!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Tuesday, May 1, 2012

வரும் முன் காப்போம் !

இந்த வாரம் கல்வித்துறை குறித்த செய்திகளை மேய்ந்ததில் இதை கவனித்தேன். ஆசிரியர் வேலைக்கு இந்த ஆண்டு 25000 பேர் தேர்வு செய்யப்பட போகிறார்களாம். இதற்கு விண்ணப்பித்திருப்பவர்கள் 6 லட்சம் பேர். இங்கே புள்ளி விவரத்தை விட்டுவிடுவோம். அரசின் எந்த ஒரு துறையிலும் வேலை வாய்ப்பு என்றால், அங்கே போட்டி கடுமையாக இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.

அரசுத் துறையில் வேலை என்றால் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம். இன்றைய செய்தியை பாருங்களேன். பண்ருட்டியில் ஒருவர், அதுவும் ஸ்டேஷன் மாஸ்டர், குடி போதையில் பணியில் இருந்திருக்கிறார். பணம் எண்ணக் கூட முடியவில்லையாம். அந்த அளவுக்கு அரசுத் துறைகள் உங்களுக்கு பாதுகாப்பை தருகிறது.

அதுமட்டுமின்றி அரசு வேலை கிடைத்துவிட்டால், உங்களிடம் திறமை இல்லையென்றாலும் காலாகாலத்தில் பிரமோஷன் கிடைக்கும். திறமை என்ற அளவுகோலே அங்கு கிடையாது. அப்புறம்... நல்ல சம்பளம், கிம்பளம் என எல்லாத்தையும் சேர்த்து பாருங்க. போட்டிக்கான காரணம் தெரியும். 

இவர்களை ஓட்டு வங்கியாகக் கருதி ஆட்சியாளர்கள் வாரி வாரி வழங்கியதால் வந்த வினை இது. இது இப்படியே போனால் என்ன ஆகும்? நமது ஆட்சியாளர்களுக்கு அந்த கவலை இல்லை. ஆனால் நமக்கு இருக்கிறதே.

அதேசமயம் அவர்களுக்கு இப்படி வாரி வழங்குவதில் எனக்கு பொறாமை இல்லை. ஒரு இடத்தில் போட்டி அதிகம் என்றால் அங்கே லாபம் அதிகம் என்பது யதார்த்தம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதர்கள் யதார்த்தமாக முடிவெடுக்க, அரசுத்துறைகள் மட்டும் யுனிவர்ஸல் லாஜிக்கை மீறி செயல்படுகின்றன என்பதால் இந்த பதிவு.

அடிபட்டவன் அனுபவத்தை பாருங்கள் 

அவ்வப்போது (இணையம்) உலகம் சுற்றுவதில் இதை கவனித்தேன். ஐரோப்பிய நாடான கிரீஸ் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளின் நிர்பந்தத்தில், அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு, சம்பளம் குறைப்பு என்று செலவினங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது. விடுவார்களா அரசு ஊழியர்கள். அதை எதிர்த்து பெரும் போராட்டம் நடந்தது / நடந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட நிலைமை நமக்கும் வரலாம். எனவே வரும் முன் காப்பது நல்லதுதானே. ஏற்கனவே அதிகம் சம்பளம் வாங்குபவர்களிடம் குறைக்க முடியாது. நாடு ஸ்தம்பித்து விடும். ஆனால் புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு அரசு சில கண்டிஷன்களை வைக்கலாமே?

டீலா, நோ டீலா? 

ஷேர் மார்கெட்டில் ஒரு நடைமுறை உள்ளது. புதிதாக வெளியிடப்படும் பங்குகளை வாங்க நமக்கு பிரைஸ் பேன்ட் கொடுப்பார்கள். 100 முதல் 130 வரை என விலை நிர்ணயிப்பார்கள். உங்களுக்கு பரவாயில்லை என்றால் கூடுதல் விலையில் கேட்கலாம். அப்போது உங்களுக்கு அந்த ஷேர் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

அதேபோல் அரசும் செய்யலாமே? அரசு தரவிருக்கும் உத்தேச சம்பளத்தை விட குறிப்பட்ட சதவிகிதத்தை குறைத்து வாங்க தயாராக இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கலாம்.

