முதலில் சவுக்கு சங்கரின் கதையைப் பார்ப்போம். அநேகமாக, அவருடைய டி.என்.ஏ.வை ஆராய்ந்தால், சிவனையே எதிர்த்த அந்த நக்கீரனின் வழித்தோன்றலாக அவர் இருக்கக்கூடும். மனிதர் எதற்கும் பயப்படுவதில்லை. தமிழக ஊடகத் துறையில் இவர் ஒரு வரப்பிரசாதம். நிச்சயமாக, இவர் வந்த பிறகு தமிழக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு பயம் வந்திருப்பது உண்மை. அதே நேரத்தில், அரசியலும் கொஞ்சம் ஆரோக்கியமான பாதைக்குத் திரும்பியிருப்பதும் உண்மை. பல விஷயங்களைப் புரியும்படி இவர் சொல்லும் விதம், அதில் நையாண்டியைக் கலந்து சுவாரஸ்யமாக்குவது என எல்லாமே அதிரடிதான்.
(இவரிடமும் சில கோளாறுகள் இருக்கின்றன. அதைப் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.)
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர் பள்ளிப் படிப்பைக்கூடச் சரியாக முடிக்கவில்லை. இரண்டாவது, இவர் எந்த ஊடகத்திலும் பணியாற்றவில்லை. அதுமட்டுமின்றி, திருமண வாழ்க்கையிலும் இவர் வெற்றி பெறவில்லை. மன அமைதிக்கும் உறவுக்கும் மாலதி இருக்கிறார். ஆனால், ஓர் ஊடகவியலாளராக இவர் வெற்றி பெற்றுவிட்டார். வசூலின் அடிப்படையில் ரஜினியைச் சூப்பர் ஸ்டார் என்று சொல்வது உண்மையானால், வாசகர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சங்கரும் அந்த இடத்தைப் பிடித்துவிட்டார்.
இதை அப்படியே முதல்வர் விஜய்யின் வாழ்க்கையிலும் பொருத்திப் பாருங்கள். அத்தனையும் விஜய்க்கும் பொருந்தும். அவரும் சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் ஆரம்பகட்ட வெற்றியைப் பெற்றுவிட்டார்.
இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?
எது தகுதி என்று ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் சொல்கிறார்களோ, அதுதான் உண்மையான தகுதி என்று சொல்லிவிட முடியாது என்பதுதான். பட்டப்படிப்பை முடித்தவனும், குடும்பம், குழந்தைகள் எனச் சந்தோஷமாக இருப்பவனும், மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பவனும் வரலாற்றில் இடம்பிடிக்க முடியாது என்பதுதான் இது சொல்லும் கசப்பான உண்மை. இதில் மோடியும் அடக்கம்.
இது ஓர் அபாயகரமான கருத்து. பலரால் இதை ஜீரணிக்க முடியாது; ஆட்சேபிக்கவும் கூடும். கடந்த காலத்தில் வாழ்ந்த பல வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கையைப் படித்திருக்கிறேன். கிட்டத்தட்ட இது உண்மை என்றுதான் தெரிகிறது. அங்கேயும் சில பட்டதாரிகள் இருந்தாலும், பெரும்பாலும் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை தோல்வியில்தான் முடிந்திருக்கிறது.
பட்டப்படிப்பை முடித்த அண்ணாவும், பல தலைவர்களும் அதை முடிக்காத பெரியாரைத்தான் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.
இனி ஷேர் மார்க்கெட்டுக்கு வருவோம்.
இங்கேயும் அப்படித்தான். நானும் ஆரம்பத்தில் ஷேர் புரோக்கர்கள் என்றால் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அப்போது ஆங்கிலம் தெரியாவிட்டாலும், தட்டுத்தடுமாறி தலால் ஸ்ட்ரீட், கேபிடல் மார்க்கெட் போன்ற இதழ்களையும், தமிழில் பங்கு வர்த்தகம், வளர்தொழில் என நிறைய இதழ்களையும் படித்தேன்.
