!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, July 28, 2026

கரூர் தீர்ப்பு — இது நல்ல விஷயம்தான்!

மதுரை உயர் நீதிமன்றம், கரூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கிய உத்தரவை ரத்து செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பில் அவர்கள் குறிப்பிட்ட கருத்துகளும் வரவேற்கப்பட வேண்டியவை. "இவர்களுக்கு அரசு வேலை கொடுப்பது தவறு" என ஏற்கனவே ஒரு பதிவில் நானும் எழுதியிருக்கிறேன். எனவே, இது ஒரு நல்ல தீர்ப்புதான். ஆனால், 'வெளுத்ததெல்லாம் பால்' என்று நினைப்பவன் நான் இல்லை; ஒருவேளை அது 'மில்க்' ஆகவும் இருக்கலாம்!

இங்கே, ஆளுங்கட்சியின் முடிவை எதிர்த்து ஒரு தீர்ப்பு — அதுவும் மிக விரைவாக — வரக் காரணம் என்ன?

முக்கியமான காரணம், விஜய் இப்போதைக்கு அரசியலில் ஒரு பச்சிளம் குழந்தை என்பதுதான். எனவே, அவர் செய்த தவறை நீதிபதிகள் தைரியமாகச் சுட்டிக்காட்டிச் சரிசெய்திருக்கிறார்கள்.

இதுவே திராவிடக் கட்சிகளின் ஆட்சியாகவோ அல்லது மத்திய பா.ஜ.க. ஆட்சியாகவோ இருந்தால், அவர்கள் செய்தது தவறே என்றாலும் இந்த நீதிபதிகளுக்கு இப்படி ஒரு தீர்ப்பு வழங்கும் துணிச்சல் வந்திருக்காது.

பொதுவாகவே, நீதிபதிகள் எந்தவொரு வழக்கிலும் தீர்ப்பு வழங்கும் முன் வழக்கின் தன்மையை மட்டும் பார்க்க மாட்டார்கள்; எதிரே நிற்பது யார், எந்த வழக்கறிஞர் என்பதையும் கவனிப்பார்கள். அங்கே ஒரு மூத்த வழக்கறிஞர், அதுவும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் வந்திருக்கிறார் என்றால், அந்த வழக்கை விரைவாக முடிக்க மாட்டார்கள். அந்த மூத்த வழக்கறிஞர், "இது அரசின் முடிவு; ஜாக்கிரதை!" என்று மைண்ட் வாய்ஸில் நீதிபதியை எச்சரிப்பார்.

நீதிபதிகளும் வழக்கை "அடுத்த வருடம் பிப்ரவரி 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்" எனப் பின்வாங்கி விடுவார்கள். இதுதான் இதுவரை நடந்தது, இனிமேலும் நடக்கும். அதே சமயம், தவறு என்றால் தைரியமாகச் சொல்வார்கள்; ஆனால், அது பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சி மாறிய பின்னரே நடக்கும். உச்ச நீதிமன்றத்திலும் இதுதான் நிலைமை.

குறிப்பாக, ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் சில தீர்ப்புகள் வந்து விமர்சிக்கப்படும்போது, அதை 'பேலன்ஸ்' செய்வதற்காக, ஏதாவது ஒரு தீர்ப்பை ஆளுங்கட்சிக்கு எதிராகக் கொடுத்துத் தங்களின் நேர்மையை நிரூபிப்பார்கள். இதுதான் இந்தியாவில் நீதிமன்றங்கள் செயல்படும் முறை — அதாவது நான் கவனித்துப் புரிந்துகொண்டது.

ஆனால், இந்த முறை அதில் ஒரு மாற்றம் தெரிகிறது. அதற்கு முக்கியமான காரணம் வழக்கறிஞர்கள் நியமனம்தான். சமீபத்தில் த.வெ.க. அரசு, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் குளறுபடி செய்ததைக் கவனித்தோம்.

விஜய் ஜெயிப்பார் எனப் பல மூத்த வழக்கறிஞர்கள் நினைக்கவில்லை. எனவே, யாரும் இந்தப் பக்கம் வரவில்லை. தற்போதுதான் 'இனிப்பு இங்கேதான் இருக்கிறது' என்பதை உணர்ந்து எறும்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

அந்த வகையில், சமீபத்தில் நியமிக்கப்பட்ட பல அரசு வழக்கறிஞர்கள் அனுபவம் இல்லாத புதியவர்களாகவோ அல்லது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம். அவர்களுக்கு நீதிபதிகளை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லை. எனவே, இப்போது நீதிபதிகள் நிமிர்ந்து பார்த்திருக்கிறார்கள்.