பரவாயில்லை என்றால் அவர்கள் குறைந்த சம்பளத்துக்கு விண்ணப்பிக்கட்டும். இப்போது வந்திருக்கும் விண்ணப்பங்களை பார்த்தால் அவர்கள் இதற்கும் தயாராக இருக்கலாம். அப்படி அவர்களே பரவாயில்லை எனும்போது அரசு ஏன் அதிகம் சம்பளம் கொடுக்க வேண்டும்?

இதனால் தரம் பாதிக்கப்படும் என்ற கேள்வி வராது. இன்று அரசு நல்ல சம்பளம் கொடுத்தும் தரம் இல்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் அது இருக்கிறது. எனவே அந்த கவலை அனாவசியமானது.

அதேசமயம் இது ஒன்றும் புதுக்கதை அல்ல. உலகளாவிய தொழில் முறை இப்படித்தான். இங்கே கூலி அதிகம் என்று வட மாநில தொழிலாளர்களை சற்றே குறைந்த ஊதியத்தில் தனியார் துறையினர் பயன்படுத்தவில்லையா? உலகமே இந்த தியரியில்தானே ஓடிக் கொண்டிருகிறது. அப்படி இருக்கையில் அரசுத்துறை மட்டும் ஏன் இப்படி அபத்தமாக செயல்பட வேண்டும்.

கவலைப்பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள்தான். இப்படி ஒரு டிமாண்ட் இருப்பதால், நல்ல சம்பளமும் இருப்பதால், அதையெல்லாம் கணக்கு போட்டு அவர்கள் இந்த வேலையை விலைக்கு விற்கிறார்கள். அவர்கள் பிழைப்பில் மண் விழும். அவ்வளவுதான்.

ஒருவர் அரசு வேலைக்காக ஒரு `ரேட்` தர தயாராய் இருந்தார். `இவ்வளவா!` என்றேன் நான். `2 வருஷம் சம்பளம் நமக்கு இல்லன்னு நினைச்சிக்குவோம். அப்புறம் பிரச்சினை இல்ல` என்றார் அவர். அந்த வகையில்தான் இப்போது அரசுத்துறையில் வேலை `கொடுக்கப்படுகிறது`.

வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது, அதை ஓரளவுக்கு சாமார்த்தியமாக பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். தனியார்த்துறையினர் லாப நோக்கில் செய்கிறார்கள். அரசு லாப நோக்கில் செயல்பட முடியாது. ஆனால் யதார்த்தமான நடைமுறையாக பின்பற்றலாம். மிச்சமாகும் பணம் மேலும் சில வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.

ஒரு வியாதியை வளர்த்து விட்டு பின்னர் கிரீஸ் மாதிரி அவஸ்தை படுவதைவிட, முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான். 8 comments:

V.KAVEANANTH &V.NANDHANA said...

good move

வவ்வால் said...

சிவானந்தம்,

ஒரு பிரச்சினையை அலசி இருக்கிங்க, ஆனால் இன்னும் கொஞ்சம் உள்நுழைந்து அலசி இருக்கணும்.

கிரீஸ் எடுத்துக்கொண்டால் அங்கெல்லாம் அனைவருக்கும் வேலை உத்திரவாதம் என்பது அரசியல் அமைப்பு சட்டம்.பெரும்பாலா மேலை நாடுகளில் இது உண்டு.

18 வயசு ஆகிவிட்டது ,பள்ளிப்படிப்பு முடித்துவிட்டால் வேலைக்கொடுக்கப்பட வேண்டும், படிக்கவே இல்லை என்றாலும் கொடுக்க வேண்டும் (அரசு,தனியார் ஏதோ ஒன்று) தனியாரில் வேலைக்கிடைக்கவில்லை எனில் அரசு கொடுக்க வேண்டும், அப்படி கொடுக்கவில்லை எனில் வேலைக்கிடைக்கும் வரை உதவி தொகை கொடுக்க வேண்டும்.

சும்மா உதவித்தொகை கொடுப்பதை விட வேலையே கொடுத்து விடலாம் என கிரீஸ் அரசு வேலைக்கொடுக்கப்போய் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகி விட்டார்கள். இதற்கு காரணம் தனியார் நிறுவனங்கள் பெரிதாக வளர்ச்சியடைந்து வேலைக்கு ஆட்களை எடுக்காததே.எனவே அரசு ஊழியர் சம்பளமாகவே மிக அதிக பணம் செலவாகிவிட்டது, மேலும் 60 வயசுக்கு மேலானோருக்கு இலவச மருத்துவம் , உதவித்தொகை என பல திட்டங்கள் எல்லாம் அரசு கஜானாவை காலியாக்கிவிட்டது.

