!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, July 23, 2012

சிறை அனுபவம்: சில வி ஐ பி களுடன்...

முதலில் நான் இருந்த தொடர் குற்றவாளிகள் பிளாக்கில் பிரபலங்கள் வர வாய்ப்பில்லை. பத்திரிகையில் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டவர்கள் என்ற வகையில் பார்த்தால், சைக்கோ கொலையாளிகள் என்ற பெயரில் சென்னையை நடுங்க வைத்தவர்கள் இங்கே இருந்தார்கள். அந்த நான்கு பெரும் வேறு வேறு செல்/பிளாக் என பிரிக்கப்பட, ஒருவர் நான் இருந்த செல்லில் இருந்தார்.

இதற்கிடையில் நான் வந்த போது இருந்த பிளாக் ரைட்டர் தண்டனை பெற்று பக்கத்து ஜெயிலுக்கு போய்விட்டதால், அவருக்கு கீழே இருந்தவர்கள் அந்த பொறுப்பை ஏற்றார்கள். இவர்கள் வயதில் சிறியவர்கள் என்பதால் இங்கே  நான் சீனியர். கொஞ்சம் பழகிய பிறகு எல்லோரும் நண்பர்கள் ஆகிவிடுவோமே, அந்த தியரியும் எனக்கு சாதகமாக இருந்தது.  

அதுமட்டுமின்றி இன்னொரு முக்கிய விஷயம்தான் எனக்கு பாதுகாப்பாக இருந்தது. வழக்கமாக கைதிகள் வந்தால் விரைவில் பெயிலில் போய்விடுவார்கள். அல்லது கொஞ்சம் பயம் தெளிந்ததும் அவர்களுக்கு பிடித்த / தெரிந்த நபர்களுடன் ஐக்கியமாகிவிடுவார்கள். இதுதான் சிறை யதார்த்தம். நான் மட்டும் அப்படி இல்லை. பெயில் வேண்டாம் என்றும் மறுத்தேன், அந்த செல்லைவிட்டும் போகவில்லை.

மற்ற செல்களில்  ரவுடிக்கூட்டம் இருக்கும். அவர்களால் கஞ்சா அடிக்காமல் தூங்க முடியாது. இங்கே இரவு நேரங்களில் யாருக்காவது (எடுபிடி வேலை செய்பவர்களுக்கு) அடிவிழும்,  கஞ்சா புகை மண்டலமாகவும் இருக்கும். இதை ஜீரணித்து கொண்டுதான் இந்த செல்களில் தூங்க வேண்டும். அதற்கு நான் இருந்த செல்லே பரவாயில்லை என இருந்தேன்.

கொஞ்சம் நாளானவுடன் நான் கிச்சனுக்கு போய் படி எடுத்துவரும் சூபர்வைசர் வேலையையும் செய்ய ஆரம்பித்தேன். அதற்கும் காரணமிருந்தது. நான் காசு கொடுத்து வாங்கும் சப்பாத்தி, கிச்சனிலிருந்து வரவேண்டும். ஆரம்பத்தில் வாங்கிக் கொடுத்த நபர் போய்விட்டார். மற்றவர்கள் அந்த அளவுக்கு நம்பிக்கையாக இல்லை. சப்பாத்தி உருமாறி வரும். இவர்கள் மாற்றிவிடுவார்கள். எனவே தினம் கிச்சனுக்கு போக ஒரு காரணம் தேவைப்பட்டது. இந்த வேலை அதற்கு வசதியாக இருக்க, `எனக்கு போர் அடிக்குது, நான் போகிறேன்` என்று சொல்லி நானாக இந்த வேலையை செய்ய ஆரம்பித்தேன்.

