!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, April 21, 2014

பிஜேபி கூட்டணி 3 0 +


`அந்த பொண்ணுக்கு விவரம் பத்தாதுக்கா..` - இப்படிதான் அந்த பேச்சு ஆரம்பித்தது. அப்போது நான் சென்னையில் இருந்தேன். ஏதோ ஓரிடத்தில் இருந்தேன். என்னை கவனிக்காமல் அல்லது பொருட்படுத்தாமல் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

இங்கே பேச்சில் அடிபட்ட அந்த விவரம் புரியாத பெண்ணின் வீட்டுக்கு யாரோ ஓருவர் வந்திருக்கிறார். குடிக்க தண்ணி கேட்டிருக்கிறார். இவர் உள்ளே போன சமயம், வந்தவர் எதையோ சுருட்டி இருக்கிறார். மதிப்பு பத்தாயிரமாம். இதுதான் செய்தி. இதை சொல்லித்தான் சிரித்தார்கள். கூடுதலாக இன்னொரு செய்தியும் கிடைத்தது. அந்த பெண்ணுடைய கணவனுக்கும் விவரம் பத்தாதாம். வருமானத்துக்கு `வாய்ப்பு` உள்ள வேலையில் இருந்தாலும், பணம் பார்க்க தெரியவில்லையாம். 

இப்படி ஆரம்பித்த இந்த ஒன்லைன் கதை சற்று நேரத்தில் விரிவடைந்து வேறு திசை நோக்கி பயணித்தது. தற்போது அந்த பெண் நூறு பவுனுக்கு மேல் சேர்த்துவிட்டாராம். 4,5 வீடும் வாங்கிவிட்டார்களாம். இதையும் அந்த பேச்சில் சொன்ன அந்த பெண், `நானும் ஒரு ஐந்து பவுணுல செயின் வாங்கனும்னு பாக்கிறேன், முடியலக்கா` என்று புலம்பியவர், `இனிமே நமக்கெதுக்கு அதெல்லாம்` என்று தனது இயலாமையும் மறைத்தார்.

கதை கடைசியில் இப்படி முடிந்தவுடன் நான்தான் குழம்பிவிட்டேன். நூறு பவுனும் 4, 5 வீடும் சம்பாதித்து சேர்த்தவர்களுக்கா விவரம் தெரியவில்லை. அதுவும் அதை இந்த பெண் சொல்கிறார். இது எப்படி இருக்கு? 

சராசரி மனிதர்கள் இப்படித்தான். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களிடம் உள்ள சில குறைகளை மட்டும் மிகைபடுத்தி மட்டம்தட்டி திருப்திபட்டுக்கொள்வார்கள். நிஜத்தில் நாம் எல்லோரும் ஏதாவது ஒரு இடத்தில் குறைபாடோடுதான் இருக்கிறோம். சில இடங்களில் அதீத நம்பிக்கை /அலட்சியம் காரணமாக எங்கேயாவது ஏமாந்திருப்போம். ஆனால் அதை மட்டும் வைத்தா மனிதர்களை எடை போடுவது?

தற்போது விஜயகாந்த்தையும், மோடியையும் சிலர் விமர்சிப்பதையும், அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களையும் படித்தால் மேலே சொன்ன சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. இந்த தலைவர்களிடம் சில குறைகள் இருக்கலாம். இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி அவர்கள் தங்கள் துறைகளில் வெற்றிப்படிகளில் ஏறி இருக்கிறார்கள். இதை யாராவது மறுக்க முடியுமா?

விஜயகாந்த் ஒரு நடிகனாக வெற்றி பெற்றவர். அரசியலிலும் எதிர் கட்சித்தலைவர் என்ற வகையில் வந்துவிட்டார். இதுவே அரசியலில் அவர் பாதி கிணற்றை தாண்டியதாகத்தான் அர்த்தம்?

மோடியும் தொடர்ந்து மூன்று முறை வென்றிருக்கிறார். அதிர்ஷ்டம் சில முறை கை கொடுக்கலாம், ஆனால் திறமை இல்லாமல் அதை தக்கவைக்க முடியுமா? குஜராத் கலவரம் என்ற ஒரு விஷயம்தான் அவருக்கு கறையாக இருக்கிறது. ஆனால் குஜராத் கலவரங்களின் மூலங்களை ஆராய ஆரம்பித்தால் அது, `இவன்தான் முதல்ல ஆரம்பிச்சான்` என்ற வகையில் வரலாற்றில் கண்டுபிடிக்க முடியாத பல இடங்களில் போய் முடியும். எனவே அப்படிப்பட்ட ஆராய்ச்சிக்குள் நாம் போகாமல், இனி மதக் கலவரங்கள் நடக்ககூடாது என்ற நம்பிக்கையில் அதை தாண்டிப் போவோம்.

இனி இந்த கூட்டணி தொடர்பான சில விமர்சனங்களை பார்ப்போம்.
 