அதாவது மக்கள் நல அரசாக செயல்ப்பட வேண்டிய கட்டாயம் ,நம்ம ஊரில் எல்லாம் அப்படி அரசு யோசிப்பதே இல்லை , வேலை கிடைப்பதற்கு உத்திரவாதம் எல்லாம் அரசு கொடுக்காது கையையும் சுட்டுக்கொள்ளாது.

மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு பார்த்தால் அரசு ஊழியர்கள் இந்தியாவில் குறைவு தான் இன்னும் கூட வேலைக்கொடுக்கலாம் ஆனால் நிதி நிலைமைப்பொறுத்தே வேலையை கொடுக்கும் மக்கள் தேவையைப்பொறுத்தல்ல.

ஆறு லட்சம் பேர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே அரசின் செயல்படாத தன்மையையே காட்டுகிறது.

இந்த மாதிரி நிலை எல்லாம் மேலை நாட்டில் இருந்தால் ஆட்சியாளர்களை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆசிரியர் பயிற்சி முடித்தால் எத்தனைப்பேருக்கு வேலை கொடுக்க முடியும் என யோசிக்காமல் பல ஆசிரியர் பயிற்சி நிலையங்களை மட்டும் ஆண்டு தோறும் திறக்க அனுமதியளிக்கும் அறிவற்ற ஆட்சியாளார்கள் தான் இங்கே இருக்கிறார்கள்.

இதே நிலை தான் பொறியியலுக்கும் எத்தனைப்பேருக்கு வேலைக்கொடுக்க நாட்டில் சாத்தியம் உண்டு எனக்கணக்கிடாமல் எண்ணற்ற கல்லூரிகள் திறக்கப்படுகிறது.பல அலைப்பேசி நிறுவனங்களின் சிம் கார்ட் மார்க்கெட்டிங் வேலை செய்வது பொறியியல் பட்டத்தாரிகளே, வரும் காலத்தில் பொறியியல் படித்துவிட்டு ஆட்டோ ஓட்டும் நிலையும் வரலாம்.

//வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது, அதை ஓரளவுக்கு சாமார்த்தியமாக பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். தனியார்த்துறையினர் லாப நோக்கில் செய்கிறார்கள். அரசு லாப நோக்கில் செயல்பட முடியாது. ஆனால் யதார்த்தமான நடைமுறையாக பின்பற்றலாம். மிச்சமாகும் பணம் மேலும் சில வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.//

அரசு அப்படி செய்யவில்லை என யார் சொன்னது , நிறைய ஒப்பந்த பணியாளர்களை தொகுப்பூதியத்தில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைத்துள்ளது.

ஆசிரியர்களும் அப்படி பணியில் இருக்கிறார்கள். மேலும் சர்வசிக்‌ஷா அபியான் திட்டத்தின் படி குறைவான தொகுப்பூதியத்தில் வேறு எந்த பணிக்கால பலன்களும் இல்லாமல் வேலை வாங்கி வருகிறது.

இதற்கு பெயர் அரசே உழைப்பு சுரண்டல் செய்வது, உங்களைப்போன்றவர்களும் அப்படி செய்தால் தவறில்லை என நினைக்க வைப்பது அரசின் சாதனையே :-))

அரசு ஊழியர்கள் பணியில் கவனம், திறமை இல்லாமல் இருப்பதனை வைத்து அரசு வேலைக்கொடுக்காமல் இருக்கலாம் என்பது போல நினைப்பது சரியல்ல,அவர்களை ஒழுங்காக வேலை செய்ய ,கண்காணிக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.அதனையும் அரசு செய்வதில்லை.

யாராவது ஒரு அதிகாரி ஒழுங்கீனமான அலுவலரை இடைப்பணி நீக்கம் செய்தால் அவர் மேலிடத்துக்கு சென்று அதனை ரத்து செய்ய வைத்து விடுவார், பணம் கொடுத்து தான் எனவே ஊழல் மலிந்துவிட்டதால் தான் எல்லாம் சாத்தியம் ஆகிறது.

