எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அதன் விலை உயர்வு நாட்டைப் பெருமளவில் பாதிப்பதாகக் கூறி, பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்தியிருக்கிறார். இது நல்ல விஷயம்தான். ஆனால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தலைவலி என்னவென்றால், தொலைத்த பொருளைத் தொலைத்த இடத்தில் தேடாமல், "அங்கே இருட்டாக இருக்கிறது" என்று கூறி வெளிச்சம் இருக்கும் இடத்தில் தேடுவதுதான்.
பிரதமர் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும்படியும், 'கார்ப்பூலிங்' (Carpooling) போன்ற கூட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்படியும் சொல்லியிருக்கிறார். அறிவுரை ஓகே, நடைமுறை?
பொதுவாகச் சாலையில் செல்லும் போக்குவரத்தைக் கவனித்தால் ஒரு விஷயம் அப்பட்டமாகத் தெரியும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் கிட்டத்தட்ட 50-60 சதவீதத்தினர் தனி நபர்களாகவே பயணிக்கிறார்கள். அவர்களின் பின் இருக்கை காலியாகவே இருக்கிறது. இதை ஏன் நகர்ப்புறப் பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?
சில நாடுகளில் கட்டாய ராணுவ சேவை இருப்பது போல், கட்டாயப் போக்குவரத்துச் சேவை என்ற முறையை அடுத்த சில மாதங்களுக்கு இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். அதாவது, ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிப்பது போல், இருசக்கர வாகனத்தில் தனியாகச் செல்லும் நபர்களுக்கு ₹100 - ₹200 அபராதம் விதிக்கப்படும் என ஒரு தற்காலிகச் சட்டத்தைக் கொண்டு வரலாம்.
இதனால், வேலைக்குச் செல்பவர்கள், வேறு காரணங்களுக்காகப் பயணிப்பவர்கள், சாலையில் பேருந்துக்காகக் காத்திருக்கும் யாராவது ஒருவருக்குத் தாங்களாகவே முன்வந்து 'லிப்ட்' (Lift) கொடுப்பார்கள். இல்லையென்றால் அபராதம் என்பதால், வேறு வழியின்றி இதைச் செய்வார்கள்.
சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் கூட, சில வாரங்களுக்குத் தங்களின் `தனி` பயணத்தைத் தவிர்த்துவிட்டு இப்படிப் பயணிக்கலாம். தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நேரடியாகவோ அல்லது இதுபோன்ற இரண்டு மூன்று பகிர்வுப் (Shuttle) பயணங்கள் மூலமாகவோ சென்றடையலாம்.
இந்த நடைமுறையைப் பயன்படுத்தினால், நகர்ப்புறப் போக்குவரத்தில் நிச்சயம் 10 சதவீதப் பயணங்கள் இவர்களின் மூலமாகவே நடந்துவிடும். பேருந்துப் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிப்பதும் கணிசமாகக் குறையும்.
ஆனால், இதிலும் ஒரு சிக்கல் வரும். பொதுவாக இந்தியாவை ஏழை நாடு என்று சொல்வதை விட பிச்சைக்கார நாடு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இலவசமாகக் கிடைத்தால் எதையும் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மை மக்களிடம் இன்னமும் இருக்கிறது. காலியாகப் பேருந்து வந்தாலும், இலவச லிப்ட் கிடைக்கும் என்றே காத்திருப்பார்கள். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இதைக் கட்டணச் சேவையாக மாற்ற வேண்டும்.
அடுத்த சந்தேகம்: இப்படி லிப்ட் கொடுப்பவர்கள் விபத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாகவோ அல்லது குற்றப் பின்னணி உள்ளவர்களாகவோ இருந்தால் என்ன செய்வது? ஆபத்துதான். ஆனால், அதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது.
அரசாங்கமே ரேபிடோ பைக் டாக்ஸி (Rapido Bike Taxi) போன்ற ஒரு முறையை உருவாக்கலாம். அதற்கெனக் கட்டணத்தைக் காட்டும் ஒரு பிரத்யேகச் செயலியை (App) உருவாக்கி, சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், ஓட்டுநர் உரிமம் (Driving License) உள்ளவர்கள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாதவர்கள் போன்ற தகுதியான நபர்களுக்கு மட்டுமே இந்த பைக் சேவை வழங்கும் உரிமத்தை அளிக்கலாம். 3-6 மாதத்திற்கு ஒரு முறை மீண்டும் அபிடவிட் என்று இருந்தால், இது பாதுகாப்பை உறுதி செய்யும்.
இதெற்கெல்லாம் அரசாங்கம் கட்டணத்தை நிர்ணயிக்காமல் அவர்கள் போக்கிலேயே விட்டுவிட வேண்டியதுதான். மக்களுக்கு இந்த முறை திருப்திகரமாக இருந்தால் பயணிப்பார்கள், இல்லையென்றால் புறக்கணிப்பார்கள். இதில் யாருக்கும் நஷ்டமில்லை.
இதனால் ஒட்டுமொத்தமாக இரண்டு நன்மைகள் கிடைக்கும்:
வேலைக்குச் செல்லும் நபர்கள் தாங்கள் செல்லும் வழியில் தினமும் 2 முதல் 4 பேரை அழைத்துச் செல்வதன் மூலம், மாதத்திற்கு சுமார் ₹1000 வரை கூடுதல் வருமானம் ஈட்டலாம். இது அவர்களின் பெட்ரோல் செலவுக்கு உதவும்.
பொதுமக்களும் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாகச் செல்ல முடியும். வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து, சுற்றுச்சூழல் மாசடைவதும் தடுக்கும். ஒட்டுமொத்தமாக நாட்டின் பெட்ரோலியப் பயன்பாடு 5 சதவீதம் குறைந்தாலும் அது பெரிய லாபமே.
வேலையில்லாதவர்களுக்கும், கூடுதல் வருமானத்திற்காக உழைப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். நான் சில சமயங்களில் 'ரேபிடோ' புக் செய்யும்போது, அந்த ஓட்டுநர் 1 - 1.5 கிலோமீட்டர் தூரத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல வருவார். இதுவே ஒரு தேவையற்ற எரிபொருள் விரயம்தான். இந்த ஓட்டுநர்களும் ஆட்டோ ரிக்ஷாக்களைப் போல ஒரு குறிப்பிட்ட அடையாள உடையுடன் (Uniform) சாலையில் இருந்தால், பயணிகள் அவர்களை நேரடியாகவே அணுக முடியும்.
வெளிநாடுகளில் இத்தகைய பைக் டாக்சி உடையுடுன் இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் நியாயமான ஒரு சேவையைக் கூட பயந்து பயந்து செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நேரடி முறை இருதரப்பினருக்குமே நேரத்தை மிச்சப்படுத்தும். ஓட்டுநர்கள் ஆன்லைனில் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், ஆஃப்லைனில் நேரடியாக வரும் பயணிகளையும் கவனித்துச் சேவை வழங்கலாம்.
அரசாங்கங்கள் வெறும் உபதேசங்களை மட்டும் செய்யாமல், சில இடங்களில் சட்ட ரீதியான கடுமையான அணுகுமுறைகளையும் கையாள வேண்டும். அதே நேரத்தில், அத்திட்டங்கள் மக்களுக்கு எளிமையாகச் சென்றடையும் வகையில் தெளிவான திட்டமிடலோடு இருக்க வேண்டும்.

0 comments:
Post a Comment