இப்படி இடம் மாறாமல் நான் அவர்களுடனே இருந்தது மட்டுமில்லாமல், அவர்களுக்கு உதவியாய் கிச்சனுக்கு போனது பல வகைகளில் வசதியை கொடுத்தது. நான் கொடுக்க வேண்டிய மாமூல் நின்றுவிட, கைதிகளிடம் டோக்கன் வாங்கும்போது அதில் ஒரு பகுதியை எனக்கும் கொடுக்க முன்வந்தார்கள். மறுத்துவிட்டேன். `என்னிடம் எதுவும் கேட்காமலிருந்தால் போதும்` என்றேன்.

இதெல்லாம் அவர்களுக்கு புதுசு. எனவே எனக்கு ஜனாதிபதி போன்ற கவுரவமான போஸ்டிங் கொடுத்துவ்ட்டார்கள். இப்படி இருந்தபோதுதான் அந்த சைக்கோ கொலையாளிகள் வந்தார்கள். என் செல்லுக்கு வந்த அவர்களில் ஒருவர் அட்மிஷ்ன்களை கண்ட்ரோல் பண்ண, நான் ஒப்புக்கு சப்பாணியாக தலைமை பொறுப்பில் இருந்தேன்.

சைக்கோ கொலையாளிகள் என்றாலும் நார்மலாகத்தான் இருந்தார்கள். இரவு நேரங்களில் அந்த நபர் அவருடைய வீர பிரதாபங்களை சொல்வார். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், என் செல்லில் இருந்தவர் அப்பா / அக்கா செல்லம். கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்து குட்டிச்சுவராக்கி இருக்கிறார்கள். காய்கறி கடை என்று சொன்னதாக நினைவு. கடையில் கை வைக்க ஆரம்பித்த பிறகு, இவரை கடையில் உட்காரவிடுவதில்லை. அந்த வரவு நின்றுவிட, பழக்கத்தை கட்டுபடுத்த முடியவில்லை. வியாதி முற்றிவிட்டது. அது வழிபறியில் ஆரம்பித்து இதில் வந்து முடிந்திருக்கிறது.

கன்னட பிரசாத்

இவரைப்பற்றி பத்திரிக்கையில் தொடராக படித்திருக்கிறேன். தமிழக நடிகைகள் பலர் இவர் கட்டுபாட்டில் என்ற அளவுக்கு இவர் பேர் பெற்றிருந்தார். நான் இருந்த செல்லில் இவரும் 4அல்லது 6 மாதம் இருந்தார். குண்டர் சட்டம். இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக இருக்கும். அந்த செல்லில் 30 பேர் வரை இருந்ததால், அது பல குருப்பாக பிரிந்து இருக்கும். ஒருவருக்கொருவர் பேசாமலே இருக்கலாம்.

நானும் அதிகம் பேசுவதில்லை, நான் கவனித்த வகையில் அவரும் அந்த வகைதான். எனவே பேசும் வாய்ப்பு வரவில்லை. அவருக்கு மற்றும் அவர் குரூப்பில் இருப்பவர்களுக்கு வி ஐ பி சாப்பாடு வந்துவிடும் (மாதம் 4000. இது ஒரு தனிகதை.பிறகு பார்ப்போம்). நான் எனக்கு தேவையான அளவுக்கு சுமாராக பார்த்துக்கொள்வேன். மற்றவர்கள் தங்களுடைய தேவைக்காக வேலை/வியாபாரம் செய்வார்கள்.

இந்த செல்லில் இது எங்களுக்கு வசதியாக இருந்தது. வி ஐ பிக்கள் தனியாக ஸ்பெஷல் சாப்பாடு வாங்கிக் கொள்ள, மற்றவர்கள் கிச்சனுக்கு வேலைக்கு போக, அவர்களுடைய படியெல்லாம் எங்களுக்குத்தான். மற்ற பிளாக்கில் படிக்காக பலர் அடித்துக் கொள்ள, நாங்கள் மட்டுமே `வேண்டாம்` என்று குறைவாகவே வாங்குவோம்.

