!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Friday, January 4, 2013

பதிவு எழுதுவதால் வந்த தலைவலி


பக்க விளைவுகள். சமீபகாலமாக நான் அதிகம் கவலைப்படுவது இதைப் பற்றித்தான். ஏதாவது ஒரு செயலில் நாம் இறங்கி அதில் தோற்றுப்போய் தலை முழுகினாலும், விட்ட குறை தொட்ட குறை என சில விஷயங்களாய் அது நம்மை தொடரும். தற்போது எனக்கு வந்திருக்கும் தலைவலிகள் அந்த வகை. 

ஷேர் மார்கெட் 

ஆரம்பகாலத்தில் ஷேர்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தபோது பல உபதேசங்கள் கிடைத்தது. `ஏதாவது இடத்தை வாங்கிப் போடுங்க, பின்னால நல்ல விலை போகும்` என்பது அதில் ஓன்று.

ஆனால் அப்போது நான் ஷேர் மார்க்கெட்டில் ருசி கண்டுவிட்டேன். அந்த சமயம் square d software என்ற ஷேர் புது வெளியீடாக வந்தது. நான் 300௦௦ ஷேர் விண்ணப்பிக்க 300ம் கிடைத்து.

10 முகமதிப்பில் கிடைத்த ஷேரை, லிஸ்ட் ஆனவுடன் 25 ரூபாய்க்கு விற்றேன். முதலீடு 3000, லாபம் 4500.௦௦ எல்லாம் மூன்றே மாதத்தில். எனக்கு இந்த சிஸ்டம் பிடித்திருந்தது. இப்படி ஒரு சிஸ்டம்  இருக்கும்போது யாராவது நிலத்தில் பணத்தை போடுவார்களா? எனக்கு உபதேசம் செய்தவரை பார்த்து சிரித்தேன். விதி என்னை பார்த்து சிரித்தது.

அதன் பிறகு கண்டமேனிக்கு புது வெளியீடுகளில் விண்ணப்பிக்க, கடைசியில் வந்தது பத்து, போனது நூறு என்ற கதையாக மாறியது. அந்தசமயம் புற்றீசல்களாக பல வெளியீடுகள் வந்து எல்லாம் காணாமல் போயின.

அந்தநேரம் என் முதலீட்டை நிலங்களில் செய்திருந்தால், இந்நேரம் என் சொத்து மதிப்பும் கோடிகளை தொட்டிருக்கலாம். நானும் இங்கு புலம்ப வேண்டிய அவசியம் வந்திருக்காது. (ஷேர்  மார்கெட்டும் நல்ல ரிடர்ன்தான். எனக்குதான் கைகூடவில்லை)  

சரி பாஸ்ட் இஸ் பாஸ்ட். இனி பிரச்சினைக்கு வருவோம்.

புது வெளியீடுகள் காலை வார, அதன் பிறகு நேரடி முதலீட்டில் இறங்கினேன். அப்புறம் பிரச்சினைகள், சபதங்கள் என இலக்குகள் மாற, ஒரு வாரத்தில் கோடீஸ்வரனாக வேண்டும் என்ற துடிப்போடு, இன்டிராடேவில் இறங்கினேன்.

இங்கே ஒருநாள் லாபம் வரும். அப்போது நான் நினைப்பேன். எப்படியும் கூடிய சீக்கிரம் நாம் கோடீஸ்வரனாகப் போகிறோம். அப்புறம் ஏன் நாம் சிக்கனமாக இருக்கணும்? உடம்பை தேத்துவோம் என்று முடிவெடுப்பேன். அன்று ஓட்டல்தான். சிக்கன், மட்டன் என விளையாடும்.

மறுநாள் சில ஆயிரம் இழந்திருப்பேன். இப்போதும் நான் நினைப்பேன். எப்படியும் நாம் ஷேர் மார்கெட்ல பணத்தை அழிக்கத்தான் போறோம். அப்புறம் எதுக்கு சிக்கனமா இருக்கணும். சாப்பிட்டு உடம்பை தேத்துவோம் அப்படின்னு முடிவு பண்ணுவேன். இப்பவும் சிக்கன், மட்டன் விளையாடும்.

இப்படி எது நடந்தாலும் விருந்து சாப்பிட்டு பழகிய கை இப்ப அடங்க மாட்டேங்குது. இதுதான் விட்ட குறை தொட்ட குறையாய் ஷேர் மார்கெட் எனக்கு கொடுத்த தலைவலி. 

பதிவுகள்

மேலே சொன்னதையாவது ஓரளவு சமாளிக்கலாம். பதிவுகளால் வந்த தலைவலி இன்னும் மோசம்.

பதிவுகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஆரம்பத்தில் இல்லை. அரசியல் ஆசை வந்தது, அதுக்கு நிறைய பேசணுமே என்ற கேள்வியும் வந்தது. எனக்கு அது சிரமம் என்பதால், எழுத்துக்கள் மூலமா கருத்து சொல்வதுதான் சரின்னு இந்த வேலையை ஆரம்பிச்சேன்.