ஆனால், எதுவும் வருமானத்தையோ அறிவையோ கொடுக்கவில்லை. அதன்பிறகு, அனுபவம் சில பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. சொல்வதெல்லாம், சொல்லப்படுவதெல்லாம் உண்மை அல்ல என்பது புரிந்தது.
ஒருவனின் வெற்றிகரமான அனுபவம் எல்லோருக்குமான மருந்தாக இருக்க முடியாது என்பதும் புரிந்தது. “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்று சொன்னவன்தான் அறிவாளி என்பதும் புரிந்தது. எவனோ ஒருவன் ஒரு பார்முலாவைச் சொல்கிறான் என்றால், அது அவனுக்கு லாபத்தைத் தரவில்லை; அதனால்தான் அந்தப் பார்முலாவை மக்களிடம் விற்கிறான் என்பதும் புரிந்தது.
மொத்தத்தில், ரெடிமேட் சட்டையாக இருந்தாலும், அது நமக்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் வரலாம் என்பதும் புரிந்தது. அப்புறம் நிறையப் புரிந்தது, புரிந்தது, புரிந்ததுதான்!
அதன்பிறகு, நானே ஷேர் மார்க்கெட்டில் சில பார்முலாக்களைக் கண்டுபிடித்தேன். இ.சி.ஜி.யைப் பார்த்தவுடன் டாக்டருக்குப் பேஷண்ட்டின் நிலை புரியும் அல்லவா? அதேபோல், கிராஃபைப் பார்த்தவுடன் என்ட்ரி எங்கே, எக்ஸிட் எங்கே என்பது புரிந்துவிடுகிறது. அதாவது, அனுபவம் சொல்லிவிடுகிறது.
ஆனால், ஷேர் மார்க்கெட்டில் இந்தப் படுபாவிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பார்முலாவைப் பயன்படுத்துவார்கள். அதுதான் தலைவலி! நேற்று இங்கே வந்து திரும்பி ரிவர்ஸ் எடுத்தான் என்று நினைத்தால், இன்று அது நடக்காது. எனவே, ஒவ்வொரு அரை மணி நேரமும் கண்கொத்திப் பாம்பாகக் கவனிக்க வேண்டும். கொஞ்சம் சந்தேகம் வந்தால்கூட, நஷ்டமானாலும் பரவாயில்லை என்று வெளியே வந்துவிட வேண்டும். நான் இன்ட்ராடே டிரேடிங் செய்வதால் இந்த நிலை.
அதுமட்டுமின்றி நான் இந்த ஸ்டாப் லாஸ் என்ற எழவை எப்போதும் போட்டதில்லை. இப்போது டிரேடிங்கில் ஹெல்மெட்டும் போடுவதில்லை! பயம் தெளிந்துவிட்டது.
ஆனால், புதியவர்கள் ஷேர் மார்க்கெட்டைப் புரிந்துகொள்ளும் வரை ஸ்டாப் லாஸ் பயன்படுத்துவது நல்லது. ஆனாலும், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதைச் சொன்னால் உங்களுக்குப் புரியாது. பட்டால்தான் புரியும்; அதுவும் தவறு என்று!
மொத்தத்தில், ஷேர் மார்க்கெட்டில் ஏற்கெனவே சொல்லப்பட்ட தியரிகளோடு நமது அனுபவம் என்ற மசாலாவையும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அது வெற்றியாக மாறும்.
கடைசியாக, நான் சொல்ல வருவது என்னவென்றால், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், ஷேர் புரோக்கர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களின் பேச்சை அப்படியே நம்பி ஏமாறக்கூடாது என்பதுதான். அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களைச் சாதனையாளர்கள் என்று நம்பிவிடக் கூடாது; அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்றும் கருதக்கூடாது.
சாதிப்பவன் எப்போதும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருப்பான். இதைத்தான் விஜய் மற்றும் சவுக்கு சங்கரின் வெற்றி உணர்த்துகிறது.

0 comments:
Post a Comment