!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, April 23, 2012

பணக்கார பிரபு யாரும் இல்லையா?

திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகமே மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவியது இன்றைய கல்வி எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என்பதை காட்டுகிறது. இதில் பணம் நோக்கமாக இல்லை. தான் வெற்றியாளனாக வர வேண்டும் என்ற வெறி மாணவர்களுக்கு வராமல் ஆசிரியர்களுக்கு வர, அதையும் அவர்கள் குறுக்கு வழியில் அடைய முயற்சித்திருக்கிறார்கள். இதுதான் செய்தி.

இது ஒரு போலித்தனமான பெருமை என்றாலும், இந்த வியாதி பலரை பிடித்து ஆட்டுவதும் நிஜம். அரசியல்வாதிகள் பணம் கொடுத்து கூட்டத்தை காட்டுகிறார்கள். நடிகர்கள்/ தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே படங்களை ஓட்டி, தங்களை வெற்றி வீரராக காட்டிக் கொள்கிறார்கள். இதெல்லாம் எந்த வகை? இதில் பெருமை மட்டுமில்லை, சில லாபமும் இருக்கிறது. 

ரஜினியின் சந்திரமுகி கூட 800 நாட்கள் தொடர்ந்து `ஓடி` சாதனை படைத்ததாம்! ஆனால் அது சாதனைக்காகவே ஓட்டப்பட்டது என்று எப்போதோ படித்தேன். இத்தனைக்கும் அவர் வெற்றியாளர். அவருக்கும் இது போன்ற போலித்தனம் தேவைபடுகிறது.

இந்த கல்வித் துறை மோசடி குறித்த செய்திகளை படித்த போது, `இது இப்பதான் உங்களுக்கு தெரியுமா? என்று ஒருவர் கேள்வி எழுப்புகிறார். மற்ற பலர் அவர்களுடைய அனுபவங்களை சொல்லும் போது, இந்த செய்தி நமக்குதான் புதுசு அவர்களுக்கல்ல என்பதும் புரிகிறது.

சிறை அனுபவமும் எனக்கு அப்படித்தான் இருந்தது. சிறை நடத்தப்படும் விதத்தை பார்த்து நான் அதிர்ச்சி அடைய... மற்றவர்கள், `இது காலங்காலமாக நடைபெறுவதுதானே!` என்றார்கள் அலட்சியமாக.

இப்படி எல்லாத் துறையிலும் முறைகேடுகள் நடந்தாலும் அதை வெளிச்சம் போட்டுக் காட்ட யாரும் முன் வருவதில்லை. இதுதான் இந்தியாவின் துரதிருஷ்டம்.

`நமக்கேன் வம்பு, நமக்கென்ன லாபம், இந்த சமுதாயத்தை நம்மால் திருத்த முடியாது` என்று இந்த மூன்று மனப்பான்மையில் மக்கள் இருப்பதால்,இது போன்ற மோசடிகள் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. மோசடி செய்பவர்களுக்கு கெட்ட நேரம் வரும் போது மட்டும் வெளிவரும். அல்லது அவர்களுக்குள் லாப நஷ்ட கணக்குகளில் சண்டை வரும் போதோ,  விரோதம் ஏற்படும் போதோ வெளிப்படும்.

நான் பிளாக் ஆரம்பித்த புதிதில் அனானியாக `பெண்களுக்கு எதிரான குற்றங்கள்` என்று ஒரு பதிவு எழுதினேன். அது இங்கே:

****** ஊரில் தனிமையில் இருந்த காதலர்கள் மற்றும் திருமணமான ஜோடிகளை சில காமுகர்கள் தாக்கி அந்த (சுமார் 30) பெண்களை கற்பழித்து விட்டதாகவும் சமிபத்தில்தான் அவர்கள் (4 இளைஞர்கள்) கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடபட்டிருகின்றன.

இதற்கு காவல்துறையினர் சொல்லும் காரணம். பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யாமல் நாங்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாது என்பதே.

குடும்ப மானம் மற்றும் தங்கள் பெண்ணின் எதிர்காலம் கருதி நடந்த சம்பவத்தை மறைக்க விரும்புவது இயற்கைதான். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததையும் மற்றும் குற்றம் நிகழ்ந்த இடம், குற்றவாளிகள் பற்றி தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் குறைந்த பட்சம் அனோமதேய கடிதமாக காவல் துறையினருக்கு தெரிவிப்பதுதான் நல்லது. அப்போதுதான் அவர்கள் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் முடியும், அல்லது பிற பெண்களையாவது இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும்.

