!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, February 21, 2023

ஒரு ஓட்டுக்கு ரூ .200


இவ்வளவுதான் கொடுக்கமுடியும். ` என்னய்யா இது ரொம்ப கம்மியா இருக்கு, நாட்டு நிலவரம் தெரியாம இருக்கியா?` என யாரும் கேட்டுவிடாதீர்கள். நான் சொல்ல வருவது, ஒட்டு போட வரும் எல்லா வாக்காளர்களுக்கு அரசாங்கம் 200 ரூபாய் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று.

உலகத்தில் எந்த நாடும் இப்படி செய்வதில்லையே என ஆச்சர்யப்படவேண்டாம். முதன்முதலில் மெதுவடை இட்லி மாதிரிதான் இருந்ததாம். அதில் எவனோ ஒருவன் ஓட்டையை போட்டு புதுமையை புகுத்தியிருக்கிறான். அதுபோல் இதுவும் உலக வரலாற்றில் புதுமை என இருந்துவிட்டு போகட்டும்.

எனக்கு இப்படி ஒரு ஏடாகூட சிந்தனை வந்தது கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு நேர்காணல் விவாதத்தை கவனித்தபோதுதான். அதில் மதிமுகவை சேர்ந்த ஒருவர் சொன்னார். `பல ஏழைகள் தினக்கூலிகளாக இருக்கிறார்கள். ஒட்டு போட வாங்க` என்று கூப்பிட்டால், இன்னைக்கு நான் வேலைக்கு போகாவிட்டால் என் குடும்பத்துக்கு யார் சாப்பாடு போடுவார்கள்` என்று கேட்டார்கள்.

அவர்கள் பணத்துக்கு விலைபோகக்கூடியவர்கள் அல்ல. அவர்களின் வறுமையை சொன்னார்கள். எனவே அன்று ஒட்டு விலைக்கு வாங்கப்படவில்லை. அவர்களின் அன்றைய வறுமைக்கு (ஓட்டுக்கு) பணம் கொடுக்கப்பட்டது.

கடைசியில் அது இப்படியும் ஒட்டு வாங்கலாம் என அரசியல்வாதிகளுக்கு ஐடியா கொடுக்க, அதுதான் இன்று வியாதியாக மாறி, விஸ்வருபம் எடுத்து, நாடு நாசமாகிக்கொண்டிருக்கிறது.

இதே சூழ்நிலையைத்தான் காமராஜர் சந்தித்தார். அன்று அவர் இப்படி ஒரு கேள்வியை சந்திக்க, பள்ளிக்கூடத்தில் மதிய உணவை அறிமுகம் செய்தார். அதனால் இன்று தமிழகம் கல்வியில் முன்னணியில் வந்துவிட்டது.

அப்போது என்ன நடந்திருக்கும்? குழந்தைகள் சாப்பாட்டுக்காகதான் பள்ளிகளுக்கு வந்திருப்பார்கள், சாப்பிட்டிருப்பார்கள், அதற்காகத்தான் வந்தார்கள் எனவே சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் எவ்வளவு நாளைக்கு?

குழந்தைகளின் மனநிலை என்ன? அம்மா சமைத்தால் குழந்தைகளும் விளையாட்டாக சமைக்கும். அம்மா டீச்சர் என்றால், குழந்தையும் டீச்சராக மாறி அதிகாரம் பண்ண ஆரம்பிக்கும். அதாவது நம்மை சுற்றி இருப்பவர்கள் செய்வதை குழந்தைகள் செய்வார்கள்.

கொஞ்ச நாட்களில் இப்படி சாப்பிட மட்டும் பள்ளிக்கு வந்த குழந்தை மற்ற குழந்தைகளையும் கவனிக்கும். அந்த குழந்தை புத்தகத்தை/போர்டை  கவனிக்க, இதுவும் கவனிக்கும், பின்னர் மெல்ல மெல்ல படிக்க ஆரம்பிக்கும்.

இதில் ஒரு குழந்தை நன்றாக படித்து வாத்தியாரிடம் குட் என பேர் வாங்கிவிட்டால் முடிந்தது கதை, பொறாமை தலைதூக்கும். அடுத்த வருடம் சாப்பாட்டுக்காகவே பள்ளிக்கு வந்த அந்த குழந்தை பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதேதான் அரசே ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் நடக்கும்.

சமீபத்தில் சவுக்கு சங்கர் ஈரோடு இடை தேர்தலில் முறைகேடுகள் பற்றி பேசினார். அருந்ததி சமூகத்தினரை ஆடு மாடுகளை போல் அடைத்து வைத்திருக்கிறார்கள் திமுகவினர் என சொன்னார். அப்போதுதான் எனக்கு இந்த எண்ணம் மேலும் உறுதியாக தலை தூக்கியது.

அவர்கள் வறுமையில் இருக்கிறார்கள், ஏதோ சம்பாதிச்சவன் கொடுக்கிறான், வாங்கிட்டு போகட்டும் என ஒதுக்கிவிடலாம்தான். அதேசமயம்  சில தவறுகள் முடிந்தவரை சரி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது பெரும் தலைவலியில் போய்முடியும்.

இது அரசுக்கு பெரும் சுமையா? இப்போது அரசு பொங்கலுக்கு 1000 ரூபாய் தருகிறது. இது வருடாவருடம். அதே ஆயிரம் ரூபாய்த்தான் இங்கேயும். இது ஐந்து ஆண்டுகளுக்கு 1-2 முறை. அல்லது தேர்தல் காலங்களில் அதை கட் பண்ணிவிட்டு இப்படி வைக்கலாம். இது கூடுதல் செலவாக இருப்பதுதான் நல்லது. இதனால் பெரிதாக குடிமுழுகிவிடாது. ஆனால் பலன் நிச்சயம் உண்டு.

சரி, விளிம்பு நிலை மனிதர்களுக்கு மட்டும் இதை கொடுக்கலாமா என்றால் அது விழலுக்கு இறைத்த நீர்தான். அவர்கள் எல்லா பக்கமும் காசு வாங்கிக்கொண்டு அதிகம் கொடுத்தவனுக்கு விசுவாசமாய் இருப்பார்கள். இங்கே இலக்கு மத்திய மற்றும் பணக்காரவர்க்கம்தான். அவர்களுக்கு இதுதேவையில்லை என்றாலும் இந்த இன்சென்டிவ் அவர்களை பூத்துக்கு வரவழைக்கும்.     

நான் சொல்லவருவது தேர்தலில் ஒட்டு போட்டவுடன், அந்த மை காயும் முன், அந்த தேர்தல் பூத்திலேயே வாக்காளர்களுக்கு இந்த பணம் அனைவருக்கும் கொடுக்கப்படவேண்டும். ஏன் இப்படி ? காரணம் இருக்கிறது.

ஓட்டுக்கு பணம் எனும் வியாதி இன்னும் கொஞ்சகாலம்தான். அதாவது 10-20 வருடம். மக்களின் கல்வியறிவு வளர வளர காலஓட்டத்தில் இது காணாமல் போய்விடும். அப்போதும் பணம் கொடுக்கப்படும். ஆனால் வாங்குபவன் எல்லாருக்கும் அல்வா கொடுக்க ஆரம்பிப்பான். அதன்பின் இது பலனளிக்காது என நின்றுவிடும். ஆனாலும் அரசியல்வாதிகள் எமகாதகர்கள் ஆயிற்றே. டிசைன் டிசைனாக யோசிப்பார்கள். எனவே இதற்கு முடிவு கட்ட அனைவரையும் வாக்களிக்க தூண்டுவதுதான் ஒரே வழி.

மேலே சொன்ன குழந்தைகள் தியரிதான் இங்கேயும் வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் இன்று குடும்பத்தோடு ஒட்டு போட்டால் ஆயிரம் ரூபாய் வரும், சமையலுக்கு லீவு விட்டுவிட்டு ஜாலியாக ஓட்டலுக்கு போய் சாப்பிடலாம் என பெண்களே தூண்டிவிடுவார்கள். முதலில் யாரோ ஒருவருக்கு ஒட்டு போட்டுவிட்டுதான் வருவார்கள். அதன்பிறகுதான் வேட்பாளர் யார் என நிமிர்ந்து பார்ப்பார்கள். அவர்கள் நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தால் அதுபோதும்.  தகுதிகளையும் ஆராய்வார்கள். அதுதான் நமக்கு தேவை.

இங்கே மனிதர்களின் முக்கியமான மனநிலையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். தான் எப்படி இருந்தாலும் தனக்கு வரும் கணவன் /மனைவி அழகாக படித்தவனாக இருக்கவேண்டும் என மனிதர்கள் ஆசைப்படுவதில்லையா? அதேதான் நிலைதான் இங்கேயும். மக்கள் ஃபிராடாக இருந்தாலும் வேட்பாளர்கள் தரமாக இருக்கவேண்டும் என்றுதான் ஓட்டுபோடுவார்கள். அந்த மாற்றம் மெல்ல மெல்ல வரக்கூடும், வரும்.

இதெல்லாம் தற்போதைக்கு நடப்பதற்கு சாத்தியமில்லை. செலவுகளை குறைக்க விரும்பும் அரசுகள் இப்படி மேலும் சுமையை சுமக்க விரும்பாது. அதிலும் இந்த திராவிட அரசுகள் ஒருபோதும் செய்யாது. அவர்களுக்கு ஜனநாயகத்தைவிட பணநாயகம்தான் பிடிக்கும். இருந்தாலும் எழுதி வைக்கிறேன். எதிர்காலத்தில் வந்தாலும் வரலாம்.

விதைப்பதெல்லாம் மரமாகும் வாய்ப்பு இல்லைதான், இருந்தாலும் நாம் விதைக்கும் ஏதோ ஓன்று மரமாகிவிட்டால் அதுவே லாபம்தான்.

0 comments:

Post a Comment