"அட... இவர்கள் சின்னப் பசங்க! இவர்களைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை" என்ற தைரியம் நீதிபதிகளுக்கு வந்துவிட்டது. அதுதான் இந்தத் தீர்ப்பு.

இதுவே தி.மு.க. அல்லது பா.ஜ.க.-வின் முடிவு என்றால், அங்கே ஒரு மூத்த வழக்கறிஞர் வந்திருப்பார். "ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க மூத்த வழக்கறிஞர் வருகிறார்" என்று நீதிமன்றத்தில் ஒரு வெடியே வெடித்திருப்பார்கள்; நீதிபதியும் பணிந்திருப்பார். அந்த மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இந்த நீதிபதிக்கு எதிராக ஏதேனும் மொக்கையாக ஒரு மனுத் தாக்கல் செய்துவிட்டால், நீதிபதியின் பதவி உயர்வு (Promotion) வாய்ப்பு அதோகதிதான்!

நீங்கள் ஒரு வேலையிலிருந்து வெளியே வரும்போது, நன்னடத்தைச் சான்றிதழ் இருந்தால் அது உங்களுக்கு உதவும். அதுவே "இவர் ஒரு சோம்பேறி, நேர்மையில்லாதவர்" என்று குறிப்பெழுதித் தந்தால் எதிர்காலம் பாதிக்கும் அல்லவா? அதே நடைமுறைதான் நீதிபதிகளுக்கும்.

அதுமட்டுமன்றி, ஒரு நீதிபதிக்குப் பதவி உயர்வு வழங்கிட மாநில உளவுத்துறையும் ஆட்சேபிக்காமல் இருக்க வேண்டும். அவர்கள் "இவர் சரியில்லை" என்று குறிப்பு எழுதிவிட்டாலும் நீதிபதிகளுக்குப் பிரச்சினைதான்.

எல்லோருக்குமே பதவி உயர்வு பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும்; நீதிபதிகளுக்கும் அந்த ஆசை இருக்காதா? இதை வைத்துதான் அதிகாரத்தில் உள்ள அரசுகள், "எங்களைப் பகைத்துக் கொண்டால்..." என்று மிரட்டிச் சில தீர்ப்புகளைப் பெறுகின்றன; அது முடியாதபட்சத்தில், தீர்ப்பு வராமல் பார்த்துக்கொள்கின்றன.

விஜய் இந்த வித்தைகளைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் சிறிது காலம் ஆகும். இருந்தாலும், இதுபோன்ற மட்டமான அரசியலில் அவர் ஈடுபடக் கூடாது என்பதுதான் என் விருப்பம். அரசுத் துறையில் ஊழலை ஒழிக்க நினைப்பதுபோல, நீதித் துறையையும் அதன் போக்கில் செயல்பட விட்டால் அதுவே நல்ல அரசியலாக இருக்கும்.

ஆனால், விஜய்க்கு எதிராகத் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் மற்ற வழக்குகளிலும் இதே தைரியத்தைக் காட்டினால் பாராட்டலாம். செய்வார்களா?

தற்போது முதலமைச்சரை அவதூறாகப் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ. வழக்கில் பெரிய அளவிலான சாட்சியங்கள் தேவையில்லை. காணொளி ஆதாரம் (Video proof) இருக்கிறது; மூன்று மாதங்களில் விசாரித்துத் தீர்ப்பு வழங்கிவிடலாம். ஆனால், அங்கே தி.மு.க. மூத்த வழக்கறிஞரைக்களத்தில் இறக்கும்; நீதிபதியைப் பார்த்து முறைப்பார்கள். அவ்வளவுதான்... நீதிபதிகளின் தைரியம் காற்றில் பறந்துவிடும்! இந்த வழக்கும் வாய்தாவிலேயே நகரும்.

இதுமட்டுமல்ல, எத்தனையோ மிக எளிமையான வழக்குகள் நீதிமன்றங்களில் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அவற்றையும் இவர்கள் விரைவில் முடித்தால், நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

இருந்தாலும் மறுபடியும் சொல்கிறேன்: இந்தியாவில் இப்போது இருக்கும் நீதிபதிகள் வழக்கை மட்டும் பார்த்துத் தீர்ப்பு சொல்வதில்லை; எதிரே இருக்கும் வழக்கறிஞர் யார் என்பதைப் பார்த்துத்தான் தீர்ப்பு சொல்கிறார்கள். அப்பேர்ப்பட்ட 'தைரியசாலிகள்தான்' இந்திய நீதிபதிகள். இதுதான் கசப்பான உண்மை.

எது எப்படியிருந்தாலும், இது ஒரு நல்ல, விரைவான தீர்ப்பு. அதற்காகச் சந்தோஷப்படுவோம்.

0 comments:

Post a Comment