!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, March 11, 2013

ரயில்வே: இப்படியும் அப்படியும்

கடந்த சில மாதமாக எழுத முடியவில்லை. ஒரு உறவினருக்கு உதவியாக ஆஸ்பிடல் போகும் வேலை வர, பதிவுகள் தடைபட்டது. பின்னர் வழக்கமாக அவ்வப்போது வரும் மனச்சோர்வு ஆட்கொள்ள, பதிவுகள் நின்றுவிட்டது. அதன்பிறகு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது ரயில்வே துறை குறித்த ஒரு விவாதத்தை கவனித்தபோதுதான்.

இதை சன் நியுஸில் கவனித்தேன். ரயில்வே துறை லாபகரமாக நடக்கிறது; (கடந்த காலங்களில்) 10,000௦௦௦௦௦ கோடி லாபம் பார்த்திருக்கிறது; அரசுக்கு டிவிடெண்டாக அது கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒருவர் சொன்னார்.

லாபம்?

வழக்கம் போல் இது அரைகுறை புள்ளி விவரம். லாபம் என்றால் என்ன, அதை எப்படி கணக்கிட வேண்டும் என்று வரைமுறை இல்லாமல் மேம்போக்காக சொல்லப்படுபவை.

ஒரு ஊரில் போட்டியே இல்லாமல் நீங்கள் மட்டும் கடை வைத்திருந்தால், அங்கே லாபம் பார்க்க திறமை தேவையா? அதுவும் போட்டி இல்லாத நிலையில், நீங்கள் வைத்ததுதான் விலை என்ற இருந்தால், இது ஒரு வியாபாரக் கொள்ளை அல்லவா? 

ஒரு பேச்சுக்கு ரயில்வே லாபத்தில் ஓடுகிறது என்று வைத்துக் கொண்டாலும், அதன் மூலதனம் எவ்வளவு, அந்த மூலதனத்தின் அடிப்படையில் ரிடர்ன் என்ன என்ற கணக்கு வேண்டுமே? அந்த கணக்கெல்லாம் ரயில்வேயில் போட முடியுமா?

இந்த 10,000 கோடிகள் கூட அதன் மூலதனத்துடன் ஒப்பிடுகையில் யானைப் பசிக்கு சோளப் பொறி என்ற வகையாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் இதை லாபம் என்று சொல்வதே அபத்தம்.

சரி போகட்டும். அரசுக்கு லாபம் தேவை இல்லை. சேவைதான் நோக்கம். ஆனால் அரசின் அந்த எண்ணமாவது நிறைவேறுகிறதா? நிச்சயம் கிடையாது. அரசுக்கும் லாபத்தை தராமல் மக்களுக்கும் ஒழுங்காக சேவையை கொடுக்காத ஒரு துறைதான் ரயில்வே. அதனால்தான் இதையும் தனியார்மயமாக்கினால் என்ன என்ற கேள்வி வருகிறது.

இதை தனியார்மயமாக்குவது சிரமம் என்பதால் ரயில்வேயில் சில துறைகளில் மட்டும்  தனியாரின் பங்களிப்பை அதிகப்படுத்தும் முயற்சி நடக்கிறது.

ஊழியர் சங்கங்கள் பலமாக இருப்பதால் சரியாக வேலை செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையாம். தனியார்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் அவர்களை நீக்கி விடலாம். அது  சுலபம். எனவே அரசு இதை விரும்புகிறது. இந்த வாதத்தை ஒருவர் முன்வைத்தார்.

ஆனால் இங்கேயும் சிக்கலாம். குறைந்த தொகைக்கு கேட்பவர்க்குதான் ஏலம் கொடுக்க வேண்டும் என்பதால், பலர் குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்துவிட்டு பின்னர் அது சாத்தியப்படாமல் அப்படியே பாதியில் விட்டுவிட்டு ஓடி விடுகிறார்கள். எனவே தனியாரை நம்ப முடியாது என்றார் இன்னொருவர்.

இது ஒரு அபத்தமான வாதம். இதற்கு தீர்வா இல்லை? ஒரு சிலர் அப்படி ஓடி இருக்கலாம். உண்மையில் இது பெரும் பிரச்சினையாக இருந்தால், கடுமையான கட்டுபாடுகள் கொண்டு வரலாமே?

ஏலம் எடுப்பவர்களிடம் சொத்துக்களை பிணையமாக கேட்கலாம். ஒபந்தத்தை ஒழுங்காக முடிக்காவிட்டால் சிறை தண்டனை என விதிமுறை கொண்டுவரலாம்.

இப்படி விதிமுறைகளை கடுமையாக்கினால் சாத்தியமில்லாத தொகைக்கு ஏலம் கேட்க யாரும் முன்வரமாட்டார்கள். அப்படியே ஓடினாலும் அவர்கள் என்ன பாகிஸ்தானிலா தஞ்சம் புகுந்து விடுவார்கள்?