கன்னட பிரசாத்துடன் அவருடைய  கேஸ்காரர்களும்  இருந்தார்கள். அவர்கள் கலகலப் பேர்வழிகள் என்பதால் எப்பேர்பட்ட ஊமையையும் பேச வைத்துவிடுவார்கள். அந்த வகையில் அவர்களுடன்  பேசியதுண்டு. அதில் ஒருவர், `அந்தளவுக்கு இல்லன்னே... பத்திரிக்கையில அப்படித்தான் போடுவாங்க` என்றார்.

`நான் இப்பதான் வந்தேன். பழைய கதை எனக்கு தெரியாது` என்றும் சமாளித்தார். அவருக்கு வயது குறைவு என்பதால் அது உண்மையாகவும் இருக்கலாம். அதேசமயம் ஓரளவுக்கு மேல் நோண்ட முடியாது என்பதால் அதை பற்றி அதிகம் பேசுவதில்லை. மற்றபடி இந்த தொழிலில் உள்ள இடர்பாடுகள், வழக்கை இவர்கள் `முடிக்கும்` விதம், இதில் சந்தித்த அட்வெஞ்சர்கள் என்டர்டெயின் என  பல கிளை கதைகள் உண்டு. அது A ரகம். அதை விட்டுவிடுவோம்.

ஆனால் இவரா அந்த பெரும் புள்ளி என்று சந்தேகம் வரும் அளவுக்கு அமைதியானவராக இருந்தார்.

(நடிகை சினேகா புகழ்) ராகவேந்திரா

இவரும் புன்னைகை மன்னனாக இருந்தார். யார் எப்படி கிண்டல் செய்தாலும் அதை புன்னைகையோடு எதிர்கொண்டார். பேப்பரில் செய்தி வந்த மறுநாளே இவர் எங்கள் செல்லுக்கு அழைத்து வரப்பட்டார். இதற்காகவே சிலர் இருக்கிறார்கள். கைதிகள் அட்மிஷன் பிளாக்கில் இருக்கும் போது (மற்ற பிளாக்குக்கு பிரித்து அனுப்பும் முன்) வசதியான/ பிரபலமானவர்களிடம் பேசி, தேறும் தேறாது என கணக்கு போட்டு அழைத்து வந்துவிடுவார்கள்.

அப்போது கன்னடபிரசாத், `பல்லு` ராஜு குரூப்பினர் இருந்தார்கள். `உங்க வீட்டு போன் நம்பரை கொடுங்கள் `பேசுவோம்`` என எவ்வளவோ பேசியும் இவர் மசியவில்லை. மதியம் அவருக்கு அவர்களுடைய ஸ்பெஷல் சாப்பாட்டில் பங்கு கொடுத்தவர்கள், இரவு கடுப்பாகி கழட்டிவிட்டார்கள். இவர் ஏற்கனவே ஜெயிலுக்கு போயிருக்கனும் அல்லது வில்லங்கமான பார்ட்டியா இருக்கணும் என்றும் கமென்ட்.

எல்லா செல்லிலும் கைதிகள் உபரி போர்வை வைத்திருப்பார்கள். புதியவர்கள் வரும்போது அது ஆளை பொறுத்து அழுக்காக அல்லது நல்லதாக கொடுக்கப்படும். இவர் வழிக்கு வரவில்லை என்றதும் எல்லோரும் இவரை அம்போ என விட்டுவிட்டார்கள். படுக்க போர்வை இல்லாமல், ஒரு `ஓரமாக` இடம் ஒதுக்கப்பட, பார்பதற்கே பாவமாக இருந்தது.

கடைசியில் நமது இன்னொரு நண்பர் அவருடைய போர்வையை கொடுத்தார்.மறுநாள் அவரிடம் பேசினேன். எல்லாம் ஆயிரம் கோடிகள்தான். ஏதோ சொன்னார் (Financial Analyst என்று நினைவு). ஆனால் இவரை பார்க்கத்தான் யாரும் வரவில்லை. சில நாட்களுக்கு பிறகு இவரிடம் `தேறாது` என தெரிந்ததும், கழட்டிவிட்டார்கள்.

