!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Sunday, September 2, 2012

சிறை அனுபவம்: இப்படியெல்லாம் நாங்கள் பேப்பர் படித்தோம்

சிறைக்கு சென்றபின் முதல் முறையாக இது கஷ்டம் என நான் உணர்ந்தது பேப்பர் படிக்கும் விஷயத்தில்தான். வெளியே இருந்தபோது நான் படிக்கும் நேரம்தான் அதிகம். மினி லைப்ரரி வைத்திருந்ததால், தினம் சில வாரஇதழ்கள் வந்துவிடும். அதை சர்குலஷன் விடும்முன் நான் முதலில் மேய்ந்துவிடுவேன். வியாபாரம் அப்புறம்தான். (பெரும்பாலும் வியாபாரத்தை கவனிப்பது ஊழியர்கள்தான்.) 

அந்த வேலை முடிந்ததும் மதியம் இணையத்தில் உலக பத்திரிகைகளை மேய்வேன். இரவு அரைமணி நேரம் ஆங்கில நாவலுக்காக.. நாவல் மோகம் கிடையாது. தொடர்ந்து படித்தால் ஆங்கிலம் வசப்பட்டுவிடும் என்பதால் அதையும் விடுவதில்லை. இப்படி தினம் பல மணி நேரம் படித்தே பழகிய நான், சிறையில் இந்த ஒரு விஷயத்தில்தான் நொந்துபோனேன்.

சிறைக்கு சென்ற முதல் சில வாரங்கள் ஒன்றுமே புரியவில்லை. எல்லா பிளாக்குக்கும் சிறை நிர்வாகமே ஒரு தினசரியை வழங்குவதும் தெரியாது, சிறையில் லைப்ரரி இருப்பதும் தெரியாது.

லைப்ரரி இருப்பது தெரிந்த பிறகு அது எனக்கு சந்தோசம் அளித்தாலும், அங்கே போக காவலர்கள் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. பிளாக்குக்கே தினத்தந்தி வந்தாலும், அது பழைய கைதிகளின் வசம்தான் முதலில் போகும். அங்கே அவர்களின் தகுதிக்கேற்ப சுத்தும். நிச்சயம் நமக்கு, அதாவது புதுக்கைதிகளுக்கு கிடைக்காது.

அதிலும் சிறையில் இன்றைய பேப்பரை கொடுத்தவுடன் நேற்றைய பேப்பரை திருப்பி கொடுத்துவிட வேண்டும். எனவே பழைய பேப்பரும் கிடைக்காது. இதுதான் சிறையில் (முதலில்) நான் பட்ட கஷ்டம்.

பிளாக்குக்கு வரும் பேப்பர் ப்ரோட்டோகால்படி மிகப்பெரிய ரவுடிக்கு முதலிலும் அதன் பிறகு மற்ற செல்லுக்கும் போகும். இதில் ஒருவருக்கு இந்த ப்ரோட்டோகாலினால் ஈகோ கிளாஷ் ஏற்பட, அவர் பிளாக் ரைட்டரிடம் சண்டைக்கு வந்துவிட்டார். `அவன் என்ன பெரிய பருப்பா?அவன் படிச்ச பிறகுதான் நாங்க படிக்கனுமா? இனிமே பேப்பர் வந்ததும் கட்டி தொங்கவிட்டுருங்க, எல்லாரும் படிக்கட்டும்` என்றார்.

இரண்டு ரவுடிகளுக்குள் சண்டை என்றால் பிளாக் ரைட்டர் என்ன செய்வார். எதுக்கு தலைவலி என்று பேப்பர் தொங்கவிடப்பட்டது. கைலியை கிழித்து முறுக்கி நூலாக்கி அதில் கொடிகட்டி, பேப்பரை குச்சியால் குத்தி துணி காயவிடுவதைப் போல் தொங்கவிட்டார்கள்.

அப்படியெல்லாம் நான் பேப்பர் படித்தேன். இந்த கூத்தும் ஒரு வாரம்தான். அதன்பிறகு அவர்கள் சமாதானமாகிவிட அதுவும் நின்று போனது.

இந்த சமயத்தில் ஒரு நண்பரிடம், (படிக்கும் விஷயத்தில்) `எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்` என்று புலம்ப... அவர், `நீங்க உங்க அக்கௌண்ட்லயே பேப்பர் வாங்கலாமே` என்றார்.

மணியார்டர் 

சிறையில் இருப்பவர்களுக்கு வெளியே இருந்து மணியார்டர் அனுப்பலாம். அது உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதில் நீங்கள் வாரம் 75 ரூபாய்க்கு உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளலாம். (இந்த ரூ. 75 நான் போகும்போது இருந்த லிமிட். பின்னர் அது 225 ஆக மாறிவிட்டது.)