நாம் ஒரு செயலில் இறங்கும்போது அதில் ஏதாவது சில குறைபாடுகள் வரும், பக்க விளைவுகள் ஏற்படும். அதற்கு தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இவரின் வாதம் நொண்டிசாக்காகத்தான் இருக்கிறது.

உண்மையில் அரசு துறைகள் ஒரு நபருக்கு தண்ணீர் தருவதற்கு ஒரு தண்ணீர் தொட்டியையே விரயமாக்குபவை. தனியார் துறையினர் லாப நோக்கில் செயல்பட்டாலும் அங்கே பல விரயங்கள் தவிர்க்கப்பட்டு அது ஒருவகையில் நாட்டுக்கு நன்மையில் முடியும். இந்த எதார்த்தம்தான் மக்களுக்கு புரிவதில்லை.

இங்கே நான் சொல்லவருவது பொதுவான எதார்த்தம். இன்றைய ஊழல் அரசியல்வாதிகளை பார்த்து சலித்து போய் ஜனநாயகம் மோசமான நிர்வாகம் என்று சொல்ல முடியுமா? அதேபோல் இன்றைய இந்தியாவில் வியாபாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதற்காக  தனியார்மயம் சரியான தீர்வாகாது என்றும்  சொல்ல முடியாது. 

இன்று சட்டம் சரியாக செயல்படாத காரணத்தினால் அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகள் காட்டில் மழை. அவ்வளவுதான். இது காலபோக்கில் சரியாகலாம். எனவே நிர்வாகத்திற்கு எப்படி ஜனநாயகம்தான் சரியான தீர்வோ, அதேபோல் தொழில்துறை என்று பார்த்தால் அதை தனியாரின் துறையின் வசம் விடுவதுதான் சரி. 

இப்படியும் அப்படியும்

ரயில்வேதுறையின் நிர்வாக அபத்தங்களுக்கு சில உதாரணம் சொல்லலாம். சாதாரணமாக வீட்டில் இட்லி சுட்டால் முதல் ஈடு எடுத்தவுடன் சிலரை சாப்பிட சொல்லி அவர்கள் வேலையை முதலில் முடிப்பார்கள். அதுதான் வீட்டு நடைமுறை. ஆனால் ரயில்வேயில் அப்படி அல்ல.

இவர்கள் எல்லாரையும் வரிசையாக உட்கார வைத்து ஆளுக்கு இரண்டு இட்லி கொடுப்பார்கள். அடுத்த ஈடு எடுக்கும் வரை நாம் அந்த இரண்டு இட்லியை சாப்பிட்டு விட்டு காத்திருக்க வேண்டியதுதான். அதாவது ரயில்வேயின் பல திட்டங்களுக்கு பட்ஜெட்டில் இந்த அடிப்படையில்தான் நிதி ஒதுக்கபடுகிறது. இதனால் எந்த திட்டமும் விரைவாக முடியாமல் அதன் திட்ட மதிப்பீடும்  உயர்கிறது, சரியான பயனும் கிடைப்பதில்லை.

இதற்கு பதில், திட்டங்கள் தீட்டிய பிறகு குலுக்கல் முறையில் சிலதை தேர்ந்தெடுத்து அவற்றை விரைவாக முடிக்க முன்னுரிமை தரலாம்.  குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதால் மாநில அரசுகள் புரிந்து கொள்ளலாம்.

இவர் ஊருக்கு தனியாப் போறேன்னு சொன்னார். அதுக்குன்னு இப்படியா போவாங்க!

வட மாநிலங்களில் ரயில்களில் கூட்டம் காரணமாக கோச்சின் மேலேயே பலர் ஆபத்தாக பயணம் செய்யும் நிலைமை. ஆனால் இங்கே சன் நியுசுக்கு பேட்டி கொடுத்த ஒருவர் சொன்னது அதைவிட பெரிய காமெடி.

இவர் பயணித்த ரயிலில், அந்த கோச்சில், இவர் ஒருவர்தான் இருந்தாராம். அங்கு வந்த ரயில்வே போலீசார், `கதவை சாத்திக்கொண்டு பத்திரமாக இருங்கள்` என்று உபதேசித்தாராம். இது எப்படி இருக்கு?

அரசுத் துறைகள் இப்படித்தான் இருக்கும். இங்கே முடிவெடுப்பது, அதுவும் விரைவாக எடுப்பது என்பது சாத்தியமே இல்லை.

அதே சமயம் இப்படிப்பட்ட ஒரு பிரமாண்டமான துறையை எப்பேர்பட்ட திறைமைசாலி வந்தாலும் நிர்வகிப்பது சிரமம். எனவே அதன் கட்டமைப்பை மத்திய அரசு வைத்துக் கொண்டு, மாநில அளவிலான போக்குவரத்தை மாநில அரசுகளே கவனிக்கலாம் என்று கொண்டு வரலாம்.