வேறு ஒரு பிளாக்குக்கு போய் மாட்டிக் கொண்டதாகவும், அங்கே அவரால் தாக்குபிடிக்க முடியாமல், வேறு ஒருவர் அவரை பாதுகாப்பான தொகுதிக்கு அழைத்துப்போனாராம். உள்ளே செய்திகளை சேகரிக்கும் நண்பர் சொன்னார். அதன் பிறகு அவருக்கு பெயில் கிடைத்த பிறகும் ஷ்யூரிட்டி இல்லாமல் கொஞ்சம் தாமதமாகவே போனார்.

ஜே பி ஜே ஜஸ்டின் தேவதாஸ்

ரியல் எஸ்டேட் பிசினசில் ஆயிரம் கோடிக்கு மேல் ஏமாற்றியதாக இவர் மீது புகார். வேறு பிளாக்கில் இருந்துவிட்டு இங்கே வந்தார். சாதாரணமானவர். வறுமையிலிருந்து மேலே வந்தவர்.

இவருடன் நான் பழகி இருக்கிறேன். லாக்கப்பிற்கு பிறகு பொழுது போக பேச்சு, விளையாட்டு என ஏதாவது செய்து நேரத்தை போக்குவோம். அந்த வகையில் இவருடன் நேரம் ஓடியது. அவர் அவர் கதையை சொல்ல, நானும் சொன்னேன்.

இங்கே நான் ஒன்றை சொல்ல வேண்டும். மனிதர்களை படிப்பது ஒரு கலை. சிலரின் சுயரூபம் விரைவில் வெளிப்படும். சிலரோ ரொம்ப ஆழமாக இருப்பார்கள். எனவே ஒருவரை பற்றிய அபிப்ராயத்தை சொல்வது சிக்கலான வேலை. இது என்னுடைய அனுமானம். அது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் போகலாம்.

பொதுவாக மோசடி பேர்வழிகள் என்றால் அதில் ஒரு விஷயம் உறுதி. சுருட்டிய பணத்தை இவர்கள் எங்காவது பதுக்கி இருப்பார்கள். இவருடன் பேசியதில் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. பணத்தை எங்கே பதுக்கி இருக்கிறேன் என்று யாரும் வெளியே சொல்லப் போவதில்லை. இருந்தாலும் ஒருவர் பேசும்விதம், பாடி லாங்குவேஜ் மூலம் அவர் பேசுவது பொய்/உண்மை என ஓரளவாவது கண்டுபிடிக்கலாம்.

ஆனால் இவர் பேசிய விதம் வேறு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தியது. ஷேர் மார்கெட் (ஹர்ஷத் மேத்தா) பூம் வந்தபோது, நீங்கள் எந்த ஷேரை வாங்கினாலும் அது ஏறும். அது உங்களின் திறமை இல்லை. நேரம் அப்படி இருந்தது.

இந்த ஷேர் மார்கெட் பூமில், சென்னையில் ஒருவர் சொந்த பணத்தை போட்டு காசு பார்த்திருக்கிறார். லாப சதவிகிதத்தை பார்த்தவர், பத்து வட்டிக்கு வாங்கி ஷேர்களில் போட்டாலும் அது லாபமாயிற்றே என்று கணக்கு போட்டவர், அதேபோல் பலரிடம் வாங்கி முதலீடு செய்ய, கதை கந்தலாகிவிட்டது.

இவரும் அப்படி செய்துவிட்டாரோ என சந்தேகம். நான் சொல்ல வருவது ஷேர் மார்கெட்டில் அல்ல. ஆரம்பத்தில் ரியல் எஸ்டேட் பூமில் இவரும் பணம் பார்த்திருக்கிறார். அது அளவுக்கதிகமான தன்னம்பிக்கையாக மாற, அகல கால் வைத்திருக்கலாம். இவர் செய்ததாக சொன்ன விளம்பர, நிர்வாக/கமிஷன்  செலவுகள் மலைக்க வைக்கும். இந்த அளவுக்கு செலவு செய்ய அதற்கு ஈடான வருமானம் வேண்டுமே? அது இல்லை. கடைசியில் வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்க, அந்த அட்டிகையை விற்று வட்டி கட்ட வேண்டிய கதை. நான் கணித்தது இதுதான்.