காவல்துறையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், இந்த கடிததின் நகலை அந்த பகுதியை சேர்ந்த பொதுநல இயக்கங்களுகோ அல்லது நிஜமாகவே மக்கள் பிரச்சினைகளுக்காக போராடகூடிய சில அரசியல் கட்சியின் அலுவலகங்களுக்காவது அனுப்பி வைக்கலாம்.

தங்கள் பெண்ணின் எதிர்காலம் குறித்து கவலைப்படுபவர்கள், இப்படி இவர்கள் மூடி மறைப்பதினால் அந்த பகுதியில் இருக்கும் ஆபத்தை அறியாமல் மேலும் பல பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி கொண்டிருப்பார்கள் எனபதை உணரவேண்டும்.

மேலே சொன்ன வாதம் எல்லா குற்றங்களுக்கும் பொருந்தும். இந்த மோசடி குறித்து ஒருவர் கலெக்டருக்கு மெயில் அனுப்பியதால்தான் இதுவும் வெளிவந்திருகிறது. இதுகூட சுயநலம்தான். அதாவது அங்கே படிக்கும் அவருடைய மகளின் மனநலம் பாதிக்கிறதாம்! அதை ஜீரணிக்க முடியாமல் மெயில் அனுப்பி இருக்கிறார். இங்கே சமூக அக்கறை இல்லை. இருந்தாலும் எப்படியோ மோசடிகள் வெளியே வந்தால் சரி என திருப்திபட வேண்டியதுதான்.

இதே போல் ஒவ்வொரு துறையிலும் பல மோசடிகள் நடந்து கொண்டிருக்கும். அது பலருக்கு தெரிந்தும் இருக்கும். இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க அபாரமான மூளையா தேவை? ஒரு போன் கால் அல்லது மொட்டைக் கடிதம் /ஈமெயில் போதுமே. பத்திரிகைகள் சமூக இயக்ககங்கள் என ஏதோ ஒன்றுக்கு செய்தியை கசிய விடலாமே. மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த செயலைக் கூட செய்யத் துணியாத மனிதர்களை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது?

இதற்குத்தான் நான் ஒரு வழி வைத்திருந்தேன். ஷேர் மார்கெட் என்னை கோடீஸ்வரனாக்கும் என்ற நம்பிக்கை இருந்த போது எனக்கு ஒரு குழப்பம். பணத்தின் மீதான ஆசை இருந்தது. இன்செக்யூர் ஆக இருந்த எனக்கு அது ஒரு பாதுகாப்பு உணர்வை தரும் என்ற அளவில் தேவைப்பட்டது.

ஆனால் நிறைய பணம் சேர்ந்தால் என்ன செய்வது என்று குழப்பம். அத்தைக்கு இன்னும் மீசை முளைக்கவில்லை. இருந்தாலும் அப்போது எனக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் ஓவவவராகவே இருந்தது. எனவே எல்லாமே அட்வான்ஸ் பிளானிங்தான். ஆனால், `நாட்டை காப்பாத்த நிறைய தலைவர்கள் இருக்காங்க. முதல்ல நீ உன்னை காப்பாத்திக்க`ன்னு விதி என்னை ரவுண்டு கட்டி அடிக்க, நான் ஜெயிலுக்கே ஓடிப் போனேன்.

சரி, இப்ப இந்த விஷயத்துக்கு வருவோம். `உங்களை சுற்றி ஏதாவது முறைகேடுகள் நடந்தால் தகவல் கொடுங்கள். அப்படி ஊழலை வெளிபடுத்துபவர்களுக்கு பரிசு உண்டு` என்று அறிவிப்பதுதான் என் திட்டம்.

இதில் அரசுத் துறை ஊழல் என்றில்லை, எதுவேண்டுமாலும் இருக்கலாம். பக்கத்து வீட்டில் மீட்டர் இல்லாமல் மின்சாரம் திருடலாம். எதிர் வீட்டுக்காரர் ஆபீஸுக்கு போய் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கலாம். எதுவாக இருந்தாலும் `இது குற்றம்` என நீங்கள் உணர்ந்தால் போதும், எங்களுக்கு தெரிவியுங்கள் என்பதுதான் திட்டம். சில வருடங்களுக்கு முன் கையெழுத்து மட்டும் போட்டு விட்டு எஸ்கேப்பான சில டாக்டர்களை விடுதலை சிறுத்தைகள் கையும் களவுமாக பிடித்தார்களே, அதுபோல் செய்ய எப்போதோ திட்டமிட்டேன்.