ராஜ நடராஜன் said...

நாங்க எல்லாம் வெளிநாட்டுக்கு பஞ்சம் பிழைக்கப் போய் இடங்களை காலி செய்து கொடுத்தும் இன்றும் கூட 25000 வேலைக்கு 6 லட்சம் விண்ணப்பங்களா?எந்த துறையில் பணி செய்தாலும் அரசுப்பணிக்கு நிகரான வருமானம் இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் அரசு வேலைக்கான விண்ணப்ப நிலைகள் குறையும்.தொழில் சார்ந்த பணிகளை உருவாக்கலாம்.ஜப்பான்,சீனா போன்றவற்றின் பொருளாதாரம் தொழில் உற்பத்தி சார்ந்த ஒன்றே.ஒரு குண்டூசி முதற்கொண்டு கார் பாகம்,மின் பொருளின் பாகம் என உற்பத்தி செய்யும் நிலை வேண்டும்.நாம்தான் விவசாயத்தை விட்டு விட்டு தொழில் சார்ந்த அரசுக் கொள்கைகளுக்கு தாண்டி விட்டோமே!அப்புறம் என்ன தயக்கம்?அரசு வேலைகளுக்கு குறைந்த சம்பளம் கூடவே ஏதாவது தொழில் செய்யும் நிலைகளைக் கொண்டு வரலாம்.

சந்தர்ப்பங்களை உருவாக்குவது மட்டுமே அரசு செய்ய வேண்டிய கடமை.நாம் உழைப்பாளிகள்.மக்கள் எதனையாவது கைபற்றிக்கொண்டு தான் முன்னேறுவதோடு மாநில உற்பத்தியையும் பெருக்க இயலும்.சோசலிஷ காலத்து சிவப்பு நாடா முறைகளை உடைத்தெறியாத வரை ராக்கெட் மட்டும் விட்டுக்கொண்டு இந்தியா கலாம் கனவு காண வேண்டியதுதான்.

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

கருத்து சொல்வதில் சில இடர்பாடுகள் இருக்கிறது. நாமெல்லாம் நீதிபதிகளை போல் 300, 400 பக்க அறிக்கை கொடுத்து கருத்து சொல்ல முடியாது. சுருக்கமாக சொல்லவேண்டும். எனவே கருத்துக்களை மேம்போக்காக சொல்கிறோம். இதில் என்ன சொல்ல போகிறோம் என்பதை புரிந்து கொண்டு எழுதுகிறோம். அப்படியும் சில விஷயங்களை கவனிக்கவில்லை என்றால், பின்னூட்டங்களில் சிலர் குறிபிடுவார்கள், தெரிந்து கொள்வோம் என்ற அடிப்படையில் எழுதுகிறேன்.

இங்கே மேலை நாடுகளில், நீங்கள் குறிப்பிட்ட வேலை, கல்வி உத்தரவாதம், முதியோர் சலுகைகள் மற்றுமின்றி அகதிகளாக வருபவர்களுக்கு கூட அவர்கள் உதவித் தொகை தருகிறார்கள். இவையெல்லாம் அந்த நாட்டு பத்திரிக்கைகளை படித்தாலே தெரியும். இது அவர்களுடைய கொள்கையோ அல்லது கொழுப்போ அது அவர்களுடைய தலைவலி. நான் சொல்ல வருவது, இப்படி கொடுத்துவிட்டு பின்னர் ஏன் அவஸ்த்தை படுவானேன் என்பதுதான்.

///ஆறு லட்சம் பேர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே அரசின் செயல்படாத தன்மையையே காட்டுகிறது.

எத்தனைப்பேருக்கு வேலை கொடுக்க முடியும் என யோசிக்காமல் பல ஆசிரியர் பயிற்சி நிலையங்களை மட்டும் ஆண்டு தோறும் திறக்க அனுமதியளிக்கும் அறிவற்ற ஆட்சியாளார்கள் தான் இங்கே இருக்கிறார்கள்.