பேப்பரில் வந்தது போல் அவ்வளவு தொகை கிடையாது, குறைவுதான் என்றார். நான் மீண்டும் எழுந்து அவற்றை கொடுத்துவிடுவேன் என்றும் தன்னம்பிக்கையாக சொன்னார். இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. என்ன செய்தாரோ?


7 comments:

சேகர் said...

இங்கு இருக்கும் சிறைகளை விட வெளிநாடுகளில் இருக்கும் சிறையில் வசதிகள் அதிகம்.

ராஜ நடராஜன் said...

சிவா!நலமாக இருக்கிறீர்களா?பெரும்பாலும் முகப்பு பகுதியோடு போய் விடுவது வழக்கம்.மாறுதலாக இன்று சினிமா பக்கம் எட்டிப்பார்த்ததில் உங்கள் பதிவை காண நேர்ந்தது.

சாரு the making of bhoos: na mile hai… என இந்திப்படம் கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் (வாஸே?)பாடலைப் பற்றி சிலாகித்திருந்தார்.அப்பவே நம்மூர் சிறை கானாப்பாடல்களை சாரு கேட்டிருக்க வேண்டுமென தோன்றியது.

சாருவுக்கு அவரது தொண்டரடிப்பொடியர்கள் இந்த பதிவை சிபாரிசு செய்யட்டும்.

உங்கள் பதிவிலிருந்து குற்றம் செய்பவர்களை மூன்று விதமாக காண முடிகிறது.ஒன்று தேவையின் கருதி சிறு தவறுகளை செய்து தொடர்கதையாகிப்போவது.இன்னுமொரு விதம் ஷேர் மார்க்கெட்,பினான்ஸ் கம்பெனிகளில் பணம் முதலீடு செய்து அகல கால் விரித்து மீள முடியாமல் போவோர்கள்.மூன்றாவதாக பெண் என்ற வலையத்துக்குள் மாட்டிக்கொள்பவர்கள்.

இன்னும் சொல்லியிருக்கிறீர்கள் போல தெரியுதே!பின்னோக்கி செல்கிறேன்.

வவ்வால் said...

சிவானந்தம்,

அனுபவத்தின் மூலம் எழுதுவது உண்மையை காட்டுகிறது.

சினிமா சிறைச்சாலைகள் காமெடியாகவே காட்டப்படும்.

ஜெ.பி.ஜே ரியல் எஸ்டேட் ஆள் நிறைய ஏமாற்றி தான் இருக்கார், எவன் உண்மையை ஒத்துப்பான். எங்கள் உறவினரே பணம் கட்டி ஏமாந்து இருக்கார், கடைசி வரையில் ரிஜிஸ்டரே செய்து தரவில்லை.

அவர் பெரும்பாலும் லே அவுட்களை சொந்தமாக போட மாட்டார், ஏற்கனவே போட்டவர்களிடம் ஒப்பந்தம் போட்டு பெரிதாக இவர் பெயரில் விளம்பரம் செய்து விற்பார். அவர் மாட்டியதற்கு காரணம் நில உரிமையாளருக்கும் பணம் தரவில்லை, வாங்கியவர்களுக்கும் நிலம் பதிவு செய்து தரவில்லை.

அனைவரிடமும் வாங்கிய பணம் என்னாச்சு என்றும் தெரியவில்லை. மேலும் புறம்போக்கு இடத்தினை எல்லாம் போலி ஆவணம் செய்து விற்று இருக்கிறார். நெய்வேலியில் இவரிடம் ஏமாந்தவர்கள் அதிகம்.ஒரே பிளாட்டை பல பேரிடம் காட்டி அட்வான்ஸ் ஆக நிறைய பணம் பார்த்து இருக்கிறார்.