இதுவும் ஒரு பொதுத்துறைதான். ஆனால் அதற்கு இது பரவாயில்லை. மாநில அரசுகள் உள்ளூர் தேவைகளை அனுசரித்து டிரெயின் விடலாம்.பெட்டிகளை கூட்டலாம் குறைக்கலாம்.அல்லது கூட்டம் குறைவாக இருந்தால் வண்டி பஞ்சர் என்று சொல்லி வேறு வண்டிகளில் அவர்களை அனுப்பி வைக்கலாம். 

மாநில அரசும் தனியாகவோ அல்லது சில தனியாரையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு கம்பனி ஆரம்பித்தால், நிர்வாகமும் சிறப்பாக இருக்கும். இது ஒரு மாநில பொதுத்துறையாக இருக்கும் என்பதால் ஊழியர்களும் எதிர்ப்பு காட்டமாட்டார்கள்.

தங்கசுரங்கம்

இப்போது டிவி மற்றும் பத்திரிகைகளுக்கு விளம்பர வருவாய் என்பது முக்கியமான ஓன்று. அதேதான் ரயில்வேக்கும்.கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விளம்பர வருமானத்திற்கான வாய்ப்புகளை அபாரமானவை.

ரயில்வே அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ரயில் நிலையங்களில் நாம் காணும் விளம்பரங்கள் கூட அரசுக்கு வருவாய் தருகிறதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் சுருட்டப் படுகிறதா என்பதும் நமக்கு தெரியாது.

ஒருவேளை மாநில அரசு நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு, விளம்பர வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு, விரைவான மற்றும்  தரமான போக்குவரத்தை மக்களுக்கு வழங்கினால், தனிநபர் வாகனங்களும்  பெருமளவு குறையும், சுற்றுப் புற சீரழிவும் ஓரளவு கட்டுப்படுத்தப்படும். 

எனவே இனி மாநில அரசுகள், `எங்களுக்கு அந்த திட்டம் இந்த திட்டம் வேண்டும்` என்று மத்திய அரசை கேட்காமல், எங்களுக்கு தேவையான ஆணியை நாங்களே பிடுங்கிகிறோம்ன்னு சொல்லிட வேண்டியதுதான். மாநில அரசுகள் இப்படி ஒரு கோரிக்கை வைத்தால் மத்திய அரசும் இந்த தலைவலிகலிருந்து தப்பிக்க உடனடியாக ஒப்புக்கொள்ளும்.

விரயம் 

இதுவும் ரயில்வே செய்திதான். அங்கே கவனித்த செய்தி. அகமதாபாத் ரயில் நிலையத்தில் கவனித்தேன். இங்கே RMS க்கு போக நேர்ந்தது. அங்கே மலை மலையாய் புத்தக மூட்டைகள்.

அது பள்ளி புத்தகங்களாகவோ அல்லது மக்களின் பொது அறிவை வளர்க்க கூடிய வார இதழ்களாக இருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால் இவை கம்பனி நிதி நிலை அறிக்கைகள். பங்குதாரர்களுக்கு அனுப்புவதற்காக வந்திருக்கிறது.

ஷேர் மார்கெட்டை கவனிப்பவன் என்பதால் எனக்கு தெரியும், இது ஒரு அனாவசியமான நடைமுறை என்று . ஒரு நிறுவனத்தின் 10௦௦ ஷேரை வைத்திருந்தாலும் கமபனி உங்களுக்கு நிறுவனத்தின் ஆண்டறிக்கையை அனுப்பும். இதையெல்லாம் படித்து பார்த்துவிட்டுத்தான் அந்த பொருளாதார மேதை தான் வைத்திருக்கும் 10௦ ஷேரை விற்பதா வேண்டாமா என்று முடிவு பண்ணுவாராம். என்ன காமெடி இது 

பேப்பரை மிச்சப்படுத்துங்கள் /மரம் நடுங்கள் என்று அரசு ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறது. ஆனால் அதற்கு நேர் எதிராக இப்படிப்பட்ட பேப்பர் விரயங்கள்.

பல நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் எனக்கும் வந்துருக்கிறது. பார்க்கவே பளபளப்பாக,பல பக்கங்களோடு  இருக்கும். அடுத்தபக்கம் கூட நான் திருப்பியதில்லை. பெரும்பாலோனோர் அப்படிதான் இருப்பார்கள். 

இன்றைய எலக்ட்ரானிக் யுகத்தில் இது தேவையே இல்லை. மெயில் மூலம் அனுப்பலாம். அல்லது கம்பனி வெப்சைட்டில் பார்க்க சொல்லலாம்.