இந்த வேலையை பத்திரிகைகளும் செய்யலாம். 5000 பரிசு என அறிவித்தாலும் போதும், புகார்கள் வந்து குவியும். ஆனால் இதை மேலும் ஆராய்ந்து புகார்களை வடிகட்ட நிதி தேவைப்படும் அதுதான் பிரச்சினை. யாராவது பணக்கார பிரபு நிதி உதவி செய்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி இதையும் செய்து பார்க்கலாம்.

ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்களோ இல்லையோ, அதை வெளிச்சம் போட்டு காட்டி அவர்களை அசிங்கப்படுத்துவதன் மூலமாகவும் அதை கட்டுபடுத்தலாம்.

சந்தோசம்

இந்த கல்வி மோசடியில் சம்பந்தப்பட்ட ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இதுவரை இட மாற்றம் மட்டுமே கேள்விபட்டிருக்கிறோம். இது வரவேற்கத்தக்க தண்டனைதான்.

ஆனால் மக்களை முட்டாள் ஆக்குவதில் நமது ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அதி புத்திசாலி ஆயிற்றே. ஒரு கண்துடைப்பாக 6 மாதம் இந்த நாடகம் ஆடிவிட்டு, இந்த பிரச்சினையை மக்கள் மறந்த பிறகு மீண்டும் அவர் பழைய இடத்திற்கு வரலாம். அது மட்டுமின்றி இந்த 6 மாதமும் அவர் லீவில் போய் தன்னுடைய கவுரவத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.

எனக்கு ஏன் இந்த சந்தேகம் வருகிறது என்றால், சிறையில் விபச்சார வழக்கில் சிலர் அடிக்கடி உள்ளே வருவார்கள். அவரிடம், `இப்படி அடிக்கடி வருகிறீர்களே, எல்லா வழக்கிலும் தண்டனை கிடைத்தால் என்ன ஆவது?` என்றேன். அதற்கு அவர் `எங்களை பிடித்ததாக பேப்பரில் செய்தி வந்ததை படித்திருப்பீர்கள். ஆனால் அந்த வழக்குகள் என்ன ஆயிற்று என்று உங்களுக்கு தெரியுமா?` என்றார் கள்ளச் சிரிப்போடு.

அப்படி கண்துடைப்பு எதுவும் நடக்காமல், இந்த பதவி இறக்கம் சில வருடங்கள் என்ற கண்டிபோடும், இதை விடுமுறையில் கழிக்க முடியாது என்றும் இருந்தால் இது பலன் தரும்.

7 comments:

VP SIVAM said...

Fight against corruption is very excellent.But nobody is interested in Public.All are selfish.Hence I appreciate your tryings.

சிவானந்தம் said...

வாங்க சிவம்,

அவநம்பிக்கை கூட மக்களை தான் உண்டு தன் வேலை உண்டு என மாற்றிவிடும். அது சுயநலமாகவும் தெரியும். அனால் சரியான தலைமை கிடைத்தால் இதே மக்களையும் தூண்டிவிடலாம்.

Vetrimagal said...

//
`நமக்கேன் வம்பு, நமக்கென்ன லாபம், இந்த சமுதாயத்தை நம்மால் திருத்த முடியாது`//
This is our national attitude.
This is hindering the development of our country.

Thangavel Manickadevar said...

பள்ளிகளில் நடப்பவை இப்போதுதான் தெரிந்ததாக்கும். தனியார் பள்ளிக்கூடங்கள் எக்ஸாம் பேப்பரையே ட்ரேஸ் செய்து தங்கள் பள்ளி மாணவர்கள் முதல் மார்க் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதையெல்லாம் கண்டுபிடிக்க ஆரம்பித்தால் அரசே தனியார் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிடும். திருச்செங்கோடு பகுதி பள்ளிகளில் அதுவும் முன்னாள் ஆசிரியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் இவை நடக்கின்றன.

சிவானந்தம் said...

This is our national attitude.
This is hindering the development of our country.//

வாங்க வெற்றிமகள்

இந்த மனப்பான்மையை மாற்றவேண்டும் என்றுதான் பலர் போராடிக் கொண்டிருகிறார்கள். நான் பரிசு கொடுத்து அவர்களை தூண்டி விடுவோம் என நினைத்தேன். அது முடியவில்லை. இப்போது பதிவுகள் மூலமாக கருத்தை மட்டும் பரப்புகிறேன். ஏதாவது மாற்றம் வரும் என நம்புவோம்

சிவானந்தம் said...

