன் மூலம் வாய்ப்பு வரும். ஆனால் இப்படிப்பட்ட தேர்தல் ஒரு பொது அமைப்பின் கீழ் ரகசிய வாக்கெடுப்பாக நடந்தால் மட்டுமே சாத்தியம்.

இப்படிப்பட்ட தேர்தல்கள் வந்தாலும் நிச்சயம் இன்றைய தலைவர்கள் (கலைஞர், ஜெயலலிதா) ஜெயிப்பார்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால் அது 100 சதவிகிதமாக இருக்காது. சதவிகிதம் குறைய குறைய அவர்களுக்கு ஒரு பயம் வரும்.

இன்று கட்சித் தலைவர்களுக்கு மக்களிடம் பயம் இருக்கிறது. ஆனால் கட்சிக்காக உழைக்கும் மற்ற தலைவர்களிடம், தொண்டர்களிடம் இல்லை. தலைமை தவறான பாதையில் போவதாக தெரிந்தாலும், அதை விமர்சித்து எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள யாரும் தயாராக இல்லை. இது அவர்களுக்கு அளவற்ற சுதந்திரத்தை கொடுக்கிறது.

ஆனால் கட்சித் தலைவர் நம்பிக்கை வாக்கு கோரவேண்டும் என சட்டம் இருந்தால், அதுவும் ரகசியமாக அளிக்கலாம் என்ற வாய்ப்பும் இருந்தால், இவர்கள் தைரியமாக வாக்களித்து தலைக்கனம் பிடித்து ஆடும் தலைமைக்கு எச்சரிக்கை செய்யலாம் அல்லது தூக்கி எறியலாம்.

இப்படி ஒரு ஜனநாயகம் கட்சிகளில் இருந்தால்தான் இந்தியா உண்மையான ஜனநாயக நாடாக மாறும். அதுவரை இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை என்ற வகையில் ரெண்டும் கெட்டானாகத்தான் இருக்கும்.

3 comments:

Sankar Gurusamy said...

மிக சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். நம் நாட்டில் தேர்தலில் வோட்டுப் போடும் மக்களையே விலைக்கு வாங்குகிறார்கள். கட்சிக்காரர்களை வாங்க கேட்கணுமா? எல்லாம் பம்மாத்துதான். அடிமுதல் நுனி வரை கெட்டு விட்ட ஒரு அமைப்பிடம் ஜனநாயகத்தை எதிர் பார்ப்பது தவறே.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

தேர்தல் பற்றிய எனது பார்வை கீழ்க் கண்ட சுட்டியில்..

http://anubhudhi.blogspot.in/2011/01/blog-post_04.html

சிவானந்தம் said...

வாங்க சங்கர். உங்கள் கருத்துக்கு நன்றி.

தேர்தல் சீர்திருத்தங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஆமை வேகத்தில்... இனிமேலாவது சுறுசுறுப்பாக இருப்பார்கள் என நம்புவோம்.

Vetirmagal said...

கம்யூனிஸத்தை எவ்வளவு திட்டிறாலும், சில சமயங்களில், அதை கடைபிடித்தால், ஏழை எளியவரின் வாழ்க்கை கொஞ்சமாவது மேலோங்கும் என்று நினைக்க தூண்டுகிறது.

கல்வி அறிவு பெருகினால் , தேர்தலில் பல மாற்றங்கள் காணும் வாய்ப்பு வரலாம்.

Post a Comment