எனக்கு இங்கே விவேக் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. `யாருமே இல்லாத இடத்துல யாருக்குடா டீ போடற` ன்னு சொன்னா மாதிரி, `யாருமே படிக்காத கம்பனி அறிக்கைகளை ஏண்டா அனுப்பறீங்க`ன்னு கேக்கத் தோணுது.

இதற்கும் ஒரு முடிவு கட்டவேண்டும். (செபிக்கு எழுதிப் போட்டிருக்கிறேன்.)

அடப்பாவிங்களா, உங்களுக்கு சப்போர்ட் பண்ணிதானே  நான் பதிவு போடறேன்

தனியார் துறையினர்தான் நிர்வாகத்துக்கு சிறந்தது என்று இந்த பதிவு எழுதிக் கொண்டிருக்கும்போது,  இன்னொரு மொபைலை (ஏர்டெல்) சார்ஜரில் போட்டிருந்தேன். அதில் மெசேஜ் வந்த சத்தம்.

என்ன மெசேஜ் என்று பார்பதற்கு கையில் எடுத்தால், `யுவர் லாஸ்ட் கால் சார்ஜ் 3 ரூபாய்` என்று மெசேஜ். நான் மொபைலை அப்போதுதான் கையில் எடுக்கிறேன். யாருக்கும் கால் செய்யவில்லை. ஆனால் 3 ரூபாய் மொக்கை போட்டுவிட்டார்கள். இதுமட்டுமின்றி வேறு சில நஷ்டங்களும் (எல்லா நெட்வொர்கிலும்) உண்டு. புகார்  செய்தால், `நாங்க அப்படி எதுவும் செய்யறதில்ல` என்று அக்மார்க் பொய் சொல்வார்கள் 

இந்த பணக்கார/படித்த திருடர்களை என்ன செய்வது? பேங்கில் லட்சகணக்கில் பணம் இருந்தாலும் தைரியமாக நீங்கள் இருக்கலாம். ஆனால்   மொபைலில் 50 ரூபாய் ரீசார்ஜ் செய்துவிட்டு உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது. அந்த அளவுக்கு இவர்கள் கொள்ளைக்காரர்களாக இருக்கிறார்கள்.

இங்கேயும் அவர்களுக்கு சில நிர்பந்தம் இருக்கிறது. `மாத வாடகை இல்லாமல் சேவை` என வாடிக்கையாளர்களை சேர்த்து கொண்டார்கள். அதில் பலர் `மிஸ்ட் கால் பேர்வழிகளாக` இருக்க, கம்பனிகளுக்கு நியாயமான வருமானம் கூட சில இடங்களில் வருவதில்லை.

என்னிடம் அந்த கெட்ட  பழக்கம் இல்லை. நிஜத்தில் நான் அதிகம் போன் பண்ணுவதில்லை. அதற்கும் வேறு போன்  இருப்பதால் இந்த ஏர்டேல்லை சுத்தமாக பயன்படுத்துவதில்லை. எனவே அவர்களாகவே சேவை கட்டணத்தை இப்படி வசூலிக்கிறார்கள் போலிருக்கிறது.       

இன்னொரு எதார்த்தம் என்னவென்றால், இவர்கள் செய்வது மோசடி என்றாலும், இது எனக்கு நஷ்டம், கம்பனிக்கு லாபம் என்ற வகை. பொதுத்துறைகளை பொருத்தவரையில் அதுவும் கிடையாது. நமக்கும் நஷ்டம் அரசுக்கும் நஷ்டம். 

எனவே ஒப்பிடல் என்ற அளவில் பார்த்தால்  தனியார்துறை  என்ற குதிரைதான் தேவை. என்ன...அவ்வப்போது அவர்களுக்கு லாடம் அடிக்க வேண்டும்.       


11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் நல்லதொரு அலசல் நண்பரே... தொடர வாழ்த்துக்கள்...

Surya Narayanen S said...

welcome back and a good thought process.
surya

வவ்வால் said...

சிவானந்தம்,

மீண்டும் வருக!

கொஞ்ச நாளாக்காணோம் என்றதும், ஏதேனும் புதிய முயற்சியில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துவீட்டீர்கள் என நினைத்தேன்.

பரவாயில்லை, தொடர்ந்து பதிவெழுத்இனாலும் மனச்சோர்வு வரும்,அதுக்கு இடைவெளி விடுவதே நல்லது,நாம எப்போ எழுதுறமோ அதான் பதிவு,சொல்றது தான் கருத்து :-))

இரயில்வே துறை குறித்து உங்கள் கருத்துக்களில் இருந்து நிறைய வேறுபடுகிறேன்.

இரயில்வே துறை சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது சரி,ஆனால் தனியார் மயமாக்கல் என்பது மொத்தமாக மக்களுக்கு தீங்கே.

முதல் தீங்கு, அதிக கூட்டம் இருக்கும் தடங்களில் மட்டுமே இயக்குவார்கள், கூட்டம் குறைவாக ஆனால் ஒரு சிறுபான்மை மக்களுக்கு தேவை எனில் இயக்க மாட்டார்கள்.