இந்த நடைமுறை தெரிந்ததும் நான் என் அக்கௌன்ட்டுக்கு பணம் வரவழைத்துக் கொண்டேன். லிமிட் குறைவு என்பதால், பிஸ்கட் மட்டும் வாங்குவேன். இந்த பணத்தில்தான் நாம் பேப்பர் வாங்கிக் கொள்ளலாம். அதுவும் இதற்கான பணம் அந்த வாராந்திர லிமிட்டில் வராது என்றார்.

இது தெரிந்ததும்  உடனடியாக, `பேப்பர் வேண்டும்` என பெட்டிஷன் கொடுத்தேன். ஆனால் அதற்குள் அனுபவம் எனக்கு சில பாடங்களைசொல்லிவிட, உஷாராக இந்தியன் எக்ஸ்பிரஸ் வாங்கினேன்.
 
இதற்கு செல்லில் இருந்த ஒரு நபர் கோபித்துக் கொண்டார். தமிழ் பேப்பர் வாங்கினால் எல்லோரும் படிக்கலாமே என்றார். நியாயமான ஆலோசனைதான். ஆனால் ஜெயிலுக்கு பொருந்தாது. 

தமிழ் பேப்பர் அங்கே படும் அவஸ்த்தையை பார்த்தபிறகு நான் அந்த தவறை செய்வேனா?சரி மற்றவர்களுக்காக இருக்கட்டும் என ஆனந்த் விகடனும் வாங்கினேன். படிக்கவே முடியவில்லை.

படம் மட்டும் பார்த்துட்டு தர்றேன் என்பார் ஒருவர். அங்கே எல்லோரும் படம் மட்டும் பார்க்கவே ஒரு வாரம் ஆகும். இரவு லாக்கப்புக்கு முன் யாராவது ஒருவர் படிக்க கேட்பார். இவருக்கு கொடுத்த பின் இன்னொருவர் வருவார். `இல்லை` என்றால் இவருக்கு கோவம் வரும். `அவன்தான் உங்களுக்கு முக்கியமா?` என்று கேட்பார்.இது பெரிய தலைவலியில் போய் முடிந்தது.

இங்கே பேப்பர் படிப்பது என்பது பிச்சைக்காரர்கள் மத்தியில் நீங்கள் மட்டும் பிரியாணி சாப்பிடுவது போலத்தான். அதைவிட நீங்கள் பட்டினி கிடப்பதே மேல். இது புரிந்தவுடம் அதையும் நிறுத்திவிட்டேன். 

இங்கிலீஷ் பேப்பர் வாங்கியதில் இந்த தொந்தரவு  இல்லை. யாரும் சீண்டுவதில்லை. காலை, மாலை, இரவு என நினைத்தபோது படிக்கலாம். அதன்பிறகு வேறு பிளாக் மாறிய பிறகு அங்கே பேப்பருக்கு பஞ்சமில்லை.

அகமதாபாத்

இங்கே அகமதாபாத் வந்த முதல் வாரம் எனக்கு சிறை அனுபவம்தான் ஞாபகத்துக்கு வந்தது. பேப்பர், புக் என எதுவும் கிடைக்கவில்லை. என்னதான் டிவியில் செய்தி கேட்டாலும் தினம் காலையில் பேப்பர் படிக்கும் சுகம் அதில் வருமா?

இங்கே சிறு வயதில் நான் இருந்திருக்கிறேன். அப்போது தமிழ் லைப்ரரியே இருந்தது. டிவிக்களின் தாக்கத்தில் அது காணாமல் போய்விட்டது. புக் எங்கே கிடைக்கும் என விசாரித்தால், கோயிலுக்கு போனால் கிடைக்கும் என்றார் ஒருவர். பதிலே வித்தியாசமாய் இருந்தது.

நான் கோவிலுக்கு போவதில்லை. இருந்தாலும் புத்தகம் கிடைக்கும் என்றால் நான் நரகத்துக்கும் போவேன். இங்கே அட்கேஷ்வர் என்ற ஏரியாவில் முருகர் கோவில் இருக்கிறது. அங்கே கோவிலில் புக்கும் விற்கிறார்கள். அங்கே அந்த  புத்தகக் கடையை பார்த்தவுடன் என் கண்ணில் ரத்தம் வராத குறை. ஆன்மீகம் மற்றும் ஜோசிய புத்தகங்களுடன்  சில வாரஇதழ்கள் அனாதையாய் கிடந்தன. அதில் ஏற்கனவே டிரைனில் எனக்கு கோவத்தை உண்டு பண்ணிய குமுதமும் அடக்கம். அது இன்னும்  இங்கே விற்பனைக்கு.