இதே நிலை தான் பொறியியலுக்கும் எத்தனைப்பேருக்கு வேலைக்கொடுக்க நாட்டில் சாத்தியம் உண்டு எனக்கணக்கிடாமல் எண்ணற்ற கல்லூரிகள் திறக்கப்படுகிறது.///

வவ்வால், இதை ஆசிரியர், இஞ்சினியர் என பார்க்காமல் கல்வி என்ற வகையில் பாருங்கள். அரசால் எல்லோருக்கும் கல்வி கொடுக்க முடியவில்லை. எனவே அந்த வேலையை தனியார் செய்கிறார்கள். எவ்வளவு வேலை காலியாகும் உருவாகும் என கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்ப் போல் உருவாக்கமுடியாது.

சிறையில் ஒரு அறியாமல் குற்றம் செய்துவிட்ட ஒருவரிடம் , ` நடந்த உண்மையை சொல்லி தவறை ஒப்புக்கொள், உனக்கு குறைந்த பட்ச தண்டனை கிடைக்கலாம். விடுதலையும் ஆகிவிடலாம்.` என்று சொன்னேன். `என்னை விடுதலை பண்றேன் சொல்லட்டும். நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்` என்றார் அவர். இது சாத்தியமா? அதேபோல்தான் கல்வியும். எனக்கு வேலை கிடைக்கும்ன்னு சொல்லுங்க, நான் படிக்கிறேன் என்றா வாதம் பண்ணுவது? வேலை கொடுக்க முடிகிறதோ இல்லையோ, மக்களை ஏதோ ஒரு வகையில் படிததவர்களாக மாற்றவேண்டும். அதுதான் அரசின் முதல் இலக்காக இருக்கவேண்டும்.அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தால் இன்றைய குறைகளுக்கு அவர்கள் தீர்வை கண்டுபிடிக்கலாம்.

சிவானந்தம் said...

@ வவ்வால்

//அரசு அப்படி செய்யவில்லை என யார் சொன்னது , நிறைய ஒப்பந்த பணியாளர்களை தொகுப்பூதியத்தில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைத்துள்ளது.

ஆசிரியர்களும் அப்படி பணியில் இருக்கிறார்கள். மேலும் சர்வசிக்‌ஷா அபியான் திட்டத்தின் படி குறைவான தொகுப்பூதியத்தில் வேறு எந்த பணிக்கால பலன்களும் இல்லாமல் வேலை வாங்கி வருகிறது.

இதற்கு பெயர் அரசே உழைப்பு சுரண்டல் செய்வது, உங்களைப்போன்றவர்களும் அப்படி செய்தால் தவறில்லை என நினைக்க வைப்பது அரசின் சாதனையே :-)) //

நான் சாப்பிட மறந்தாலும் தினம் பேப்பர் படிக்க மறப்பதில்லை. அந்த வகையில் மேலே நீங்கள் சொன்ன விஷயங்கள் படித்திருக்கிறேன். தற்போது அதிமுக அரசு நீக்கிய மக்கள் நலப் பணியாளர்கள் அந்த வகைதானே? நான் சொல்ல வருவது அரசு பல துறைகளில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது இந்த ஆப்ஷனையும் பயன்படுத்தலாம் என்று.

நிச்சயம் இது சுரண்டல் அல்ல. சுரண்டல் என்றால் அங்கே லாபம் ஒரு தனி நபருக்கு அல்லது வேறு ஒரு நாட்டுக்கு போகும். இங்கே யார் ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அரசுதான் இருக்கிறது. அதிகம் சம்பளம் கொடுத்து நஷ்டம் வந்தாலும், குறைவான சம்பளம் கொடுத்து லாபம் வந்தாலும் அது நம்மைத்தான் (மக்களுக்குத்தான் போய்) சேரும்.

10 பேருக்கு ஃ புல் மீல்ஸ் போடுவதைவிட அவர்களுக்கு கொஞ்சம் குறைத்து 15 பேருக்கு அளவு சாப்பாடு போடலாமே என்பதுதான் என் வாதம்.

///அரசு ஊழியர்கள் பணியில் கவனம், திறமை இல்லாமல் இருப்பதனை வைத்து அரசு வேலைக்கொடுக்காமல் இருக்கலாம் என்பது போல நினைப்பது சரியல்ல,///

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.அது சாத்தியமும் இல்லை.

///அவர்களை ஒழுங்காக வேலை செய்ய ,கண்காணிக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.அதனையும் அரசு செய்வதில்லை.