#கட்டணம் அபரிமிதமாக உயர்த்தப்படும்.

# பலருக்கு இன்றியமையாத இலவச சேவைகள் நிறுத்தப்படும்.

உ.ம்: தியாகிகள்,மாற்று திறனாளிகளுக்கான சலுகை.

# அவர்கள் எதிர்ப்பார்த்த லாபம் வரவில்லை எப்பொழுது வேண்டுமானலும் மொத்த சேவையும் நிறுத்திவிட்டு அடுத்த தொழிலைப்பார்க்க போய்விடுவார்கள்.

உ.ம்: கிங்க் பிஷர் ஏர்லைன்ஸ்.

#புதிய ரயில்பாதைகள் லாப நோக்கின் அடிப்படையில் மட்டுமே அமைப்பார்கள். எனவே பலப்பகுதிகளுக்கு இரயிலே கிடைக்காது.


இரயில்வே போன்ற சேவைகளை தனியார் மயமாக ஆக்குவது,தங்க முட்டை போடும் வாத்தை அறுப்பது போன்றது.

ரயில்வே துறையில் லாபம் என சொல்லப்ப்படுவது சரியான புள்ளிவிவரம் அல்ல என சொல்கிறீர்கள், ரொம்ப சரியாக இல்லை என்றாலும் லாபம்,லாபமே.

ரயில்வே துறையின் பல மண்டல அமைப்புகளின் முதலீட்டினை திரும்ப எடுத்தாயிற்று ,பிரேக் ஈவன் அடைந்தாயிற்று.

இப்போழுது ஆபரேஷனல் காஸ்ட் ஐ கவர் செய்து அதற்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் லாபமே, அரசு நிறுவனம் என்பதால் மிகையான லாபம் எதிர்ப்பார்க்க தேவையில்லை.

எண்னை நிறுவனங்கள் நீங்க சொன்னது போல ரிடர்ன் ஆன் இன்வெஸ்மென்ட், வட்டி விகிதம் என கணக்கிட்டு லாபம் இல்லை நஷ்டம் என சொல்வது இப்படித்தான்.

ரயில்வேயும் அப்படி சொன்னால் சந்தோஷப்படுவீர்களோ :-))

உங்க சந்தோஷத்துக்காக தானே மெட்ரோ எல்லாம் தனியார் மயமாக நடத்துறாங்க :-))

# ரயில்வேயில் தனியார் மயம் எப்படி கொண்டுவரலாம் எனலாம், இதுவரையில் ரயில்வே பாதைகளே இல்லாத இடங்களை தேர்ந்தெடுத்து ,அங்கே டிராக் போட்டு ரயிலோட்டிக்குங்க,என உரிமம் ஏலம் விடலாம்.

இத்தகைய முறை கம்யூனிச சீனாவில் இருக்கு :-))

புதுசா ,பிந்தங்கிய பகுதிகளை தேர்ந்தெடுத்து தனியார் ரயில் சேவைக்கு காண்ட்ராக் விடுகிறார்கள்.

இதை எல்லாம் முன்னரே எனது பதிவில் அலசியும் இருக்கிறேன்.

அப்படி செய்யாமல் ,கஷ்டப்பட்டு நிலம் கையகப்படுத்தி, டிராக் போட்டு ,கட்டமைப்பு செய்து வைத்திருக்கும் ரயில்வே அமைப்பினை தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது சற்றும் பொருளாதாரப்பார்வையற்ர ஒன்று.

சிவானந்தம் said...

வாங்க தனபால்.

உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி

@சூர்ய நாராயணன்

வாங்க சூர்யா, கருத்துக்கு நன்றி.

சிவானந்தம் said...

வவ்வால்,

பதிவோ அல்லது பின்னூட்டமோ வார்த்தைகள் உங்களுக்கு அருவியா கொட்டுது.

இனி விஷயத்துக்கு வருவோம்.

ரயில்வேயில் சரியான கணக்கை போட முடியாது என்பதால்தான் மாநில அரசு நிர்வாகத்தை பார்க்கலாம் என்றேன். ஒருவேளை மாநில அரசு லாபம் பார்த்தாலும், லாபம் எப்படியும் அரசுக்குத்தான் போகப்போகிறது.அதாவது அப்பன் சொத்தை பிள்ளை அனுபவிக்கப் போகிறான்.

//முதல் தீங்கு, அதிக கூட்டம் இருக்கும் தடங்களில் மட்டுமே இயக்குவார்கள், கூட்டம் குறைவாக ஆனால் ஒரு சிறுபான்மை மக்களுக்கு தேவை எனில் இயக்க மாட்டார்கள்.///

இது ஒரு வியாபார நிர்பந்தம். இருந்தாலும் நான் நினைக்கும் நடைமுறையில் இந்த பிரச்சினை வராது.

//கட்டணம் அபரிமிதமாக உயர்த்தப்படும்///.

வாய்ப்பில்லை. ரயில்வே தற்போது கிலோ மீட்டருக்கு என்ன கட்டணம் நிர்ணயித்திருகிறதோ அதே கட்டணம் அல்லது அதைவிட குறைவாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம்.

/// பலருக்கு இன்றியமையாத இலவச சேவைகள் நிறுத்தப்படும். உ.ம்: தியாகிகள்,மாற்று திறனாளிகளுக்கான சலுகை.///

இதுவும் உண்மை. ஆனால் பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். புதிய முயற்சியில் சில பக்க விளைவுகள் ஏற்படும். அதற்கு ஏதாவது ஒரு தீர்வை நாம் உருவாக்கலாம்.

//அவர்கள் எதிர்ப்பார்த்த லாபம் வரவில்லை எப்பொழுது வேண்டுமானலும் மொத்த சேவையும் நிறுத்திவிட்டு அடுத்த தொழிலைப்பார்க்க போய்விடுவார்கள்//

நான் சொல்ல வருவது மாநில அரசு நடத்தலாம் என்று. அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள். தனியார்துறை என்றால் மொத்த நிர்வாகமும் அவர்கள் கைக்கு போவதை நானும் விரும்பவில்லை. அதாவது சென்னை- கோயம்பத்தூர் லைனில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. நாங்கள் டிரெயின் விடுகிறோம் என்று தனியார் முன் வந்தால் அப்படி சில ரூட்களில் அனுமதிக்கலாம் என்ற வகையில் சொல்கிறேன்.

அப்படி அவர்கள் வந்தாலும் பஸ் வாங்குவது போல் அவர்கள் ரயில் பெட்டிகளை வாங்கப் போவதில்லை. எல்லாமே ரயில்வேதான் கொடுக்கப் போகிறது. அதை அவர்கள் முறையாக ஒழுங்காக பராமரிக்கலாம். வருவாய் பகிர்வு மட்டும்தான்.

அதிலும் இதுதான் கட்டணம் என்று அரசு நிர்னயித்த பிறகு, அதில் அரசுக்கு அதிகம் பங்கு தர முன் வருபவர்களுக்குதான் அனுமதி என்றால்,இது ஒரு வெளிப்படையான வியாபார முறைதானே? இப்படி முன் வரும் நிறுவனங்கள் அவ்வளவு சீக்கிரம் ஓட மாட்டார்கள்.அப்படியே ஓடினாலும் ரயில்வே அதை தன் கட்டுபாட்டுக்குள் எடுத்துக் கொள்ளலாம்.


//உ.ம்: கிங்க் பிஷர் ஏர்லைன்ஸ்.//

தனியார் துறையில் இது 10 ல் 1 இப்படி இருக்கும். அரசுத்துறையில் இது தலைகீழ்.

//புதிய ரயில்பாதைகள் லாப நோக்கின் அடிப்படையில் மட்டுமே அமைப்பார்கள். எனவே பலப்பகுதிகளுக்கு இரயிலே கிடைக்காது.//

நான் சொல்லவரும் நடைமுறையில், அது மாநில அரசாக இருந்தாலும் சரி, அல்லது சில வழித் தடங்களை லீசுக்கு விட்டாலும் சரி, ரயில்வே என்ற மத்திய அமைப்பு இருக்கத்தான் போகிறது. நாட்டுக்கு எது தேவையோ அதை அவர்கள் செய்யலாம்.

//இரயில்வே போன்ற சேவைகளை தனியார் மயமாக ஆக்குவது,தங்க முட்டை போடும் வாத்தை அறுப்பது போன்றது.//

தங்கமுட்டைதான். ஆனால் ரயில்வே அமைச்சரும் சந்தோஷமா இல்ல, மக்களும் சந்தோஷமா இல்லை. அதுதான் தலைவலி.

///ரயில்வே துறையின் பல மண்டல அமைப்புகளின் முதலீட்டினை திரும்ப எடுத்தாயிற்று ,பிரேக் ஈவன் அடைந்தாயிற்று.///

இதுதான் சிக்கலே. அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி லாபம் என்றால் எப்படி? ஒருவேளை நிர்வாகம் திறமையாக இருந்தால் கட்டணம் இன்னும் குறைவாக இருந்து அரசும் லாபம் பார்க்கமுடியும் என்று நினைக்கலாமே?

//எண்னை நிறுவனங்கள் நீங்க சொன்னது போல ரிடர்ன் ஆன் இன்வெஸ்மென்ட், வட்டி விகிதம் என கணக்கிட்டு லாபம் இல்லை நஷ்டம் என சொல்வது இப்படித்தான்.

ரயில்வேயும் அப்படி சொன்னால் சந்தோஷப்படுவீர்களோ :-))///

நான் சந்தோஷப்படுவது இருக்கட்டும்.ரயில் பிரயாணிகள் சந்தோஷமாக இருந்தால் நான் இந்த பதிவையே எழுதி இருக்க மாட்டேனே.

சிவானந்தம் said...

வவ்வால்,

// ரயில்வேயில் தனியார் மயம் எப்படி கொண்டுவரலாம் எனலாம், இதுவரையில் ரயில்வே பாதைகளே இல்லாத இடங்களை தேர்ந்தெடுத்து ,அங்கே டிராக் போட்டு ரயிலோட்டிக்குங்க,என உரிமம் ஏலம் விடலாம்.

இத்தகைய முறை கம்யூனிச சீனாவில் இருக்கு :-))

புதுசா ,பிந்தங்கிய பகுதிகளை தேர்ந்தெடுத்து தனியார் ரயில் சேவைக்கு காண்ட்ராக் விடுகிறார்கள்.//

வரவேற்க வேண்டியதுதான். ரோடு போட்டு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை அரசே ஏற்பது போல் இங்கேயும் செய்யலாம்.

///அப்படி செய்யாமல் ,கஷ்டப்பட்டு நிலம் கையகப்படுத்தி, டிராக் போட்டு ,கட்டமைப்பு செய்து வைத்திருக்கும் ரயில்வே அமைப்பினை தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது சற்றும் பொருளாதாரப்பார்வையற்ர ஒன்று.///

ஒட்டுமொத்தமாக ரயில்வேயை தாரை வார்க்கும் நோக்கத்தில் சொல்லவில்லை. ஓன்று, மாநில தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படும் உரிமை மாநிலத்துக்கு. அல்லது சில வழித்தடங்களில் தனியார் ரயில் விட அனுமதி. இருவரில் யாராயிருந்தாலும், இங்கே டிராக், கோச் எல்லாமே ரயில்வேதான் தரப்போகிறது. ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் மட்டும் மாநில அரசு/தனியார் கட்டுபாட்டுக்கு மாறும். ரயில்வேக்கு வருவாய் பகிர்வு. எனவே ரயில்வே என்ற பெரியண்ணன் நிரந்தரமாக இருக்கத்தான் போகிறார். அவருடைய சொத்தை யாரும் கொள்ளை அடிக்க முடியாது.

முக்கியமாக,தற்போதைய நடைமுறை யாருக்கும் திருப்தி அளிக்கவில்லை எனும்போது அதற்கு மாற்றுப் பாதை தேடும் முறைதான் இது. இதிலும் குறைகள் இருக்கலாம் அல்லது வேறு வழிகளும் இருக்கலாம்.

Easy (EZ) Editorial Calendar said...

நல்லதொரு பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Anonymous said...

Well said.

But privatisation is not the solution.

Ambanis ans Mittals will take over and the poor will be left in the lurch
.

Every educated citizen can complain. We can form a group and RTI can be invoked.
When we can be alert services improve.


Vetrimagal

Arif .A said...

விவாதத்தின் முடிவில் தங்களின் முடிவையும் ,பொது மக்களின் கூட்டு ஆலோசனைகளை ஏற்றாற் போல் ஒரு திட்டம் உருவாக்கலாம்.

பதிவை பகிர்ந்தலுக்கு நன்றி!

சிவானந்தம் said...

வெற்றிமகள்,

தனியார் என்றாலே அவர்கள் கொள்ளைகாரர்கள் என்ற மனப்பான்மை மக்களிடையே ஊறிவிட்டது. அதன் தாக்கம்தான் உங்கள் பின்னோட்டம். என்னுடைய ஷேர் மார்கெட் அனுபவம் மற்றும் இன்றைய தொழில் அமைப்பை பார்க்கும்போது அவர்கள் அப்படித்தான் என்பது எனக்கும் தெரியும்.இருந்தாலும் இதற்கு மாற்றாக பொதுத்துறைகள் ஒருக்காலும் இருக்க முடியாது. பொதுவுடைமை நாடுகளே அதை புரிந்து கொண்டு அந்த கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டனர்.

அரசியல்வாதிகளுக்கு தேர்தல் செலவுகள் பெரும் சுமையாக இருப்பதால், தொழில் அதிபர்கள் தரும் நிதிக்காக அவர்கள் செய்யும் சுருட்டல்களை ஜீரணிக்க வேண்டியதாக இருக்கிறது.இதுதான் இன்றைய பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு தீர்வு வந்து, அதன்பிறகு சில தொழில் அதிபர்கள் ஜெயிலுக்கு போனால் இது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரும்.

ஆரிப்,

ஒரு பிரச்சினைக்கு பலவிதமான தீர்வுகள் முன் வைக்கப்படும்போது, அதில் ஏதாவது ஓன்று அனைவருக்கும் திருப்தியாக அமையலாம். அதில் குறைகள் இருந்தாலும் பின்னர் பெருகேற்றப்படலாம். அந்த வகையில்தான் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.பார்ப்போம். யாரவது கவனித்து ஏதாவது செய்வார்கள் என நம்புவோம்.

வவ்வால் said...

சிவானந்தம்,

//பதிவோ அல்லது பின்னூட்டமோ வார்த்தைகள் உங்களுக்கு அருவியா கொட்டுது.
//

நன்றி!

ஹி...ஹி பெரிய ஓட்டை வாயின்னு சொல்லலையே :-))

மன்னிக்கவும், நீங்க மாநில அரசின் கையில் கொடுக்கணும்னு சொன்னதை கவனிக்க தவறிட்டேன், தனியார் என்ற சொல்லே நல்லா ஏறிப்போச்சு :-))

மாநில அரசுகளின் கையில் கொடுத்தால் சுத்தமாக அழித்தே விடுவார்கள் , ஒவ்வொரு மாநில அரசும் நிர்வாகிக்கும் போக்குவரத்து கழகங்களே இதற்கு உதாரணம்.

ரயில்வே என்ற பெரும் கட்டமைப்பு தேவைப்படும் துறையை மாநில அரசின் கையில் கொடுத்தால் ஆறே மாதத்தில் சங்கூதி விடுவார்கள்.

இப்பொழுது உள்ளது போல மத்தியரசின் கீழே இருக்கலாம்,ஆனால் நிர்வாகம் மேம்படுத்தப்பட வேண்டும், அரசியல் தலையீடுகள் களையப்பட வேண்டும்.அது சாத்தியமா?

நம்ம ஊரு ரயில்வே நிர்வாகத்துக்கும், கட்டமைப்பு அமைக்கவும் ஆகும் செலவும்,அமெரிக்காவில் ஆகும் செலவும் கிட்டத்தட்ட ஒன்றே,ஆனால் அங்கே ரயில்வே டிராக் தரமாக, அதிவேக பயணத்துக்கு ஏற்ப இருக்கு, இங்கே பழங்கால பாணி டிராக் ஆனால் செலவு மட்டும் அதிகம்,காரணம் எல்லா வேலைக்கும் கமிஷன் கொடுக்கணும்ல.

#ரயில்வேயில் விளம்பரம் தங்க சுரங்கம் என சொன்னீர்களே உண்மை தான்,ஆனால் அதில் பெரும் அரசியலே இருக்கு.

அரசியல்வாதிகளின் ஆசிப்பெற்ற ஒரு விளம்பர நிறுவனத்திடம் ஏலம் விட்டு விடுவார்கள், பின்னர் அவர் இஷ்டப்படி கட்டணம் வசூலித்துக்கொண்டு விளம்பரம் செய்ய விட்டு விடுவார்.

இதனால் ரயில்வேக்கு நஷ்டம்,அரசியல்வாதிக்கு "கட்டிங்" கிடைக்கும்.

ரயில் நிலையங்களில் கடை ஏல முறையும் இப்படித்தான், கடையை குறைவான தொகைக்கு ஏலம் எடுத்து அதிக வாடகைக்கு விடுகிறார்கள்.அரசுக்கு வர வேண்டிய வருவாய் ,அரசியல்வாதிகள்,அல்லக்கைகளுக்கு போய்விடுகிறது.

ரயில்வே மட்டுமல்ல எல்லா அரசு சார் கட்டிடங்கள்,கடைகள் எல்லாம் பினாமி ஏலம் தான்.

ஹி...ஹி எங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருந்த காலத்தில் நாங்க ஏரியில் மீன் குத்தகை எல்லாம் எடுத்த ஆளுங்க தான் ,இப்போ இக்காலத்தில் செல்வாக்குள்ளவர்கள் மீன் பிடி ஏலம் எடுத்துக்கொள்கிறார்கள் :-))


# நீங்க எதாவது நல்லது நடக்கணும்னு ஆசைப்படுறிங்க, அரசியல்வாதிகள் வருமானம் பார்க்கணும்னு சொதப்புறாங்க, சம்பாதிக்க ஆசைப்படாத அரசியல்வாதி வந்தால் தான் உண்டு.

அதிகாரிகளும் லஞ்சம் வாங்க ஒரு காரணம் தான் ,ஆனால் லஞ்சம் வாங்க மாட்டேனு ஒரு அதிகாரி சொன்னால் அவர் படாத பாடு பட வேண்டும், எனக்கு தெரிந்தவரே ஒரு அனுபவத்தை சொன்னார் ,அதைக்கேட்டப்பின் தான் நாட்டில் லஞ்சம் வாங்காம அதிகாரி இருக்கணும்னு ஆசைப்பட்டாலும் விட மாட்டாங்கன்னு புரிஞ்சது.

Post a Comment