அதன்பிறகு இன்னொரு கடையில் கிடைக்கும் என தெரிய வர, அங்கே போனபிறகுதான் பாதி உயிர் வந்தது. இதுவும் புத்தகக்கடை கிடையாது. மளிகை கடை. ஆனால் இது பரவாயில்லை.

இங்கே ஜூவி வாங்கப்போனால், அவர் இரண்டு புத்தகம் எடுத்துக் கொடுத்தார். ஒருவேளை ஜூவியும் இணைப்பு கொடுக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் அதற்கும் அவர் காசு எடுக்க, அப்போதுதான் தெரிந்தது அது முந்தைய இதழ் என்று.

புக் வெளியாகி 3 நாளில் இங்கே வருமாம். சிலசமயம் பார்சல் மிஸ் ஆனால் இரண்டு இதழ்களும் ஒன்றாக வருமாம். அப்படி இந்த இரண்டு ஜூவியும் இன்றுதான் வந்தது என்றார்.

கணக்குப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் புது ஜூவி வந்துவிட்டிருக்கும். ஆனால் இங்கே நான், அதற்கு முந்தைய இரண்டு இதழ்களை அப்போதுதான் வாங்குகிறேன். பட்டினி கிடப்பவனுக்கு பழைய சோறும் பஞ்சாமிர்தம்தானே.அந்த கடைக்காரர் என்னை ஏமாற்றவில்லை, இதுதான் இங்கே யதார்த்தம் என்ற வகையில் திருப்தி.

மனுஷன் இருப்பானா இந்த ஊர்ல

ஒரு காலத்தில் சைக்கிளில் சுற்றிய ஊர் என்பதால், நானும் மலரும் நினைவுகளோடு பல இடங்களை பார்த்தேன். மருந்துக்கு கூட புததக்கடை கிடையாது. தமிழ் என்றில்லை குஜராத்தி, இந்தி என எதற்கும் கிடையாது.

தக்காளி விற்பதைபோல், தள்ளுவண்டியில் வைத்துதான் பேப்பர் விற்கப்படுகிறது. அதுவும் அபூர்வமாக. கடையும் 9 மணிக்கெல்லாம் க்ளோஸ்.

குஜராத் பொருளாதாரரீதியாக முன்னேறிய மாநிலம் என்ற நிலையில் இது என்னை ஆச்சர்யப்படுத்தியது. இணையத்தில் தகவலை தேடினால், இந்த மாநிலம் தமிழகத்தை விட கல்வி அறிவில் இன்னும் பின்தங்கி இருக்கிறது. அதுவும் கடந்த பத்தாண்டில் இந்த மாநிலம் அபிரிதமான வளர்ச்சி கண்ட பிறகும் இந்த நிலை.

தமிழகத்தில் கல்வி அறிவும் அதிகம், பேப்பர்/புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் மிக அதிகம். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் சில வினோதமான தியரிகள் வரும்.

தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது. இதில் நல்ல (கொள்ளை)  லாபம் என்பதால் அரசியல்வாதிகள் மானாவாரியாக கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள். இவர்களே ஆரம்பித்தும் காசு பார்க்கிறார்கள்.

இங்கே ஒரு யதார்த்தம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. ஒரு பொருள் இலவசமாக/விலை குறைவாக கிடைத்தால் அதை நாம் மதிப்போமா? அதுவே காஸ்ட்லியாக இருந்தால்? அப்போது அதை அடைவது பிரஸ்டீஜ் ஆக மாறிவிடும். எல்லோரும் மொய்ப்போம். தமிழகத்தில் அதுதான் நடந்திருக்கும். 

பிள்ளைகளுக்கு அறிவை கொடுக்கத்தான் கல்வி என்ற நிலை போய், அது அவனுக்கு வேலையை கொடுக்கும், நமக்கு பெருமையை கொடுக்கும் என்ற அளவில் அது தமிழகத்தில் தேடப்படுகிறது. நோக்கம் எதுவாக இருந்தாலும் முடிவு நன்மை. சந்தோஷப்படுவோம்.

ஒருவேளை கல்விக்கட்டணம் குறைவாக இருந்திருந்தால் மக்கள் இந்த அளவுக்கு அதை மொய்பார்களா என்பதும் சந்தேகமே. அதாவது கெட்டதிலும் ஒரு நல்லது என்று சொல்வார்களே அது இதுதானா! 