அரசியல் ஆர்வம் நிறைய படிக்கத் தூண்டியது. பிரச்சினைகளும் என்னை புத்தகப் புழுவாக மாற்றியது. நானும் வஞ்சனை இல்லாமல் படித்தேன்.

இப்படி படிக்க ஆரம்பித்த பிறகு கொஞ்சம் தடுமாற்றம் வந்தது. அதிலும் கருத்து கந்தசாமியாக எல்லாரையும் குறை சொல்லி பதிவுகள் போட்ட பிறகு, சாராசரி மனிதனாக வாழ்வது ரொம்பவே சிரமமாகிவிட்டது.

லஞ்சம் 

சிறையிலிருந்து விடுதலை ஆகி சென்னையில் இருந்தேன். இந்த பதிவை ஆரம்பித்து ஒரு வருடம் இருக்கும். ஒரு முறை நண்பனோடு தி.நகர் போனேன். அங்கே பாலத்துக்கு கீழே வண்டியை பார்க் செய்துவிட்டு கடைக்கு போனோம். திரும்பி வந்தால் வண்டி இல்லை. அது நோ பார்கிங். ஏகப்பட்ட வண்டி அங்கே இருந்ததால், கவனிக்காமல் பார்க் செய்துவிட்டோம்.

அது உறவினர் வண்டி. அவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னால், `வண்டி பார்க்கிட்ட வச்சிருப்பாங்க. 100௦௦ கேப்பாங்க. கொடுத்திருங்க` என்றார். அவர் சாதாரணமாக சொல்லிவிட்டார். எனக்கு பகீரென்றது. நான் லஞ்சம் கொடுக்க வேண்டும். அதுதான் அவர் சொன்னது.

சராசரி மனிதனாக நானும் அதை செய்திருப்பேன். சின்ன சின்ன தவறுகள், இதெல்லாம் பிராடு இல்லை என்று சமாளிக்கக் கூடிய தவறுகளை நிறைய நான் செய்திருக்கலாம். ஒருகாலத்தில் அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை.

இப்போது பதிவுகள் எழுத் ஆரம்பித்த பிறகு, நான் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது எனக்கு ரொம்பவே சங்கடமாகிவிட்டது.

அதேசமயம் நீங்க சட்டபடி பைன் போடுங்கன்னு சொல்ற நிலைமையும் இல்லை. பொருளாதாராரீதியாக நான் தடுமாற்றத்தில். எனவே எல்லாவகையிலும் செலவை குறைக்கவேண்டும்.

இன்னொரு தலைவலியும் உண்டு. ஊரோடு ஒத்து வாழவேண்டும். நாம் வித்தியாசமாக இருந்தால் மற்றவர்களின் ஏளனப் பார்வையை சந்திக்கவேண்டி இருக்கும்.

ஒருமுறை காந்தியின் சுயசரிதை படித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயம் ஓட்டலுக்கு போய் சாப்பிட்டவன், பில் கொடுக்க மறந்துவிட்டேன். மறுநாள் என் சட்டையில் அந்த பில்லை பார்த்ததும்தான் ஞாபகத்துக்கு வந்தது. நானும் காந்தியின் பாதிப்பில் இருந்தேன். மறுநாள், `நேத்து பில் கொடுக்க மறந்து விட்டேன்` என்று சொல்லி அந்த பணத்தை கொடுக்க, அவர் என்னை பார்த்தவிதம் என்னை சங்கடப்படுத்தியது. அடுத்த முறை பில் கொடுக்க மறந்தால் எங்காவது உண்டியலில் போடவேண்டும் என்று முடிவு செய்தேன்.

அதேதான் இங்கேயும் நடக்கும். நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் அது என் மனசாட்சிக்கு திருப்தியாக இருக்குமே தவிர, கீழ்மட்டத்தில் பலருடைய ஏளன பார்வை சந்திக்க வேண்டி இருக்கும்.

அதுவும் சாதித்து முடித்தவர்கள் அப்படி செய்யலாம். நான் அப்படி சொன்னால் `நல்லவனாக இருந்து என்ன சாதிச்சே?` என்று பலர் கேட்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி சமாளிப்பதற்கு பதில், நான் லஞ்சமே கொடுத்துவிடலாம்.

இருந்தாலும் அப்படி ஒரு சங்கடம் எனக்கு நேரவில்லை. எனக்கு வேறு வழி இருந்தது. மன்மோகன்சிங் வழி. அதாவது என கைகள் சுத்தமாக இருக்கும். ஆனால் கூட்டாளிகள் தப்பு செய்தால் கண்டுகொள்ளக் கூடாது என்ற அவரின் கொள்கைக்கு உடன்பட்டேன்.