யாராவது ஒரு அதிகாரி ஒழுங்கீனமான அலுவலரை இடைப்பணி நீக்கம் செய்தால் அவர் மேலிடத்துக்கு சென்று அதனை ரத்து செய்ய வைத்து விடுவார், பணம் கொடுத்து தான் எனவே ஊழல் மலிந்துவிட்டதால் தான் எல்லாம் சாத்தியம் ஆகிறது.///

இது இன்றைய அரசுகளின் நிர்வாக கோளாறு. நம்மிடம் இதற்கு தீர்வும் இல்லை. எனவே நான் அதை தொடவில்லை. இந்த விஷயத்தில் நீங்கள் சொன்னதை நானும் வழி மொழியலாம்.

வவ்வால் said...

சிவானந்தம்,

//அவர்களுடைய கொள்கையோ அல்லது கொழுப்போ அது அவர்களுடைய தலைவலி. நான் சொல்ல வருவது, இப்படி கொடுத்துவிட்டு பின்னர் ஏன் அவஸ்த்தை படுவானேன் என்பதுதான்.//

உங்கள் புரிதலை நினைத்தால் புல்லரிக்குது நீங்கள் ஏதோ புரிந்துக்கொண்டு இப்பதிவை எழுதி இருப்பதாக நான் நினைத்துக்கொண்டு இன்னும் விளக்கமாக சொல்லி இருக்கலாம்னு கேட்டு விட்டேன் :-))

மக்கள் நல அரசு என்ற அடிப்படையில் மேலை நாடுகள் செயல்ப்படுகின்றன அவற்றால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாவிட்டால் இத்தகைய போராட்டங்களை சந்திக்க வேண்டியது தான் நம்ம ஊரு அரசியல் போல எல்லாம் காலங்காலமாக பொய் சொல்லி வண்டியோட்ட முடியாது.

நம்ம நாட்டிலும் மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொன்டு எதுவுமே செய்யாமல் வெற்று வாக்குறுதியை கொடுத்தாலும் மக்கள் நம்பி மீண்டும் மீண்டும் வாக்கு போடுவார்கள், காரணம் மக்களுக்கு இன்னமும் ஜனநாயகத்தின் அருமை தெரியவில்லை.

உரிமை இருப்பது கூட தெரியாமல் அரசு என்ன செய்யும் என்று உங்களைப்போலவே திருப்பி கேட்கிற அளவுக்கு தான் சிந்தனை வளர்ந்து இருக்கு.

//வவ்வால், இதை ஆசிரியர், இஞ்சினியர் என பார்க்காமல் கல்வி என்ற வகையில் பாருங்கள். அரசால் எல்லோருக்கும் கல்வி கொடுக்க முடியவில்லை. எனவே அந்த வேலையை தனியார் செய்கிறார்கள். எவ்வளவு வேலை காலியாகும் உருவாகும் என கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்ப் போல் உருவாக்கமுடியாது. //

உங்கள் பலக்கருத்துகளும் அரசு என்ன செய்யும் ,என்பது போலவே எல்லாவற்றுக்கும் பதில் சொன்னாலும் பலன் இருக்க போவதில்லை. இந்த பொறியியல் கல்லூரிகள் அதிகம் ஆனதன் பின் விளைவை மட்டும் சொல்லி செல்கிறேன்.

தமிழ் நாட்டில் சுமார் 500 தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிலிருந்து 2 லட்சம் பொறியாளர்கள் ஆண்டுக்கு வருகிறார்கள் ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை 20% பேருக்கு தான் கிடைக்கிறது, மற்றவர்கள் கிடைத்த வேலை அல்லது வேலையில்லாமல் அவதிப்படுகிறார்கள்.
ஆனால் அனைவருக்கும் படிக்க ஆகும் செலவு கிட்டத்தட்ட ஒன்றே, மேலும் 90% நடுத்தட்டு மக்கள், அல்லது அதற்கும் கீழ், படிக்க வங்கி கல்விக்கடன், அல்லது வேறுவகையில் வட்டிக்கு வாங்குவது நிலம் ,வீடு அடகு வைப்பது என்று தான் படிக்க பணம் திரட்டுகிறார்கள். எனவே பெரும்பாலோருக்கு படிப்பு முடிக்கும் போது சுமார் 4 லட்சம் கடன் இருக்கும், வேலை இல்லை எனில் கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