//பள்ளிகளில் நடப்பவை இப்போதுதான் தெரிந்ததாக்கும். தனியார் பள்ளிக்கூடங்கள் எக்ஸாம் பேப்பரையே ட்ரேஸ் செய்து தங்கள் பள்ளி மாணவர்கள் முதல் மார்க் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதையெல்லாம் கண்டுபிடிக்க ஆரம்பித்தால் அரசே தனியார் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிடும். திருச்செங்கோடு பகுதி பள்ளிகளில் அதுவும் முன்னாள் ஆசிரியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் இவை நடக்கின்றன.///

வாங்க நண்பரே! முதல்ல பதிவின் கருத்தை சரியா புரிஞ்சிக்கங்க. எல்லாத் துறைகளிலும் மோசடி இருக்கிறது. அது மற்றவர்களுக்கு தெரியாது. ஆனால் அந்த துறையுடன் தொடர்புடையவர்களுக்கு விரிவாக தெரியும். ஆனால் அப்படி தெரிந்தவர்கள் அதை வெளியே சொல்வதில்லை என்ற வருத்தம்தான் இந்த பதிவு.

அதேசமயம் தனிநபர்கள் (நம்மை போன்றவர்கள்) இதை எதிர்த்து போராடுவது சிரமம். எனவேதான் பரிசுத் திட்டம் மூலம் மக்களை தூண்டிவிட்டு தகவல்களை வாங்கி, பத்திரிகைகள் மற்றும் சமூக சேவகர்களின் உதவியோடு ஆதாரங்கள் திரட்டி, கையுங் களவுமாக பிடித்து, அவர்களை அவமானப்படுத்துவது என்று திட்டமிட்டேன். ஆனால் அது கனவாகவே போய்விட்டது. யாராவது முயற்சி செய்யுங்கள், இது நிச்சயம் கீழ்மட்ட மக்களை சுத்தபடுத்தும்.

poomalai palani said...

அன்புள்ள நண்பரே
பள்ளிகளில் நடைபெறும் தில்லுமுல்லுகள் தாங்கள் செய்திதாள்களை கண்டபிறகுதான் அறிந்திருப்பீர்கள், அங்குநடக்கும் தில்லுமுல்லுகளுக்கு ஆசிரியர்களே காரணமாக இருப்பது வேலியே பயிரை மேய்வது போல்தான் உள்ளது, நல்ல பழக்கவழக்கங்களை கற்பிக்கும் ஆசிரியர்களும் அதற்கு உடன்போகும் அதிகாரிகளும் உடன் போகின்றனர், ஒரு பள்ளியில் நடந்த சம்பவத்தை நினைவு கூறுகிறேன். சென்ற வருடம் மார்ச் மாதம் ஆரம்பித்த குற்றச்சாட்டு பைல் இன்றுவரை முடிந்தபாடில்லை, அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர் தாளார் பணியிலிருந்து விலகியபின் அவரது பணிக்காலபிரிவில் அவருடைய கையொப்பத்தை பயன்படுத்தி இரண்டு ஊதிய உயர்வுகள் போர்சரி கையொப்பம் மூலம் போட்டு ஊதிய உயர்வுகளை பெற்று அதனை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் கண்டறிந்து நிரூபணம் செய்து பின் கூட அன்னாருக்கு யாதொரு நடவடிக்கையும் எடுக்காத உயர்அதிகாரிகள் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் ஆசான்கள் போர்சரி கையொப்பம் போட்டு தில்லுமுல்லு பண்ணும் ஆசிரியர்களுக்கு உடன் போகும் அதிகாரிகள் தான் இன்னும் உள்ளனர், இதன் பொருட்டு நடவடிக்கை தொடர கல்வித்துறை இயக்குநர் துறை செயலர் வரை நடவடிக்கை எடுக்க விண்ணப்பித்தும் இதுவரை யாதொரு நடவடிக்கையும் அன்னார் மேல் தொடராமல் அவருக்கு இதுவரை ஒத்துபபோகும் அதிகாரிகளே இன்னும் உள்ளனர் ஆண்டு ஒன்றும் ஆகியும் சுமார் 100 பக்க எழுத்துமூலம் வழக்கு தொடர்ந்தும் அன்னார் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை, இது போன்ற செயல்களால் கல்வித்துறை எப்போது திருந்தும்
இப்படிக்கு
வை,பூமாலை
சுந்தரபாண்டியம்

Post a Comment