தமிழன் அதிகம் புத்தகம் படிக்க ஆரம்பிக்க இன்னொரு யதார்த்தமும் இருக்கலாம். நடிக நடிகையர்கள் மீது மக்களுக்கு ஈர்ப்பு அதிகம். அப்படிப்பட்ட நடிகர்களே அரசியலுக்கு வந்ததால், மக்களும் அவர்களை பின் தொடர்ந்து அரசியலை படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்கு அடுத்தபடியாக தமிழனுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டியவை ஊழல்களாக இருக்கலாம். தொடர்ந்து நடந்துவரும் ஊழல்களாலும், பத்திரிகைகள் அதை பரபரப்பாக மார்கெட்டிங் செய்வதாலும், பத்திரிகைகள் படிக்கும் ஆர்வம்  தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கலாம்.

கல்வி வியாபாரமாகிவிட்டதும், ஊழல் அதிகரித்திருப்பதும் மோசமான நிகழ்வுகள் என்றாலும், அதன் காரணமாக மக்கள் கல்வியை பெற முயற்சிப்பதும், பத்திரிகை படிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதும் ஒரு ஆரோக்கியமான தமிழ் நாட்டுக்கு அஸ்திவாரமாக மாறும் என நம்புவோம்.


8 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,

நல்ல அனுபவப்பகிர்வு, புது இடத்தில் புத்தகம் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்படுறிங்க போல.

சரி இணையம் எப்படி ? நெட் வாங்கிட்டிங்கள?

மொபைல் மூலம் வாசிக்கலாம்.வீட்டில் கணினி, மொபைல் இருக்குமானால் குறைவான செலவில் இணையம் பயன்ப்படுத்தலாம்,பிராட்பேண்க்கு எல்லாம் அதிகம் செலவு செய்யாதீர்கள்.

எனக்கு இணைய செலவு மாதம் 100 மட்டுமே.எந்த சிம்மில் ஆஃபர், கவரேஜ் நல்லா இருக்கோ அதுக்கு உடனே மாறிவிடுவேன் :-))

குட்டிபிசாசு said...

அனுபவப் பகிர்வுக்கு நன்றி!

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

இங்கே தம்பியின் லேப்டாப்பில் ஓடுகிறது. நானும் இணையத்துக்காக மொபைல் சிம்தான் பயன்படுத்துகிறேன். தற்போது பயன்படுத்துவது டோகோமோ. செலவும் கம்மிதான்,வேகமாகவும் இருக்கிறது.

இணையத்தில் தகவல் உடனடியாக கிடைத்தாலும் பழக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட பேப்பர்/புத்தகங்களை விடமுடியாத குறைதான். அவர்களை திட்டிக்கொண்டே படிப்பதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது.
-----------------
வாங்க குட்டி பிசாசு,

கருத்துக்கு நன்றி

rajan said...

Sir, When u free pls write about your experience in Share market Trading.

சிவானந்தம் said...

ஷேர் மார்கெட் ஷேர்கள் விலை ஏறும் (ஏற்றும்) விதம் அடிக்கடி மாறும் என்பதால் என்னுடைய அனுபவங்கள் வெறும் அனுபவமாகவே இருக்கும். தற்போதைய வெற்றிக்கு உதவாது. எனவே எனக்கு அதில் ஆர்வம் இல்லை.

இன்னொரு காரணம், நானே அதில் ஜெயிக்காமல் மற்றவர்களுக்கு என்ன உபதேசம் செய்வது? இருந்தாலும் அதிலும் தோல்விக்கான காரணம் இருக்கலாம். அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கலாம். ஏற்கனவே சில எழுதி இருக்கிறேன். நேரம் இருந்தால் பார்ப்போம்.

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் அனுபவ பதிவுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ராஜ நடராஜன் said...

சிவானந்தம்! தட்டச்சுக்கு இடையில் கூகிள் குதிரைப்பாய்ச்சல் செய்து விட்டதால் விட்டதிலிருந்து தொடர முடியவில்லை.

முதல் முறையாக உங்கள் பெயர் அறிமுகமாகும் போதும் மறு விவாதம் செய்யும் போதும் கூட உங்கள் சிறைவாசம் பற்றி அறிய முடிந்தது.தொடர் வாசிப்பிலும் கூட இது வரையிலும் நீங்கள் எந்த விதமான குற்றத்தில் சிறை சென்றீர்கள் என தெரியல.ஏதோ உல்லாச பயணம் போவது போல் சிறை அனுபவம் எப்படியிருக்குமென்று போவது மாதிரி ஒரு முறை குறிப்பிட்டது மட்டுமே நினைவில் உள்ளது.

உலகளாவிய அளவில் மக்கள் போராட்டங்களில் முதல் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுபவர்கள் காவல்துறையென்றே ஊடக ஆய்வுகள் சொல்வதை நேற்றைய கூடங்குளம் போராட்டம் வரையிலும் மெய்ப்பிக்கின்றன.

இதில் சிறைக்கூடமும் சேர்த்தியா என்பது விவாதத்திற்குரியது.

Anonymous said...

sir where are you now at

Post a Comment