NLc இல் வேலை செய்பவர்கள் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுப்பாருங்கள் சொல்வார்கள்.

அவர் நடிகைகளோடு மஜா செய்தே நிறைய பணம் காலி செய்துவிட்டதாக கேள்வி.

சிவானந்தம் said...

சேகர் said...

///இங்கு இருக்கும் சிறைகளை விட வெளிநாடுகளில் இருக்கும் சிறையில் வசதிகள் அதிகம்.//

நிஜம்தான். அங்கே அது சட்டபூர்வமாக கிடைக்கிறது. இங்கே கிடைக்காததால் அது சட்டவிரோதமாகி விடுகிறது. மிக அத்தியாவசியமான போனை கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். வருமானம் போய்விடும் என்று கவலை.
****************************
வாங்க நடராஜன் சார். சினிமான்னு ஒரு லேபிள் வச்சாதான் படம் இங்கே ஓடுது.

///சாரு the making of bhoos: na mile hai… என இந்திப்படம் கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் (வாஸே?)பாடலைப் பற்றி சிலாகித்திருந்தார்.அப்பவே நம்மூர் சிறை கானாப்பாடல்களை சாரு கேட்டிருக்க வேண்டுமென தோன்றியது.///

சிறையில் அவர்களுக்கு என்டர்டைன்மென்ட் கானா பாட்டுதான். ஆனால் அந்த கானா பாட்டை ரசிக்க முடியாதபடி கஞ்சா புகை சூழ்ந்திருக்கும். இவர்களுக்கு அது உள்ளே போனால்தான் சுதியே வரும். நமக்கோ மயக்கம் வரும்.

.வவ்வால் said...

வாங்க வவ்வால்,

இப்பதான் உங்க பதிவை பாதிவரைக்கும் படிக்க (ரொம்ப நீளம்), இங்கே உங்களின் பின்னோட்டம்.

///ஜெ.பி.ஜே ரியல் எஸ்டேட் ஆள் நிறைய ஏமாற்றி தான் இருக்கார், எவன் உண்மையை ஒத்துப்பான். எங்கள் உறவினரே பணம் கட்டி ஏமாந்து இருக்கார், கடைசி வரையில் ரிஜிஸ்டரே செய்து தரவில்லை.///

இது உண்மைதான். அதில் எனக்கு சந்தேகமில்லை. சுருட்டிய பணத்தை எங்காவது பதுக்கி இருந்தால், அவர்கள் அக்மார்க் பிராட். ஆனால் பலரை ஏமாற்றி இருக்க, இவரிடமும் பணம் இல்லை என்றால் இப்படிபட்டவர்களை என்ன சொல்வது?

இவர் பல மாதம் கையில் கட்டோடுதான் இருந்தார். இப்படிப்பட்டவர்கள் ரொம்ப தாங்கமாட்டர்கள். போலீசாரின் `கவனிப்பில்` அது வந்திருக்கும். அந்த வகையில் அதை கைப்பற்ற பேரமும் நடந்திருக்கும்.

அது இல்லாத பட்சத்தில் இவர் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ததாகத்தான் தெரிகிறது. அது அனாவசிய ஆடம்பர நிர்வாக செலவா அல்லது வேறு ஏதாவதா? போலீசார்தான் சொல்லவேண்டும்.

ஜோதிஜி திருப்பூர் said...

ரொம்ப நாளாக இது போன்ற அனுபவ பகிர்வுகளை எதிர்பார்த்து காத்திருந்தேன். வவ்வால் சொன்னது போல அனுபவ வார்த்தைகளில் பொய் இருக்காது என்பதை இந்த பதிவு சொல்கின்றது.

சிவானந்தம் said...

வாங்க ஜோதிஜி,

இந்த பதிவுகளை எப்போதோ எழுதி டிராப்ட்டில் இருந்தது. முதலில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்மீது ஒரு நம்பகத்தன்மை வந்தபிறகு போடுவோம் என தள்ளி வைத்தேன்.

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல கட்டுரை


நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment