தமிழ் நாடா, தெலுங்கு நாடா? இதுதான் இப்போதைய சர்ச்சை. பாக்யராஜ், பார்த்திபன் போன்றோர் இதை பொதுவெளிக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.
தமிழ்நாட்டில் கணிசமாக தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள். அதிலும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை. இங்கே முதல்வர் மட்டும் தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. அவர் நல்லவர், திறமைசாலி என விட்டுவிடலாம். (இங்கே நான் ஸ்டாலினை குறிப்பிடவில்லை, பொதுவாக சொல்கிறேன்.) ஆனால் கணிசமான அமைச்சர்களும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பதுதான் பிரச்சினை.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திமுகவும் அவர்களுடைய அடிவருடிகளும், முக்கியமாக விசிக போன்றவர்கள் ஒரு புள்ளிவிவரத்தை அடிக்கடி மேடையில் சொல்வார்கள். இந்தியாவில் பிராமணர்கள் சதவிகிதம் குறைவு. ஆனால் அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை என எல்லா இடத்திலும் அவர்களுடைய சதவிகிதம் அதிகம் இருக்கிறது. இது எதேச்சாதிகாரம், பிராமணீயம் என்பது அவர்களின் வாதம்.
ஆனால் அதே தவறைத்தான் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழக அரசியலில் செய்கிறார்கள். இதெல்லாம் திருமாவளவன் அவர்களுக்கு உறுத்தாது. அது தவறு என்றால் இதுவும் தவறுதானே? இந்தியாவில் அகராதி என்பதும் கொள்கை என்பதும் ஒவ்வொரு தெருவுக்கும் மாறுபடும் போலிருக்கிறது.
அதே சமயம் தலைவர்கள் தரமாக இருந்தால் இங்கே இந்த கேள்வி எழாது. பெரியார், பென்னி குயிக், வீரமாமுனிவர் போன்றவர்களையெல்லாம் தமிழன் இனம் பார்த்தா போற்றினான்? அவர்களிடம் தரம் இருந்தது. அவர்கள் பிறந்த வீட்டை விட வாழ்ந்த வீட்டின் மீதும் அந்த மக்களின் நலனுக்காவும் போராடியவர்கள். ஆனால் இன்றைய தலைவர்கள்....?
நான் தெலுங்கன் என்று சொல்வது தவறில்லை. அதை தமிழ்நாட்டில் சொல்லவேண்டும், வெற்றிப்படியை தொட்டவுடன் அல்லது வளரும்போதே சொல்லிவிடவேண்டும். நேரம் காலம் பார்த்து சொல்வதுதான் அயோக்கியத்தனம்.
தமிழுக்கு பிறந்தவைதான் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம். எனவே அவர்களுக்கு இது தாய்வீடு. அவர்கள் இங்கே வசிக்க, அதிகாரத்துக்கு வர என எல்லா உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. சில வீடுகளில் பிள்ளைக்கு இல்லாத உரிமை கூட பேரக்குழந்தைகளுக்கு உண்டு. எனவே இவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதை நாம் கேள்வி கேட்க முடியாது. அப்படி கேட்டால், அவர்களிடம் `நான்தான் உங்களுக்கு அம்மா` என்று சொல்வதை நாம் நிறுத்திவிட வேண்டும்.
கணக்கு அவர்கள் பார்க்கலாம். தமிழ்நாடு அப்படி பார்க்க முடியாது. எனவே முகமூடியை கழட்டி எறியுங்கள். நீங்கள் யார் என்பது பற்றி தமிழனுக்கு கவலையில்லை. தரத்தை நிரூபியுங்கள். அதுபோதும். ஏனென்றால் இது தமிழ்நாடு. தமிழனின் அடையாளம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதுதான்.

0 comments:
Post a Comment