பேசத் தெரியவில்லை 

இங்கே விஜயகாந்தை பொறுத்தவரையில் அவருக்கு பேசத் தெரியவில்லை என்பதுதான் இமாலய குறையாக தெரிகிறது. இதற்கு சில பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்வதிலும் தப்பில்லை. பேச்சுத் திறமைதான் தகுதி என்றால் அப்படி தகுதி படைத்த பலர் இன்னும் அரசியலில் செல்லாக் காசாகத்தான் இருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். வைகோவே சிறந்த உதாரணம். லிஸ்ட் போட்டால் இடம் பத்தாது. 

மோடி கூட ஒரு பேட்டியில் ஆங்கிலத்தில் பேச வராமல் திணறினாராம். பாதியில் கிளம்பி போய்விட்டாராம். இதையும் கிண்டலடித்திருந்தார் ஒருவர். நன்றாக ஆங்கிலம் பேசுவதும், திறமையாக பேசுவதும்தான் தகுதி என்றால், அர்னாப் கோஸ்வாமி, கரன் தாப்பர் போன்றவர்களுக்கு இந்தியாவின் முக்கியமான அமைச்சரவையை கொடுத்துவிட்டால் போதுமே, நாட்டின் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும்.

ஒரு பழமொழி கூட உண்டு. `வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்` என்று. `உருப்படும்` என்று ஏன் சொல்லவில்லை? இங்கே ஏதோ ஒரு செய்தி இருக்கலாம். எனவே பேச்சுத் திறமை இருந்தால் அது உங்களுக்கு கூடுதல் பலம் என்பதுதான் உண்மையே தவிர, அது மட்டுமே உங்களை உச்சத்துக்கு கொண்டுபோய் விடாது. உண்மை இப்படி இருக்கையில், இதை ஒரு குறை என்று பலரும் பேசுவது ஆச்சர்யம்தான் 

பேரம் 

விஜயகாந்த் மாட்டுத் தரகர் போல் பேரம் பேசினார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இது வருத்தப்படும் விஷயம்தான். ஆனால் இன்றைய அரசியல் நாகரீகமான மனிதர்களை மதிக்கிறதா? வைகோ. திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் இந்த மூன்று பேரின் நிலை என்ன? இவர்களுடைய கொள்கை நமக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் குறைந்த பட்சம் கூட்டணி அரசியலில் நாகரீகத்தை கடைபிடித்தார்கள். இவர்களுக்கு கிடைத்த மரியாதை என்ன? இதற்கு பிறகுமா யாராவது ஏமாளியாக இருப்பார்கள். எனவே விஜயகாந்த் நாலாபக்கமும் பேச்சு நடத்தியது இன்றைய அரசியல் எதார்த்தம்தான்.

சந்தர்ப்பவாத கூட்டணி

இந்தியாவில் இந்த வார்த்தையை நாம் பேசவே கூடாது. இங்கே விகிதாச்சார வாக்கு முறை இல்லை. எனவே தனியே நிற்பதன் மூலம் ஒரு கட்சி எதையும் சாதிக்க முடியாது. இதையே வேறு வகையில் சொன்னால், ஒரு மனிதன் வளரும் நிலையில் பல கட்டங்களில் அனுசரித்துதான் செல்வான். தனக்கான பலம் வந்தபிறகுதான் ஓரளவு தன்னம்பிக்கையை காட்டமுடியும். இந்த கூட்டணியில் இருப்பவர்கள் எல்லோரும் வளரும் நிலையில் இருப்பவர்கள். எனவே ஒருவர் கையை ஒருவர் பிடித்து செல்வதுதான் புத்திசாலித்தனம். பல முறை அதிகாரத்தில் இருந்த கட்சிகளே, `கூட்டணிக்கு யாரவது வர்றீங்களா?` என்று டெண்டர் விடும்போது, பலவீனமானவர்கள் என்ன செய்வார்கள்? முரண்பட்ட கூட்டணி என்றாலும் தங்களை தற்காத்துக் கொள்ள இவர்களுக்கு இதைதவிர வேறு வழியும் இல்லை. தேர்தலுக்கு பிறகு முடிந்தால் ஒற்றுமையாய் இருங்கள். இல்லைஎன்றால் நாகரீகமாக பிரிந்துவிடுங்கள். அவ்வளவுதான்.

உதிரி ரன் 

`மோடி அலை அடிக்குதே அப்புறம் ஏன் இவர் நடிகர்களை சந்திக்க வேண்டும்?` என்று ஒருவர் கிண்டல் செய்கிறார். கிரிக்கெட்டில் ஒரு அணி 3 0 0 ரன்னை தாண்டி பலமாக இருந்தால் அதுவே போதும் என்று யாராவது அசட்டையாக இருப்பார்களா. அல்லது சிங்கிள் ரன் வேண்டாம் என்று விட்டுவிடுவார்களா? முடிந்த அளவுக்கு ரன் சேர்பதுதானே புத்திசாலித்தனம். அதைதானே இவர்கள் செய்கிறார்கள். வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள் எதையும் அலட்சியமாக புறக்கணிப்பதில்லை. அந்த வகையில் ரஜினி, விஜய் எல்லாம் இந்த கூட்டணிக்கு உதிரி ரன்னாக பலம் சேர்க்கும் வாய்ப்பு இருக்கையில், அதையும் பிஜேபி கூட்டணி பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்தான்.

குஜராத் 7 வது பெயில்; தமிழகம் 5 வது பாஸ் 

சில் புள்ளிவிவரங்கள்தான் இதில் மிகப் பெரிய நகைச்சுவையே. தமிழகம் குஜராத்தைவிட பலமடங்கு நன்றாக இருக்கிறதாம். அதற்கு ஆதாரமாக சில புள்ளிவிவரங்கள். புள்ளிவிவரங்களை வைத்து அரசியல்வாதிகள் விளையாடுவது நமக்கு புதுசா என்ன. அதையும் பார்ப்போம். 

தமிழகம் குஜராத்தை விட கல்வி அறிவில் முன்னிலையில் இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இரண்டு மாநிலங்களுக்கும் வித்தியாசம் 2 சதவிகிதம்தான், இருந்தாலும் சந்தோஷம்தான். ஆனால் இது வேதனை கலந்த சாதனையாச்சே.

தமிழ்நாட்டில் கல்வி  பல ஆண்டுகளுக்கு முன்பே தனியாருக்கு திறந்துவிடப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் கல்வி வியாபார மதிப்பு உள்ள ஒரு பொருள். எனவே கல்வி வியாபாரிகள் `உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா` என்ற அளவுக்கு மார்கெட்டிங் செய்கிறார்கள். அதன் காரணமாக வளர்ந்த சதவிகிதம் இது. விளக்கமாக சொன்னால், மக்கள் தங்கள் சொந்த பணத்தில் செலவு செய்து இந்த சதவிகிதத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் குஜராத்தில் கல்வி இன்னும் அந்த அளவுக்கு வியாபாரமாகவில்லை. இவர்கள் இந்த அளவுக்கு வந்தது முழுக்க முழுக்க அரசின் முயற்சி, அரசின் செலவு. இதில் எது சாதனை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பிற துறைகள் குறித்த புள்ளி விபரங்களிலும் இப்படி ஏதாவது அபத்தம் இருக்கும். இங்கே ஒரு கதையும், ஒரு அனுபவமும் உங்களுக்கு சில விஷயங்களை புரியவைக்கும்.

ஒரு விவசாயி ஆற்றிலிருந்து தன் வீட்டுக்கு பானையில் தண்ணீர் எடுத்து வருவாராம். அந்த பானையோ ஓட்டை. வழி நெடுக்க சிந்தும். `என்னால் உங்களுக்கு முழமையாக உதவ முடியவில்லை` என்று அந்த பானை விவசாயிடம் வருத்தபட்டுச்சாம். அதற்கு அந்த விவசாயி, `தண்ணீர் வீணாக போனாலும் வழி நெடுக சிந்தியதில் அந்த இடம் பசுமையானதே என்று சந்தோஷப்படு` என்றாராம். அதாவது நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மற்றவர்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லும் நீதிக்கதை. இந்த கதையை நாம் இங்கே அரசியலில் வேறு மாதிரி பார்க்கலாம்.

இது அனுபவம். ஒரு வீட்டுக்கு போனபோது அங்கே இருந்த பெண்மணி, `உனக்கு இது பிடிக்கும்ல` என்று சொல்லி ஒரு சாப்பாட்டை செய்தார். ஆனால் அன்று அவர் என்னைவிட அதிகம் சாப்பிட்டார். கடைசியில்தான் தெரிந்தது. இது அவருக்கும் பிடிக்கும் என்று. கணவனுக்கு பிடிக்காது என்பதால் செய்யமுடியாது. எனவே என்னை காரணம் காட்டி அவர் விரும்பியதை சமைத்து சாப்பிட்டார். சில இடங்களில் இப்படித்தான் கதை வித்தியமாய் இருக்கும்.

தமிழ்நாட்டின் கதையும் இப்படித்தான். தமிழகத்தில் பல துறைகள் வளர்ச்சி பெற்றிருகின்றன என்றால், அது கழகங்களின் மக்கள் சேவை அல்ல. ஊழல் செய்ய ஏதாவது திட்டம் கொண்டு வர வேண்டும்.அப்படிதான் தமிழகத்தில் பல திட்டங்கள் வந்திருகின்றன. இதனால் தமிழகத்திற்கு நன்மை என்றாலும், மேலே சொன்ன நீதிக் கதை மற்றும் அனுபவத்தை போன்றதுதான். அவர்கள் (அரசியல்வாதிகள்) தங்கள் தேவைக்காகத்தான் சில காரியங்களை செய்கிறார்கள். அதில் by product ஆக சில நன்மைகள் நடந்திருக்கிறது. அதுதான் தமிழகம் கண்ட வளர்ச்சி. நல்லது நடந்திருக்கிறது என்பது உண்மையானாலும், இதை கழகங்களின் சாதனை என்று சொல்லமுடியாது. 

தமிழக, குஜராத் மக்களின் வாழக்கை தரத்தை ஒப்பிடுபவர்கள், தமிழக, குஜராத் அரசியல்வாதிகளின் சொத்து விவரங்களை /வாழ்கை தரங்களை ஒப்பிட்டு பார்க்க தயாராக இருக்கிறார்களா? அப்போது இவர்களின் சாயம் வெளுத்துவிடும். 

+ + + + +

இந்த கூட்டணி உருவாவதற்கு முன்பே `விஜயகாந்த` என்று ஒரு பதிவை எழுதினேன். டெல்லி தேர்தலைப் போல் தமிழகத்திலும் பிஜேபி கூட்டணி ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று எழுதி இருந்தேன். அப்போது ஓரளவு நம்பிக்கை இருந்தது. இப்போது அது நிஜமாகவே தெரிகிறது. ஆனால் இது எனது நமபிக்கைமட்டும்தான் போலிருக்கிறது. வேறு யாரும் அப்படி தெரிவிக்கவில்லை. 

பத்திரிகைகளில் வரும் தகவல்களும் பல விதமாக இருக்கிறது. திமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது; ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட விஜயகாந்த பேனா வாங்க போயிருக்கார் என்று சொல்லும் அளவுக்கு செய்திகள் வந்தன. எனவே பத்திரிகைகள் செய்திகளை அப்படியே நம்ப முடியாது. சில எதார்த்தமான கணக்குகளை மட்டும் பாப்போம். 

இனிமேல் திமுக, அதிமுக கட்சிகளின் வாக்கு வங்கிகள் கூடும் வாய்ப்பு இல்லை. அது அத்தைக்கு மீசை முளைக்கும் கதைதான். நிஜத்தில் இவர்களின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலும் சரிந்துகொண்டேதான் இருந்திருக்கும். ஆனால் இவர்களுக்கு ஒரு மாற்று கிடைக்காததால், ஒரு கழகத்தின் மீதான கோபம் இன்னொரு கழகத்துக்கு ஆதரவாக மாற, அதை இவர்கள் தங்கள் பலம் என காட்டிக் கொண்டார்கள். இது இதுவரை நடந்த கதை. 

இந்த முறை இரண்டு கழகங்களின் சேதார ஓட்டு 10 (5 +5 ) சதிவிகிதம் பிஜேபி கூட்டணிக்கு திரும்பக்கூடும். அது இவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 20 சதிவிகிதத்துடன் சேர்ந்தால், அதுவே தேர்தல் கணக்குகளை திருப்பி விடும். இதுபோக நடுநிலை ஓட்டு, தற்போது திசை திரும்பும் பலவேறு ஓட்டுகளும் சேர்ந்தால், இந்த கூட்டணிக்கு 3 5 - 4 0 சதவிகித ஓட்டு வரக்கூடும்.

இதில் கணிக்க முடியாத ஓன்று பிஜேபி கூட்டணியினர் தங்கள் ஓட்டுக்களை ஒழுங்காக தங்களுக்குள் மாற்றிக் கொள்வார்களா என்பதுதான். 

அவ்வளவாக குழப்பம் வராது என்பதுதான் என் கருத்து. பாமக மட்டும்தான் சிக்கல். மற்றவர்களுக்குள் பரஸ்பர விரோதம் கடுமையாக இருப்பதாக தெரியவில்லை.இதில் பாமகவின் ஓட்டு வங்கி 5 அல்லது 6 சதவிகிதம். இவர்கள் அனைவரும் அப்படியே கூட்டணிக்கு துரோகம் செய்யும் வாய்ப்பில்லை. அது 2-3 சதிவிகிதம்தான் இருக்கும். ஒருவேளை அவர்கள் ஓட்டு போடாமல் புறக்கணிக்கலாம். அல்லது நோட்டோவுக்கு திரும்பலாம். நிச்சயம் கழங்களுக்கு போகாது.

3 5 சதவிகிதத்தை தாண்டி ஓட்டு இந்த கூட்டணிக்கு வருமேயானால் அதில் சில சதவிகிதம் குறைவது ஆபத்தில்லை. அப்படியே இருந்தாலும் அது தேமுதிகவுக்குதான்.

இதுதான் கணக்கு.இருந்தாலும்  அரசியல் நம் கணக்குகளுக்கு அப்பாற்பட்டதுதான். இன்னும் சில வாரம்தானே, பார்த்துவிடுவோம்.

12 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,

உங்க அரசியல் பார்வையை சொல்லி இருக்கிங்க, நிறைய" டீ "குடிச்சிட்டு யோசிச்சிருப்பிங்கனு நினைக்கிறேன் :-))

# 30+னு போட்டிருக்கவும் 30 வயசுக்கு மேலானவங்க படிக்கிறாப்போல அடல்ட் கண்டென்ட் ஆக இருக்குமோனு நெனைச்சி ஏமாந்துட்டேன் அவ்வ்!

தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணி மொத்தமாக கூட்டிக்கழிச்சு பார்த்தாக்கூட 15-20 % ஓட்டு வாங்கினால் அதிசம், ஏன்னா யாருக்கும் ஒற்றுமையே இல்லை.

மறப்போம் மன்னிப்போம்னு மோதியை ஆதரிக்க கிளம்பிட்டிங்க, ரோமாபுரியில் இருக்கும் போது ரோமனியனாக இருக்கனும்ல அவ்வ்!

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

//////உங்க அரசியல் பார்வையை சொல்லி இருக்கிங்க, நிறைய" டீ "குடிச்சிட்டு யோசிச்சிருப்பிங்கனு நினைக்கிறேன்/////

வெயிலும் கொஞ்சம் ஜாஸ்திதான். அதுவும் காரணமாக இருக்கலாம்.

////# 30+னு போட்டிருக்கவும் 30 வயசுக்கு மேலானவங்க படிக்கிறாப்போல அடல்ட் கண்டென்ட் ஆக இருக்குமோனு நெனைச்சி ஏமாந்துட்டேன் அவ்வ்!///

ஒருவேளை கணக்கு ரொம்பவே தப்பானால் அப்படி ஏதாவது படிச்சு பொழுதை போக்க வேண்டியதுதான்.

/////தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணி மொத்தமாக கூட்டிக்கழிச்சு பார்த்தாக்கூட 15-20 % ஓட்டு வாங்கினால் அதிசம், ஏன்னா யாருக்கும் ஒற்றுமையே இல்லை.///

சட்டசபை தேர்தலாக இருந்தால் இந்த கூட்டணி மக்களுக்கு பயத்தை உண்டாக்கலாம். ஆனால் இந்த கூட்டனி வெற்றி பெற்றால் மத்தியில் உறுதியான ஆட்சி என்பதால் இதற்கு ஆதரவு கூடும் என்பதுதான் என் கணிப்பு.

இன்னும் சில வாரம்தான். காத்திருங்கள்.

////மறப்போம் மன்னிப்போம்னு மோதியை ஆதரிக்க கிளம்பிட்டிங்க, ரோமாபுரியில் இருக்கும் போது ரோமனியனாக இருக்கனும்ல அவ்வ்!///

வவ்வால் பஞ்ச். ரசித்தேன். மற்றபடி அம்மாவையும், அய்யாவையும் ஒப்பிட்டால் மோடி எவ்வளவோ தேவலாம்.

Karthi Veeramalai said...

உங்க பேஸ்ட்ல உப்பிருக்கா..அப்படின்னு ஏதோ சாதாரணமா தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை சுருக்கிட்டீங்க?! நீ என்ன அவ்ளோ பெரிய புடுங்கியா.(கடுமையான வார்த்தை காரணமாக நீங்கள் வருத்தப்பட்டாலும் கவலை இல்லை.காரணம் நீங்க இஙக விற்க சாரி..விளக்க முயறது அப்படி).SSA மாதிரி எத்தனை திட்டங்களை காமராஜர் காலத்தில் இருந்து இன்று வரை உழைக்கிறார்கள். என்னமோ கல்வி வியாபாரம்னு கூவுற..2008ல் நான் பொறியியல் படிப்பில் சேர்ந்த பொழுது 280-320 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருந்தன.அதே 2012ல் நான் முடித்தபொழுது 520 கல்லூரிகள். நீ பெனாத்துற வியாபாரம் எல்லாம் இந்த 4-5 வருடங்கள் தான். யோவ் இந்த தேர்தலில் நான் யாருக்கு ஓட்டு போடனும்னு முடிவு பண்ணிட்டேன்.அது இருக்கடும் ஒரு பக்கம்.. மோடி சிறந்த நிர்வாகி என்பதில் உண்மை இருக்கவே செய்கிறது.ஆனால் என்னமோ தமிழ்நாட்டில் ஒன்னுமே இல்ல அப்படின்னு சொல்றது "உப்பு இருக்கிற பேஸ்ட் தவ்ர மத்ததெல்லாம் வேஸ்ட்னு சொல்லுவீங்க போல.யோவ் உப்பு அப்படிங்கறது அவன் கான்செப்ட்.அவ்ளோதான்".இதையே இங்கயும் கொண்டு வந்தால் அதானிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது உங்க மறமண்டைக்கு புரியலையோ..!! திட்ட கமிஷனுக்கு தெரியததையெல்லாம் இவரு சொல்றாருப்பா...முடியல. என்ன ஒன்னு இவரு சொல்றது முக்கால்வாசி ஒரு சார்பாகவும் , பொய்யாகவும், இவரின் தனிப்பட்ட விருப்பமும், வெறியும் தான் அதிகம் உள்ளது. உடனே இது என் ப்ளாக் , என்ன வேணாலும் எழுதுவேன் அப்படின்னு சொல்ல முற்படுவீங்க. அது சரி தான்..ஆனால் பொது விஷயத்தை எங்க பேசினாலும் பொது விஷயம் தானே.உங்க மண்டைக்கு புரியும்னா உங்க அப்பா இனிஷியலை தானே உங்க பேருக்கு முன்னாடி போடுவீங்க.அது ஆங்கிலமோ, தமிழோ..... என்னமோ குஜராத்ல நடந்தது வாய்க்கால் வறப்பு தகறாரு மாதிரி..ஏதோ நடந்துருச்சு.இழுத்து மூடிட்டு மோடிக்கு ஜால்றா பொடுங்கன்னு நீங்க ஜால்றா பொடுறீங்க. ஆப் கே மார் மோடி சர்க்கார் போதுமா...கருமம் தமிழ்மணத்துல இருந்து இந்த ப்ளாக்குக்கு வரவேண்டியதாகிவிட்டது.

Unknown said...

மோடி கூட ஒரு பேட்டியில் ஆங்கிலத்தில் பேச வராமல் திணறினாராம். பாதியில் கிளம்பி போய்விட்டாராம்

actually he didn't run away for language.. he ran away because he couldn't face the questions... ! he couldnt answer for a question about riots in gujarat..
to divert others, BJP and modi supporters are twisting as if he ran cos of language

he could win in all states. but in TN not more than 15 - 17 %. votes.. and just 1 seat maximum.

drogba said...

உங்கள் எழுத்துநடை அருமை. கருத்துக்கள் ஒருபுறமிருக்க, உங்கள் கட்டுரையை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்கள்.

drogba said...

சற்று நாகரீகமாக தங்கள் எதிர்கருத்தை பதிந்திருக்கலாம்

சிவானந்தம் said...

தற்போது டிரேடிங் ஹவர். இதையும் அதையும் பார்த்து அங்கே ஏதாவது தப்பு பண்ணிடப்போறேன். எனவே பதில் கொஞ்சம் லேட்டாக...

நிகழ்காலத்தில்... said...

மோடியை பற்றி எழுதினாலே வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும்...அதிலும் எதிர் எதிர் கட்சிக்காரங்க நேரடியா மோதிக்கொள்ள மாட்டார்கள்..உங்கள மாதிரி பொழுது போகாம எதோ தோணுனதா சொன்னா அவ்வளவுதான் :)

சிவானந்தம் said...

மிஸ்டர் கார்த்திகேயன் அன்புசெல்வம்,

ஏன் இம்புட்டு கோவம்? நியாயமில்லாத செய்திகளை படித்தாலும் கோவம் வரும். சிலசமயம் நாம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் போதும் வரும். உங்கள் கோவம் இரண்டாவது வகை என்று நினைக்கிறன். மற்றபடி திட்டுவதை பற்றி நான் பொருட்படுத்துவதில்லை. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

///காமராஜர் காலத்திலிருந்து...///

யோவ்... முதல்ல என்னுடைய பழைய பதிவுகளை கொஞ்சம் படிச்சுட்டு வாய்யா. அப்பதான் என் ஜாதகம் உனக்கு தெரியும். ஏன்னா பேசிக்கலி நான் காங்கிரஸ்காரன். உறுப்பினரான ஒரே கட்சி தமிழ் மாநில காங்கிரஸ். (சந்தா கட்டி படிச்சே ஒரே பேப்பர் தீக்கதிர்) அதனால் காமாராஜர பத்தி எனக்கே ஞாபகப்படுத்துவது கொஞ்சம் ஓவரா தெரியல?

பிரச்சினைகளை எதார்த்தமாக அணுகுங்கள். இப்போது நாம் காங்கிரசை திட்டினால் அது சோனியா காங்கிரசை திட்டுவதாக அர்த்தம். அதற்காக காந்தி அப்படி செய்தார், நேரு இப்படி செய்தார் என்றா இழுப்பீர்கள். அதேபோல் நான் விமர்சிப்பது அம்மா, அய்யா என்ற இருவரைத்தான். எனவே கடந்த காலத் தலைவர்களை இழுக்காதீர்கள். அவர்கள் நிஜமான தலைவர்கள்.

மற்றபடி கல்வியை பொறுத்தவரையில் மிரட்டி, ஆசை காட்டி, மார்கெட்டிங் செய்து எப்படியாவது பிள்ளைகளுக்கு கல்வி கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் என் கருத்து. இது குறித்து ஏற்கனவே சில பதிவுகளில் தமிழக அரசு கல்வியில் தனியாரை ஈடுபடுத்தியது ஓரளவுக்கு சரி என்றும் விவாதித்திருக்கிறேன். எனவே தமிழகம் பல் முனை தாக்குதல்களினால் கல்வியில் முன்னேறி இருப்பது சந்தோஷமே. ஆனால் அதை அம்மா தங்கள் (அவரை பொறுத்தவரையில் நான், எனது அரசு) சாதனையாக முன் வைக்கவேதான் நான் இதை சொன்னேன். அவர்கள் சொல்லாவிட்டால் நான் ஏன் கிளறப்போகிறேன்.

///நீ பெனாத்துற வியாபாரம் எல்லாம் இந்த 4-5 வருடங்கள் தான்.////

அப்ப தமிழ்நாட்டுல இருக்குற கல்வித் தந்தைகள் எல்லாம் இந்த 5 வருஷத்துல வந்தவங்கதானா? எனக்குத்தான் வரலாறு தெரியலியா? சோ பேட்.

//"உப்பு இருக்கிற பேஸ்ட் தவ்ர மத்ததெல்லாம் வேஸ்ட்னு சொல்லுவீங்க போல.யோவ் உப்பு அப்படிங்கறது அவன் கான்செப்ட்.அவ்ளோதான்"///

யோவ்..மறுபடியும் என் பதிவுகளை கொஞ்சம் படிச்சுட்டு வாய்யா. தாங்க முடியல. ஏன்னா, பேசிக்கலி நான் பிசினஸ்மேன்.

நான் அந்த கான்செப்டையா குறை சொன்னேன். ஒரு விஷயத்தை நல்லது என புரியவைத்து மக்களுக்கு கொடுப்பது வேறு, ஒரு பொருளை விற்றால் நமக்கு நன்மை என்ற அடிப்படையில் அதை விற்பது வேறு. தமிழகத்தில் கல்வி அறிவு வளர்ந்திருக்கிறது என்றால் அதில் பத்து சதவிகிதமாவது இந்த `வியாபார விற்பனை` காரணமாக இருக்கும். அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.

///திட்ட கமிஷனுக்கு தெரியததையெல்லாம் இவரு சொல்றாருப்பா...முடியல. என்ன ஒன்னு இவரு சொல்றது முக்கால்வாசி ஒரு சார்பாகவும் , பொய்யாகவும், இவரின் தனிப்பட்ட விருப்பமும், வெறியும் தான் அதிகம் உள்ளது. ///

நக்கீரனைப் போல் கோவம் கொள்வது தப்பில்லை நண்பரே. ஆனால் என்ன குறை என்பதையும் சொல்ல வேண்டும். ஒரு வேளை பதில் இல்லாததால்தான் இந்த கோவமா?

///உடனே இது என் ப்ளாக் , என்ன வேணாலும் எழுதுவேன் அப்படின்னு சொல்ல முற்படுவீங்க. அது சரி தான்.///

அடக்கடவுளே...மறுபடியுமா. பதிவுல போய் தேடுய்யா. நான் எப்ப அப்படி சொன்னேன்? உங்களுக்கு வேற எங்கயோ யார் மேலயோ கோவம். அதை இங்க வந்து காட்றீங்கன்னு நினைக்கிறேன்.

சிவானந்தம் said...

////என்னமோ குஜராத்ல நடந்தது வாய்க்கால் வறப்பு தகறாரு மாதிரி..ஏதோ நடந்துருச்சு.இழுத்து மூடிட்டு மோடிக்கு ஜால்றா பொடுங்கன்னு நீங்க ஜால்றா பொடுறீங்க.///

குஜராத கலவரம் குறித்து நான் மேலோட்டமாக போய்விடுவது உண்மைதான். நானும் குஜராத் கலவரம்/இந்தய முஸ்லீம்கள் பற்றி பதிவு எழுத முயற்சித்தாலும், கடைசியில் அதை கைவிட்டு விடுவேன். ஏனென்றால் இந்திய செக்யுலரிசத்தில் சிறுபான்மையினரை விமர்சிக்கக்கூடாது என்று ஒரு விதிமுறை இருக்கிறது. அது எனக்கு சரிபடாது.

இந்து மதத்தை விமர்சிப்பதில் ஒரு தலைவலியுமில்லை. கிறிஸ்துவ மதத்தையும் ஒரு பதிவில் விமர்சித்திருக்கிறேன். அவர்கள் கல்வியில் மற்ற எல்லோரையும் விட முன்னிலையில் இருப்பதால், ஆரோக்கியமான விமர்சனத்தை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இஸ்லாம் அப்படி அல்ல.

இஸ்லாமியர்களை விமர்சிப்பதில் ஒரு தலைவலியும் இருக்கிறது. நான் பதிவை தமிழில் எழுதுவேன். அது தமிழக முஸ்லிம்களை தாக்குவதாக தெரியும். ஆனால் தமிழக முஸ்லீம்கள் ஓரளவு சாத்வீகமானவர்கள். இது உங்களை குறிக்காது என்று அவர்களுக்கு விளக்கம் சொல்லவா முடியும்.

இந்த சிக்கலுக்கு ஒரு தியரிதான் காரணம். பொதுவாக மனிதர்களின் நிறம், அவர்கள் வாழும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறும் என்பதுபோல், அவர்களின் குணங்களும் மாறும்.

இஸ்லாம் அதன் அஸ்திவாரத்தை விட்டு நீண்ட தூரம் போகும் போது, உலகம் முழுக்க கவலைப்படும் அதன் வீரியத்தை இழந்துவிடும் போலிருக்கிறது . இந்தோனேசியா அதற்கு சிறந்த உதாரணம். தமிழக முஸ்லிம்களும் அப்படி நிதானமானவ்ர்களாக மாறி இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இயற்கையாகவே வரலாற்றில் விரோதம் ஏற்படவில்லை.

ஆனால் குஜராத் கதை வேறு. மைனாரிடிதான். இருந்தாலும் பல விதங்களில் வித்தியாசப்படுகிறது. ஒரு சம்பவம் மட்டும். 1980 களில் இங்கே சிறுவனாக வேலைக்கு போனபோது ஒரு முறை மதகலவரம் நடந்தது. அப்போது நான் வேலைக்கு போய்கொண்டிருந்த ஏரியா முஸ்லிம் ஏரியா. அங்கே வேலை வேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். அப்போதே பல கதைகளை கேட்டிருக்கிறேன். 2002 கலவரத்துக்கு பிறகு அந்த ஏரியா பிரபலமாகிவிட்டது. அது நரோடா. இந்த ஏரியா தாக்கப்பட்டது மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு `இதை எதிர்பார்த்தேன்` என்ற வகை. கடைசியாக நடந்த சம்பவம் என்ற அடிப்படையில் இது மனதில் நிற்க, மற்றவை மறைந்துவிட்டது.

இப்போது காலம் மாறிவிட்டது. நானும் மாறிவிட்டேன். ஒரு செயலை நியாப்படுத்துகிறேன் என்று கடந்தகால வரலாறை கிளறிகொண்டிருந்தால் அது மேலும் சிக்கலில்தான் போய் முடியும். எனவேதான் மேலோட்டமாக அதை தாண்டுகிறேன்.

சிவானந்தம் said...

வாங்க கார்த்திக் ராம்,

///actually he didn't run away for language.. he ran away because he couldn't face the questions... ! he couldnt answer for a question about riots in gujarat..
to divert others, BJP and modi supporters are twisting as if he ran cos of language///

இது தெரிந்த கதைதான். ஊழல் எல்லோரும் செய்கிறார்கள் ஆனால் ஒப்புக் கொள்ள முடியுமா? அதேதான் இவர் கதையும்.

மதக் கலவரம் கொஞ்சம் சிக்கலான விஷயம் என்பதால் நானும் இந்த விவாதத்திலிருந்து ஓடிவிடுகிறேன்.

///he could win in all states. but in TN not more than 15 - 17 %. votes.. and just 1 seat maximum.///

என்ன என் அரசியல் கணக்கு இவ்வளவு பலவீனமா இருக்கு? தமிழ்நாட்டுல மட்டும் வாக்கு எண்ணிகையை உடனே ஆரம்பிக்க சொல்லுங்க.
----------------

//உங்கள் எழுத்துநடை அருமை. கருத்துக்கள் ஒருபுறமிருக்க, உங்கள் கட்டுரையை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்கள்.///

நன்றி drogba. ஏதோ ஒண்ணுல பாஸ் பண்ணியிருக்கேன். சந்தோசம்.

///சற்று நாகரீகமாக தங்கள் எதிர்கருத்தை பதிந்திருக்கலாம்///

விடுங்க.. என்னை திட்டுவதற்கு ஆள் இல்லாததால்தான் நான் தெனாவட்டாக இருக்கிறேன் என்று சில உறவினர்கள் சொல்வார்கள். இவர் ஒருத்தராவது இருக்காரேன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

சிவானந்தம் said...

@நிகழ்காலத்தில் சிவா,

/////மோடியை பற்றி எழுதினாலே வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும்...அதிலும் எதிர் எதிர் கட்சிக்காரங்க நேரடியா மோதிக்கொள்ள மாட்டார்கள்..உங்கள மாதிரி பொழுது போகாம எதோ தோணுனதா சொன்னா அவ்வளவுதான்////

வரட்டும் பரவாயில்லை. நான் இதை ஆரோகியமான பார்வையாகவே எடுத்துக்கிறேன். எல்லோரும் உடனடியாக ப்ழுத்துவிடுவதில்லை.

Post a Comment