!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, July 16, 2012

சிறை அனுபவம்: 302 மாதிரி பேசற!

கடந்த பதிவான `சிறை அனுபவம்: பணம்` சூப்பர் ஹிட். மிகவேகமாக அதிகம் பேரால் படிக்கப்பட்டது. பலர் இதை வாசித்தது சந்தோசம் என்றாலும், இதை படித்த நபர்களில் ஒரு நல்ல பத்திரிக்கையாளர்/சமூகசேவகர் /அரசியல்வாதி இருந்து, அரசுக்கு முறையான அழுத்தம் கொடுக்கப்பட்டு, இங்கேயும் சீர்திருத்தங்கள் விரைவாக வந்தால் அது இன்னும் அதிக சந்தோஷத்தை அளிக்கும்.

இந்த முறை மற்ற பதிவுகளும் கவனிக்கப்பட்டது. நானும் இந்த வாரம் அதிகம் வாசிக்கப்பட்ட பழைய பதிவுகளை மீண்டும் வாசித்தேன். ஒரு பதிவை எழுதி அதை எடிட் செய்ய பல முறை படித்தாலும் கவனிக்க முடியாத குறைகள், அதே பதிவை பல மாதங்கள் கழித்து படித்தபோது தெரிய வருகிறது. குறைகள் என்றால் சொற் பிழை  அல்லது வார்த்தைகளை கோர்ப்பதில் உள்ள குறையாக இருக்கலாம். பொறுத்தருள்க.

இந்த வாரம் டாக்டர்கள் ஸ்ட்ரைக் பற்றிய செய்திகளை கவனித்தேன். இதனால் சில பேஷண்ட்கள் இறந்ததும், மீடியாக்கள் அதை பரபரபாக்க, மக்களின் கோபமும் அதிகரித்தது. டாகடர்களும் நிலைமையை புரிந்துகொண்டு ஸ்ட்ரைக்கை கைவிட்டார்கள்.

நம் நாட்டில் ஸ்ட்ரைக் சர்வசாதாரணமாக நடக்கிறது. இருந்தாலும் முக்கியமான துறைகளில் அதன் விளைவு மிகக்கடுமையாக இருக்கும் என்பதை இந்த டாக்டர்கள் ஸ்ட்ரைக் உணர்த்துகிறது.

சிறைத்துறையும் அப்படித்தான். இன்று பலர் துணிச்சலாக குற்றச்செயலில் இறங்கக் காரணம், சிறைகள் நடப்படும் லட்சணம்தான். இந்த குற்றங்களில் பெரும்பாலானவை தொடர் குற்றவாளிகள் செய்வது. வேளச்சேரி என்கவுண்டர் கூட குற்றவாளிகளின் மனதில் எந்த பயத்தையும் உருவாக்கவில்லை. இந்த குற்றங்களால் பலியாகும் உயிருக்கு யாரை பொறுப்பாக்குவது? பதில் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த பூனைகளுக்கு மணி கட்ட யாரும் தயாராக இல்லாததால் அவர்கள் காட்டில் தொடர்ந்து அடைமழை பெய்து கொண்டிருக்கிறது.

இனி சிறை அனுபவங்கள்.

கடந்த பதிவில் உள்ளே இருக்கும் பழைய கைதிகள்தான் சிறையில் நடக்கும் ஊழல்களை அம்பலபடுத்துவார்கள். எனவே அவர்களை சிறை அதிகாரிகள் அனுசரிக்க வேண்டும், இதுதான் யதார்த்தம் என்று சொல்லி இருந்தேன். அதுமட்டுமின்றி இவர்கள் சில பழைய கைதிகளிடம் அடங்கியும் போகவேண்டும். 

ஒரு முறை நான் பிளாக்கிலிருந்து சிறை லைப்ரரிக்கு கிளம்பினேன். கேட்டில் காவலரிடம் சொல்லிவிட்டு போகவேண்டும். சொன்னேன். `லைப்ரரிக்கு எதுக்கு போறீங்க?` என்றார் அவர். இதற்கு என்ன பதில் சொல்வது? `எதுக்கு போவாங்க?... படிக்கத்தான்` என்றேன். இதை அவர் நக்கலாக எடுத்துக் கொண்டார்.

`என்ன கேஸ்?`

`307`(கொலை முயற்சி)

`302 (கொலை) மாதிரி பேசற!` என்றார் அவர். இப்போது கோவம் அவரிடம் அதிகமாக இருந்தது. அனுமதியும் மறுக்கப்பட்டது.

நான் எனது அக்கௌண்டிலேயே எனக்காக பேப்பர் வாங்கி வந்தேன். அதுமட்டுமின்றி நமது நண்பர்தான் லைப்ரரி உதவியாளர். எனவே லைப்ரரி முடிந்த பிறகு எல்லா பேப்பரும் நான் இருந்த செல்லுக்கே வந்துவிடும். இங்கேயே படித்துவிடலாம். சும்மா போய் வருவோம் என நினைத்தேன். அதற்குதான் தடை. நான் கவலைப்படவில்லை. ஆனால் இந்த கேள்விதான் என்னை உசுப்பிவிட்டது.

302 விடமோ அல்லது பல கேஸ் உள்ளவர்களிடமோ போலீசார் இப்படி பேசமாட்டார்கள். `நான் ஏற்கனவே கொலை கேஸ்ல இருக்கண்ணே. இன்னொன்னு பண்ணாலும் அதே தண்டனைதான்` என்று உறுமுவார்கள். அல்லது `ஏகப்பட்ட கேஸ்ல மாட்டி இருக்கேன்` என்று எகிறுவார்கள். அதன் அர்த்தம் இன்னொரு குற்றம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை என்பதுதான்.

சிறைகளில் கண்கரண்டி என்ற காமெடி குற்றவாளிகளுக்கு உதவியாய் இருக்கிறது. எத்தனை குற்றம் செய்தாலும் அது ஒரே தண்டனையில் (பெரும்பாலும்) கழிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், கூடுதலாக ஒரு குற்றம் செய்ய அவர்கள் தயங்குவதில்லை.

இப்படிப்பட்ட நிலையில் அவர்களிடம் போலீசார் வாலாட்ட மாட்டார்கள். நீதிமன்றங்கள் செல்லாகாசு அரசியல்வாதிகளை மட்டும் தண்டிப்பது போல், இவர்களும் புதுக் கைதிகளிடம் மட்டுமே வீரத்தை காட்டுவார்கள்.

நான் சிறைக்கு சென்ற புதிதில் ஒரு காவலர் வீரமாக இருக்க, பின்னர் சாந்தமானார். உள்ளே யாரிடமோ மோத, வெளியே எச்ச்ரிக்கபட்டார் என்று தகவல். அதுதான் இந்த மாற்றம்.

இந்த பக்கம் இப்படி என்றால், அந்தபக்கம் (தண்டனை கைதிகள்) இன்னும் மோசமாம். பையில பணம் வைத்திருந்தாலும் பிரச்சினை இல்லையாம். அதேபோல்தான் சாப்பாடும். இன்னும் தரமாக இருக்குமாம். காரணம், சில லாஜிக்தான். விசாரணை சிறையில் தோராயமாக 30 சதவிகிதம் பேர் வெடிக்கும் மனநிலையில் இருந்தால், அங்கே அது 70 சதவிகிதமாக இருக்கும். எனவே அவர்களை கூல் பண்ணதான் இந்த சலுகைகள்.

இங்கேயும் கடன்

தொடர் குற்றவாளிகள் பிளாக்கில் இருந்தபோது ஒருவர் கடிதம் எழுதசொன்னார். கடிதம் அவருடைய வக்கீலுக்கு. அவரை பெயிலில் எடுத்துவிட வேண்டுமாம். இவரிடம் பணமில்லாததால் அந்த வக்கீல் எடுத்துவிட்டால், இவர் விடுதலை ஆனதும் கொடுத்துவிடுவாராம். இதுதான் கடிதம்.

`அவர் எடுப்பாரா?` என கேட்டதற்கு, சிலமுறை அவர் பெயில் எடுத்திருப்பதும் அதேபோல் வெளியே போனதும் நாணயமாக பணம் கொடுத்துவிட்டதையும் சொன்னார். இந்த பெயில் ஷ்யூரிட்டி போன்றவைக்கு 2000 தான் ஆகும் என்று சொன்னதாக நினைவு. பெயில் என்பது அவ்வளவு சீப்பாக ஆகிவிட்டது.

புதுக்கைதிகள் பயத்தில், அவசரத்தில் இருப்பார்கள். வருமான இழப்பு அவமானம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற மூடுக்கு வந்துவிடுவதால், வக்கீல்கள் இவர்களிடம் நிறைய தாளிப்பார்கள். மற்றபடி பெயில் என்பது, நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க தயார் என்றால், மலிவான ஒன்றாகத்தான் தெரிகிறது. 

எனக்கு இங்கே ஒரு சந்தேகம்.  ஒரு கைதியை ரிமாண்ட் பண்ணும்போது, அவர் மீது இருக்கும் பழைய வழக்குகளின் விவரம் மற்றும் அதில் அவர் அடைந்திருக்கும் தண்டனை பற்றிய விவரங்களை போலீசார் நீதிமன்றத்தில் சட்டப்படி சொல்ல வேண்டுமா? விவரம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

நான் கவனித்த வரையில் அப்படி ஒரு சட்டரீதியான நிர்பந்தம் போலீசாருக்கு இல்லை என்றுதான் நினைக்கிறேன். தேவைபட்டால் மட்டுமே இவர்கள் இதை நீதிபதியிடம் சொல்லக்கூடும். ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர், புதிய குற்றத்தில் மீண்டும் மாட்டும்போது, அந்த நீதிபதிக்கு இது தெரிய வந்தால்தான் அவர் பெயில் மறுக்கமுடியும். அல்லது ஷ்யுரிடியை கடுமையாக்க முடியும். இங்கே போலீசார் மவுனமாக இருக்கும் பட்சத்தில் நீதிபதியை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.

நான்தான் அப்புசாமி

கடந்த பதிவில் பழைய கைதிகள் மனு வராமலேயே மனு ரூமுக்கு போவார்கள் என்றும் சொல்லி இருந்தேன். அதையும் பார்த்துவிடுவோம்.

கைதிகளை பார்க்க வருபவர்கள், கைதியின் பெயர், அவரின் அப்பா பெயர், கேஸ் விவரங்கள் போன்றவற்றை குறிப்பட்டு மனு எழுதித்தருவார்கள்.அந்த மனுக்களை, உள்ளே மனு படிக்கும் கைதிகள், `அப்புசாமி S /O குப்புசாமி` என்று ஒவ்வொரு பிளாக்குக்கும் சென்று சத்தம் போட்டு படிப்பார்கள்.

உள்ளே சில கைதிகள் இதை கவனிப்பார்கள். அது பழைய கைதி என்றால் தொடமாட்டார்கள். புதுக்கைதி என்றால் சுட்டுவிடுவார்கள். `நான்தான் அப்புசாமி` என்பார்கள். அல்லது `புது அட்மிஷன், அவன் என் `செல்`லதான் இருக்கான்` என்று சொல்லி வாங்கிக்கொள்வார்கள். அந்த மனுவில் இந்த கைதி மனு ரூமுக்கு போய்விடுவார்.

அந்த கைதியை பார்க்க வந்தவர்கள், ஆள் வரவில்லை என புகார் செய்தால், உள்ளே நடந்த உள்ளடி தெரியாமல் வெளியே இருக்கும் காவலர்கள் மறுபடியும் ஒரு மனு எழுத சொல்வார்கள்.

மனு ஹால்ட்டிகளுக்கு  இது தெரியும். அல்லது  நம்பிக்கையின் பேரில் அவர் கொடுக்க, புதுக்கைதியிடம் கொடுக்காமல் இவர்கள் கிளம்பிவிடுவார்கள். சிறைக்காவலர்களுக்கும் அதேநிலைதான் சிலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாது.

சிறையில் கைதிகளுக்கு கொடுக்கப்படும் ID கார்ட்களில் போட்டோ இருக்காது. அதுதான் இவர்களுக்கு வசதியாகிவிட்டது. ID கார்ட் கேட்டால், மறந்துவிட்டேன், செல்லில் இருக்கிறது என்று சமாளிப்பார்கள். அப்படியும் சிக்கல் என்றால், அந்த கைதியிடம் கார்டை வாங்கிவைத்துக் கொள்வார்கள். 

சரி, இவர்களுக்கு மனு ரூமில் என்ன வேலை? இவர்களை பார்க்கத்தான் யாரும் வரவில்லையே? காரணம் இருக்கிறது. வசதியான புதுக்கைதிகளுக்கு பணத்தை மனு ரூமில் வாங்கி பிளாகுக்கு எடுத்து வர தெரியாது. அவர்களுக்கு துணை தேவை. அதற்காகத்தான் இந்த வேலை. சில சமயம் பணம் வாங்காமல் மணி எக்சேஞ் மட்டும் நடக்கும். வெளியே பணம் கொடுக்கும் நபர் இவர்கள் கை காட்டும் நபருக்கு பணம் கொடுத்துவிட்டால். உள்ளே இருக்கும் இவர்களிடம் இருக்கும் பணம் அவர் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இங்கே கருப்பு பணம் வெள்ளையாகிவிடும். பணத்தை உள்ளே கொண்டுவர, திருப்பி அது வெளியே போக என இரண்டு வகையிலும் சேதாரம் இருப்பதால், இந்த முறையில் அது குறைந்த செலவில் முடிக்கப்படும். அதற்காகத்தான் இந்த தில்லுமுல்லு.

இதில் இன்னொரு வழியையும் பயன்படுத்துவார்கள். இன்று `வரவு` வரும் என்று தெரிந்தால், அந்த கைதியிடம் இவர்கள் சொல்லும் ஆளுக்கும் சேர்த்து மனு போட சொல்வார்கள். தன்னுடைய உறவினரை பார்க்க வந்த நபர் இப்படி சம்பந்தமில்லாத ஒரு கைதிக்கும் சேர்த்து ஒரு மனு போடுவார். அந்த வகையிலும் இவர்கள் மனு ரூமுக்கு போவார்கள்.

இவையெல்லாம் 2008, 09 கதை. இந்த மோசடி கவனத்துக்கு வந்த பிறகு, கைதியை பார்க்க வருபவர்கள் தங்களின் ID கார்டையும், கைதியின் அடையாளத்துக்கு அவர்களின் ID சான்றிதழ் என இரண்டும் எடுத்து வரவேண்டும் என மாற்றம் வந்தது. ஆனால் அஸ்திவாரத்திலேயே ஊழல் ஊறி இருக்கும் நிலையில், அது இப்போது வேறு வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறையில் எப்படியெல்லாம் பணம் மாறுகிறது...
தொடருங்கள்... (த.ம. 2)

Anonymous said...

Excellant writing. keep it up. expect news
congradulation
karunakaran

சிவானந்தம் said...

@திண்டுக்கல் தனபாலன்

வாங்க தனபாலன். உங்கள் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி.

@karunakaran

கருணாகரன், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

தொடர்ந்து இதையே எழுத எனக்கும் போரடிக்கும் படிக்க உங்களுக்கும் போரடிக்கலாம். எனவே அவ்வப்போது வரும்.

ராஜ நடராஜன் said...

வெளிப்படையான கருத்துக்களும்,விவாதங்களும் இந்திய சிறைகளின் தரத்தையும்,குற்றங்களை குறைக்கவும் கூடும்.

இன்னும் பின்னோக்கி செல்கிறேன்.

Post a Comment