நண்பன் லஞ்சம் கொடுத்து வண்டியை மீட்க, நான் என் கையை சுத்தமாக வைத்துக் கொண்டேன். (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)

டிக்கெட் 

இங்கே அகமதாபாத்திலும் அப்படி சில தலைவலிகள். உறவினர்கள் சென்னையிலிருந்து வந்தபோது ஸ்டேஷனுக்கு போயிருந்தேன். பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க வேண்டும். அந்த நேரம் இன்னொருவர் வர, `உங்களுக்கும் எடுக்கவா?` என்று கேட்டேன்.

`அது எதுக்கு? நான் இதுவரைக்கும் எடுத்ததே இல்லை` என்றார் அவர். எனக்கு தர்மசங்கடம். என்ன செய்வது? நம்மைவிட பெரியவர்கள் இருக்கும்போது அவர்களை மீறி ஏதாவது செய்தால் அது அவர்களை அவமானப்படுத்தியது போல் ஆகிவிடும்.

ஆனால் எனக்கு உறுத்தல். நல்லவேளை, மேலும் நபர்கள் வந்து எண்ணிக்கை அதிகமாகிவிட, எதுக்கும் எடுத்திருவோம் என்று அவரே இறங்கி வந்தார். அதில் ஒருவர், `பிளாட்பாரம் டிக்கெட் வேணாம். டிரெயின் டிக்கெட் எடுக்கலாம்` என்றார். அது 2 ரூபாய்தான். அது ஒரு காமெடி.

பேங்க்

சமீபத்தில் பேங்கில் அப்படி ஒரு தலைவலி. சின்ன அட்ஜஸ்மெண்ட். ஒரு மோசடி. இதில் எனக்கு லாபமும் கிடையாது, யாருக்கும் நஷ்டமும் கிடையாது. அரசு அலுவலகங்களில் இருக்கும் சில ரெட் டேப்பிசத்தை தாண்ட அதை செய்யவேண்டும்.

இப்போதும் அந்த வேலையை நான் செய்யவில்லை. வேடிக்கை மட்டும்தான் பார்த்தேன்.

மேலே சொன்ன சம்பவங்கள் உப்புசப்பிலாத சிறிய விஷயங்கள். கடந்த காலங்களில் நானே செய்திருப்பேன். ஆனால் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு, என்னுடைய பதிவுகள் மற்றவர்களுடைய மனசாட்சியை தூண்டுகிறதோ இல்லையோ, அது எனக்கே ஆப்பு வைத்துவிட்டது. ஒரு சிறிய தவறு செய்ய நேர்ந்தால் கூட ரொம்பவே யோசிக்க வைக்கிறது.

பதிவு எழுதுவதால் வந்த பக்க விளைவுகள் இவை. என்ன செய்யறது? 

11 comments:

Anonymous said...

Nice narration.
These are battles of your manasatchi with truth.

ராஜ் said...

ரொம்ப எதார்த்தமா எழுதி இருக்கீங்க... :):)

Ramesh R said...

மிக மிக உண்மை.

Anonymous said...

Nice to read abt your experiences.

Thanks.

புரட்சி தமிழன் said...

ம் மனசாட்சி :))

bagawanjee said...

லாட்டரி மாதிரிதான் ஷேர் மார்க்கெட்டும்!என் பதிவு நினைவிற்கு வந்தது .அது :
லாட்டிரி யோகம் எல்லோருக்கும் உண்டா ?

விட்டதை விட்ட இடத்தில் பிடிக்க வேண்டுமென
விட்டத்தை பிடித்த அப்பாவின் நிழல் ..
அவர் விட்டுசென்ற பெட்டியில்
கட்டு கட்டாய் லாட்டிரி சீட்டுகளில் !

சிவானந்தம் said...

கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

Arif .A said...

அன்னே புத்தாண்டு வாழ்த்துகள். நீங்கள் சேர் மார்கெட் சொன்னவுடன் இழப்பு மட்டுமே ஞாபகம் வருது அது எப்படி? என்ன மாதிரியே டெலிவரி கேஷ் அடுத்து இன்ராடே டிரேடிங் விறுவிறுப்பு மற்றும் சோதனைக்கு உள்ளாக்கும் ஒரு மாயலோகம்.

சிவானந்தம் said...

வாங்க ஆரிப்.

உங்களுக்கும் ஷேர் மார்கெட் அனுபவம் இருக்கா? அங்கே நல்ல லாபம் இருப்பதும் நிஜம். கவனமும் அதிஷ்டமும்தான் தேவை.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

நான் இப்பொழுதுதான் விசா முடிந்த சிலருக்கு லஞ்சம் கொடுப்பது எப்படி என எனது சுயநலமில்லாமல் பொதுசேவையாக சிலருக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

சிவானந்தம் said...

வாங்க நடராஜன்

புத்தாண்டு வாழ்த்துக்கள

நிச்சயம் அது சேவைதான். வறுமையின் கொடுமையில் இதுவும் ஓன்று.

Post a Comment