வேலை கிடைக்காது எனில் ஏன் படிக்க வேண்டும் என நீங்க கேட்க மாட்டிங்க ஏன் எனில் கல்வி வழங்குவது மட்டும் போதும் என்று சொல்பவர் ஆச்சே :-))

வேலை கிடைக்குதோ இல்லையோ அனைவரும் கடன் காரர்கள் ஆகிவிடுகிறார்கள், இதனால் தான் சில சரியாக படிக்க இயலாத மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள், அவர்களுக்கு இரண்டு வகையான சுமை வேலை கிடைக்க நன்றாக படிக்க வேண்டும் முடியவில்லை அது ஒன்று குடும்ப பொருளாதார சுமை எல்லாம் சேர்ந்து அழுத்தி தவறான முடிவை ஏற்படுத்துகிறது.

அனைவருக்கும் கல்வி கொடுக்க அரசு முயலவேண்டும் தனியாரை எக்கசக்கமாக ஆரம்பிக்க வைத்து பண அறுவடை செய்ய உதவிவிட்டு அவ்வளவு செலவு செய்து படித்துவிட்டு வேலை இல்லை எனில் என்ன பொருள்.

எதற்குமே ஒரு திட்டமிடல் வேண்டும் அதெல்லாம் தேவை இல்லை எனில் அரசும் தேவை இல்லை.

சிலர் வசதியில்லாமல் இருந்தாலும் நிறைய குழந்தைகள் இருக்கும் இத்தனை பேரை வளர்க்க முடியுமா ஏன் பெற்றீர்கள் என கேட்டால் வளர்க்க முடியும் என தெரிஞ்சா தான் பெற்றுக்கொள்ள வேண்டுமா என திருப்பி கேட்டால் எப்படி இருக்கும்? நாட்டில் குடும்ப கட்டுப்பாடே செயல் படுத்த முடியாது அது போல தான் நீங்க சொல்றிங்க வேலை கிடைக்கும்னு தெரிஞ்சா தான் படிக்கனுமா என அதன் பொருளாதார பின்விளைவை யோசிக்காமல்.

நமது கல்வி வளர்ச்சி என்பது சீராக இல்லாமல் திடீர் வீக்கமாக போய்கொண்டிருக்கிறது அதுவே பொறியியல்,ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் திடீர் உயர்வு ஏகப்பட்ட பேர் சில பதவிக்கு போட்டியிடல்.

ஏன் நிறைய மருத்துவ கல்லூரிகள் துவங்க செய்யலாமே நமது மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு குறைவான மருத்துவர்களே இருக்கிறார்கள் மேலும் கிராமங்களில் மருத்துவ வசதியே இல்லை.

வவ்வால் said...

சிவானந்தம்,

நிறைய சொல்ல நினைப்பதால் சில சமயம் சில விட்டுப்போய்விடுகிறது,

//, மக்களை ஏதோ ஒரு வகையில் படிததவர்களாக மாற்றவேண்டும். அதுதான் அரசின் முதல் இலக்காக இருக்கவேண்டும்.//

படித்தவர்களாக மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் குடும்பத்தை கடனில் மூழ்க வைத்து அல்ல,பொருளாதார சுமையுடன் படிப்பவருக்கு வேலை கிடைக்கவில்லை எனில் தவறான வழிகளுக்கு கொண்டு போகும் என்பதை நினைவில் கொள்க.படித்த குற்றவாளிகள் பற்றிய செய்திகள் இப்போது அதிகம் காணக்கிடைக்கிறது.

அதே போல சில குறிப்பிட்ட படிப்புகளே அதிகமாக படிக்கும் நிலை அல்ல அனைத்து கல்வி வகையும் படிக்கும் சூழல் வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் தொகை விகிதாச்சாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு சூழலை கணக்கில் கொண்டால் மிக அதிக பொறியியல் ,ஆசிரிய பயிற்சி நிறுவனங்கள் மிக குறுகிய காலத்தில் வந்துவிட்டன.

சிவானந்தம் said...

வவ்வால், சில விஷயங்களில் இருபக்கமும் நியாயம் இருக்கும். அதேபோல் நீங்கள் சொன்ன வாதங்கள் கவனிக்க வேண்டியவைதான். ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அடுத்த பதிவில் அதை பார்ப்போம்.

Post a Comment